இருபத்தைந்து தோழர்கள்

இது ஒரு பிரச்னை. என்னளவில் சற்றே முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னையும் கூட. என் வீட்டுக்கும் பேட்டையின் பிரதான சாலைக்கும் இடையே தோராயமாக முன்னூறு மீட்டர் இடைவெளி இருக்கும். இந்த முன்னூறு மீட்டர் தொலைவைக் கடப்பதற்குள் குறைந்தது இருபத்தைந்து நாய்களை எதிர்கொள்ளவும் சமாளிக்கவும் வேண்டியிருக்கிறது.

நீண்ட நெடுங்காலமாக ஒரே பகுதியில் வசிப்பவர்கள், ஒரே சாலையைப் பயன்படுத்துபவர்கள் என்கிற வகையில் தோழமை உணர்வு இல்லாதுபோனாலும் ஒரு சக ஜந்துவாக என்னை அவை கண்டிப்பாக பாவிக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பதில் பிழையில்லை என்று கருதுகிறேன்.

ஆனால் ஒருநாள் தவறாமல் இருபத்தைந்தில் பாதியேனும் வழியில் என்னைக் கண்டால் முறைக்கின்றன. சில லேசாக உறுமவும் செய்கின்றன. குரைக்கத் தொடங்கினால் நான் சமநிலை இழந்துவிடுவேன் என்பது அவற்றுக்குத் தெரியும். பொழுதுபோகாத சில சமயங்களில் அந்த விளையாட்டையும் ஆடிப்பார்த்திருக்கின்றன.

அதிகாலை நேர நடைப்பயிற்சியின்போது இந்த விளையாட்டுக்குத் தயாராக என் சக ஆன்மாக்கள் வரிசையாகச் சாலையில் காத்திருக்கும். ஆரம்பத்தில் சில காலம் ஏராளமான பெரு / சிறு தெய்வங்களைத் துணைக்கு அழைத்துச் சென்று பார்த்தேன். உறுமல் சத்தம் கேட்டதுமே என் தெய்வங்கள் எனக்கு முன்னால் பின்னங்கால் பிடறியில்பட என் புத்தியை விட்டு ஓடிவிடுவார்கள்.

பிறகு அவர்களை நம்புவதை விடுத்து, வீட்டைவிட்டுப் புறப்படும்போது இரண்டு கைகளிலும் தலா ஒரு கல்லை எடுத்துக்கொண்டு தலைக்கு மேலாகத் தயாராகத் தூக்கிவைத்துக்கொண்டு செல்லத்தொடங்கினேன்.

எனக்கே அவமானமாக இருந்தது. என்ன அவலம் இது! என்னுடைய இரண்டு கற்கள் இருபத்தைந்து சிப்பாய்களுக்கு முன்னால் எம்மூலைக்கு? தோழர்களுள் ஒருவர் குரலெடுக்கத் தொடங்கினால் போதும். அந்த முன்னூறு மீட்டர் நீளத்தையும் சம பாகங்களாகப் பிரித்துக்கொண்டு ஆட்சிபுரிந்துவரும் அத்தனை பேரும் ஓடோடிவந்துவிடுவார்கள்.

இரண்டு கற்களை வீசிவிட்டு நிராயுதபாணியாக நான் நிற்பதைக் கண்டதும் அவர்களுக்கு உற்சாகம் பீறிட்டுவிடும். உறங்குகின்ற கும்பகர்ண உங்கள் மாய வாழ்வெலாம் இறங்குகின்ற தின்றுகாண் எழுந்திராய், எழுந்திராய் என்று ஒரு குறிப்பிட்ட தாளகதியில் தொலைவிலிருந்து அவை சீறிப்பாய்ந்து ஓடிவருவதை மனக்கண்ணில் எண்ணியதுமே என் கரங்களில் ஏந்தியிருந்த இரண்டு கற்களும் துவண்டு விழுந்துவிடும்.

வேறென்ன செய்யலாம் என்று புரியவில்லை. நடைப்பயிற்சிக்குச் சில துணைவர்களைத் தேடிக்கொண்டால் நல்லது என்று தோன்றியது. ஆனால் தோதாக யாருமில்லை. பொதுவாக நான் வசிக்கும் பேட்டையில் உடல்நலன் சார்ந்த அக்கறை கொண்டவர்கள் அனைவரும் வயோதிகர்கள். நல்ல வெயில் வந்தபிறகுதான் அவர்கள் நடைப்பயிற்சியைத் தொடங்குவார்கள். அதுவும் பத்து நிமிடங்களுக்கு ஒருமுறை ஏதாவது ஒரு மூலையில் நின்று நாலு வார்த்தை அரசியல் பேசிவிட்டுத்தான் நடப்பார்கள். மீண்டும் பத்து நிமிடம். மீண்டும் அரசியல். மீண்டும் நடை. எனக்குக் கண்டிப்பாகச் சரிப்படாது.

என் தந்தையார்கூட தினசரி நடைப்பயிற்சிக்குச் செல்பவர்தான். வெறும் பனியன். அதன்மேல் ஒரு ஸ்வெட்டர். மடித்துக் கட்டிய வேட்டிக்கு ஒன்றரையடி கீழே சாக்ஸ். ஆனால் ஷூ போடமாட்டார், செருப்புதான். தலைக்கு ஒரு முண்டாசு வேறு அணிந்துகொண்டு மிக வினோதமாக, கிட்டத்தட்ட ஒரு நடன நாரீமணிபோலத்தான் நடைப்பயிற்சி மேற்கொள்வார். பார்த்தால் நமக்கே குரைக்கலாம் போலத் தோன்றும். ஆனால் ஒருபோதும் இந்த நாய்த்தோழர்கள் அவரை இம்சித்ததில்லை. ஏனோ என்னை மட்டும் விடாமல் வாட்டியெடுக்கின்றன.

பிரதான சாலையை அடையும்வரைதான் என் பிரச்னை. அங்கு போய்விட்டால் மேம்பாலம் வந்துவிடும். எந்தக் கவலையும் இல்லை. எனக்காகவே கட்டிய மேம்பாலம். யாருமில்லா மேம்பாலம். பைரவர்கள் ஏறாத மேம்பாலமும் கூட.

கடந்த இரு மாதங்களில் இந்தப் பிரச்னை பெரிதாகிக்கொண்டே செல்ல, தற்செயலாக சுவாமி ராமா என்பவர் எழுதிய ‘லிவிங் வித் தி ஹிமாலயன் மாஸ்டர்ஸ்’ என்கிற புத்தகத்தைப் படிக்க நேர்ந்ததில் ஒரு வழி அகப்பட்டது.

அதாகப்பட்டது, ஜீவராசிகளை சிநேகிதர்களாக்கிக்கொண்டுவிடுவது! எப்படி முடியும் என்றால், அவற்றைக் கண்டதுமே ‘நண்பா! நான் உன்னை நேசிக்கிறேன். முழு மனத்துடன் நேசிக்கிறேன். என்னால் உனக்கு எந்தத் தீங்கும் நேராது. நீயும் எனக்குத் தீங்கு செய்யமாட்டாய் என்று மனப்பூர்வமாக நம்புகிறேன். நாம் இருவரும் சகஜீவிகள். வருகிறாயா, இருவரும் இணைந்து நடைப்பயிற்சி செய்யலாம்?’ என்று மனத்துக்குள் உண்மையாக அவற்றுடன் பேசவேண்டும்.

இவ்வாறு நாம் மனத்துக்குள் நினைப்பது சூட்சுமமாக சம்பந்தப்பட்ட ஜீவன்கள் புத்திக்குச் சென்று சேர்ந்துவிடும் என்றும், தம்மிடம் சிநேகம் கொள்ள விரும்பும் ஒரு மனிதனை அவை ஒருபோதும் தாக்காது, அச்சுறுத்தாது என்றும் ஓர் அனுபவம் மூலம் சுவாமி ராமா அந்தப் புத்தகத்தில் விளக்கி எழுதியிருந்தார்.

அது நினைவுக்கு வந்துவிட்டது. அடடே, என்ன ஒரு சுலபமான – உன்னதமான வழி!

மறுநாள் நான் பள்ளிக்கட்டுச் சபரிமலைக்கு இரண்டு கற்களை இருமுடி கட்டி எடுத்துச் செல்வதைத் தவிர்த்துவிட்டு, நெஞ்சு நிறைந்த அன்புடனும் மனம் நிறைந்த நேயபாவத்துடனும் புறப்பட்டேன்.

எங்கள் தெரு முனையிலேயே ஒரு தோழர் தயாராக இருந்தார். எதற்கும் இருக்கட்டும் என்று இருபதடி தொலைவிலேயே நின்று மனத்துக்குள் பேசத் தொடங்கினேன். நண்பா, நலமா? காலை எழுந்ததும் நான் பச்சைத் தேநீர் அருந்தினேன். நீ என்ன சாப்பிட்டிருப்பாய்? ஐயோ உனக்குப் பசிக்குமே? நாளை முதல் பிஸ்கட் அல்லது பொறை எடுத்துவருகிறேன். இன்றைக்கு நான் நடைப்பயிற்சிக்குச் செல்ல எனக்கு வழிவிடுவாயா?

ஒரு தியானம் போல் இதனை மூன்று முறை சொல்லிவிட்டு, எதற்கும் துணிந்தவனாய் – சே, துணிந்தவனாக எப்போதும்போல் அந்த ஜீவராசியை நோக்கி நடக்கத் தொடங்கினேன்.

நண்பர் சற்றே வியப்புற்றிருக்கவேண்டும். வழக்கம்போல் கச்சேரிக்கு சுருதி சேர்க்கிற தொனியில் அடித்தொண்டையிலிருந்து ஆரம்பித்தார். ஐயோ, சுவாமி ராமா! இதென்ன விபரீதம் என்று என் ஆன்மா அலற ஆரம்பித்துவிட, புத்தி விழிப்புடன் இருந்து, ‘ம்ஹும், மாறாதே! உன் இயல்புக்குத் திரும்பாதே! அது உன் சகஜீவராசி. உன்னை ஒன்றும் செய்யாது. ஏனென்றால் நீ அதைத் துன்புறுத்தப்போவதில்லை. அந்தச் செய்தியைத் தெரியப்படுத்திக்கொண்டே இரு’ என்று உத்தரவிட்டது.

மீண்டும் என் நடைவேகத்தை மட்டுப்படுத்தி, நான் உனக்குத் துன்பம் தராதவன் அல்லது தரவக்கில்லாதவன். உனக்கொரு குட் மார்னிங் சொல்லுவேன். என்னை நிம்மதியாகப் போகவிடு என்று கேட்டுக்கொண்டேன்.

அதிர்ஷ்டவசமாக அந்த நண்பர் அடங்கிவிட்டார். இது எனக்கு வியப்பாகவே இருந்தது. சுவாமி ராமாவின் மீது மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டது. எனவே, மேலும் உற்சாகமாக அடுத்த வீதியை அடைந்தேன். அங்கே ஏழு பேர் உள்ளார்கள். பார்க்கலாம். இந்த உத்தி பலிக்கிறதாவென்று.

மீண்டும் அதே மந்திரம். நண்பா நலமா? உனக்கொரு குட் மார்னிங். நான் பச்சைத் தேநீர் சாப்பிட்டேன். நீ பல் தேய்த்துவிட்டாயா?

ம்ஹும். எடுபடவில்லை. நண்பர் சத்தமிடத் தொடங்கிவிட்டார். இது அபாய மணியோசை. அடுத்தடுத்த வீதிகளிலிருந்து சிப்பாய்கள் வந்துவிடுவார்கள். எனவே என் வழக்கமான உத்திப்படி ஒரு பெருங்கொலைகாரன் முகபாவத்துடன் கீழே கிடக்கிற கொடூர ஆயுதம் எதையோ வேகமாக எடுக்கிறமாதிரி பத்தடிக்கு ஒருமுறை குனிந்து குனிந்து கோலமிட்டபடியே பாய்ந்து ஓடி அடுத்தவீதி. அங்கிருந்து அதற்கடுத்த வீதி. பாய்ந்து ஓடி பிரதான சாலை. நின்று மூச்சிறைத்துவிட்டு, நடைப்பயிற்சி.

பெருந்தொல்லை. சுவாமி ராமாவின் மேற்படி உத்திக்கு சிங்கம், புலி, கரடி, காண்டாமிருகம் போன்ற காட்டுமிருகங்கள்தான் பணியும்போலிருக்கிறது. எனது தோழர்களுக்கு மனத்தைப் படிக்கும் வழிமுறைகள் ஏதும் தெரியவில்லை. உட்காரவைத்துப் பாடம் சொல்லித்தரவும் வழியில்லை.

என்ன செய்யலாம்?

ஒரு தீர்மானத்துடன் பல்லவபுரம் நகராட்சி என்று போர்டு எழுதி மாட்டப்பட்டிருக்கும் கட்டடத்துக்குள் ஒருநாள் நுழைந்தேன். தயாராக அன்றைக்கு ஒரு தாளும் பேனாவும் கொண்டுசென்றிருந்தேன்.

ஐயா, வணக்கம். தினசரி பொழுது விடியும்போது நடைப்பயிற்சி மேற்கொள்ளும் என்னைப்போன்ற எத்தனையோ அப்புராணிகள் படும் பாடுகள் கேளீர். முதல் மெயின் ரோடில் இரண்டு, இரண்டாம் மெயின்ரோடில் ஏழு, மூன்றாம் மெயின் ரோடில் ஆறு, நான்காவதில் நான்கு, ஐந்தாவதில் பத்து என்று வீதிதோறும் நாயின் விளக்கம் சொல்லத்தரமாயில்லை. காலங்காலமாக ஒரே வீதியில் சந்தித்துப் பழகினாலும் இவை சிநேகத்துக்கு ஒத்துவருவதாகவும் இல்லை. பிஸ்கட் போட்டுப் பார்த்துவிட்டேன். கைகூப்பிக் கதறிப் பார்த்துவிட்டேன். பதுங்கிப் பதுங்கிச் சென்று பார்த்துவிட்டேன். கல்லால் அடித்தும் பார்த்துவிட்டேன். காலபைரவன் மாதிரி கையில் பெரிய கழியொன்றையும் ஒருநாள் எடுத்துச் சென்றேன்.

என்ன செய்தும் பயனில்லை. விட்டேனா பார் என்று நூற்றாண்டுகால வெஞ்சினத்தை நெஞ்சில் ஏந்தி முறைக்கின்றன. உறுமுகின்றன. குரைக்கின்றன. கவ்விப்பிடிக்கப் பாய்கின்றன.

சென்னைமாநகரில் வேறு எந்தப் பேட்டையிலும் இத்தனை நாய்களை வீதி வளர்க்காது. நான் வளர்ந்த இந்த வீதியில் நாய்களும் வளர்வதில் எனக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால் குறுக்குவாட்டில் மிகவும் வளர்ந்துவிட்ட என் தேகத்தைக் குறைப்பதற்காக மேற்கொள்ளும் இம்முயற்சியை இந்த ஜீவராசிகள் இத்தனை உக்கிரமாகத் தடுப்பதன் காரணம்தான் புரியவில்லை.

தயவுசெய்து ஏதாவது செய்யுங்கள். அந்தக் காலத்தில் நாய்வண்டி என்று ஒன்று வருமே? அதைத் திரும்பக் கொண்டுவாருங்கள். நானும் வேண்டுமானால் அதே வண்டியில் வந்து உங்களுக்கு ஐம்பதுக்கும் மேற்பட்ட நாய்களைப் பிடித்துத் தருகிறேன். எனக்குச் சன்மானம் ஏதும் வேண்டாம். ஒவ்வொரு விடியலையும் அமைதியாக அனுபவிக்க மட்டுமே விரும்புகிறேன். ஆவன செய்யக் கேட்டுக்கொள்கிறேன்.

எழுதிப் போட்டு ஒரு மாதமாகிறது. பல்லவபுரம் நகராட்சியினருக்கு அதைப் படிப்பதற்கு இன்னும் சமயம் வாய்க்கவில்லை.

சமயத்தில் வெறுப்பாகவும், கோபமாகவும் துக்கமாகவும் துயரமாகவும் இது என்னை மிகவும் பாதித்தாலும் சில சமயம் வேறு விதமாகவும் தோன்றுகிறது.

சுவாமி ராமா என்ன சொன்னார்? மிருகங்களை நட்பாக்கிக்கொண்டுவிடுவது பற்றித்தானே? நகுதற் பொருட்டு அல்லது குரைத்தற் பொருட்டு மட்டுமா நட்பு?

என் குறுக்குவாட்டு வளர்ச்சியைக் குறைப்பதற்குத்தானே நடைப்பயிற்சியும் இன்னொன்றும்? என் நண்பர்களும் அதற்கு உதவுவதற்காக அல்லவா அந்தக் காலைப்பொழுது உறக்கத்தைத் தவிர்த்துவிட்டு எனக்காகக் காத்திருக்கிறார்கள்? நீ ஓடு, நான் துரத்துகிறேன். இந்த தூரத்தை நீ நடந்து கடந்தால் நாற்பது கலோரி குறையும். ஓடினால் இன்னும் அதிகரிக்கும். மெயின்ரோடு வரை ஓடு. மேம்பாலத்தில் நட. திரும்பி வரும்போது மீண்டும் ஓடு. வீட்டுக்குச் சென்று உட்கார். தீர்ந்தது விஷயம்.

இப்போது இன்னும் வேகமாக இளைத்துக்கொண்டிருக்கிறேன். என் நண்பர்களுக்கு நான் என்ன கைம்மாறு செய்யப்போகிறேன்?

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி