பொலிக! பொலிக! ராமானுஜர்-1000

பொலிக! பொலிக! 59

தம்மை மறந்த லயிப்பில் பிரபந்தம் பாடியபடி ஊர்வலம் மெல்லப் போய்க்கொண்டிருந்தது. அத்தனை பேரும் ராமானுஜரின் சீடர்கள். அவ்வப்போது அருகிலுள்ள திவ்யதேசங்களுக்கு அவர்கள் இவ்வாறு யாத்திரை கிளம்பிவிடுவார்கள். முதலியாண்டான் சில சமயம் உடன் வருவார். அவர் வேறு வேலையாகப் போயிருக்கிற நாள் என்றால் கூரத்தாழ்வான் வருவார். மடத்தின் மூத்த சீடர்கள் யாராவது ஒருவர் கண்டிப்பாக உண்டு. புதிய சீடர்களுக்குப் பாசுரங்களைச் சொல்லிக் கொடுத்து, விளக்கம் சொன்னபடி யாத்திரை முன்னேறும்.

அன்றைக்கு வில்லிதாசர் முன்வரிசையில் பாசுரம் சொன்னபடி போய்க்கொண்டிருந்தார். பின்னால் நூற்றுக்கணக்கான புதிய சீடர்கள். அத்தனை பேரும் உடையவரே கதி என்று நம்பி வந்து சேர்ந்தவர்கள். வண்டவில்லியும் செண்டவில்லியும் ஊர்வலத்தின் கடைசி வரிசையில் வந்துகொண்டிருந்தார்கள். ராமானுஜரிடம் சேர்ந்ததில் இருந்து அவர்கள் வில்லிதாசரைத் தாய்மாமன் என்று எண்ணுவதே இல்லை. அவர் உடையவரின் பேரன்புக்குப் பாத்திரமான சீடர்களுள் ஒருவர். தவிரவும் அரங்கனே கண் திறந்து நோக்கிய அற்புதப் பிறப்பு. சந்தேகமில்லாமல் மகான். அவர் பெற்ற அருளில், அவர் பெற்ற அறிவில் ஆயிரத்தில் ஒரு பங்கு தமக்கும் வாய்க்காதா என்ற ஞானத்தேடலுடன் வந்து இணைந்திருந்தார்கள்.

ஆனால் சக சீடர்களிடையே அவர்கள் இருவரைப் பற்றி அவ்வப்போது சில்மிஷமான பேச்சுவார்த்தைகள் நடக்கும். வில்லி சகோதரர்களின் தோற்றமும் நடையும். அவர்கள் மல்லர்கள். வரிந்து கட்டிக்கொண்டு குஸ்தியில் இறங்கினால் ஊரே அதகளப்படும். கட்டுமஸ்தான தேகமும் கொழுத்த கன்னங்களும் திரண்ட தோள்களும் முறுக்கிய மீசையுமாகப் பார்க்கவே சற்று பயங்கரமாக இருப்பார்கள். அந்தத் தோற்றத்தில் அவர்கள் தரிக்கும் திருமண் காப்பு சட்டென்று ஒரு சிறு நகைப்பைக் கொடுக்கும்.

‘அவன் தொப்பையைப் பாரேன்! பொங்கல் பானைக்குத் திருமண் சாற்றியது போல!’

‘அந்த மீசைக் கண்ணராவியை எடுத்துத் தொலைக்கவும் மாட்டேன் என்கிறான். நடு ராத்திரி அவனைப் பற்றி நினைத்துக்கொண்டுவிட்டால் விடிகிற வரைக்கும் பயமாகவே இருக்கிறது!’

‘மன்னனுக்கு மல்லர்கள் சகாயம் தேவைதான். நமது மடத்துக்கு எதற்கு இவர்கள்? இவன் பிரபந்தம் சொல்லுகிற லட்சணத்தைப் பார்த்தால் நாராயணனே அலறிக்கொண்டு ஓடிவிடுவான். ல, ள, ழ உச்சரிப்பில் சகோதரர்கள் இருவரும் சரித்திரம் படைத்துக்கொண்டிருக்கிறார்கள்!’

‘உடையவர் எப்படித்தான் சகித்துக்கொள்கிறாரோ.’

‘அவரை விடப்பா. கேட்டால், மனத்தில் பக்தி இருந்தால் போதும் என்று சொல்லிவிடுவார்.’

‘இந்த மாமிச மலைகளின் மனத்தில் பக்தியும் இருக்குமா என்ன?’

‘சந்தேகமாக உள்ளதா? பரிசோதித்துப் பார்த்துவிடுவோமா?’

அன்றைக்கு அவர்கள் விபரீதமாக ஒரு விளையாட்டை ஆடிப் பார்க்க முடிவு செய்தார்கள்.

சீடர்கள் நடந்துகொண்டிருந்த பாதையில் ஒரு சமணர் கோயில் எதிர்ப்பட்டது. வாயிலில் சிங்கமும் யானையும் செதுக்கப்பட்ட பெரும் கற்கள் எழுந்து நின்றன. அந்த இடத்தை ஊர்வலம் கடந்தபோது விஷமக்காரச் சீடர்கள் சிலர் வில்லி சகோதரர்களை அழைத்தார்கள்.

‘வண்டவில்லி, பெருமாள் கோயிலைக் கடந்துகொண்டிருக்கிறோம்! கோயிலை கவனிக்கமால் எங்கே பராக்குப் பார்த்துக்கொண்டு வருகிறீர்கள் இருவரும்?’

பாசுரத்தில் கவனமாக இருந்த வில்லி சகோதரர்கள் இருவரும் திடுக்கிட்டுப் பார்த்தார்கள். ஒரு கணம்தான். தடாலென இருவரும் அந்த இடத்தில் சாஷ்டாங்கமாக விழுந்துவிட்டார்கள். நாராயண, நாராயண என்று ஓங்கி உலகளந்த உத்தமனை எட்டும் ஆவேசத்துடன் அவர்கள் குரல் கொடுத்தபடியே விழுந்து சேவித்துக்கொண்டிருக்க, முன்னால் சென்ற சீடர்கள் திகைத்துப் போய் நின்றுவிட்டார்கள்.

‘என்ன ஆயிற்று உங்கள் இருவருக்கும்? இது சமணர் ஆலயம். எழுந்திருங்கள்!’

யார் யாரோ குரல் கொடுத்துப் பார்த்தும் இருவரும் எழவில்லை. நாராயண, நாராயண என்று தொடர்ந்து உச்சரித்துக்கொண்டே இருந்தவர்கள் பக்திப் பரவசத்தில் அப்படியே மயங்கிப் போனார்கள்.

முன்னால் போய்க்கொண்டிருந்த வில்லிதாசர் திரும்பிப் பார்த்தார். ‘என்ன அங்கே பிரச்னை?’

‘சுவாமி, வண்டவில்லியும் செண்டவில்லியும் சமணர் ஆலயத்தைப் பெருமாள் கோயில் என்று நினைத்து விழுந்து சேவித்தார்கள். விழுந்தவர்கள் எழவில்லை. அப்படியே மயங்கிவிட்டார்கள்.’

வில்லிதாசர் புன்னகை செய்தார். மெல்ல அவர்கள் அருகே வந்தார்.

‘யாராவது ஓடிச் சென்று தண்ணீர் கொண்டு வாருங்கள். மயக்கம் தெளிவிக்க வேண்டும்.’ யாரோ சொன்னார்கள்.

‘இல்லை, தண்ணீர் வேண்டாம். வில்லிதாசரே! நீர் நிற்கும் இடத்திலிருந்து சிறிது நகர்ந்து நில்லுங்கள்’ என்றார் இன்னொரு சீடர்.

வில்லிதாசருக்குப் புரியவில்லை. இருப்பினும் சட்டென்று நகர்ந்து நிற்க, அவர் குனிந்து வில்லிதாசர் நின்ற இடத்தில் இருந்து ஒரு பிடி மண்ணை அள்ளி மயங்கிக் கிடந்த வில்லி சகோதரர்கள் மீது தூவினார்.

சட்டென்று அவர்கள் மயக்கம் தெளிந்து எழுந்தார்கள்.

கூட்டம் திகைத்துவிட்டது. வில்லிதாசருக்கே தாங்க முடியாத வியப்பு.

‘சுவாமி! துளசி தீர்த்தம் தெளித்து மயக்கம் தெளிவிக்கலாம். பரம பாகவதரான தங்களது பாதம் பட்ட மண்ணும் அதற்கு நிகரானதே. தவிரவும் பெருமாள் கோயில் என்று சொன்னதும் சற்றும் யோசிக்காமல் விழுந்து சேவித்த இவர்கள் இருவரும் தங்களுக்குச் சரியான வாரிசுகள்தாம். தூணிலும் துரும்பிலும் இருப்பவன் இச்சமணக் கோயில் இருக்கும் இடத்தில் மட்டும் இல்லாதிருந்துவிடுவானா?’

விளையாட்டுக்கு வில்லி சகோதரர்களை சமணர் ஆலயத்தின்முன் விழவைத்த சீடர்கள் வெட்கத்தில் சுருங்கிப் போனார்கள்.

அகளங்கனிடம் இந்தக் கதையைச் சொன்ன அமைச்சர், ‘மன்னா! வண்டவில்லியும் செண்டவில்லியும் மழை வந்ததை நாரணன் வந்தான் என்று சொன்னதன் காரணம் புரிகிறதா? அவர்களுக்கு மழையும் நாரணன்தான், வெயிலும் நாரணன்தான். இரவும் பகலும் ஒளியும் இருளும் அனைத்தும் நாரணனே. சமணர் ஆலய வாசலிலும் நாரணன் பொற்பாதங்களைக் கண்டவர்கள் அவர்கள்.’

‘நம்பமுடியாத வியப்பாக இருக்கிறது அமைச்சரே. வில்லி சகோதரர்களே, உங்களது பக்தி மகத்தானது. நீங்கள் இங்கே அரண்மனைச் சேவை செய்து பொழுதை வீணாக்காதீர்கள். இனி நீங்கள் உங்கள் விருப்பப்படி எப்போதும் திருவரங்கத்திலேயே இருக்கலாம். உடையவர் அருகிலேயே வசிக்கலாம். மாதம்தோறும் உங்கள் சம்பளம் மட்டும் உங்களைத் தேடி வந்துவிடும். அந்தக் கவலை வேண்டாம்.’ என்றான் அகளங்கன்.

‘நன்றி மன்னா. அங்கே ஆலயத் திருப்பணி நடந்துகொண்டிருக்கிறது. உடையவர் எங்கள் இருவரையும் அந்த வேலையில்தான் ஈடுபடுத்தியிருக்கிறார். உங்களுடைய நல்ல மனத்தால் இனி நாங்கள் முழு நேரமும் அரங்கன் சேவையில் ஈடுபடுவோம்.’ என்றான் செண்டவில்லி.

‘நல்லது. விரைவில் நான் திருவரங்கம் வருகிறேன். உங்கள் உடையவரை நானும் தரிசிக்க வேண்டும்!’

(தொடரும்)

Share

தொகுப்பு

அஞ்சல் வழி


எழுத்துக் கல்வி