பொலிக! பொலிக! ராமானுஜர்-1000

பொலிக! பொலிக! 60

வில்லிதாசரால் முதலில் நம்ப முடியவில்லை. உண்மையாகவா, உண்மையாகவா என்று திரும்பத் திரும்பக் கேட்டார்.

‘ஆம் சுவாமி. மன்னருக்கு மனத்தில் என்னவோ பட்டிருக்கிறது. நமது ஆசாரியரை அவர் இதுவரை சந்தித்ததில்லை என்றாலும் அவர்மீது மிகுந்த மரியாதை கொண்டிருக்கிறார். விரைவில் நேரில் வந்து தரிசிப்பதாகவும் சொன்னார்.’

‘நல்லது செண்டவில்லி. இதுவும் அரங்கன் திருவுள்ளம்தான். அரங்கன் சேவையில் ஒரு மன்னனுக்கு ஈடுபாடு இருக்குமானால் மிகவும் நல்லது என்று உடையவர் சொல்லுவார். அகளங்கன் மூலம் அது நடக்குமானால் நமக்கும் மகிழ்ச்சியே.’

‘அப்புறம் இன்னொரு விஷயம் உண்டு.’

‘சொல் மருமகனே.’

‘மன்னர் இனி எங்களை அரண்மனைப் பணிக்கு வரவேண்டாம் என்று சொல்லிவிட்டார். திருமடத்திலேயே இருந்துகொள்ளலாம் என்றும் மாதச் சம்பளம் சரியாக வந்துவிடும் என்றும் சொன்னார்.’

வில்லிதாசருக்கு இது இன்னும் நம்பமுடியாததாக இருந்தது. தாம் உறையூரை விட்டு வந்தது முதல் அங்கே திரும்பிச் செல்லவேயில்லை என்பதை எண்ணிப் பார்த்தார்.

‘என்மீதே அவருக்கு நிரம்ப வருத்தம் இருக்கும் என்று நினைத்தேன்.’

‘இல்லை சுவாமி. நீங்கள் உடையவரின் வழிகாட்டுதலில் அரங்கன் திருப்பணியில் ஈடுபட ஆரம்பித்ததில் அவருக்கு மகிழ்ச்சிதான். நாங்களும் உங்களைப் பின்பற்றி இங்கே வந்துவிட்டோம் என்பதுதான் அவருக்கு வியப்பே. ஆனால் அவரவர் தனிப்பட்ட விருப்பங்களில் தலையிட வேண்டாம் என்று மன்னர் கருதுகிறார் போலிருக்கிறது.’

‘விருப்பங்களில் தலையிடாமல் இருப்பது பெரிய விஷயமில்லையப்பா. ஆனால் நீ மடத்தில் தங்கிக்கொண்டு கோயில் கைங்கர்யம் செய்வதற்கு அவர் மாதச் சம்பளம் அனுப்புவார் எனச் சொன்னாய் அல்லவா? அதுதான் பெரிது. நம்பவே முடியாத ஆச்சரியமாக இருக்கிறது.’

வில்லிதாசர் சொல்லிக்கொண்டிருந்தபோது சட்டென்று ஒரு குரல் இடைமறித்தது.

‘ஆனால் இது தவறு பிள்ளைகளே!’

குரல் வந்த திசையில் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தார்கள். ராமானுஜர் அங்கே நின்றிருந்தார்.

‘சுவாமி..’

‘கேட்டேன் வில்லிதாசரே. அகளங்கன் பரந்த மனம் படைத்தவன் தான். அதில் சந்தேகமில்லை. ஆனால் அரசு உத்தியோகத்தில் இருக்கிறவர்கள், அரசாங்கத்துக்கு உழைக்காமல் சம்பளம் மட்டும் பெறுவது தவறு.’

‘சுவாமி, நாங்கள் எங்களுக்காக அதைச் செலவிடப் போவதில்லை. மன்னர் அனுப்புகிற பணத்தை அப்படியே திருப்பணிகளுக்குத்தான் கொடுத்துவிட இருக்கிறோம்.’

‘அது இன்னும் தவறு. உழைக்காமல் ஈட்டப்படும் செல்வத்தை அரங்கன் ஒருபோதும் ஏற்கமாட்டான். நீங்கள் உடனே அகளங்கனிடம் சம்பளம் வேண்டாம் என்று சொல்லிவிடுங்கள்.’

வண்டவில்லியும் செண்டவில்லியும் அன்றே கிளம்பி உறையூருக்குப் போனார்கள். மன்னரைப் பார்த்து உடையவர் சொன்னதைச் சொன்னார்கள்.

‘மன்னர்பிரானே, தாங்கள் தவறாக எண்ணக்கூடாது. உழைக்காமல் வருகிற செல்வத்தை அரங்கன் விரும்பமாட்டான் என்று உடையவர் சொல்லிவிட்டார். அதனால் எங்களுக்கு இனி சம்பளம் ஏதும் அனுப்பாதீர்கள். உடையவரிடம் பணிபுரிய எங்களை அனுமதித்ததே எங்களுக்குப் போதும்.’

திகைத்துப் போனான் அகளங்கன்.

‘இப்படி ஒரு மனிதரா?’

‘மன்னியுங்கள் மன்னரே. அவர் சராசரி மனிதரல்லர். சராசரிகளால் எட்ட முடியாத உயரங்களில் சஞ்சரிப்பவர். அரங்கனுக்கு உவப்பானவர்.’ என்றான் வண்டவில்லி.

‘அது மட்டும் இல்லை அரசரே. திருவரங்கத்துக்கு அவர் வந்த அன்று அரங்கப்பெருமானே அவரை அழைத்து நீரே இனி உடையவர் என்று திருவாய் மலர்ந்திருக்கிறான்!’

‘அப்படியா? இது எனக்குப் புதிதாக இருக்கிறதே.’

‘ஆம் மன்னா. உபய விபூதிச் செல்வங்களாகச் சொல்லப்படும் மண்ணுலகம், விண்ணுலகம் அனைத்துக்கும் உடையவர் அவர் ஒருவர்தாம். இதை இன்னொரு மனிதர் சொல்லியிருந்தால் நாம் பொருட்படுத்தியிருக்க வேண்டாம். ஆனால் அரங்கனே சொன்னது இது. இதற்கு அரங்க நகரமே சாட்சி.’

திகைத்துப் போனான் அகளங்கன். ‘சரி, நீங்கள் போகலாம்’ என்று அவர்களை அனுப்பி வைத்துவிட்டு அடுத்த நாளே அவன் திருவரங்கம் புறப்பட்டான்.

முன்னறிவிப்பு கிடையாது. எப்போதும் உடன் வரும் மந்திரிகள் கிடையாது. மெய்க்காப்பாளர்கள் கிடையாது. பல்லக்கு பரிவாரங்கள் கிடையாது. அகளங்கன் தனியாகவே திருவரங்கம் கிளம்பினான். கோயில் வாசலில் அவனைப் பார்த்துவிட்ட வில்லிதாசருக்கு ஒரே பரபரப்பாகப் போய்விட்டது.

‘வரவேண்டும் மன்னர் பிரானே! நீங்களா இப்படித் தன்னந்தனியாக..’

‘அதெல்லாம் பிறகு. நீர் சுகமாயிருக்கிறீரா? அதைச் சொல்லும் முதலில்!’

‘யாருக்கும் கிட்டாத பேரானந்த வாழ்வு எனக்கு வாய்த்தது ஐயா. எனது ஆசாரியரின் திருவடி நிழலில் பரம சுகமாக இருக்கிறேன். பாசுரங்கள் கற்கிறேன். கோயில் திருப்பணியில் ஈடுபடுகிறேன். உடையவர் தினமும் பாடம் சொல்லித்தருகிறார். உபன்னியாசம் செய்கிறார். அதையெல்லாம் கேட்கிறேன். ஒரு ஞானப்பெருங்கூட்டில் இந்தக் காட்டுக்குருவிக்கும் எப்படியோ இடம் கிடைத்துவிட்டது!’

‘மிக்க மகிழ்ச்சி வில்லிதாசரே. நான் உங்கள் உடையவரைக் காணத்தான் கிளம்பி வந்தேன்.’

வில்லிதாசர் திகைத்துவிட்டார். ‘எங்கள் உடையவரா! மன்னா, அவர் அனைவருக்கும் உடையவர். அனைத்தும் உடையவர். வாருங்கள் என்னோடு’ என்று அழைத்துக்கொண்டு மடத்துக்கு விரைந்தார்.

அன்று அது நடந்தது.

அகளங்கன் ராமானுஜரை வணங்கி எதிரே அமர்ந்து பேச ஆரம்பித்தான்.

‘சுவாமி, வில்லியும் அவரது மருமகன்களும் எனது படையில் பணியாற்றிக்கொண்டிருந்தவர்கள். அவர்களைப் பன்னெடுங்காலமாக நான் அறிவேன். நானறிந்த அவர்கள் வேறு. ஆனால் இப்போது காண்கின்ற நபர்கள் வேறு. அவர்கள் முகத்தில் தெரிகிற சாந்தம், பேச்சில் உள்ள அழுத்தம், செயல்பாடுகளில் காணப்படுகிற சிரத்தை, அனைத்துக்கும் மேலாக என்னவோ ஒன்று.. அதை எனக்கு விளக்கத் தெரியவில்லை. மூன்று மல்லர்களை நீங்கள் என்னவாகவோ மாற்றிவிட்டீர்கள்.’

ராமானுஜர் சிரித்தார். ‘நான் மாற்றவில்லை மன்னா. வில்லிதாசரை அரங்கனின் கண் மாற்றியது. அவரது மருமகன்களை அவரது மாற்றமே உருமாற்றியது.’

‘ஆனால் ஊர் உலகெங்கும் உங்களைப் பற்றியே பேசுகிறார்களே? நீங்கள் புனிதங்களைப் பொதுமைப்படுத்துவதாகக் கூடச் சொன்னார்கள்.’

‘புனிதம் என்று எதைக் கருதுகிறீர்கள்? பரமாத்மாவான ஶ்ரீமன் நாராயணன் மட்டுமே புனிதன். அவனது தாளைப் பற்றிக்கொள்கிற அத்தனை பேரும் புனிதத்துடன் சம்பந்தம் கொண்டுவிடுகிறார்கள் அல்லவா? நீரில் கலப்பது நீராகிறது. நெருப்பில் கலப்பது நெருப்பாகிறது. புருஷோத்தமனின் பாததூளி அனைத்தையும் பரிசுத்தமாக்கிவிடுகிறது. எனவே புனிதம் என்று தனியே ஒன்றுமில்லை மன்னா.’

‘ஜாதி, வருண வித்தியாசங்கள் கூடவா கிடையாது?’

உடையவர் அவனை உற்றுப் பார்த்தார். கனிவாகப் புன்னகை செய்தார். பிறகு பேச ஆரம்பித்தார்.

(தொடரும்)

Share

தொகுப்பு

அஞ்சல் வழி


எழுத்துக் கல்வி