அலகிலா விளையாட்டு – சில நினைவுகள்

இன்று காலை ஒரு நண்பருடன் பேசிக்கொண்டிருந்தபோது தற்செயலாகக் கேட்டார். நீங்கள் எழுதியவற்றுள் உங்கள் மனத்துக்கு மிகவும் நெருக்கமான ஒரு நாவல் என்றால் எதனைச் சொல்வீர்கள்? இறவான் அல்லது யதியைச் சொல்வேன் என்று அவர் எதிர்பார்த்தார். உண்மையில் இந்தக் கணம் நினைத்துப் பார்க்கும்போதும் எனக்கு மிகவும் நெருக்கமானதென்று அலகிலா விளையாட்டைத்தான் சொல்லத் தோன்றுகிறது.

ஒரு துறவி ஆகிவிட வேண்டும் என்ற வேட்கையுடன் அலைந்து திரிந்துகொண்டிருந்த காலக்கட்டத்தில் நான் எப்படி இருந்தேன், எப்படி யோசித்தேன் என்பதை மிக அந்தரங்கமாக எனக்கு நினைவூட்டிக்கொண்டே இருக்கும் நாவல் அது. அலகிலா விளையாட்டில் நான் மட்டுமே கதா பாத்திரம். அந்தக் காலக்கட்டத்தில் நான் சந்தித்த துறவிகள் யாரையுமே அதில் காட்டவில்லை. அவர்கள் அப்படியே இடம் பெயர்ந்து யதிக்குள் வந்து சேர்ந்தார்கள். இப்போது யோசிக்கும்போது புரிகிறது. அலகிலா விளையாட்டில் என்னை முழுக்க அலசி ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வந்துவிட்டதன் விளைவாகத்தான் யதியில் அன்று நான் சந்தித்த துறவிகளைக் குறித்து மட்டும் விரிவாகப் பேச முடிந்திருக்கிறது.

2003ம் ஆண்டு அலகிலா விளையாட்டை எழுதினேன். ஒரு நாவல் போட்டி அறிவிப்பைக் கண்டதன் உந்துதல். எழுதலாம் என்று எண்ணியிருப்பதை என் நண்பர் பார்த்தசாரதியிடம் சொன்னேன். கருவைக் கேட்டுவிட்டு நான் அதை எழுதியே தீரவேண்டும் என்று வற்புறுத்தி எழுத வைத்தவர் அவர்தான். சுமார் ஒரு மாத காலம் வெளி உலகத் தொடர்புகள் ஏதும் இல்லாமல் ஒரே அறைக்குள்ளேயே அடைந்து கிடந்து அதை எழுதி முடித்தேன். அந்த ஒரு மாத காலமும் பார்த்தசாரதி என் எதிரிலேயே அமர்ந்து என்னை கவனித்துக்கொண்டிருந்தார். விளையாட்டல்ல. உண்மையாகவே இது நடந்தது. இருவரும் ஒரு வார்த்தைகூடப் பேசிக்கொள்ளவில்லை. நீ யாரோ நான் யாரோ என்பது போலத்தான் இருந்தோம். ஆனால் நான் எழுதிக்கொண்டிருந்தேன்; அவர் என்னை கவனித்துக்கொண்டிருந்தார். இது ஒரு பயிற்சி. மனம் அலைபாயாமல் ஒன்றின்மீது குவிவதற்கு ஏதாவது ஒரு புறத் தூண்டுதல் இருப்பது நல்லது. நான் சிறிது பராக்கு பார்த்தாலும் பார்த்தசாரதி முறைப்பார். உடனே விறுவிறுவென்று எழுதுவேன். சாப்பிடும் நேரத்தில் மட்டும் அதுவரை எழுதியதைப் பற்றிச் சொல்வேன். அதைத் தாண்டி வேறு உரையாடல் கிடையாது.

எண்ணிப் பார்த்தால் வியப்பாகத்தான் இருக்கிறது. நான் ஒரு நாவலை எழுதி முடிப்பதற்காகத் தனது ஒரு மாத கால வாழ்க்கையை முற்றிலும் வீணடித்து எனக்காகவே அவர் என் எதிரே சும்மா அமர்ந்திருந்தார். யாருக்கு இப்படி ஒருவர் கிடைப்பார்? எழுதி முடித்து அவருக்குத்தான் முதலில் படிக்கக் கொடுத்தேன். ஒரு வரிதான் சொன்னார், ‘உங்களுக்குப் பிறகும் இந்நாவல் இருக்கும்.’

இன்று வரை எங்கெங்கிருந்தோ யார் யாரோ முகமறியாதவர்கள் அலகிலா விளையாட்டைக் குறித்து திடீர் திடீரென்று பேசுவார்கள். கடிதம் எழுதுவார்கள். நேரில் பார்க்க நேர்ந்தால் கையைப் பிடித்துக்கொண்டு கண் கலங்குவார்கள். சுய அனுபவம் எழுத்தாக உருமாறினால் மட்டுமே சாத்தியமாகக் கூடியது இதெல்லாம்.அந்த வருடம் இலக்கியப்பீடம் நாவல் போட்டியில் அலகிலா விளையாட்டு முதல் பரிசு வென்றது. நான் கலந்துகொண்ட ஒரே போட்டி அதுதான். அதற்கு முன்னும் பின்னும் எந்தப் போட்டிக்கும் எழுதியதில்லை. அப்போது என்னவோ ஒரு வேகம், ஒரு ஆர்வம்.

சரியாக ஒரு வருடம். 2004ம் ஆண்டு ஜூன் மாதம் நெய்வேலியில் மாலனின் திசைகள் விழாவில் கலந்துகொள்ளச் சென்றிருந்தேன். மாலன் அறிமுக உரை ஆற்றிக்கொண்டிருந்தபோது தொலைபேசித் தகவல் வந்தது. அலகிலா விளையாட்டுக்கு பாரதீய பாஷா பரிஷத் விருது. அவரே அதை மேடையில் அறிவித்தார். மறக்க முடியாத நாள் அது.

அன்றிரவு ஜெயமோகன் போன் செய்து பாராட்டினார். அப்படியொரு ஆத்மார்த்தமான பாராட்டை அதுவரை நான் அனுபவித்ததில்லை. அவர் போனை வைத்ததும் பிரபஞ்சன் அழைத்தார். அடுத்த சில நிமிடங்களில் அசோகமித்திரன் பேசினார். மறுநாள் காலை சா. கந்தசாமி, வெங்கட் சாமிநாதன், இபா என்று வரிசையாகப் பலபேர் கூப்பிட்டுப் பாராட்டினார்கள். உண்மையில் ஒரு மொத்த வாழ்வை அந்த ஒருநாளில் வாழ்ந்து முடித்துவிட்டாற்போலிருந்தது.

என்னால் எழுதத்தான் முடியும் என்ற முடிவுக்கு எப்போதோ வந்துவிட்டிருந்தேன். நான் சரியாகத்தான் எழுதுகிறேன் என்ற நம்பிக்கையை எனக்கு அளித்த நாவல் அலகிலா விளையாட்டு.

மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு அலகிலா விளையாட்டு இப்போது மறு பதிப்பாக வருகிறது என்பது தனிப்பட்ட முறையில் எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சிக்குரிய சம்பவம். விருதோ மற்றதோ அல்ல; இந்த ஜென்மம் இன்றுவரை இயங்கிக்கொண்டிருப்பதற்கான மூச்சுக் காற்றை அதுதான் அளித்தது என்பதே காரணம்.

அலகிலா விளையாட்டு நாவலை வாங்க இங்கு செல்லவும்.

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி