ஒரு ஊரில் அப்துல் கலாம் என்றொரு பின்னாள் விஞ்ஞானி படித்துக்கொண்டிருந்தார். அந்த ஊரில் ஒரு மலை இருந்தது. அது பச்சை மலை எனப்பட்டது. பச்சை மலையின் உச்சியில் இரவு நேரத்தில் தோன்றும் நிலாவைக் காட்டி, “ஒரு நாள் அங்கே நாம் குடி போக முடியும்” என்று அப்துல் கலாம் சொன்னார். அதெப்படி அவ்வளவு உயரம் போக முடியும் என்று ஊர் மக்கள் சந்தேகப்பட்டுக் கேட்டனர். அதற்கு அப்துல் கலாம், “ முடியும், உச்சத்தைக் கனவில் காணுங்கள்” என்று சொன்னார். பிறகு அவர் பரீட்சையில் பாசாகி டெல்லிக்குப் போய்விட்டார். ஐம்பது வருடங்கள் கழித்து அப்துல் கலாம் அதே கல்லூரி ஆண்டுவிழாவுக்குத் தலைமை தாங்கத் திரும்பி வந்தபோது ஊரில் பச்சை மலையைக் காணோம். “ஐயோ அந்த மலைக்கு என்ன?” என்று அவர் பதறிக் கேட்கவும், ஊரார் சொன்னதாவது: “நிலாவில் குடி போகச் சொன்னீரே, அந்த முயற்சியில் இது சேதாரமாகிவிட்டது.” “ முட்டாள்களே நிலாவுக்கும் மலைக்கும் என்ன சம்மந்தம்?” என்று அப்துல் கலாம் கத்தினார். “அதுவா? அத்தனை உயரத்துக்குக் கனவு காண முடியாத சிலர் மலையளவு மட்டும் கண்டு ப்ளாட் போட்டுவிட்டார்கள்” என்று சொல்லிவிட்டு, விழாப் பேருரை ஆற்றிய அப்துல் கலாமுக்குக் கனவுகளும் அவற்றின் பலன்களும் என்ற புத்தகத்தை அன்பளிப்பாகக் கொடுத்து அனுப்பி வைத்தார்கள்.