பாரா ஒரு நாள் ஞானம் பெற்று பாராசான் என்னும் ஜென் குரு ஆனான். ஆனால் அவன் பாராசான் ஆனது ஊருக்குத் தெரியாது. அது ஊருக்குத் தெரியாது என்கிற சங்கதி பாராசானுக்கும் தெரியாது என்பதனால் ஏன் தன்னை நாடி முட்டாள்களோ சீடர்களோ இன்னும் வரவேயில்லை என்று அவன் தினமும் கவலைப்படலானான். ஒவ்வொரு புதிய முட்டாள் வரும்போதும் எப்படி அவர்களை மடக்கி, வியப்பூட்டி, பரவசப்படுத்தி, ஒரு ஓட்டாஞ்சில்லைத் தூக்கிப் போட்டு அதில் தடுக்கி விழ வைத்து ஞானவான் ஆக்கிவிட்டதாகச் சொல்லலாம் என்று தனக்குள் யோசித்து அவ்வப்போது நிறைய குறிப்புகள் எழுதி வைத்தான். குறிப்புத் தாள்கள் பழுப்பேறிப் போயினவே தவிர, பாராசானைத் தேடி ஒரு முட்டாள்கூட வரவேயில்லை.
பல வருடங்களுக்குப் பிறகு சலித்துப் போய் பாராசான் ஃபேஸ்புக்கில் எழுத வந்தபோது ஏற்கெனவே ஏகப்பட்ட ஓட்டாஞ்சில்லுகள் உதிர்க்கப்பட்டிருந்ததைக் கண்டு திகைத்துப் போனான். புதிதாக ஞானம் பெற உலகில் இனி யாருமே இல்லை என்றறிந்து ஒருநாள் முழுதும் ஓவென்று கதறி அழுது தீர்த்தான். பிறகு நாளொரு ஓட்டாஞ்சில்லைக் கொண்டு பாண்டி விளையாடிக் காலம் தள்ளலானான்.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.