கிருமி

விடிந்து எழுந்ததில் இருந்தே தலை வலித்தது. குனிந்தால் மூக்கில் ஒழுகியது. காதுகளுக்குள் சூடு தெரிந்தது. எப்படியும் சுரம் வரும் என்று தோன்றியது. விபரீதமாக ஏதாவது உருக்கொள்வதற்கு முன்னால் டாக்டரைப் பார்த்துவிடலாம் என்று நினைத்தான். ஆனால் அதற்கும் பயமாக இருந்தது. ஊர் இருக்கும் நிலைமையில் எந்த மருத்துவரும் இப்போது பயப்பட ஒன்றுமில்லை என்று சொல்லத் தயங்குவார்கள். பரிசோதனைகளுக்கு எழுதித் தரலாம். ஒரு சாதாரண காய்ச்சல்காரன் உடனடியாகச் சுற்றியிருப்பவர்களின் கவனத்தைக் கவர்ந்துவிட வேண்டி வரும். பரிசோதனைகளின் முடிவில் ஒன்றுமில்லாமலேயே இருக்கலாம். ஆனால் முடிவுகளில் யாருக்கு விருப்பம் இருக்கிறது? காலம், பீதியை ஓர் அணிகலனாக்கிவிட்டது. அச்சத்தில் பிதற்றுவதற்கெல்லாம்தான் மக்கள் அதிக அளவில் விருப்பக் குறி இடுகிறார்கள். அறிவை நகர்த்தி வைத்துவிட்டு வாழ்வது பிடித்திருக்கிறது. பாரமற்று இருப்பதே சொகுசு என்றால் அறிவகற்றி வாழ்வதே ஆகப்பெரிய சொகுசு.

மருந்துக் கடைக்குப் போனான். எளிய பாராசிட்டமால் ஏதாவது கொடுத்தால் போதும். கேட்க நினைத்த கணத்திலேயே மருந்துக் கடைக்காரரின் முகம் எப்படி மாறும் என்று எண்ணிப் பார்த்தான். மருந்துக் கடைக்காரர் என்றாலும் மனிதரே அல்லவா. டாக்டரைப் பாருங்கள் என்று உடனே சொல்லிவிடலாம். அதைக் கூடப் பொறுத்துக் கொள்ளலாம். சட்டென்று பாய்ந்து சென்று மாஸ்க் எடுத்து அணிந்துகொண்டால் அந்தக் காட்சி நினைவில் தங்கிவிடும். மனத்தில் அதைப் போல் நூற்றுக் கணக்கான கசப்பளிக்கும் காட்சிகள் ஏற்கெனவே சேகரமாகியிருக்கின்றன. எதையும் களையவும் முடிவதில்லை. கடக்கவும் முடிவதில்லை.

நகரமே திரண்டு ஊருக்குப் புறப்பட்ட அன்று தானும் கிளம்பியிருக்க வேண்டும். அரசாங்கம் விலகியிருக்கக் கேட்டுக்கொள்ளும்போது முண்டியடித்துப் பேருந்தில் ஏறி ஓர் இரவெல்லாம் பயணம் செய்து கிருமியை ஊருக்குக் கொண்டு சேர்ப்பது தவறு என்று நினைத்துத்தான் போகாமல் இருந்தான். ஊருக்குப் போனவர்கள் எல்லோரும் பத்திரமாகச் சென்று சேர்ந்துவிட்டதாக போன் செய்துவிட்டார்கள். தங்கியவன்தான் மாட்டிக்கொண்டான்.

தலை வலிக்கிறது. மூக்கு ஒழுகுகிறது. யாரிடமிருந்தாவது ஒட்டிக்கொண்டிருக்க வாய்ப்பில்லாமல் இல்லை. இருமலும் வருமோ என்று அச்சமாக இருக்கிறது. தினமும் சந்திக்கும் மனிதர்களில் எத்தனையோ பேர் எங்கெங்கோ வெளிநாடுகளுக்குப் போய் வருகிறவர்கள்தாம். ஒரு வாரம் முன்புகூட ஒரு நடிகை உங்களுக்காக வாங்கி வந்தேன் என்று சொல்லி ஒரு குளிர்க் கண்ணாடியைத் தந்தார். அன்பைத்தான் எல்லோரும் தருகிறார்கள். அதுதான் சுமையாகவும் ஆகிவிடுகிறது.

பூரண கதவடைப்புக்கு மூன்று நாள்கள் முன்பிருந்து இரவு பகலாகப் படப்பிடிப்பு இருந்தது. உட்கார நேரமில்லாமல் வேலை. ஒரே அரங்கில் இரண்டு யூனிட் படப்பிடிப்பு. இரண்டு யூனிட்டுக்கும் இரண்டிரண்டு கேமரா. கத்திக் கத்தி ப்ராம்ப்ட் செய்து தொண்டை வறண்டு போய்விட்டது. உட்கார்ந்து உண்ணவோ அரை மணி நேரம் படுத்து எழவோ வழியில்லாதிருந்தது. தயாரிப்பாளரே படப்பிடிப்பு அரங்குக்கு வந்து அமர்ந்திருந்தார். அவரே ஒரு முறை அவனுக்குத் தேநீர் எடுத்து வந்து கொடுத்தார். அன்பல்லாமல் வேறென்ன. ஆனால் அன்பு சற்று விரிவு கொண்டிருக்கலாம். சம்பளம் சிறிது பிந்தி வந்தாலும் பேட்டாவையாவது கையோடு கொடுத்திருக்கலாம். ஒரு வாரம் கழித்து வாங்கிக் கொள்ளுங்கள் என்று அவரே சிறிது தயக்கத்தோடு கேட்டுக்கொண்டபோது யாரும் எதுவும் சொல்ல முடியாமல் போய்விட்டது. பூரணக் கதவடைப்புக் காலத்தில் கையில் இருக்கும் சொற்பத் தொகையை எண்ணி எண்ணிச் செலவிட வேண்டியிருக்கிறது. ஒரு வேளை உண்டால் போதும். ஒரு தேநீர் அருந்தினால் போதும் என்று மனத்தை ஒடுக்கிக்கொள்ளப் பழக வேண்டியிருந்தது.

பட்டினிகூடப் பிரச்னை இல்லை. இது பெரிதாகாமல் இருந்தால் போதும் என்று தோன்றியது. மருந்து மாத்திரை எதுவும் வாங்காமல் திரும்பினான். சாலையில் யாருமில்லை. கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. வாகனங்களின் சத்தம் அறவேயில்லை. எங்கும் ஆள் நடமாட்டம் இல்லை. ஒரு முழு உலகில் தான் மட்டுமே வசிப்பது போல இருந்தது. சென்னைக்கு வந்து இருபதாண்டுகள் ஆகியும் இயக்குநராக முடியாமல் இருப்பதை எண்ணிப் பல இரவுகளில் உறக்கமின்றி அழுவான். அப்போது ஒரு தனிமை உணர்வு வரும். அதுவும் பயங்கரமானதுதான். ஒரு பிசாசு போலக் கவ்விக்கொண்டு நெடுநேரம் அலைக்கழிக்கும். தற்கொலைவரை சிந்திக்க வைக்கும். ஆனால் தன்னைப் போலக் கஷ்டப்படும் நண்பர்கள் யாரையாவது சந்தித்தால் உடனே அது சரியாகிவிடும். துயரம் தனக்கு மட்டுமானதில்லை என்ற உணர்வுதான் எத்தனை பெரிய சக்தி. அது மகிழ்ச்சியைவிடப் பேராற்றல் கொண்டது.

பிற்பகல்வரை அவன் எதுவும் உண்ணவில்லை. தண்ணீர் மட்டும் குடித்துக்கொண்டிருந்தான். கையில் இருக்கும் பணத்தில் இன்னும் இரண்டு அல்லது மூன்று வேளைகள் உண்ண முடியும். அதை மூன்று நாள் இரவுக்கு வைத்துக்கொள்ளலாம் என்று நினைத்தான். யார் யாருக்கோ போன் செய்து பார்த்தான். எல்லோருமே ஊருக்குப் போய்விட்டிருந்தார்கள். ஊரில் இருக்கும் தன் வீட்டாருக்கு போன் செய்தால் காய்ச்சலைச் சொல்ல வேண்டி வரும். அது வேண்டாம் என்று நினைத்துத் தவிர்த்தான். மாலை ஆனபோது உடல் நன்றாகச் சுட்டது. எழ முடியாத அளவுக்கு வலித்தது. அச்சம் மெல்ல மெல்லப் பெரிதாகி வந்தது. டாக்டரிடம் சென்றால் குறைந்தது இருநூறு ரூபாய் செலவாகும். கையில் இருப்பதே அவ்வளவுதான். என்ன செய்வதென்று புரியவில்லை.

மிகவும் யோசித்து, தயாரிப்பாளருக்கு போன் செய்தான். ஏழெட்டு முறை அவர் போனை எடுக்காமல் வெறுமனே ரிங் போய்க்கொண்டே இருந்து கட் ஆனது. பிறகு எடுத்தார். வணக்கம் சொன்னதும் மிகவும் உற்சாகமாக நலம் விசாரித்தார். வெளியே எங்கும் போய்விடாதீர்கள் என்று அக்கறையுடன் சொன்னார். அவனுக்குச் சிறிது நம்பிக்கை வந்தது. இந்த நேரத்தில் அவர் ஆயிரம் ரூபாய் கொடுத்து உதவினால்கூடப் பெரிய விஷயம் என்று நினைத்துக்கொண்டு, தனக்குக் காய்ச்சல் அடிப்பதைத் தயங்கித் தயங்கிச் சொன்னான். அடுத்த வார்த்தையை அவர் பேசவிடவில்லை. உடனே டாக்டரைப் போய்ப் பாருங்கள், அப்புறம் பேசுங்கள் என்று சொல்லி வைத்துவிட்டார். அவனுக்குச் சங்கடமாக இருந்தது. நெடு நேரம் யோசித்துவிட்டு, கையில் பணமில்லாததைச் சொல்லி ஒரு குறுஞ்செய்தி மட்டும் அனுப்பினான்.

இரவு இரண்டு இட்லி சாப்பிட்டுவிட்டு ஒரு டோலோ 650 போட்டுக்கொண்டு படுத்தான். நெடுநேரம் பயந்துகொண்டே இருந்தான். பிறகு தூங்கிப் போனான். காலை கண் விழித்தபோது, காய்ச்சல் விட்டிருந்தது. தான் இறந்துவிடவில்லை என்பது அவனுக்கு மகிழ்ச்சியளித்தது. அப்படியெல்லாம் இறந்துவிட மாட்டோம் என்று இப்போது தோன்றியது. வீட்டுக்குப் பேசலாம் என்று போனை எடுத்தான். தயாரிப்பாளருக்கு அனுப்பிய மெசேஜ் நினைவுக்கு வந்தது. அவசரமாக அதைத் திறந்து பார்த்தான். ஆனால் அவரிடம் இருந்து பதில் வந்திருக்கவில்லை.

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி