மாலுமி – முன்னுரை

கடந்த சில ஆண்டுகளாக ஒவ்வொரு ஜனவரி மாதத்திலும் இரண்டு அல்லது மூன்று சிறுகதைகளை எப்படியாவது எழுதிவிடுகிறேன். வருடம் முழுவதும் என்னென்னவோ எழுத வேண்டி இருக்கிறது. ஆயிரக்கணக்கான தொலைக்காட்சித் தொடர் காட்சிகளுக்கான வசனங்கள், நாவல் முயற்சிகள், பத்திரிகைத் தொடர்கள், கட்டுரைகள், சிறு குறிப்புகள் இன்னும் என்னென்னவோ. ஒரு சிறுகதை எழுதுவதற்கான மன ஒருங்கமைவும் நேரமும் பெரும்பாலும் கூடுவதில்லை. ஆனால் ஒரு நல்ல சிறுகதையை எழுதி முடிக்கும்போது கிடைக்கும் நிறைவும் மகிழ்ச்சியும் மேற்சொன்ன வேறு எதிலும் இருப்பதில்லை. சிறுகதை எழுதாத வருடங்களில் அது பற்றிய வருத்தம் ஒவ்வொரு ஆண்டிறுதியிலும் மேலோங்கி நிற்கும். இதன் காரணமாகவே ஜனவரி மாதம் சிறுகதைகளுக்கு மட்டும் என்று அமைத்துக்கொண்டேன்.

இத்தொகுப்பில் உள்ள கதைகள் அப்படி ஜனவரிகளில் எழுதப்பட்டவைதான். இக்கதைகளில் சில அமுதசுரபி, வலம், விருட்சம், மல்லிகை மகள் போன்ற பத்திரிகைகளில் வெளிவந்தன. பெரும்பாலான கதைகளை நான் எந்தப் பத்திரிகைக்கும் அனுப்பவில்லை. எனது இணையத் தளத்தில் மட்டும் வெளியிட்டேன். இந்நாள்களில் பிரசுரம் சார்ந்த ஆர்வமோ உத்வேகமோ இல்லாமல் போயிருக்கிறது. தோன்றும்போது எழுதுகிறேன். இஷ்டமிருந்தால் வெளியிடுகிறேன். எழுதி, இன்னும் இணையத்தில்கூட வெளியிடாத கதைகள் சில கைவசம் உள்ளன. இன்னொரு முறை எழுதிப் பார்க்கலாம் என்று நினைத்து ஆண்டுக் கணக்காகக் கிடப்பில் இருப்பவை அவை. ஒருவேளை அவை வெளியாகலாம். வராமலேகூடப் போகலாம். பெரிய வருத்தங்கள் கிடையாது. எழுதுவது என் பிரத்தியேக சந்தோஷம். அதன் பூரணம் கிட்டும்வரை விடுவதில்லை.

இப்படி இருப்பது சௌகரியமாக உள்ளது. ஒரு காலத்தில் என்னளவு வெறி கொண்டு பத்திரிகைகளில் எழுதிக் குவித்தவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். நான் பணியாற்றிய பத்திரிகைகளில் ஒவ்வொரு இதழிலும் எழுதுவேன். என் எழுத்துகளுக்கு இடம் ஒதுக்கிக்கொண்ட பிறகுதான் மற்றவை குறித்த சிந்தனையே எழும். இதெல்லாவற்றையும் எண்ணிப் பார்த்தால் சிரிப்புத்தான் வருகிறது இப்போது. போய்ச் சேருவதற்கு முன்னால் ஒரு மகத்தான சிறுகதையை எழுதிவிட முடியாதா என்ற இச்சை மட்டும் மிச்சம் இருக்கிறது. அதைச் செய்யாமலே கூட முடிந்துவிடலாம். ஆனால் அதற்கான முயற்சிகளில் ஒழுக்கத்துடன் ஈடுபடுகிறேன் என்ற திருப்தி உள்ளது.

நான் சிற்றிதழ் வழி வந்த எழுத்தாளன் அல்லன். பெரும் வணிக இதழ்களில் அதிகம் எழுதியவன் என்றாலும் என் கதைகள் அந்தப் பத்திரிகைகளின் இலக்கணங்களைக் கூடியவரை புறக்கணித்தே எழுதப்பட்டவை. என் புத்தகங்கள் வெளியீட்டு விழாக்களைக் கண்டதில்லை. நான் மதிப்புரைகளுக்காகப் புத்தகங்களை அனுப்புவதை நிறுத்தி இருபது வருடங்களாகின்றன. ஆயினும் இக்கதைகள் எங்கோ இடமறியாப் பிராந்தியங்களில் முகமறியா வாசகர்களைச் சென்று சேர்கின்றன. எப்போதாவது யாராவது திடீரென்று எதிர்ப்பட்டு, கையைப் பிடித்துக்கொண்டு சொற்களற்ற நல்லுணர்வை மனத்துக்குள் இருந்து மனத்துக்குக் கடத்திவிடுகிறார்கள். போதுமே?

இக்கதைகளில் சிலவற்றை வெளியிட்ட பத்திரிகை ஆசிரியர்களுக்கு என் நன்றி. புத்தகமாக வெளியிடும் கிழக்குக்கு நன்றி. எப்போது எதை எடுத்துப் படித்தாலும் ஏதோ ஒரு வரியிலாவது நான் கற்றுக்கொள்ள எதையாவது வைத்துவிட்டுப் போன அசோகமித்திரனின் நினைவுக்கு இந்நூலைச் சமர்ப்பணம் செய்கிறேன்.

[கிழக்கு வெளியீடாக வரவிருக்கும் ‘மாலுமி’ சிறுகதைத் தொகுப்புக்கு எழுதிய முன்னுரை]
Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter