ஆதிவராகம் [சிறுகதை]

அடையாறில் அப்போது தண்ணீர் வரத்து இருந்தது. பெரியதொரு நதியாகக் காட்சியளிக்காதே தவிர, நதியில்லை என்று சொல்லிவிட முடியாது. ஒரு பக்கம் நீரோட்டம் இருக்கும். அப்படியே சில நூறடிகள் தள்ளி மணல் மேடிட்டிருக்கும். மணல் மேட்டின்மீது பையன்கள் முட்டிவரை நிஜாரை இறக்கி விட்டுக்கொண்டு மலம் கழித்துக்கொண்டிருப்பார்கள். மறு பக்கம் குளம்போல் கொஞ்சம் தண்ணீர் தேங்கியிருக்கும். ஓடும் நீரும் இந்த நீரும் வேறு வேறு மதங்களைச் சேர்ந்தாற்போலத் தோன்றும். நடுநடுவே கற்பாறைகள் சில தென்படும். புல் முளைத்திருக்கும். அங்கே தென்னை மட்டை வைத்து கிரிக்கெட் ஆடுவார்கள். சலவைத் தொழிலாளிகள் கழுதைகளின்மீது துணி மூட்டைகள் ஏற்றி வந்து கரையில் இறக்கி வெளுத்துக்கொண்டிருப்பார்கள். சுமை இறக்கிய கழுதைகள் தண்ணீருக்குள் இறங்கிப் படுத்துக்கொள்ளும். துணி வெளுக்கும் மனிதர்கள் ஒருபோதும் கழுதைகளைக் குளிப்பாட்ட நினைப்பதேயில்லை. அவை தாமாகவே இம்மாதிரி குளித்தால்தான் உண்டு. இருபது நிமிடங்களுக்கொருதரம் பாலத்தின்மீது ரயில் போகும்போதெல்லாம் நீரில் அமிழ்ந்து கிடக்கும் கழுதைகள் தலையை நிமிர்த்திப் பார்க்கும். பிராந்தியமே கிடுகிடுவென்று அதிரும். கரையோரத்துக் குடிசைவாசிகளுக்கு அந்தச் சத்தமும் அதிர்வும் பழகியவை. பாலத்தை ரயில் கடக்கும்போதெல்லாம் மின்சாரம் போனதுபோல அவர்கள் சொற்களைத் துறந்துவிடுவார்கள். தன்னியல்பாக சைகையில் பேசிக்கொள்ள ஆரம்பிப்பார்கள். ரயில் சத்தமும் தடதடப்பும் ஓய்ந்ததும் மீண்டும் பேச்சொலி கேட்க ஆரம்பிக்கும். சில சமயம் அவர்களுக்கிடையே அடிதடி சண்டைகள் நடக்கும். காத்திரமான வார்த்தைப் பிரயோகங்கள் நிகழும். ஒருவரை ஒருவர் கடும் சொற்களால் தாக்கிக்கொள்வார்கள். அம்மாதிரி சந்தர்ப்பங்களில் ரயில் கடந்தால்கூட பிரக்ஞைபூர்வமாகச் சொற்களை நிறுத்திவிட்டு சைகை மொழியில் சண்டை போட்டுக்கொள்வார்கள். ரயில் போனபிற்பாடு மீண்டும் சத்தமிட்டு சண்டை போடத் தொடங்குவார்கள்.

ரயில் பாலத்துக்கு இருநூறடி தள்ளி ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் ஒன்று இருந்தது. இரண்டையும் ஒருசேரப் பார்த்தால் அண்ணன் தம்பி போலத் தெரியும். நுணுக்கமாகக் கவனித்தால் அந்தத் தரைப்பாலமானது, ரயில் பாலத்தின் பாட்டன் காலத்து நிர்மாணம் என்பது விளங்கும். நாடி நரம்புகள் ஓய்ந்து, பற்கள் உதிர்ந்து, தோல் சுருங்கிப் போய், கயிற்றுக் கட்டிலில் கிடக்கிற  ஒரு நூற்றுக் கிழவனின் தோற்றம் அதற்கு. காலப் புரட்டலில் பலமுறை அந்தப் பாலம் பழுது பார்க்கப்பட்டிருக்க வேண்டும். ஏதோ ஒரு கட்டத்தில், போதும் என்று எண்ணி அரசாங்கம் கைவிட்டுவிட்டது. அப்படிக் கைவிட்டே இருபது வருடங்கள் ஆகியிருக்கும். அந்தத் தரைப் பாலத்தின் விளிம்புக் கற்களில் ஒன்றிரண்டைத் தவிர, அனைத்தும் பல்வேறு வெள்ளக் காலங்களில் சிறிது சிறிதாக அடித்துப் போகப்பட்டுவிட்டிருந்தன. தரையுமேகூட தொளதொளத்துத்தான் காணப்படும். ஆங்காங்கே கற்கள் பெயர்ந்து அடியில் தண்ணீர் போவது தெரியும். ரயில் பாலத்தில் சரக்கு ஏற்றிய கூட்ஸ் வண்டிகள் போகும்போது இந்தப் பாலம் அமிழ்ந்துவிடுவது போல நடுங்கும். ஆனால் எப்படியோ தப்பித்திருந்தது. அது மட்டும் இல்லாதிருந்தால் சைதாப்பேட்டையில் இருந்து கிண்டிக்குப் போய் வருவதற்குத் தலையைச் சுற்றி மூக்கைத் தொடவேண்டியிருக்கும். இப்போதும் மூக்கைப் பிடித்துக்கொண்டுதான் பாலத்தைக் கடக்க வேண்டும். ஆனால் தலையைச் சுற்றும் அவசியம் இருக்காது.

சைக்கிள்கள், தோல் கழிவுகளை ஏற்றி வரும் மாட்டு வண்டிகள், கிண்டி தொழிற்பேட்டைக்கு வேலைக்குச் செல்லும் மக்கள் பயன்பாட்டுக்காக இருந்த அந்தப் பாலம் அன்றைக்கு வேறொரு காரியத்துக்கும் உபயோகமாக இருந்தது. அது பன்றி அறுப்பது. நூற்றுக்கணக்கான சாக்கடைக் கால்வாய்களுக்கு இடையே நிர்மாணிக்கப்பட்டிருந்த சைதாப்பேட்டையில் பன்றிகளின் எண்ணிக்கை அதிகம். ஆதியில் மக்கள் இது குறித்துக் கவலையோ அருவருப்புணர்வோ கொண்டிருக்கக்கூடும். காலப்போக்கில் அவர்கள் பன்றிகளோடு வாழப் பழகிப் போனார்கள். சைதாப்பேட்டையின் அனைத்துச் சாலைகளிலும் வீதிகளிலும் சந்துகளிலும் குப்பை மேடுகளிலும் மனிதர்களுக்குச் சமமாகப் புழங்க அவை உரிமம் பெற்றிருந்தன. நாய்களைப் போல் பன்றிகள் மனிதர்களைத் தொந்தரவு செய்வதில்லை என்பதால் சைதாப்பேட்டைவாசிகள் பன்றிகளை சக உயிரினமாகத் தன்னியல்பில் மதிக்க ஆரம்பித்திருந்தார்கள்.

வருடத்துக்கு ஒரு முறை, பெரும்பாலும் தீபாவளி முடிந்த ஓரிரு தினங்களில் நகர சுத்திகரிப்புத் தொழிலாளர்கள் பன்றி ஒழிப்புப் பணிக்கு வருவார்கள். மோட்டார் வைத்த, கம்பிக் கூண்டு அமைக்கப்பட்ட பழுப்பு நிற மூன்று சக்கர வாகனத்தில் வருகிற அவர்களிடம் வினோதமான சில ஆயுதங்கள் இருக்கும். அதில் முக்கியமானது நீண்ட இரும்புக் கழியின் முனையில் பொருத்தப்பட்ட ஒரு வலைச்சுருள். அதனைக் கொண்டு, துரத்தி மடக்கும் பன்றியின் முகத்தில் ஓங்கி அடிப்பார்கள். கழி அதன் நடு நெற்றியைத் தாக்கும்போது முகத்தை உக்கிரமாக சிலிர்த்துக்கொள்ளும் பன்றி, வலைச்சுருளைப் பிரித்து தானே அதனுள் தலையை நுழைத்துக்கொண்டு வெளியேற முடியாமல் தவிக்கத் தொடங்கும். சுத்திகரிப்பு ஊழியர்களுக்கு அந்தச் சில கணம் போதுமானது. அவர்கள் உடனே பன்றியை நெருங்கி ஒரு பூனைக்குட்டியைத் தூக்குவதுபோலத் தூக்கி எடுத்து வண்டியில் போட்டுக்கொண்டுவிடுவார்கள். சுமார் மூன்று மணி நேரம் வேட்டையாடி ஏழெட்டுப் பன்றிகளைப் பிடித்து வண்டியில் ஏற்றிவிட்டு, வீடு தோறும் வந்து தீபாவளி இனாம் வாங்கிக் கொண்டு போவார்கள்.

ஆனால் நூற்றுக் கணக்கான பன்றிகள் தோன்றிக்கொண்டே இருக்கும் சைதாப்பேட்டையில் எப்போதாவது நிகழும் இந்தப் பன்றி வேட்டையால் பெரிய பயனின்றி இருந்தது. அந்தப் பிரச்னைக்கு ஒரு முடிவு காணும் விதமாகத்தான் சகாயமுத்துவும் அவனது சிநேகிதர்களும் அங்கு வந்து சேர்ந்தார்கள்.

அந்நாள்களில் சைதாப்பேட்டையில், குறிப்பாக ஆற்றங்கரையை ஒட்டிய அபீத் காலனியில் வசித்து வந்த மக்களுக்கு சகாயமுத்துவைக் கண்டாலே பயம். அவன் பெரும்பாலும் குடி போதையில் இருப்பான். யாராவது எதற்காகவாவது நெருங்கிப் பேசினால் பதில் சொல்லுவதற்கு முன்னால் பயங்கரமாக ஒரு முறை முறைப்பான். கொடூரமான ஒரு சத்தம் எழுப்பி, காறித் துப்பிவிட்டுத்தான் பேச ஆரம்பிப்பான். எப்போதும் துப்புவதற்கு அவன் தொண்டைக்குள் ஏதேனும் ஒன்று இருக்கும். அவனும் அவனது நண்பர்களும் வசிப்பதற்கு ஆற்றங்கரையை ஒட்டி குடிசை போட்டிருந்தார்கள் என்றாலும் பெரும்பாலும் அக்குடிசைக்கு வெளியேதான் அவர்கள் படுத்திருப்பார்கள். தூங்கி எழுந்து காலைக் கடன்களை முடித்து, பல் துலக்கிவிட்டு, நடந்து சென்று டீ குடித்துவிட்டு வந்து ஒரு பீடியும் புகைத்தான பின்பும் அவர்கள் படுத்தபடிதான் பேசிக்கொண்டிருப்பார்கள். நாள்பூரா அப்படி என்னதான் அவர்கள் பேசிக்கொண்டே இருப்பார்கள் என்று யாருக்கும் தெரியாது. நெருங்கிப் போனால் சகாயமுத்துவின் முறைப்புக்கு ஆளாக வேண்டிவரும் என்பதால் அதையும் செய்ய முடியாது.

ஆனால் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் அவர்களது நடவடிக்கை முற்றிலும் மாறிவிடும். அந்த இரு தினங்களில் மட்டும் அவர்கள் சூரிய உதயத்துக்கு முன்பே எழுந்துவிடுவார்கள். ஆளுக்கொரு அழுக்குச் சாக்குப்பையைத் தோளில் போட்டுக்கொண்டு அபீத் காலனி முழுதும் சுற்றி வருவார்கள். ஒரு பன்றி கண்ணில் பட்டுவிட்டால் போதும். அடுத்தக் கணம் சகாயமுத்து ஒரு வீரனைப் போல் அதன்மீது பாய்ந்துவிடுவான். சுத்திகரிப்பு ஊழியர்களைப் போல் அவன் ஆயுதங்கள் எதையும் பயன்படுத்துவது கிடையாது. குறி வைத்த பன்றிக்குப் பின்புறம் சத்தமில்லாமல் நெருங்குவான். இரண்டடி தூரத்தில் நின்று தன்னைத் தயார் செய்துகொண்டு ஒரே தாவாகத் தாவிவிடுவான். அப்படித் தாவும்போது சரியாக அவனது இரு கால் தொடை இடுக்குகளுக்குள் பன்றியின் புட்டம் சிக்கிக்கொள்ளும். உடனே அவன் தனதிரு கால்களையும் பன்றியின் பின்னங்கால்களை சுற்றி, கிடுக்கிப் பிடியாக்கிவிடுவான். இது நடக்கும்போதே அவனது இடது கை பன்றியின் குரல் வளையைப் பிடித்து அழுத்தி வலப்புறம் வளைக்கும். பன்றி பயத்தில் அலறத் தொடங்கும்போது தனது வலக்கரத்தில் முஷ்டி மடக்கி, அதன் முன்புற வலது காலின் நடுவே ஓங்கி ஒரு குத்து விடுவான். ஒரு பன்றியை நிலைகுலையச் செய்து வீழ்த்த இதுதான் சரியான உத்தி என்பதை அவன் எப்படியோ அறிந்துவைத்திருந்தான்.

அதிகாலைப் பொழுதில் எதிர்பாராத வகையில் நிகழும் இத்தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் பன்றியானது எப்படியாவது உயிர் பிழைத்து ஓடப் பார்க்கும். சகாயமுத்து விடமாட்டான். அதன்மீது விழுந்து புரண்டு, தன் உடலின் மொத்த பாரத்தையும் அதன்மேல் இறக்கி வைப்பான். சில கணங்கள்தாம். பன்றியின் மரண ஓலம் கேட்கத் தொடங்கியதுமே அவனது சிநேகிதர்களில் ஒருவன் சாக்குப்பையோடு ஓடி வந்துவிடுவான். பன்றி கதறக் கதற சகாயமுத்து அதை சாக்குப்பைக்குள் திணித்து முடிச்சுப் போட்டுவிடுவான். அதன்பின் நெடுநேரம் பன்றி சாக்குப் பைக்குள்ளேயே உருண்டு புரண்டு சத்தமெழுப்பிக்கொண்டிருக்கும். சகாயம் அந்நேரம் அடுத்த பன்றியைக் குறி வைத்துப் போயிருப்பான்.

காலை ஐந்து அல்லது ஐந்தரைக்கு ஆரம்பிக்கும் இந்தப் பணி ஏழு மணிக்கு முடிவடைந்துவிடும். சகாயமுத்துவும் அவனது நண்பர்களும் அதற்குள் பத்துப் பன்னிரண்டு பன்றிகளை சாக்குப் பைகளுக்குள் திணித்துக் கட்டியிருப்பார்கள். பிறகு அவற்றைத் தூக்கிக்கொண்டு தரைப்பாலத்தின் நடுப்பகுதிக்கு வருவார்கள்.

இப்போது சலவைத் தொழிலாளிகள் அழுக்கு மூட்டைகளைக் கழுதை மீதேற்றி ஆற்றங்கரைக்குத் தொழில் தொடங்க வர ஆரம்பிப்பார்கள். நல்ல வெயில் வந்திருக்கும். தரைப்பாலத்தின்மீது வாகனப் போக்குவரத்து தொடங்கியிருக்கும். சகாயமுத்து இதையெல்லாம் கவனிக்கவே மாட்டான். மூட்டைகளுடன் பாலத்துக்கு வந்ததும் அவற்றைப் போட்டுவிட்டு ஒரு பீடி குடிப்பான். அதைக் குடித்து முடித்துவிட்டுத் தனது நீண்ட பிடி வைத்த, அரை ஜாண் அகலமும் அரையடி நீளமும் உள்ள கூரான கத்தியை எடுத்து வைத்துக்கொண்டு பாலத்தின் ஓரத்தில் உள்ள கற்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து அமர்வான். அவனது நண்பர்கள் வரிசையாக ஒவ்வொரு மூட்டையாகத் தூக்கி அக்குளுக்கும் இடுப்புக்கும் இடையே இடுக்கிக்கொண்டு, முடிச்சை அவிழ்த்து, பன்றிகளுக்குச் சற்று காற்று அளிப்பார்கள். தப்பிக்க ஒரு வழி அகப்பட்டிருப்பதாக எண்ணிக்கொண்டு அவை வேகவேகமாகத் தலையை வெளியே நீட்டும். ஒரு கணம்தான். தலை நீளும்போதே சகாயமுத்து கத்தியை வீசிவிடுவான். ஒரே சீவு. தலை துண்டாகி விழுந்துவிடும்.

அந்தப் பன்றியைப் பிடித்துக்கொண்டு நின்ற நண்பன் நகர்ந்து, அடுத்தவன் அதே போல வரிசையில் வந்து நிற்பான். மொத்தம் நான்கு நண்பர்கள் சகாயத்துக்கு. நால்வரும் தலா மூன்று முறை மூட்டைகளின் முடிச்சை அவிழ்த்துவிட்டுக்கொண்டு சகாயத்தின் எதிரே வந்து நிற்பதும் சகாயம் சரியாக ஒரே சீவில் பன்றிகளின் தலையைக் கொய்துவிடுவதும் மொத்தமே இருபது வினாடிகளுக்குள் நடந்தேறிவிடும். அந்தச் சமயத்தில் அங்கே யாரும் நெருங்கி நின்று பார்த்துவிட முடியாது. சகாயமுத்துவும் அவனது நண்பர்களும் வாய்க்கு வந்த கெட்ட வார்த்தைகளால் திட்டித் தீர்த்து, விரட்டுவார்கள். ஆனால் தரைப்பாலத்தின்மீது சைக்கிள் ஓட்டிச் செல்பவர்கள் பாலமெங்கும் ரத்தம் பெருக்கெடுத்து ஓடுவதைக் கண்டு திகைக்காதிருக்க முடியாது. சகாயம் அதையெல்லாம் கண்டுகொள்ளவே மாட்டான். தலை அறுபட்ட பன்றிகளின் உடல்கள் சிறிது நேரம் துடித்துக்கொண்டே இருக்கும். அந்தத் துடிப்பு அடங்கியதும் அவர்கள் மூட்டைகளைப் பிரித்து, பன்றிகளின் தோலை உரிக்க ஆரம்பிப்பார்கள்.

மொத்தப் பணியில் இந்தப் பகுதிதான் சிரமமானது. பொதுவாக சைதாப்பேட்டை பன்றிகளின் தோல் மிகவும் கனமாக இருக்கும். அத்தனை எளிதாக உரிக்க வராது. சகாயமுத்துவின் நண்பர்கள் கால்களை விரித்து அமர்ந்து ஒரு பலாப்பழத்தை உரிப்பது போலப் பன்றித் தோலை உரிப்பார்கள். அவர்களின் முழங்கை வரை ரத்தம் பூசியிருக்கும். அப்படியே வழியும் வியர்வையைத் துடைத்துக்கொள்வார்கள். இப்போது மூக்கு, நெற்றி, கன்னங்களிலும் ரத்தம் பூசிவிடும். எதைக் குறித்தும் கவலையின்றி பன்னிரண்டு பன்றிகளின் தோல்களையும் முழுதாக உரித்துப் போட்டுவிட்டுத்தான் எழுவார்கள்.

அவர்களுக்குச் சிறிது நேரம் ஓய்வு கொடுத்துவிட்டு உரித்த பன்றிகளை சகாயமுத்து சுத்தம் செய்ய ஆரம்பிப்பான். ஒவ்வொரு பன்றிக்குள்ளிருந்து எடுக்கும் வேண்டாத பகுதிகளையும் உட்கார்ந்த இடத்தில் இருந்து அப்படியே பின்புறம் ஆற்றில் எறிந்துவிடுவான். இந்தப் பணியெல்லாம் பரபரவென்று ரயில் ஓடும் வேகத்தில் நடக்கும். பத்திருபது நிமிடங்களில் தரைப்பாலம் முழுதும் ரத்தமும் சதையும் தோலுமாகக் காட்சியளிக்கும். பன்றியின் கழுத்து முடி காற்றில் அலைந்து பறக்கும். அறுபட்ட பன்றிகளின் தலைகள் ஒருபுறம் மொத்தமாகக் குவித்துவைக்கப்பட்டிருக்கும். சகாயமுத்து அவற்றை அள்ளி ஒரு சாக்குப் பையில் தனியே போட்டுக் கட்டிவைப்பான்.

எட்டரை ஒன்பது மணிக்கு சகாயத்தின் நண்பர்களில் ஒருவன் எங்கிருந்தோ ஒரு மீன்பாடி வண்டியை ஓட்டிக்கொண்டு வந்து சேருவான். அறுத்து சுத்தம் செய்த மாமிசங்களை அவர்கள் வண்டியில் ஏற்றுவார்கள். ஆனால் தலைகள் நிறைந்த சாக்கு மூட்டையை மட்டும் சகாயம் அதில் ஏற்ற மாட்டான். அவனே தோளில் தூக்கிப் போட்டுக்கொண்டு கிளம்புவான். மீன்பாடி வண்டி எங்கே போகிறதென்றோ, தலைகள் நிறைந்த சாக்கு மூட்டை எங்கே போகிறது என்றோ சைதாப்பேட்டைவாசிகளுக்குத் தெரியாது. ஆனால் வாரம்தோறும் குறைந்தது இருபதில் இருந்து முப்பது பன்றிகளின் எண்ணிக்கை குறைவது அவர்களுக்குத் தெரியும்.

அவர்களுக்கு இருந்த விமரிசனமெல்லாம் ஒன்றுதான். அவன் பன்றிகளைப் பிடிக்கட்டும். அறுத்து, காசாக்கிக்கொண்டு போகட்டும். அதில் சொல்ல ஒன்றுமில்லை. ஆனால் தரைப்பாலத்தை ஏன் இப்படி நாசமாக்க வேண்டும்? சகாயமுத்து ஒரு நாளும் பன்றி அறுத்த பின்பு பாலத்தைக் கழுவி சுத்தம் செய்ததில்லை. பெரும்பாலும் ரத்தக்கறை படிந்து அந்த இடம் அப்படியேதான் காய்ந்து போகும். எப்போதாவது சலவைத் தொழிலாளிகள் மனமிறங்கி, பாலத்தின்மீது பன்றி அறுத்த இடங்களில் தண்ணீர் பிடித்து ஊற்றி, காலால் தேய்த்துக் கழுவப் பார்ப்பார்கள். அதில் பெரிய பலன் இராது. காய்ந்த பன்றி ரத்தக்கறை அத்தனை சீக்கிரம் போகாது.

இது பற்றிய புகார் அபீத் காலனிவாசிகளிடையே அடிக்கடி எழும். போலிசில் சொல்லலாம் என்று ஒரு சிலர் பேசிக்கொள்வார்கள். நகராட்சி நிர்வாகத்திடம் சொன்னால் போதும் என்று அதற்கு வேறு சிலர் பதில் சொல்லுவார்கள். ரசாக் மார்க்கெட்டில் மிளகாய் மண்டி வைத்து வியாபாரம் செய்தபடிக்குப் பகுதி நேரமாக மசூதித் தெரு மசூதியில் பாங்கு ஓதும் இன்னாயத்துல்லா பாய், இது ஒரு தெய்வக் குற்றம்; சைதாப்பேட்டைக்கே இவர்களது செயலால் விநாசம் வரும் என்று தனக்குத் தெரிந்த அனைவரிடமும் சொல்லிக்கொண்டிருந்தார். ஆனால் என்றுமே யாரும் அடுத்த நடவடிக்கை என்ற ஒன்றை எடுக்கவில்லை. சில சங்கடங்கள் இருந்தாலும் பேட்டையில் பன்றிகள் எண்ணிக்கை குறைவது நல்லது என்றே எல்லோரும் நினைத்தார்கள்.

இந்தக் காலக்கட்டத்தில்தான் டேங்க் தெரு ரெட்டியார் வீட்டு வேலைக்காரன் ஒரு வியாழக்கிழமையன்று சகாயமுத்துவைப் பார்க்க தரைப் பாலத்துக்கு வந்தான். சகாயமுத்து அப்போது எட்டு பன்றிகளை அறுத்து, சுத்தம் செய்து மீன்பாடி வண்டியில் ஏற்றும் மும்முரத்தில் இருந்தான். ரெட்டியார் வீட்டு வேலைக்காரன் அருகே வந்து நின்றதை அவன் கவனிக்கவில்லை. அவனது சட்டை, லுங்கி, புறங்கை எல்லாம் ரத்தம் பூசியிருந்தது. உறங்கி எழுந்து தலைகூடச் சீவாமல் அவன் தொழிலுக்கு வந்திருந்தபடியாலும், வியர்த்து விறுவிறுக்க ஓடி, பன்றிகளைப் பிடித்துக் கொன்று, தோல் சீவி சுத்தம் செய்திருந்தபடியாலும் முற்றிலும் நனைந்து, களைத்திருந்தான். அந்தக் கோலத்தில் அவனைப் பார்க்கவே ரெட்டியார் வீட்டு வேலைக்காரனுக்கு பயங்கரமாக இருந்தது. கூப்பிடலாமா வேண்டாமா என்று அவன் யோசித்துக்கொண்டிருந்தபோது சகாயமுத்துவின் நண்பர்களுள் ஒருவன் வண்டியில் ஏற்றிய சரக்கை உள்ளே தள்ளி அடுக்கிவைத்தபடியே என்ன என்று பார்வையால் கேட்டான். ‘சகாயத்த ரெட்டியார் பாக்கணுன்றாரு’ என்று வேலைக்காரன் பதில் சொன்னான். ‘என்னா?’ என்று சகாயம் கேட்டான். ‘தெரியல. வீட்டாண்ட வர சொன்னாரு’ என்று சொல்லிவிட்டு அவன் அங்கே நிற்க விரும்பாமல் விரைந்து சென்றுவிட்டான்.

மீன்பாடி வண்டி கிளம்பிச் சென்றதும் சகாயம் அறுத்த தலைகளைக் கொண்ட மூட்டையை எடுத்துக்கொண்டு புறப்பட்டுப் போனான். பதினொரு மணிக்கு அவன் தன் குடிசைக்குத் திரும்பி வந்தபோது அவனது நண்பர்கள் வந்திருக்கவில்லை. சட்டை, லுங்கியை குடிசைக்கு வெளியே கழட்டி வைத்துவிட்டு பல் துலக்கும் பிரஷ்ஷில் பேஸ்டை எடுத்துக்கொண்டு, ஜட்டியுடன் ஆற்றில் இறங்கிக் குளித்தான். குளிக்கும்போதே பல் துலக்கி முடித்தான். அவன் கரையேறியபோது அவனது நண்பர்கள் வந்துவிட்டிருந்தார்கள். அவர்களும் குளித்துவிட்டு வந்ததும் அனைவரும் மொத்தமாக மாரி ஓட்டலுக்குச் சென்று சாப்பிட்டார்கள். அவர்களை வீட்டுக்குப் போகச் சொல்லிவிட்டு, ஒரு பீடியைப் பற்றவைத்துக்கொண்டு சகாயம் ரெட்டியாரைப் பார்க்கப் புறப்பட்டான்.

ரெட்டியாருக்கு பாரிஸ் கார்னர் தம்பு செட்டி தெருவில் ஸ்டேஷனரி வியாபாரம். பதிவு செய்யப்படாமல் வெளியாகிக்கொண்டிருந்த பல குறும்பத்திரிகைகளுக்கு அவர் பில் இல்லாமல் நியூஸ் ப்ரிண்ட் சப்ளை செய்துகொண்டிருந்தார். இது வெளியாருக்குத் தெரியாது. மேலுக்கு அவர் நோட்டுப் புத்தகங்களும் கோனார் மற்றும் வெற்றி துணைவனும் பேனா பென்சில்களும் வைத்து விற்றுக்கொண்டிருப்பார். ரெட்டியாரின் மனைவி பிராந்தியத்தில் மிகவும் பிரபலமானவர். அந்நாளில் சைதாப்பேட்டைப் பெண்கள் யாருமே செய்யத் துணியாத மகளிர் சங்கம் ஒன்றை நிறுவி அடிக்கடி விழாக்கள் நடத்துவார். பிரபல நாட்டிய மணிகளையும் சமூக சேவகிகளையும் கல்லூரி முதல்வர்களையும் அபீத் காலனிக்கு வரவழைத்து நடு வீதியில் மேடை அமைத்துப் பொன்னாடி போர்த்திப் பேசுவார். அவர்களுக்கு மகள் ஒருத்தி இருந்தாள். அவள் பெயர் பானுமதி. அவளுக்குத் தனது தாய் தந்தை இருவர் மீதும் கடும் அதிருப்தி இருந்தது. இருவருமே தனக்காகவோ, வீட்டுக்காகவோ எதையும் செய்வதில்லை என்பது அவளது அபிப்பிராயம். கல்லூரியில் இறுதியாண்டு படித்துக்கொண்டிருந்த பானுமதிக்கு அபீத் காலனியை விட்டுப் போய்விட வேண்டும் என்பது விருப்பம். அதுவும் ரெட்டியார் வீடு ஆற்றங்கரையை ஒட்டிய முதல் தெருவான டேங்க் தெருவுக்குள் இருந்தது. புராதனமான அந்த வீட்டின் தோற்றத்துக்கும் ரெட்டியாரின் பணச் செழுமைக்கும் சம்பந்தம் இருப்பதாகவே தோன்றாது. தனி வீடு, சற்று பெரிய வீடு என்று வேண்டுமானால் சொல்லலாமே தவிர, ஒரு பதினெட்டு வயது பணக்கார வீட்டுப் பெண் விரும்பக்கூடிய வீடாக அது இல்லை. சுற்றிலும் காய்ந்து கிடக்கும் வேலிக்காத்தான் புதர்களும் அவற்றை ஒட்டிய சாக்கடை ஓட்டமும் துர்நாற்றமும் அதை ஒரு சுற்றுலாத் தலமாகக் கருதி வரும் பன்றிகள் அடிக்கும் கொட்டமும் அவளது படிப்புக்குப் பெரும் இடைஞ்சலாக இருந்தன. தவிரவும் தனது தோழிகளை வீட்டுக்கு அழைத்து வர இதன் காரணம் பற்றியே அவள் மிகவும் தயங்குவாள். என்ன வீடு இது, எப்படி இங்கே இருக்கிறாய் என்று யாராவது கேட்டுவிடப் போகிறார்களே என்ற எண்ணம்.

ஆனால் ரெட்டியாருக்கு வீட்டை மாற்ற மனமில்லை. அது அவரது பிதுரார்ஜிதம். அவரது சம்பாத்தியங்களை வங்கியில் பத்திரமாக சேமித்து வைத்திருந்தார். மகள் திருமணத்தை ஆபட்ஸ்பரியில் நடத்தும் திட்டம் வைத்திருந்தார். அவள் புகுந்தகம் போகும்போது பல்லாவரத்தில் ஒரு கிரவுண்டு நிலமும் இருபது லட்ச ரூபாய் ரொக்கமும் சீதனமாகக் கொடுத்து அனுப்பத் திட்டமிட்டிருந்தார். எது அவசியம், எதை எப்போது செய்ய வேண்டும் என்று குழந்தைக்கு எப்படித் தெரியும்? பானுமதி அவரைக் கஞ்சன் என்று அவர் இல்லாத சமயங்களில் சொல்லுவது அவருக்குத் தெரியும். அதனாலென்ன? அவள் என்ன சொன்னாலும் அவருக்கு உறுத்தாது. மகள் மீது ரெட்டியாருக்குப் பாசம் அதிகம். அவரைப் போலவே பாரிஸ் கார்னரில் கடை வைத்து வியாபாரம் செய்யும் இன்னொரு ரெட்டியாரின் ஒரே வாரிசான கோகுல சுந்தரன் என்கிற வரனைத் தம் பெண்ணுக்காக அவர் பார்த்து வைத்திருந்தார். இதைச் சொன்னால், இப்போது கல்யாணமெல்லாம் வேண்டாம் என்று பானுமதி முரண்டு பிடிப்பாள் என்று அவருக்குத் தெரியும். எனவே முன்னறிவிப்பு ஏதுமின்றி மாப்பிள்ளை வீட்டாரை தீபாவளிக்கு முதல் வாரம் ஒரு நல்ல நாள் பார்த்துத் தன் வீட்டுக்கு வரச் சொல்லியிருந்தார். பையன் பார்த்ததும் பிடித்துப் போவதற்குத் தகுதியானவன் என்பது அவரது அபிப்பிராயம். எல்லாம் பிடித்துப் போய், எல்லாம் சரியாக அமைந்துவிட்டால் தை பிறந்ததும் திருமணத்தை நடத்தி விட உத்தேசித்திருந்தார்.

சகாயமுத்துவை அவர் வரச் சொல்லியிருந்ததும் அதன் காரணம் பற்றித்தான். மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் வரும்போது வீட்டின் சுற்றுப்புறம் சற்று சுத்தமாக இருந்தால் நல்லது. அவரால் வீட்டை மாற்ற முடியாது. சாக்கடையை இல்லாமலாக்க முடியாது. ஆனால் பன்னெடுங்காலமாக அதில் புரண்டு வாழும் பன்றிகளை அவன் மனம் வைத்தால் அழித்து ஒழித்துவிட முடியும். நதியோர நந்தவனமாக அவை கருதி வந்து இளைப்பாறும் வேலிக்காத்தான் புதர்களையும் சேர்த்து வெட்டி வீழ்த்த வேண்டும். முடிந்தால் சாக்கடையின் ஓட்டத்தைத் துரிதப்படுத்தும் விதமாகக் குப்பைகளை அப்புறப்படுத்தி, அதன் ஆழத்தையும் சற்றுக் கூட்டலாம். ரெட்டியார் ப்ளீச்சிங் பவுடர் வாங்கி வைத்திருக்கிறார். இரண்டு பெரும் மூட்டைகள் தயாராக இருக்கின்றன. அரசியல் பிரமுகர்கள், அமைச்சர்கள் யாராவது பிராந்தியத்துக்கு வரும்போதெல்லாம் வீதிகளின் இரு ஓரங்களிலும் ப்ளீச்சிங் பவுடரை சுண்ணாம்புத் தூளுடன் கலந்து நீளக்கோடாகக் கொட்டி வைப்பது தொன்றுதொட்டு சைதாப்பேட்டையில் இருந்துவரும் வழக்கம். வரவேற்புத் தோரணங்கள், மேடை, மைக் செட்டோடு ப்ளீச்சிங் பவுடருக்கும் விழாக்கால அந்தஸ்து உண்டு. வீடு விழாக்கோலம் கொள்ளும்போதும் ப்ளீச்சிங் பவுடரின் தேவை இருக்கத்தான் செய்யும்.

சகாயமுத்துவிடம் ரெட்டியார் விஷயத்தைச் சொல்லி, முன்பணமாகப் பத்து ரூபாய் கொடுத்தார். சகாயம் அதை வாங்கிக்கொண்டு மறுநாள் வருவதாகச் சொல்லிவிட்டுக் கிளம்பும்போது பானுமதி அவனைக் கடந்து வெளியே போனாள். அவனுக்கு அவள் பூசியிருந்த கூந்தல் தைலத்தின் வாசனை மிகவும் பிடித்தது. ஒரு வினாடி கண்ணை மூடிக்கொண்டு மீதமிருந்த வாசனைக் காற்றை நாசிக்குள் உறிஞ்சி எடுத்துக்கொண்டு வெளியேறினான்.

மறுநாள் அதிகாலை சகாயம் தனது நண்பர்களுடன் ரெட்டியார் வீட்டின் பின்புறம் வந்து சேர்ந்தான். கருமை ஒரு சாயம்போல் முள் புதர்களின்மீது தெளித்திருந்தது. காற்றின் அசைவில்லை. வேறு எந்தச் சத்தமும் இல்லை. சகாயம் அமைதியாக ஒதுங்கி நின்று புதர்களை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான். அது பன்றிகள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் பொழுது. அரை மணிதான் தூங்கும். அதுவும் அதிகாலைதான் தூங்கும். சட்டென்று எழுந்து பத்தடி நகர்ந்து சென்று மீண்டும் படுக்கும். விடியலின் முதல் ஒலி எங்கிருந்து கேட்டாலும் தூக்கத்தை உதறிவிட்டு மேயக் கிளம்பிவிடும். அந்த முதல் சத்தத்துக்குள் எத்தனைப் பன்றிகளைப் பிடிக்க முடிகிறது என்பதுதான் விஷயம். ஒன்றின்மீது பாய்ந்துவிட்டால் போதும். உடன் இருக்கும் மற்ற அனைத்தும் விழித்து எழுந்து ஓடத் தொடங்கிவிடும். ஆனால், ஒரு பன்றியுடன் வேட்டையை நிறைவு செய்வது சகாயத்துக்கு எப்போதும் பிடிக்காது. அவனது நான்கு நண்பர்களும் ஆளுக்கொன்றைக் குறி வைப்பார்கள். அத்தனையும் சித்தியானால் ஒரு முயற்சிக்கு ஐந்து பன்றிகள். ஐந்தையும் பிடித்து சாக்கு மூட்டைகளில் அடைத்துக் கட்டிவிட்டு அடுத்த ஐந்துக்குக் குறி வைப்பதுதான் சவால். அது அத்தனை எளிதல்ல. அம்முயற்சியில் பெரும்பாலும் ஒன்றிரண்டு பன்றிகள்தாம் கிடைக்கும். திருப்தியடைந்து திரும்பிவிட்டு, மறுநாள் மீண்டும் வேட்டைக்கு வரவேண்டும்.

சகாயமுத்து தனது நண்பர்களுக்கு எச்சரிக்கை சமிக்ஞை அளித்தான். ஏழு பன்றிகள் மொத்தமாக ஒரு புதரின் மறைவில் படுத்திருப்பது அவன் கண்களில் பட்டுவிட்டிருந்தது. அதில் ஒன்று மிகப் பெரியதாக, பூதாகாரமாக இருந்தது. நிறைய கறி அளிக்கக்கூடியது. இருளின் கருமையில் திருத்தம் செய்தாற்போல் சற்றே சாம்பல் பூசிய அதன் தேகம் புதர் ஓரம் கர்நாடக மாநில வரைபடம் போலக் கிடந்தது. அந்த இடத்தை அவன் சுட்டிக்காட்டி, எவ்வாறு அவற்றை வளைத்து மடக்க வேண்டும் என்பதையும் சைகையில் விளக்கினான். நண்பர்கள் நால்வரையும் தலா ஆறடி இடைவெளியில் அரை வட்டமாக வளைந்து முன்னேறச் சொல்லிவிட்டு அவன் சத்தமில்லாமல் சாக்கடையைத் தாண்டி ரெட்டியார் வீட்டின் பின் வாசலில் இருந்து ஆறடி தள்ளி இருந்த கழிப்பறை அருகே வந்து நின்றுகொண்டான். தகரக் கதவு போட்ட கழிப்பறை. சகாயம் கவனமாக அதன்மீது பட்டு சத்தமெழுப்பிவிடாமல், அதே சமயம் தப்பிக்கும் பன்றிகள் உயிர் பயத்தில் தாவி வரக்கூடிய இடம் அதுவே என்றும் கணித்துத் தயாராக அங்கே நின்றுகொண்டான்.

அவனது நண்பர்கள் பூவை மிதிக்கும் ஜாக்கிரதை உணர்வுடன் அங்குலம் அங்குலமாகக் கால்களை நுழைத்து, சாக்கடைக்குள் இறங்கி நின்றுகொண்டார்கள். ஒவ்வொருவர் கையிலும் சாக்குப் பை இருந்தது. படுத்திருக்கும் பன்றியின் முதுகின் மீது பாயும்போதே சாக்கின் வாயைத் திறந்து பன்றியின் தலைக்குள் திணித்துவிட வேண்டும். இதில் தவறினால் பன்றி தப்பித்துவிடும். அது தலையை அசைத்துக்கொள்ள ஒரு கணம் கூடக் கொடுத்துவிடக் கூடாது என்பதுதான் முக்கியம். ஆனால் சாக்கடைக்குள் இருந்து பாயும்போது தண்ணீரின் சலசலப்பொலி எழத்தான் செய்யும். உறங்கும் பன்றி விழித்துக்கொள்ள அது போதும். அது நிமிர்ந்து பார்ப்பதற்குள் பாய்ந்து அமுக்கிவிடுவதில்தான் வீரனின் திறமை இருக்கிறது.

சாக்கடைக்குள் இறங்கியவர்கள் சகாயத்தைப் பார்த்தார்கள். அவன் உறங்கும் பன்றிகளையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான். எங்கும் எந்த அசைவும் இல்லை; ஏழில் எந்தப் பன்றியும் உறக்கம் கலைந்திருக்கவில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு நண்பர்களுக்குக் கை காட்டினான். அவர்கள் குறி வைத்துப் பாய்ந்த கணத்தில் வானில் மிகப் பெரிதாக ஓர் இடிச் சத்தம் கேட்டது. சகாயம் திடுக்கிட்டுத் திரும்பியபோது ரெட்டியார் வீட்டின் பின்புறக் கதவு திறக்கும் சத்தம் சேர்ந்துகொண்டது. இயற்கையின் அழைப்பில் ரெட்டியார் மகள் பானுமதி கழிப்பறையை நோக்கி வர, குப்பென்று அந்தக் கூந்தல் தைலத்தின் வாசனை சகாயத்தின் சுவாசத்தை நிறைத்தது.

ஒரு கணம்தான். ஆபத்து மிக அருகில் வந்துவிட்டதைப் பன்றிகள் உணர்ந்து, எழுந்து ஓடத் தொடங்க, சகாயமுத்துவின் நண்பர்கள் விடாமல் பாய்ந்து அவற்றின்மீது விழுந்து புரண்டு அமுக்கப் பார்த்தார்கள். வினோதமான அவற்றின் மரண ஓலத்தினிடையே மீண்டும் மீண்டும் வானில் இடிச் சத்தம் கேட்டு, மின்னல் சிதறத் தொடங்கியது. சட்டென்று மழையும் சேர்ந்துகொண்டது. சகாயத்தின் நண்பர்களிடம் அகப்படாமல் தப்பித்த பன்றிகள் தலைக்கொரு பக்கம் சிதறி ஓட, நிச்சயமாகத் தப்பிக்கவே முடியாது என்று சகாயம் கணித்திருந்த அந்த பிரம்மாண்டமான பன்றி தப்பித்ததோடு மட்டுமின்றி ஆக்ரோஷமாகப் பாய்ந்து அவனை நோக்கி ஓடி வர ஆரம்பித்தது. பானுமதி அச்சத்தில் நிலைகுலைந்துபோய்க் கத்தத் தொடங்க, சகாயம் சட்டென்று அவள் தோளை வளைத்துத் தன் கையால் அவள் வாயைப் பொத்தினான். அதற்குள் ஓடி வந்த பெரும் பன்றி, இருளிலும் பதற்றத்திலும் வழி புரியாமல் சகாயத்தின்மீது ஆக்ரோஷமாக மோத, சகாயம் ஒரு வினாடி தடுமாறினான். அதற்குள் பானுமதி அவன் பிடியில் இருந்து விலகி ஓடப் பார்க்க, சகாயம் காலில் மோதிய பன்றியை எட்டி உதைத்தான். மறு கணம் பன்றி சீறியெழுந்து அவன் நெஞ்சு வரை உயர்ந்து பாய்ந்தது. அவன் நிலை தடுமாறி பானுமதியின்மீது விழுந்தான். பெரும் பன்றி இருவரின் மீதும் கால்களை திடமாகப் பதித்துத் தாவிக் குதித்து ஓடியது. பிடி, பிடி என்று கத்தியபடியே சகாயத்தின் நண்பர்கள் ஆளுக்கொன்றைத் துரத்திக்கொண்டு சிதறி ஓட, மழை மேலும் வலுக்கத் தொடங்கியது.

அந்த வருட மழைக்கு சைதாப்பேட்டையில் வெள்ளம் வந்தது. அது சரித்திரம் காணாத வெள்ளமாக இருந்தது.  மூன்றரை தினங்கள் நிற்காமல் அடித்துக் கொட்டிய பெருமழைக்கு அபீத் காலனி மூழ்கிப் போனது. குடிசைகள் அனைத்தும் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட, தளம் போட்ட வீடுகளுக்குள் இருந்த பீரோ, கட்டில், மெத்தைகள், பாத்திரம் பண்டங்கள், டிவி பெட்டி யாவும் வெள்ள நீரில் மிதந்து சென்றன. ரெட்டியார் வீட்டின் முதல் தளம் வரை தண்ணீர் நிறைந்துவிட்டிருந்தது. அந்த வீதியில் இருந்த அனைத்து வீடுகளுமே கிட்டத்தட்ட இடிந்தும் சிதைந்தும் இல்லாமலாயின. போலிசாரும் தன்னார்வலர்களும் காலனிவாசிகளைப் படகு வைத்து ஆலந்தூர் சாலைக்கு அழைத்துச் சென்று பத்திரமாக இறக்கிவிட்டார்கள். ஒரு சாரார் மாந்தோப்புப் பள்ளியிலும் இன்னும் சிலர் கணபதி பள்ளியிலும் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஹெலிகாப்டர்கள் சாம்பார் சாதப் பொட்டலங்களைப் போட்டன. மசூதித் தெரு மசூதியிலும் தடுப்புக் கட்டி சமையல் வேலைகள் நடந்தன.

ரெட்டியார் தன் குடும்பத்துடன் கடும்பாடி அம்மன் கோயிலுக்கு அருகே இருந்த தனது தம்பி வீட்டுக்குப் போய்த் தங்கியிருந்தார். இனி ஒன்றுமே இல்லாமல் போய்விட்டதை அவரால் ஜீரணிக்க முடியவில்லை.  உணவின்றி, உறக்கமின்றி இடிந்து போய் வெறுமனே அமர்ந்திருந்தார். பானுமதி அழுதுகொண்டே இருந்தாள். ஊரில் ஒவ்வொருவரும் தம்மால் இயன்ற வெள்ள நிவாரணப் பணிகளைச் செய்துகொண்டிருந்தபோதும், சமூக சேவகியான பானுமதியின் தாய் அவை எதிலும் கலந்துகொள்ளாமல் ஓர் அறைக்குள் முடங்கிக் கிடந்தாள். பானுமதியைப் பெண் பார்க்க வருவதாக இருந்த இன்னொரு ரெட்டியாரின் மகன் பம்பாய்க்குப் போய்விட்டதாக அவர்கள் கடையில் வேலை செய்யும் யாரோ சொன்னார்கள். எப்போது வருவான் என்று கேட்டதற்குத் தெரியவில்லை என்றார்கள். ரெட்டியாரால் மாப்பிள்ளைப் பையனின் தந்தையை போனில் தொடர்புகொள்ளவே முடியவில்லை. ஒருபுறம் ஊரெங்கும் அழுகையும் ஓலமும் கூக்குரல்களும் நிறைந்திருக்க, விரக்தியில் ரெட்டியார் செய்வதறியாமல் தவித்துக்கொண்டிருந்தார். ‘இந்த வீட்ட வித்துத் தொலைச்சிடுங்க, வேற எங்கயாவது போயிடலான்னு சொன்னேனே, நீங்க கேக்கலியே’ என்று பானுமதி திரும்பத் திரும்பச் சொல்லிப் புலம்பிக்கொண்டிருந்தாள்.

நான்காம் நாள் மழை நின்று நீர் வடிய ஆரம்பித்துவிட்டதாகச் செய்தி வந்தது. ரெட்டியார் ஒரு முடிவோடு சட்டையை எடுத்துப் போட்டுக்கொண்டு வெளியே கிளம்பினார். எங்கே என்று அவரது மனைவி கேட்டாள். வந்து சொல்கிறேன் என்று சொன்னார்.

அபீத் காலனிக்கு அவர் வந்து சேர்ந்தபோது வெள்ளம் வடிந்துகொண்டிருந்த சுவடுகள் அவரை வரவேற்றன. சாலையில் காலே வைக்க முடியாத அளவுக்குச் சேறு மண்டிக் கிடந்தது. வீடுகள் அனைத்தும் பாதி இடிந்தும் முழுக்க இடிந்தும் கறைகள் பூசிக்கொண்டும் காட்சியளித்தன. மனித நடமாட்டம் அதிகமில்லை. இங்கொன்றும் அங்கொன்றுமாக மக்கள் நின்று பேசிக்கொண்டிருந்ததை ரெட்டியார் கவனித்தார். நாய்களும் எருமை மாடுகளும் சர்வ சாதாரணமாக சிதிலமான வீடுகளுக்குள் போய் வந்துகொண்டிருந்ததையும் கண்டார். வெறுப்பும் விரக்தியும் ஆங்காரமும் அவரை முட்டித் தள்ளின. மீண்டும் மனிதர்கள் வசிக்கத் தகுதியான இடமாக காலனி உருமாறக் குறைந்தது ஒரு மாதம் பிடிக்கும் என்று தோன்றியது. அவரையறியாமல் கண்ணில் நீர் வந்தது.

தன் வீட்டுக்கு அவர் வந்து சேர்ந்தபோது காம்பவுண்டு சுவர் முற்றிலுமாக இடிந்து விழுந்திருப்பதைக் கண்டார். இரும்புக் கதவை யாரோ பெயர்த்து எடுத்துச் சென்றிருந்தார்கள். வீட்டின் முன்வாசலை ஒட்டியிருந்த பலகணிகள் இரண்டும் உதிர்ந்து விழுந்திருந்தன. பானுமதி ஆசைப்பட்டு அங்கே நட்டு வளர்த்த ஒரு வேப்பமரமும் தென்னையும் முறிந்து வழி மறித்துக் கிடந்தன. ரெட்டியாருக்கு உள்ளே போகத் தயக்கமாக இருந்தது. இம்மாதிரி வெள்ளம் வடிந்த காலங்களில் ஆற்றங்கரையோர வீடுகளுக்குள் பாம்புகள், பெருச்சாளிகள், தேள் உள்ளிட்ட பல்வேறு விதமான ஜந்துக்கள் புகுந்துவிடும். ஆள்களை அமர்த்தி முற்றிலும் சுத்தம் செய்து, சீரமைத்த பிறகுதான் உள்ளே போக முடியும். ரெட்டியாருக்கு ஏற்கெனவே அந்த அனுபவம் மூன்று முறை ஏற்பட்டிருக்கிறது. இம்முறை வீட்டை இடித்துவிட்டு இடத்தை விற்றுவிடலாம் என்ற முடிவுக்கு அவர் வந்திருந்தார். சைதாப்பேட்டையே போதும் என்று தோன்றியது. கடையைக் கூட யாருக்காவது விற்றுவிட்டு, பணத்தை மூட்டை கட்டிக்கொண்டு ஊர்ப்பக்கம் போய்விட முடிவு செய்திருந்தார். ஆனால் இன்னும் மனைவியிடமோ, மகளிடமோ அதைச் சொல்லியிருக்கவில்லை.

இடிந்து, முற்றிலும் சிதிலமாகியிருந்த வீட்டைப் பார்த்தபடியே சுற்றி வந்தார். வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு இடிபாடுகளை நகர்த்திவிட்டு உள்ளே சென்றார். ஹாலில் டிவி இல்லாமல் இருந்தது. இரண்டு சோபாக்களுள் ஒன்றைக் காணவில்லை. இன்னொன்று குப்புற விழுந்து கிடந்தது. சுவரில் மாட்டப்பட்டிருந்த போட்டோக்கள் யாவும் கீழே விழுந்து நொறுங்கியிருந்தது தெரிந்தது. சமையலறையில் இருந்த அனைத்துப் பாத்திரம் பண்டங்களும் கீழே விழுந்திருந்தன. அரிசி கேனும் பருப்பு டப்பாக்களும் தண்ணீரில் மிதந்து வெளியேறியிருக்க வேண்டும். கதவிலும் சுவரிலும் மோதி அவற்றின் மூடிகள் திறந்து கொட்டிய தானியங்கள் ஈரத் தரையெங்கும் ஒட்டிக் கிடந்தன. அவரது தந்தை காலத்து மர பீரோக்கள் இரண்டும் ஈரத்தில் ஊறி, புடைத்துக்கொண்டு நின்றன. உள்ளே இருக்கும் பொருள்கள் யாவும் நாசமாகியிருக்கும். வீட்டின் பின்புறக் கதவு உடைந்து சென்றிருந்தது. வீட்டுக்கு ஆறடி தள்ளிக் கட்டியிருந்த கழிப்பறை நொறுங்கி விழுந்திருந்தது.

ரெட்டியார் தாங்க முடியாத துக்கத்துடன் அங்கே சென்றார். சாக்கடை என்று இப்போது தனியே ஒன்றில்லாமல் அந்தப் பிராந்தியமே ஆற்றின் ஒரு பகுதியாகிவிட்டிருந்தது. வேலிக்காத்தான் புதர்கள் யாவும் வேரோடு பெயர்க்கப்பட்டு அடித்துச் செல்லப்பட்டிருந்தன. கண்ணுக்கெட்டிய தூரம் வரை வெறும் நீராகவே இருந்தது. நீர்ப்பரப்பெங்கும் ஆங்காங்கே திட்டுத் திட்டாகப் பொருள்கள் மிதப்பது தெரிந்தது.

ரெட்டியார் திரும்பலாம் என்று நினைத்தபோது கழிப்பறை இடிபாடுகளின் நடுவே ஒரு காலின் கட்டைவிரல் நுனி அவர் கண்ணில் பட்டது. அதுவும் நீரில் அமிழ்ந்து ஊறி, விரைத்திருந்தது. திடுக்கிட்டு அவசர அவசரமாகக் கற்களை நகர்த்தினார். வெள்ளத்தில் சிக்கி அடித்து வரப்பட்ட யாரோ இந்தச் சுவரில் மோதி இறந்திருக்க வேண்டும் என்று நினைத்தார். அல்லது இறந்த பின் இங்கு வந்து சேர்ந்திருக்கலாம். அப்போதோ அல்லது சிறிது நேரம் கழித்தோ கழிப்பறைச் சுவரும் இடிந்து மேலே விழுந்திருக்க வேண்டும். ஐயோ, எத்தனை பயங்கரம்! பதற்றம் மிகுந்து, இறந்தவனின் கால்களை பலம் கொண்ட மட்டும் பிடித்து இழுத்து வெளியே போட்டார். அவனது நடு வயிற்றில் ரத்தத் திட்டு தெரிந்தது. அங்கே மட்டும் சட்டை கிழிந்திருந்தது. கடித்துக் குதறியது போல வயிற்றுப் பகுதி முழுதும் பிய்ந்து எலும்பு வெளியே தெரிந்தது. அச்சத்துடன் அவன் முகம் மூடியிருந்த காங்கிரீட் உதிரிகளை நகர்த்திப் பார்த்தார். ஒரு கணம்தான். பீதியை மீறிய நிம்மதி உணர்ச்சியொன்று அவர் மனம் முழுதும் நிறைந்து அடங்கியது.

தாம் அங்கு வரவேயில்லை, எதையும் பார்க்கவில்லை என்று தனக்குள் சொல்லிக்கொண்டு அவர் அவசரமாகப் புறப்பட்டபோது, கழிப்பறை இடிபாட்டுக் குவியல்களின் மறுபுறத்தில் இருந்து ‘ஹர்ர்ர்..’ என்றொரு உறுமல் சத்தம் கேட்டது. வெள்ளத்துக்குத் தப்பி எங்கோ போயிருந்த பன்றிகள் திரும்பி வர ஆரம்பித்துவிட்டதென ரெட்டியார் நினைத்தார். இனி எது குறித்தும் எண்ணவே வேண்டாம் என்று முடிவு செய்துகொண்டு விறுவிறுவென நடக்க ஆரம்பித்தார்.

OOO

நவீன விருட்சம் மே 2018 இதழில் வெளியானது.

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி