ஒரு ஊரில் ஒரு ஹரன் பிரசன்னா வசித்து வந்தார். ஒரு கிருமிக் காலத்தில் அவருக்கு இரண்டு மாதக் கட்டாய ஓய்வு தரப்பட்டு வீட்டில் இருக்க வேண்டி வரவே, சாப்பிட்டு சாப்பிட்டு மிகவும் குண்டாகிப் போனார். (அதற்கு முன்னர் அவர் ஒல்லியாக இருந்தவர் என்பதால் இது வேறு எந்த ஹரன் பிரசன்னாவும் இல்லை.) குண்டாகிப் போன ஹரன் பிரசன்னாவுக்கு இரண்டு பழக்கங்கள் இருந்தன. எப்போதும் அவர் பைக்கில் வெளியே போவார். மற்றும் பைக்கில் போகும்போது சினிமாப் பாடல்களையே சிந்தித்துக்கொண்டும் பாடிக்கொண்டும் போவார்.
அப்படி ஒருநாள் அவர் சினிமாப் பாடல்களைச் சிந்தித்தபடி பைக்கில் போய்க்கொண்டிருந்தபோது ஒரு கிழவியின்மீது பைக்கை மோதிவிட்டார். பைக் விழுந்தபோது அதனோடு சேர்ந்து தானும் விழுந்தார். வயதாகிவிட்டதால் கிழவியான கிழவி, அந்த பளுவைப் பொறுக்க மாட்டாமல் நசுங்கிவிட்டிருக்க, பதறிப் போன ஹரன் பிரசன்னா, தன்னையும் தூக்கி, பிறகு அந்தக் கிழவியையும் தூக்கி நிறுத்தி சிறிது ஆசுவாசப்பட்டு, ஆசுவாசப்படுத்தினார்.
“மன்னிச்சிடு ஆயா. தெரியாம மோதிட்டேன்” என்று மனமுருகி வேண்டினார். அதற்கு அந்தக் கிழவி, “பரவால்ல தம்பி” என்று பெருந்தன்மையுடன் சொன்னார்.
“நான் வேணுன்னு இவ்ளோ குண்டாகல ஆயா. கம்மியாத்தான் சாப்பிடுறேன். சில நாள் டயட்லகூட இருக்கேன். ஆனாலும் இப்படி ஆயிடுது.”
அதற்கு அந்தக் கிழவி, “பரவால்ல தம்பி. இனிமே பாடாத” என்று சொல்லிவிட்டுத் தன் வழியில் போனார்.