வாழ்க்கை மிகவும் போரடித்தது. வித்தியாசமாக ஏதாவது செய்யலாம் என்று எண்ணி, தற்கொலை செய்துகொண்டான். உடலில் இருந்து கிளம்பிய கணத்தில் சிறிது வலித்தது. விடுபட்டவுடன் எல்லாம் சரியாகிவிட்டது. இப்போது அவனால் நடப்பதுடன்கூட மிதக்கவும் முடிந்தது. முகம், கை, கால் போன்ற உறுப்புகள் இல்லாமல், அவை இல்லாததைக் குறித்து எண்ணிப் பார்க்க மட்டும் முடிவது வினோதமாக இருந்தது. முன்பெல்லாம் ஆறு மாதங்கள் புதரைப் போல முடி வளர்த்துக்கொண்டு சலூனுக்குப் போவான். ஒட்ட வெட்டிக்கொண்டு பைக்கில் ஏறிப் போகும்போது தலையே இல்லாதது போல இருக்கும். இப்போதும் அப்படித்தான் இருந்தது. உறுப்புகள்தாம் எவ்வளவு சுமை. ஆசை ஆசையாக அவன் மிதந்துகொண்டே இருந்தான். ஆனால் மெதுவாக மிதக்கத்தான் முடிந்ததே தவிர பறவைகளைப் போலப் பறக்க முடியவில்லை. உடலாக இருக்க உறுப்புகள் இல்லாமல் முடியாது. ஆனால் உயிரோடு இருக்க அப்படி ஒன்று அவசியமில்லை என்பது இப்போது புரிந்தது. யோசித்தபடியே அவன் மிதந்துகொண்டிருந்தபோது ஒரு காகமும் சிறு வயதில் அவன் காதலித்த அற்புத மேரியும் ஒரே சமயத்தில் இறந்து போனதைக் கண்டான். பள்ளி நாளில் சொல்லாமல் விட்ட காதலை அவளிடம் இப்போது சொல்லிவிடலாம் என்று நினைத்து வேகமாக நெருங்க முயற்சி செய்தான். ஆனால் உறுப்புகள் இல்லாதபோது, ஒரு பஞ்சைப் போல மிதக்கத்தான் முடிந்ததே தவிர பறக்க முடியவில்லை. இந்த வேகத்தில் தான் போய்ச் சேருவதற்குள் அவள் காணாமல் போய்விடுவாளோ என்று பயந்து அவசரமாக அந்தக் காகத்தின் உடலில் இருந்து சிறகை மட்டும் எடுத்துப் பொருத்திக்கொண்டு அற்புத மேரியை நோக்கிப் பறக்கப் பார்த்தான். இல்லாத உடலில் பொருந்தாத சிறகு அவனைக் கீழே தள்ளியது. பார்த்துக்கொண்டிருந்த காகம் சொன்னது: “அந்த ஸ்பேர் பார்ட் சரியில்லாமத்தான் நானே செத்தேன்.”