நகர(விடா) மையம்

பிறந்து வளர்ந்த சென்னைக்குள் என்னை அந்நியனாக உணரச்செய்யும் ஒரே தலம் என்கிற வகையில் எனக்கு அந்த ஷாப்பிங் மால் ஒரு முக்கியமான க்ஷேத்திரம். தீராத பிரமிப்புடன் திரும்பத் திரும்ப நினைத்துக்கொள்கிறேன். என்ன இது, எப்படி இது என்று ஒவ்வொருமுறையும் வியந்தே போகிறேன். நமக்கான இடமல்ல இது என்று எப்போதும் உறுத்தினாலும், அவகாசம் கிடைத்தால் போய்ப்பார்க்கலாம் என்றே அடிக்கடி தோன்றுகிறது. அவுட் டோர் ஷூட்டிங்குக்கு வந்த நடிகை அலுமினிய நாற்காலியில் கால்மேல் கால்போட்டு அமர்ந்து லிப்ஸ்டிக் பூசிக்கொள்வதைக் கண்விரியப் பார்க்கும் கிராமத்துச் சிறுவன்போல் என்னை உணர ஒரு தருணம்.

தாஜ்மஹால் எனக்கு வியப்பூட்டியதில்லை. ஸ்பென்சர் ப்ளாசாவும்கூட. இங்கு மட்டும் ஏதோ இருக்கிறது. என்னவென்று புரிபடாத ஏதோ. அகலமும் உயரமுமான அதன் ஆகிருதி. அடுக்குகள் தோறும் அலங்காரங்கள், கண்ணாடி வழியே கண் சிமிட்டுகின்றன. வெளியே சூழலை ஆக்கிரமித்திருக்கும் கசகசப்புக்கும் புழுதிக்கும் துர்மணங்களுக்கும் நெரிசலுக்கும் இன்னபிறவற்றுக்கும் சற்றும் தொடர்பில்லை என்று கொடித்தோன்றும் தோரணவாயில் காப்போனைக் கடந்து முதல் அடி எடுத்துவைக்கும்போதே புரிந்துவிடுகிறது.

அகண்ட கீழ்த்தளத்தின் ஒரு பகுதியிலிருந்து கமகமகமவென்று பேக்கரிப் பொருள்களின் மணம் வருகிறது. நட்டுவைத்த செயற்கை ஈச்ச மரத்தினடியில் நாற்காலி போட்டு அமர்ந்து சாப்பிட்டபடி இசை கேட்கும் இளம் பெண்களையும் அவரவர் ஆருயிர்த் துணைவர்களையும் பார்க்கிறேன். இறுக்கமான அவர்களுடைய ஜீன்ஸ் கால்சராயும் சிறிய மேல் உடுப்பும் நிச்சயம் அவர்களுடைய பெற்றோர் விரும்பக்கூடியதாக இராது. கண்டீஷனர் பராமரிப்பில் அலைபுரளும் அவர்தம் கூந்தலைப் பார்த்தபடியே தானியங்கி மாடிப்படியில் ஏறுகிறேன்.

நாற்பத்தைந்து டிகிரி கோணத்தில் நான் உயர்கிறேனே மம்மி. வயதுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? பிடித்திருக்கிறது. வாழ்வில் இம்மாதிரி வலியில்லாமல் உயர்வது சாத்தியமில்லை.

எதற்கும் இருக்கட்டுமென்று சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு மீண்டுமொருமுறை கீழே இறங்கி, மேலே ஏறுகிறேன். லேண்ட் மார்க் புத்தகக் கடை உங்களை அன்புடன் வரவேற்கிறது.

வாசல் எந்தப் பக்கம் என்று கண்ணாடிச் சுவர்களிடையே தேடியபடி அருகே போகிறேன். சடாரென்று கண்ணாடிகள் இருபுறமும் பிளந்து என்னை உள்ளே விழுங்குகிறது. கண்ணனின் தந்தைக்கு யமுனை பிளந்ததுபோல. ஒரு கணம் விதிர்விதிர்த்துப் போனாலும் உடனே ஒரு சந்தோஷம் ஓடிவந்துவிடுகிறது.

அடடே, இதுவும் புதிது. எஸ்கலேட்டரைப் போல் இதற்காகவும் இன்னொருமுறை வெளியே போய் உள்ளே மீள்கிறேன். புதிய புத்தகங்கள் வரவேற்கின்றன. இனிய இசை. இந்தக் கடை சென்னையில் மற்ற இடங்களில் உள்ள லேண்ட்மார்க் விற்பனையகங்களைக் காட்டிலும் பெரிது. கடல் போல் போய்க்கொண்டே இருக்கிறது. புதிய புத்தகங்கள். பழைய புதியவை, துறைசார் நூல்கள், தொட்டுப்பார்க்க மட்டுமே உள்ள நூல்கள்.

மேலும் நகர்ந்தால் பிரம்மாண்டமான வரிசைகளில் இசைக் குறுந்தட்டுகள். தமிழ். ஆங்கிலம். ஹிந்தி. ஸ்பானிஷ். க்ளாசிக்கல். கிராமியம். இந்தியம். மேலைச் சங்கீதம். பண்டைக்காலம். இடைக்காலம். இக்காலம். புதிய அலை. பழைய வலை. சைக்காவ்ஸ்கியிலிருந்து சங்கர் கணேஷ் வரை. மொஸார்டிலிருந்து முஹம்மத் ரஃபி வரை.

வியக்கிறேன். நகர மனமின்றி மேலும் நகர்கிறேன். திரைப்படங்கள். திகட்டத் திகட்டத் திரைப்படங்கள். எப்படியும் சில ஆயிரங்களைத் தொடும். எடுத்தவர்களையல்ல; அடுக்கி வைத்தவர்களை வியக்கிறேன். கலைத்துப் போடுகிறவர்களைக் கண்டு பதைக்கிறது. எல்லாம் இன்னும் சில காலம்தான். எப்படியும் தொடுதிரை வசதி வந்துவிடும் என்று தோன்றியது. கலைத்துத் தேட அவசியமில்லை. பார்த்துப் பெற்றுவிட முடியும்.

அப்புறம் அலங்காரப் பொருள்கள், வாசனாதி திரவியங்கள், தோலாலான பொருள்கள், நொறுக்குத் தீனிக் கட்டம். வெளியேறி மூச்சுவிட அவகாசமில்லை. இன்னொன்று அழைக்கிறது. வேறு வித அலங்கார விளக்குகள். கண்சிமிட்டும் வெளிப்பாட்டு நேர்த்தி. ஆடைகள். ஆபரணங்கள். வீட்டு உபயோகங்கள். தனிப்பட்ட உபயோகங்கள்.

எல்லாக் கதவுகளுக்குப் பின்னாலிருந்தும் கூட்டம் கூட்டமாக ஆண்களும் பெண்களும் வெளியேறுகிறார்கள். எல்லோருக்கும் இடைவிடாது பேசிக்கொள்ள எப்போதும் விஷயமிருக்கிறது. ஒரு கைக்கு கோன் ஐஸ். மறுகைக்குக் காதலர் அல்லது காதலி. இம்மாதிரித் தருணங்களுக்கு ஐஸ் க்ரீம் ஒரு குறியீடு போலிருக்கிறது. வாழ்க்கை பெரும்பாலும் இனிப்பாகவே இருக்கிறது.

தளம் தளமாக எஸ்கலேட்டரில் ஏறி ஏறிச் சுற்றி வருகிறேன். உயர் நடுத்தர, பணம் மிகுந்த வர்க்கத்தவர்களின் மிகச் சிறந்த பொழுதுபோக்குத் தலமாக இப்படியொன்று என் சென்னையில் உருவாகியிருக்கிறது. தெரியவில்லை. ஒரு ரிப்வேன் விங்கிளாக இருந்துவிட்டிருக்கிறேன். எஸ்கலேட்டரில் என்னருகே கடந்து போகிற பெண்ணின் மொபைல் ஒலிக்கிறது. பொன்னிற நகப்பூச்சணிந்த அழகுப்பெண் விரலால் ஒற்றிப் பேசுகிறாள். இங்குதான் இருக்கிறேன். இரண்டாவது ஃப்ளோர். மேலே வந்துகொண்டிருக்கிறேன். அரேபியன் ஹட்? சரி, நல்லது.

அங்கே ஒரு மாபெரும் திரையரங்கம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.  பாப்கார்ன் கூண்டு இல்லாத வாசலில் மக்கள் செய்தித்தாள் நறுக்கில் பிடித்து சாண்ட்விச் சாப்பிடுகிறார்கள். உள்ளங்கையளவு தண்ணீர்ப் போத்தலில் உதடு நனையாமல் அருந்துகிறார்கள். ஆனாலும் பண்பாடு மாறவில்லை. சாப்பிட்டு முடித்ததும் செய்தித்தாள் நறுக்கை அப்படியே கசக்கிக் கீழேதான் வீசுகிறார்கள்.

கறுப்புச் சந்தைக்காரர்கள் கூவியழைக்காத ஒரே திரையரங்கம் என்று நினைத்துக்கொள்கிறேன். எல்லோரும் இணையத்தில் முன்பதிவு செய்து துண்டுத்தாளுடன் உள்ளே போகிறார்கள். இருளின் அழகிய பூரணம் அவர்களை விழுங்க, கதவு மூடிக்கொள்கிறது.

ஆசுவாசப்படுத்திக்கொண்டு கடைசித் தளம் செல்கிறேன். விதவிதமான உணவுச் சாலைகள். முழுக்கோழிகள் தோல் இழந்து வறுபடுகின்றன. பீட்ஸாக்களின் பலவிதங்கள். நூறு ரகக் காப்பிகள். பழச்சாறுகள். வட இந்திய உணவுகள். தென்னிந்திய சிற்றுணவுகள். மேற்கத்திய உணவு வகைகள். கோபுரத்து மாடங்கள்போல் அணிவகுக்கும் கடைகள்தோறும் விதவிதமான வாசனைகள். மக்கள் கூட்டம் சாப்பிட்டபடி பேசுகிறது. பேசியபடி சாப்பிடுகிறது.

குடும்பமாக யாரும் வருகிறார்களா என்று பார்க்கிறேன். தென்படவில்லை. ஆண்களும் பெண்களும் தனியாகவும் குடும்ப நிறுவனமாகப் பின்னாளில் ஆகக்கூடிய விதத்திலும் மட்டுமே வருகிறார்கள். கல்லூரி மாணவிகள் மொத்தமாக வருகிறார்கள். எஸ்கலேட்டர்களையும் உணவு மேசைகளையும் பிற கவுண்ட்டர்களையும் ஆக்கிரமித்துக்கொண்டு உரக்கச் சிரிக்கிறார்கள். அடிக்கடி செல்போனில் பேசுகிறார்கள். பறக்கிறதோ இல்லையோ, கூந்தலைக் கோதிக் கோதித் தள்ளிவிட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அடிக்கொருதரம் எக்ஸ்க்யூஸ் மீ என்கிறார்கள்.

எதற்கு என்று யாரிடமாவது ஒருமுறை கேட்டுவிட விரும்புகிறது மனம். அடக்கிக்கொள்கிறேன்.

சத்தமின்றி என் நகரம் வேறு முகம் கொள்ளத் தொடங்கியிருக்கிறது. கடற்கரைக்குப் போனபோது இது உறுதிப்பட்டது. பழைய கூட்டம் இப்போது இல்லை. இருபத்தியொன்று ஜியில் தாராளமாக அமர இடம் கிட்டுகிறது.
ஒன்று புரிந்துவிட்டது. ஷாப்பிங் மாலில் நான் கவனித்த மக்கள் யாரும் பெருங்கோடீஸ்வரர்களில்லை. வசதி மிக்கவர்கள்தான். ஆனாலும் அந்தப் பணக்கார மாலில் உள்ள பொருள்களை வெகு அநாயாசமாக வாங்கிக் குவிக்கும் தரத்தில் இருப்போரில்லை. பெரிதும் பார்க்க மட்டுமே வருகிறார்கள். சட்டென்று சில மணிப் பொழுதுகளேனும் இருப்பு மறந்து இளைப்பாறத்தான் வருகிறார்கள்.

படியேற முடியாது என்றில்லை. எஸ்கலேட்டர் இருந்தால் யாரும் தவிர்க்க விரும்புவதில்லை. ஏறுவதா பெரிது? அந்த அனுபவமல்லவா?

அடடே, மறந்துவிட்டேன். இருபத்தி ஒன்று ஜியும் முகம் மாறிவிட்டது. குளிர்சாதன வசதி. உறுத்தாத ஸ்பீக்கரில் பண்பலை இசை. இயந்திரம் கிழித்துத் தரும் இரண்டங்குல டிக்கெட். கால் நீட்ட வசதி. கய்தே, கஸ்மாலம் போன்ற பதப்பிரயோகங்களில்லாத கண்டக்டர். தொப்பியும் சீருடையும் அணிந்த ஓட்டுநர்.

மாற்றம் நல்லது. அதன் சகல அவஸ்தைகளுடனும் சேர்த்து. குளிர்சாதன இருபத்தி ஒன்று ஜியில் சென்னை நகரச் சாலையில் செல்வது இன்னோர் அனுபவம். முடிந்தால் வேறொரு சந்தர்ப்பத்தில் அது பற்றி எழுதலாம்.

இப்போதைக்கு ஷாப்பிங் மால் எஸ்கலேட்டரைவிட்டு இறங்க விரும்பவில்லை மனம்.

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி