ஜனவரி 1985 முதல் சென்னை நகரத்தின் ஒரே பேட்டையில் தொடர்ந்து வசித்து வருபவன் நான். மேம்பாலங்களுடனான எனது உறவு அன்றைய தினமே தொடங்கியது.
செங்கல்பட்டு மாவடத்தின் ஒரு சிறு கிராமத்திலிருந்து மூட்டை முடிச்சுகளுடன் நாங்கள் தாம்பரம் எல்லையைக் கடக்கவிருந்த சமயம் ஒரு மேம்பாலப் பணி நடந்துகொண்டிருந்தது. சிறிய மேம்பாலம்தான். ஆனால் சுமார் அரைமணி வழியில் காத்திருக்கவேண்டியிருந்தது. அதற்குமுன் ஒரு மேம்பாலம் எப்படி உருவாகிறது என்பதை நான் கண்டதில்லை என்பதால் அந்தக் காத்திருப்பு நேரம் சுவாரசியமானதாகவே இருந்தது.
பிறகு எங்கள் பேட்டையிலேயே ஒரு மேம்பாலத்துக்கான பணிகள் ஆரம்பமாயின. இன்னும் இரு மேம்பாலங்களுக்கான வேலைகள் விரைவில் தொடங்கும் என்று சொன்னார்கள். அமைதியான, நீள நீள செவ்வக வடிவிலான உப்பளங்களைத் தவிர அதற்குமுன் வேறெதையும் கண்டறியாதவனுக்கு ஒரு பெருநகரத்தின் வேகமும் நெரிசலும் முன்னேற்ற நடவடிக்கைகளும் பிறவும் மிகவுமே வியப்பளித்தன.
ஆவலுடன் என் பேட்டை மேம்பாலத்துக்காகக் காத்திருந்தேன். துரதிருஷ்டவசமாக அந்த மேம்பாலம் இறுதிவரை கட்டிமுடிக்கப்படவேயில்லை. இன்றைக்கு வரை சர் மார்ட்டிமர் வீலர் அகழ்ந்து காட்டிய மொஹஞ்சதாரோ போல மெலிந்தும் உதிர்ந்தும் உயர்ந்து நிற்கிறது. யாரும் ஏறிப்பார்க்க வழியில்லை. கால்களும் தலையும் வெட்டுப்பட்டு அந்தரத்தில் கிடக்கும் ஒரு கிழட்டு ராட்சசன் போல் கிடக்கிறது.
பிறகு மாநில அளவில் புகழ்பெற்றுவிட்ட எம்.ஐ.டி. மேம்பாலக் கட்டுமானப்பணி தொடங்கியது. சீனப் பெருஞ்சுவர் போல் மிக நீண்ட மேம்பாலம். குரோம்பேட்டையையும் சானடோரியத்தையும் ஒரு புறம்; குரோம்பேட்டையையும் சிட்லப்பாக்கத்தையும் இன்னொரு புறம் இணைக்கும் திட்டம்.
அந்தப் பணி நடைபெறத் தொடங்கியபோது யாருக்குமே அது முடியுமென்ற நம்பிக்கையில்லை. ஆண்டுக்கணக்கில் நீண்ட பணி. இடையில் அடிக்கடி நின்றுபோன பணி. ஒருமுறை நிறுத்தப்பட்டால், மீண்டும் தொடங்க எத்தனை காலம் ஆகுமென்றே சொல்லமுடியாது. எம்.ஐ.டி. கேட் என்ற ரயில்பாதைக் கடப்பு அந்தக் காலங்களில் ஒரு திருவிழாத் தலம் போல் காட்சியளிக்கும். சைக்கிள்களைத் தலைக்குமேல் தூக்கிக்கொண்டு கேட்டுக்குள் புகுந்தும் தாண்டிக்குதித்தும் கடப்பார்கள். மோட்டார் வாகனங்களில் செல்வோர், பத்து அல்லது பதினைந்து டிகிரி கோணத்தில் வாகனங்களைச் சரித்து மண்ணோடு மண்ணாகத் தேய்த்தபடி கேட்டுக்குள் நுழைத்துத் தானும் நுழைவார்கள். முதுகில் கீறும். முழங்கால் அடிபடும். அவசரத்தில் பின்னால் காத்திருப்பவர் தம்பங்குக்கு வாகனத்தால் முட்டுவார். திடீரென்று சண்டை பிறக்கும். சட்டையைப் பிடித்துக்கொள்வார்கள். எது குறித்தும் கவலைப்படாத வியாபாரிகள், கூடைகளால் இடித்துத் தள்ளியபடி முன்னேறுவார்கள். ரயில்வே ஊழியர், வண்டி வருகிறது என்று அறிவிக்க விசில் ஊதிக்கொண்டே இருப்பார். யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். பல சமயம் பயணிகளுக்காக ரயில்கள் நடுப்பாதையில் நின்று காத்திருந்து செல்லும்.
எம்.ஐ.டி. கேட்டிலிருந்து கிண்டியை அடைய அரைமணி நேரம் ஆகுமென்றால், அந்த கேட்டை அப்போது கடப்பதற்கும் அநேகமாக அதே அவகாசம் பிடிக்கும்.
இத்தனை சிரமங்களையும் தாண்டி, பல ஆண்டுகள் தாக்குப் பிடித்து இரண்டு வருடங்கள் முன்பு அந்த மேம்பாலப் பணி ஒருவழியாக நிறைவடைந்தது. [ முடிந்தபிறகும் திறப்புவிழாவுக்காகக் கொஞ்சகாலம் காத்திருந்தது.]
இன்றைக்கு அந்தக் கஷ்டங்கள் யாருக்கும் நினைவிருக்காது. மேம்பாலப் பயணம் அத்தனை சொகுசாக இருக்கிறது. தினசரி அதிகாலை பாலத்தின் மீதுதான் நடைப்பயிற்சி செய்கிறேன். குரோம்பேட்டையிலிருந்து சிட்லப்பாக்கத்துக்கு. மீண்டும் குரோம்பேட்டையிலிருந்து சானடோரியம் எல்லைக்கு. தலா இருமுறை ஏறி இறங்கினால் சரியாக ஐம்பது நிமிடங்கள் ஆகிறது. எனக்காகச் சென்னை மாநகராட்சி இத்தனை சிறப்பானதொரு மேம்பாலம் கட்டித்தரும் என்று கனவிலும் நினைத்ததில்லை.
மேம்பால மேயர் என்று புகழ்பெற்றுவிட்ட இன்றைய உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலின் மேயராக இருந்த காலத்தில் நகரமெங்கும் ஏராளமான மேம்பாலப் பணிகளை ஆரம்பித்தார். பின்னால் வரப்போகிற சுகத்துக்காக மக்கள் அப்போது கஷ்டம் சகித்துக் காத்திருந்தார்கள். ஒவ்வொரு மேம்பாலமாக முடிவடைகின்றன என்பது தெரிந்ததுமே காத்திருப்பதில் அர்த்தம் உண்டு என்பது புரிந்துவிடுகிறது.
விதிவிலக்காக மாட்டிக்கொண்டது கத்திப்பாரா மேம்பாலப் பணிகள்தான்.
கிண்டியிலிருந்து பறங்கிமலைப் பாதைக்கு ஒரு பாலம். கிண்டியிலிருந்து போரூர் பாதைக்கு ஒரு பாலம். அதே கிண்டியிலிருந்து ஜவாஹர்லால் நேரு சாலைக்கு ஒரு பாலம். தவிர இந்த மூன்று பாதைகளும் ஒன்றையொன்று தனித்தனியே இணைத்துக்கொள்வதற்கான குறுக்குப் பாலங்கள். சுருங்கச் சொல்வதென்றால், ஒன்பது வழி, மூன்று வாசல்கள்.
முதல் முதலில் தேசிய நெடுஞ்சாலைத் துறையின் பெயர்ப்பலகையைப் பொருத்தி, கிரமமாக நேரு சிலையைப் பெயர்த்து எடுத்து ஒரு ஓரத்தில் வைத்துவிட்டுப் பணிகள் தொடங்கப்பட்டபோது எல்லோரும் மகிழ்ச்சியடையவே செய்தார்கள். ஆனால் எதிர்பார்த்த வேகத்தில் பத்து சதவீதத்தைக்கூடத் தொடமுடியாமல் போனதன் காரணம் தெரியவில்லை. ஆண்டுக்கணக்கில் தினசரி கடும் போக்குவரத்து நெரிசல். குறிப்பாகக் காலை வேளைகளில். ஓரிடத்தில் வண்டிகள் நின்றுவிட்டால், திரும்பவும் எப்போது புறப்படும் என்று சொல்லவே முடியாது.
போதாக்குறைக்கு விமான நிலையத்துக்குச் செல்லும் – அங்கிருந்து நகருக்குள் வரும் வி.ஐ.பிக்களின் எண்ணிக்கையும் இந்தக் காலகட்டங்களில் அதிகரித்தது. அப்துல் கலாம் ஜனாதிபதியாக இருந்தபோது வார விடுமுறை தினங்களைக் கூட விட்டுவிடாமல் சென்னைக்கு வந்துகொண்டே இருந்தார். [அப்படி நேரில் வர இயலாத வார இறுதித் தினங்களில்தான் கவிதை எழுதியிருப்பார் என்று நினைக்கிறேன்.] ஊர்ப் பாசத்தைக் குறை சொல்வதற்கில்லை. ஆனால் ஒவ்வொருமுறையும் அவர்பொருட்டு அலுவலகத்துக்குத் தாமதமாகச் சென்று வாங்கிக் கட்டிக்கொண்ட மக்களின் எண்ணிக்கை எப்படியும் பல பத்தாயிரத்தைத் தொடக்கூடும். அவர் ஓய்வு பெற்றதற்காக யாராவது சந்தோஷப்பட்டிருப்பார்கள் என்றால் கிண்டிக்குத் தெற்கே வசிப்பவர்களாக மட்டுமே இருப்பார்கள்.
கலாமை மட்டும் சொல்வது பாவம். மாநில அரசியலில் சற்றே சூடு உண்டாகுமானால் உடனே யார் டெல்லிக்குப் போகிறார்கள் என்கிற கவலை வந்துவிடும், புறநகர்வாசிகளுக்கு. அவர்கள் புறப்படும் தினமெல்லாம் சாலை மறிக்கப்படும். திரும்ப வரும் தினங்களில் மீண்டும் மறிக்கப்படும். ஒரு கட்சிக்காரர் சென்று திரும்பினால், எதிர்க்கட்சியினர் சும்மா இருப்பார்களா? பாலமும் அரசியல்வாதிகளும் காலமெல்லாம் பிரச்னை.
தன் விதிக்குக் காத்திருக்கும் நூற்றுக்கிழவன் போல் கத்திப்பாராவில் நீண்டு நெளிந்து மல்லாந்து கிடக்கும் பாலம். ஒவ்வொரு வருடத் தொடக்கத்திலும் அடுத்த மூன்று மாதங்களில் திறக்கப்பட்டுவிடும் என்று அறிவித்துக்கொண்டே இருக்கிறார்கள். இந்த வருட ஜனவரி முதல் வாரத்திலும் ஓர் அறிவிப்பு வந்தது. மார்ச்சில் திறந்துவிடுவோம்.
இது மார்ச். இப்போது ஏப்ரல் அல்லது மே என்கிறார்கள். தினசரி பாலத்தடியில் நின்று தியானித்துச் செல்கிறவன் என்கிற தகுதியில் கண்டிப்பாக அது சாத்தியமில்லை என்று என்னால் உறுதிபடச் சொல்லமுடியும். NHAI (National Highway Authority of India) என்கிற பெயர்ப்பலகையை தினசரி பார்க்கும் மக்கள் பல்லுக்குள் அதனைத் தமிழில் கடித்துக் குதறிக்கொள்வதை மனச்செவியில் தவறாமல் கேட்கிறேன்.
ஒரு பெருநகரமாக அமைவதற்கான எவ்வித அடிப்படைத் தகுதிகளும் இல்லாத நகரம், சென்னை. மக்கள் தொகை அதிகரித்து, வாகனங்கள் பெருகி, போக்குவரத்து அதிகமாகி, நிறுவனங்களும் தொழில்பேட்டைகளும் கணக்கிலடங்காமல் போய், காலம் மாறிக்கொண்டே இருந்தாலும் நகர அடிப்படைகள் அப்படியேதான் இருக்கின்றன. குறுகிய சாலைகளும் இறுகிய ஆக்கிரமிப்புகளும். பெருமழையோ, சிறு தூறலோகூட வேண்டாம். யாராவது பத்துப்பேர் சேர்ந்து எச்சில் துப்பினால்கூட சாலைகள் குளமாகிவிடக்கூடிய அபாயம். பாதிச் சாலைகளை அடைத்து வானுயர வரவேற்பு வளைவுகளும் வாழ்த்த வயதின்றி வணங்கும் போஸ்டர்களும். ஒரு குப்பைமேடு கண்ணில் பட்டால்கூடக் கொடி நட்டு வேலியடித்துவிடும் கட்சிக்காரர்கள். மனிதர்களுக்குச் சமமாக, போஸ்டர்களை மென்றபடி நடுச்சாலையில் நடந்துபோகும் எருமைகள் மற்றும் பசுக்கள். எது குறித்தும் கவலையின்றி சிக்னல்களில் ஏகாந்தமாக வீற்றிருந்து அருள்பாலிக்கும் போக்குவரத்துக் காவலர்கள். அவர்களுக்குப் பக்கத் துணையாக ஒவ்வொரு முச்சந்திக்கும் முளைத்திருக்கும் தலைவர்களின் சிலைகள்.
யாரையுமே ஆனால் குறை சொல்வதற்கில்லை. எப்போதாவது தேர்தல் வந்து அல்லது தேர்தலுக்கான சூழல் வந்து பொதுப்பணிகள் வேகமெடுத்தால் மட்டுமே அடிப்படை வசதிகள் சற்று மேம்படும் என்பது மக்களுக்கும் பழகிவிட்டது. இந்தப் பாலங்கள் கட்டும் திட்டமும் அப்படியானதொரு தேர்தல் திருப்பணியாகத் தொடங்கப்பட்டதுதான். இப்போது தேர்தல் ஏதுமில்லையாதலால் பாலம் விரைந்து முடிவதற்கான அவசியமும் இல்லை.
எப்படியோ சகித்துக்கொண்டுதான் காலத்தைத் தள்ளிவந்திருக்கிறோம். இன்னும் கொஞ்சமும் தள்ளிவிட்டால் ஒருவழியாக கத்திப்பாரா பாலம் முடிவடைந்துவிடும். திறப்புவிழாவுக்காக மேலும் கொஞ்சம் காத்திருந்தால் தேர்தல் வந்துவிடும். பிறகு மேலும் பாலங்கள், மெட்ரோ ரயில்கள், குடிநீராகப் போகிற கடல் நீர் இன்னபிற. இப்போதே தி.நகர் உஸ்மான் சாலையில் ஒரு புதிய பாலத்துக்காகப் பாதிக் கிணறு தோண்டிவிட்டார்கள். பெரிய தைரியம்தான். ஒரு குச்சி நடுவதற்குக் குழி தோண்டினால்கூடப் பிரச்னையாகக்கூடிய இடம். அதனாலென்ன? நகரம் வளரவேண்டும். மக்கள் இன்றில்லாவிடினும் நாளை சுகப்படவேண்டும்.
மாநிலம் வளர்ச்சிப்பாதையில் போகிறதென்பதில் சந்தேகமில்லை. இத்தனை பாலங்கள் இருந்தாலும், இத்தனை காலத்தில் ஒருநாளேனும் தலைநகரத்து மக்கள் நேரத்துக்கு ஆபீஸ் போனவர்களில்லை என்பதிலும் சந்தேகமில்லை.
காலம் காலமாகக் கட்டேல போறவங்க
பாலம் கட்டுறாங்க பாத்தாயா? காலங்
காலீல எந்திரிச்சி கட்டுச் சோறெடுத்து
வேலைக்குப் போவாதே வீண்.
என்று தொடங்கி ஓர் அந்தாதி எழுதலாம். நாளை காலை எம்.ஐ.டி. பாலத்தில் நடைப்பயிற்சியின்போது முயற்சி செய்து பார்க்கிறேன்.