நேற்று மாலை சுமார் ஐந்து மணிக்கு நண்பர் ப்ரூனோ என் அலுவலகத்துக்கு வந்தார். கண்ணனுடன் அவருக்கு ஏதோ வேலை இருந்தது. நான் புறப்பட இருந்த சமயம். அமெரிக்க தூதரகத்தில் ஏதோ பிரச்னை; அண்ணாசாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் என்று சொன்னார். நான் வீட்டுக்குப் போகும் வழியில் அண்ணாசாலை அதிகம் வராது. மிஞ்சிப் போனால் முன்னூறு மீட்டர். எல்டாம்ஸ் சாலை சிக்னல் முதல் அறிவாலயம் வரை மட்டுமே. இடப்புறம் விஜயராகவாச்சாரி சாலையில் திரும்பிவிட்டால் என் வழி தனி வழி.
எனவே போக்குவரத்து நெரிசல் என்னை பாதிக்காது என்று நினைத்துப் புறப்பட்டேன்.
ஆனால் எல்டாம்ஸ் சாலையே நிரம்பியிருந்தது அப்போது. கஷ்டப்பட்டுத்தான் அண்ணாசாலையைத் தொட முடிந்தது. மேலும் கஷ்டப்பட்டே அறிவாலயம் வரை நகர முடிந்தது. விஜயராகவாச்சாரி சாலையில் திரும்பியபோது பக்கென்று இருந்தது. நிச்சயமாக அந்த ஒரு சாலையைக் கடக்க ஒரு மணி நேரம் ஆகிவிடும் என்று தோன்றியது. முழுதும் இரு சக்கர வாகனங்கள், பேருந்துகள், கார்கள்.
எனவே இஞ்சினை அணைத்துவிட்டு, அமெரிக்க தூதரகத்தில் என்ன பிரச்னை என்று அக்கம்பக்கத்தில் பேச ஆரம்பித்தார்கள். திருடன் புகுந்துவிட்டான் என்பது முதல் தீவிரவாதிகள் புகுந்துவிட்டார்கள் என்பதுவரை விதவிதமான யூகங்கள். ஆனால், தீவிரவாதிகள் புகுந்துவிட்டனர் என்பதை மட்டும் மக்கள் அத்தனை எளிதாக ஏற்கவில்லை. அதெல்லாம் சும்மா சார், இதென்ன பம்பாயா என்று கேட்டது ஒரு யூனிகான். தமிழ்நாடு, செம்மொழிப் பூங்காக்கள் நிறைந்த அமைதிப்பூங்காதான் என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை.
போக்குவரத்து வெகுநேரம் நகரவில்லை. ஊர்ந்தபடி ஒரு வழியாக வடக்கு உஸ்மான் ரோடு சந்திப்பை அடைந்தபோது மணி ஆறு நாற்பதாகியிருந்தது. என்னைப் போலவே பல்வேறு திருப்பங்களில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி, பல சந்துகளின்மூலம் அந்த இடத்துக்குக் கொண்டுவந்து சேர்க்கப்பட்ட பல நூறு இரு சக்கர வாகனாதிபதிகள் அங்கே கூடியிருந்தார்கள். தவிரவும் கார்கள், பேருந்துகள். எப்போதும்போல அந்த இடத்து சிக்னல் நேற்றும் இயங்கவில்லையாதலால், அந்த மும்முனைச் சந்திப்பு முற்றிலும் படுத்துவிட்டது. சாலையின் மூன்று புறங்களிலும் ஒரு வாகனம் கூட நகரமுடியாமல் அப்படியே நிற்கவேண்டியதாகிவிட்டது.
ஒரு போக்குவரத்துக் காவலரும் அங்கே இல்லை. பொறுமை மீறும் தருணம் நெருங்கிக்கொண்டிருந்ததை உணர முடிந்தது. எல்லோரும் ஹார்ன் அடிக்க ஆரம்பித்தார்கள். ஸ்கூட்டர்காரர்கள் கார்க்காரர்களைத் திட்ட, கார்க்காரர்கள் பஸ்காரர்களைத் திட்ட, பஸ் டிரைவர்கள், காலபைரவன்களாக, என்ன ஆனாலும் சரி என்று இஞ்சினை ஆன் செய்து நகர ஆரம்பித்தார்கள். இந்தப் பதற்றத்தில் பஸ்களின் ஓரத்தில் நின்றிருந்த இருசக்கர வாகனர்கள் நகரவேண்டியதாகி, அவர்கள் அடுத்தவர்கள் மீது மோத, ஆங்காங்கே சிறு சண்டைகள், குழப்பங்கள்.
நிச்சயமாக ஒரு பெரும் கைகலப்பு உருவாகும் சூழ்நிலை இருந்தது. எதிர்பாராவிதமாக யாரோ ஒரு நல்லவர் வடக்கு உஸ்மான் சாலையை இரண்டாகப் பிரிக்கும் செண்டர்மீடியேட்டர் கற்களில் சிலவற்றைப் பெயர்த்து ஓரம் போட, அதன் வழியே ஸ்கூட்டர்கள் நகர இடம் கிடைத்தது. சுமார் நூறு முதல் நூற்றைம்பது ஸ்கூட்டர்கள் நகர்ந்தபிறகு கார்களுக்கு இடம் கிடைத்தது. அதன்பிறகு பேருந்துகள்.
கோடம்பாக்கம் மேம்பாலம் இறங்கும்வரை நெரிசல் இருந்தபடியேதான் இருந்தது. அநேகமாக நுங்கம்பாக்கம் முதல் சைதாப்பேட்டை வரை அந்த வழியில் வரக்கூடிய அனைத்து பக்கவாட்டுப் பேட்டைவாசிகளும் இந்தப் பிரச்னைக்கு உள்ளாகியிருப்பார்கள். அவ்வண்ணமே எதிர்ப்புறவாசிகளும்.
இன்றைய செய்தித்தாளில் விவரம் வந்திருக்கிறது. அமெரிக்க தூதரகத்தில் தீவிரவாதிகள் தாக்கினால் எப்படி எதிர்கொள்வது என்பதற்காகக் காவல் துறை நடத்திய ஒத்திகை நாடகம். அதன் விளைவான போக்குவரத்து நெரிசல், அடிதடிகள்.
ஒரு பணி நாளில், அலுவலகம் விட்டு அனைவரும் வீடு செல்லும் நேரத்தில் இப்படிப்பட்ட திடீர் ஒத்திகைகள், சென்னை போன்ற சற்றும் ஒழுங்கற்ற ஒரு நகரத்தை எப்படி பாதிக்கும் என்பதை நேற்று நேரடியாகப் பார்த்தேன். இதில் எந்தத் தவறும் இல்லை, மக்கள் சகித்துக்கொண்டுதான் தீரவேண்டும் என்று கமிஷனர் பேசியிருக்கிறார்.
ஒரு வகையில் நியாயமே. ஆனால் ஒழுங்கான சாலைகள், ஒழுங்கான சிக்னல்கள், எல்லா சந்திப்புகளிலும் காவலர்கள் இருக்கும்பட்சத்தில் இப்படிப்பட்ட நெரிசல்கள் நிச்சயம் சாத்தியமில்லை. அமெரிக்க தூதரகத்தைக் காப்பாற்றுவதில் காட்டுகிற அக்கறையை சிக்னல் விளக்குகள் ஒழுங்காக எரிகிறதா என்று பார்ப்பதிலும் கமிஷனர் காட்டலாம். தப்பில்லை. அண்ணாசாலை ஒன்றைத் தவிர மற்ற அனைத்துக் கிளைச் சாலைகளும் சபரிமலைச் சாலைகள் மாதிரி இருப்பதை ஒழுங்கு செய்வதில் மாநகராட்சியுடன் இணைந்து தீவிரம் காட்டினால் அதிலும் தப்பில்லை. அதே அண்ணாசாலை தவிர மற்ற எந்த சந்திப்பிலும் உள்ள காவலர்கள் ஒரு நாளில் பெரும்பாலான நேரத்தை அருகே உள்ள டீக்கடைகளில் மட்டும் கழிப்பதைத் தவிர்க்க நடவடிக்கை எடுத்தாலும் தப்பில்லை.
விதி மீறல்களை மக்கள் விரும்பிச் செய்வதில்லை. நீடித்த அலுப்பு, வெறுப்பின் விளைவு நடவடிக்கையாக மட்டுமே இது பெரும்பாலும் செய்யப்படுகிறது. நேற்று பெயர்த்துக் கடாசப்பட்ட சாலைப் பிரிப்புக் கற்களைப் போல.
இரண்டு மணிநேரம், மாலை வேளையில் இப்படி பெட்ரோல் புகைக்கு நடுவே கமிஷனரோ, முதல்வரோ, மற்ற பெருங்குடி மக்களோ ஒருபோதும் அல்லாடப்போவதில்லை. கஷ்டமெல்லாம் ஓட்டுப்போடுகிறவர்களுக்கு மட்டுமே. அவர்களைக் கோபப்படாமல் இதற்கெல்லாம் ஒத்துழைக்கக் கோருவது எந்த வகையிலும் நியாயமானதல்ல. கமிஷனர் இந்த டிராஃபிக்கில் நின்று பார்த்தால் அவரும் சொல்வார். அமெரிக்க தூதரகத்தைத் தீவிரவாதிகள் தாக்கினால் என்ன? அமெரிக்காவே நாசமாய்ப் போனால்தான் என்ன என்று.
//கமிஷனர் இந்த டிராஃபிக்கில் நின்று பார்த்தால் அவரும் சொல்வார். அமெரிக்க தூதரகத்தைத் தீவிரவாதிகள் தாக்கினால் என்ன? அமெரிக்காவே நாசமாய்ப் போனால்தான் என்ன என்று.//
:-))
ஒருங்கிணைக்கப்பட்ட போக்குவரத்துக் கழகம் ஒன்றைத் துவங்கி இருக்கிறார்களாமே! அவர்கள் வேலை பார்க்க ஆரம்பிக்கட்டும். எல்லாம் சரியாகிவிடும்!
3:30க்கு வருவதாக சொல்லிவிட்டு 5:15க்கு நான் வந்ததற்கு கண்ணன் என் மேல் கடும் கடுப்பில் இருந்திருப்பார்
உங்கள் விளக்கத்திற்கு நன்றி 🙂 🙂
/// கமிஷனர் இந்த டிராஃபிக்கில் நின்று பார்த்தால் அவரும் சொல்வார். அமெரிக்க தூதரகத்தைத் தீவிரவாதிகள் தாக்கினால் என்ன? அமெரிக்காவே நாசமாய்ப் போனால்தான் என்ன என்று.///
இது ஒரு கோடி (தொட்டாச்சா?) சென்னைவாசிகளின் சார்பாக!
தப்பித் தவறி நிஜமாகவே தீவிரவாதிகள் அட்டாக் செய்தால், ‘ஒத்திகை எண் இரண்டு’ என்று நினைத்து, மக்கள் முதல் காவலர்கள் வரை அலட்சியமாக இருந்து விடுவார்களோ? டவுட்டு #
//அமெரிக்க தூதரகத்தைத் தீவிரவாதிகள் தாக்கினால் என்ன? அமெரிக்காவே நாசமாய்ப் போனால்தான் என்ன என்று//
முடியல… 🙂 :)))))
இதே போன்ற அனுபவம் சென்ற மாதம் 23-ஆம் தேதி மாலை, பூந்தமல்லி சாலையில் எனக்குக் கிடைத்தது. வெளிநாட்டில் இருந்து வந்திருந்த விருந்தினர்களை அழைத்துக் கொண்டு
சோளிங்கர் சென்று விட்டு காலையில் போன அம்பத்தூர் வழியில் திரும்பாமல்,
பூந்தமல்லி சாலை வழியாக முகப்பேர் செல்ல முடிவெடுத்தபோது விதி என்னைப் பார்த்து
நகைத்திருக்கும் என்று நினைகககிறேன். அங்குலம் அங்குலமாக வாகனங்கள் நகர்ந்து
கொண்டிருந்தபோது அடுத்த போக்குவரவு சமிக்ஞையில் சரியாகி விடும் என்று
நம்பிய எங்களுக்கு அல்வா !
பசி, தாகம், களைத்துப் போய் வீடு திரும்ப விரும்பும் அனைவரின் அவசரம் எல்லாவற்றையும் பார்க்க முடிந்தது. வாகனப் புகையில் இரண்டே கால் மணி நேரம்
சிக்கியதால் வந்த இருமல் இன்னமும் சரியாகவில்லை. இரவு எட்டே முக்காலுக்கு விமான நிலையத்தில் இருக்க வேண்டிய விருந்தினரை, எட்டே காலுக்குத்தான் வீட்டுக்கே
அழைத்து வர முடிந்தது. அவசரம் அவசரமாகப் புறப்பட்டு, அரைவயிறு சாப்பிட்டு
ஒன்பதரைக்கு ஒருவழியாய் அவரை விமான நிலையத்தில் இறக்கவிட்ட பிறகுதான்
நிம்மதிப் பெருமூச்சு விட்டேன்.
போக்குவரத்து நெரிசலுக்குக் காரணம் ? காங்கிரஸ் அரசாங்கத்தின் சாதனை விளக்க
ஊர்வலமாம். மூன்று தடங்கள் கொண்ட சாலையில், இரண்டு தடங்களை அலங்கார ஊர்திகள் அடைத்துக் கொள்ள, எஞ்சிய ஒரு தடத்தில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் !
எத்தனை பேருக்கு அன்று மருத்துவ உதவி கிடைக்காமல் போனதோ ?
எத்தனை ரயில்கள், விமானங்கள் தவற விடப்பட்டனவோ ? எவ்வளவு மனித நேரம் வீண் ?
கடவுளே ! இப்படிக் கூட பொறுப்பற்று நடந்து கொள்ள முடியுமா ?
சாமானிய மனிதர்களின் சிரமங்கள் ஒரு பொருட்டே இல்லையா இவர்களுக்கு ?
அப்படி high sensitive environment ஏன் சார் heart of the cityல இருக்கணும்? Just Drill exercise-கே இப்படி..Actual situationல…இப்படி போக்குவரத்து ஸ்தம்பிக்கலாமா? காவல்/ராணுவம்/ambulance- force movement எளிதாக இருக்க வேண்டும் இல்லையா?
மத்தபடி, நம்ம அரசாங்கம் என்னைக்கு பொது மக்களை மதிச்சு இருக்கு? நாம் என்றுமே second class citizenதான்…
இடம் வேறு. ஊர் வேறு. மற்றபடி பெரும்பாலான வார்த்தைகள் ஒன்றாகத்தான் இருக்கிறது. புழுதியே சுவாசமாய் புகையே வாழ்க்கையாய் வாழ்ந்து கொண்டுருக்கும் சூழ்நிலையில் உங்கள் கடைசி வாக்கியங்களில் குமுறியிருப்பதைப் போலவே எனக்கும் வேறு விதமாய் தோன்றியது. என்னைத்தாண்டி மாநகர தந்தை சென்ற போது?
ஒத்திகைகள் மிகவும் அவசியம். இங்கே மாதம் ஒருமுறை நாங்கள் அவசர கால நிலையை சமாளிக்க ஒத்திகை பார்க்க வேண்டும். ஒருமுறை வெள்ளப்பெருக்கென்றால், மற்றொருமுறை சில கட்டிடங்கள் தகரும். பிறிதொருமுறை ரேடியோகதிர்வீச்சு குண்டொன்று வெடிக்கும். முழுநாட்டளவில் நடக்கப்படும் இந்த ஒத்திகள் முடிந்தபின், என்ன குறை எங்கே குறை என்று கண்டறிந்து அதை மறுமுறை குறைக்க முயற்சி நடக்கும். இதில் உளவுத்துறை, காவலர், EMT, பொதுநலத்துறை, அவசர கால கவனிப்பு துறை, FEMA எல்லோரும் பங்குபெற்றாலும் மிகவும் இரகசியமாக நடக்கும். சில பொதுமக்கள் இதில் victim ஆக பங்கும் பெறுவார்கள். ஆனால் இந்த பயிற்சி நடப்போதூ நடந்ததோ மக்களுக்கு தெரியாமலேயே நடக்கும்.அந்த அளவு யாருடையை தினசரி வாழ்க்கையும் கெடுக்காமல் இருக்க முயற்சித்து திட்டமிட்டு செயலாற்றுவோம். கனடா, பிரிட்டன் உள்ளிட்ட மூன்று நாடுகள் சேர்ந்து நடத்திய ஒத்திகையிலும் நான் பங்கு கொண்டிருக்கிறேன் (planner ஆக). ஒத்திகையும் தவறுகள் களைவதும் மிக அவசியம். அப்படி இருக்கும் போதே காட்ரீனா வந்த போது நிறைய குறைபாடுகள்.
பத்மா, தகவலுக்கு நன்றி. //யாருடையை தினசரி வாழ்க்கையும் கெடுக்காமல் இருக்க முயற்சித்து திட்டமிட்டு // இதைத்தான் சொல்கிறேன். இங்கே இது ஒன்றுதான் கிடையாது.
Sir!
Thanks for sharing your experience and voicing objective comments.
A Eye-opening judgement – given way back !!
http://www.easydriveforum.com/f241-jaipur/hc-traffic-disruptions-only-for-prez-vice-president-and-pm-350.html
Can you please guide us,if the same judgement be implemented in tamil nadu and whole of india on the basis of right to equality or some such law of constitution?We can lodge a PIL, citing this judgement as precedense?
It would surely be revolutionary !!
Thanks,
Venkat