Fitna – தேவையற்ற அச்சுறுத்தல்

குமுதம் ரிப்போர்ட்டரில் கடந்த 198 இதழ்களாக வெளிவந்துகொண்டிருக்கும் என்னுடைய ‘மாயவலை’ தொடரின் இறுதி அத்தியாயங்களை எழுதிக்கொண்டிருந்த வேளையில், நெதர்லந்த் அரசியல்வாதி கீர்ட் வைல்டர்ஸின் (Geert Wilders) ஃபித்னா (Fitna) என்னும் குறும்படத்தைக் காண நேர்ந்தது.

பரம சுதந்தர மனோபாவம் மற்றும் வாழ்க்கை முறைக்குப் பெயர் பெற்ற நெதர்லந்தில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை சமீப காலங்களில் அதிகரிக்கத் தொடங்கியிருப்பது பற்றிய அவரது கவலையை இந்தப் படம் பிரதிபலிக்கிறது.

மார்ச் 27ம் தேதி இந்தக் குறும்படம் வெளியானதிலிருந்து உலகம் முழுவதும் கடுமையான எதிர்ப்புக்கும் விவாதங்களுக்கும் உள்ளாகியிருக்கிறது. இஸ்லாத்துக்கு எதிராக இதுவரை வெளியான அனைத்து ஆவணங்களையும் ஒரு தட்டில் வைத்து எதிரே இந்தப் படத்தை வைத்தால் கண்டிப்பாக இது ஓரடி இறங்கித்தான் இருக்கும். அதில் சந்தேகமில்லை.

ஆனால் எந்தப் புனிதப் பசுவின் தோலில் இருந்தும் சில உண்ணிகளைப் பொறுக்கியெடுத்துத் தொகுத்துவிட முடியும் என்கிற எளிய சித்தாந்தத்தை இந்தப் படம் முற்றிலுமாக மறந்து அல்லது மறைத்துவிடுகிறது.

அமெரிக்க உலக வர்த்தக மையக் கட்டடங்கள் மீதான அல் காயிதாவின் தாக்குதல் காட்சியுடன் தொடங்கும் இந்தப் படம் அடுத்தடுத்துக் காட்டும் வன்முறை மேவிய காட்சிகளைக் காட்டிலும் அந்தச் சம்பவங்களுக்கு வலு சேர்க்கும் விதத்தில் சில சூராக்களைப் பொறுக்கியெடுத்துப் பின்னணியில் ஒலிக்கவிட்டிருப்பதில் இயக்குநரின் நோக்கம் மிகத் தெளிவாகிறது.

மாற்று மத தூஷணை என்பது ஹிந்து மதம் உள்பட அனைத்து மதங்களிலும் காலம் காலமாக இருந்து வருவதுதான்.

தர்க்கச் சமணரும் சாக்கியப் பேய்களும் தாழ்சடையோன் சொல்
கற்ற சோம்பரும் சூனியவாதரும் நான்மறையும்
நிற்கக் குறும்புசெய் நீசரும் மாண்டனர் – என்று ராமானுஜ நூற்றந்தாதி ஆயுதமேந்துவதோ,

மற்றுமோர் தெய்வம் தன்னை
உண்டென நினைதல் பெம்மான்
கற்றிலார் அவரைக் கண்டால்
அம்ம நாம் அஞ்சும்மாரெ – என்று புற்றில் வாழ் அரவத்தைவிட பயங்கர ஜந்துவாகப் பிற கடவுள்களை வணங்குவோரைச் சுட்டிக்காட்டி மாணிக்கவாசகர் கலவரப் பீதியைத் தூண்டுவதோ நமக்கு ஒரு பொருட்டில்லையென்றால் மேற்படி சூராக்களையும் நாம் பெரிய அளவில் பொருட்படுத்தத் தேவையில்லை.

ஆதியில் மதங்கள் உருவாகி அவற்றை market செய்யவேண்டியிருந்தபோது ‘இது நீல நிற பாட்டில் தேங்காய் எண்ணெயைவிடச் சிறந்தது’ என்ற டிவி விளம்பரங்களையொத்த உத்திகளை மதத் தலைவர்கள் பின்பற்றினார்கள். யாரும் குறை சொல்லவில்லை. காலப்போக்கில் நமது வாழ்க்கையில் மதத்துக்கு நாமளிக்கும் முக்கியத்துவத்துக்கு ஏற்ப இந்தக் காழ்ப்புகளை நாம் உள்வாங்கும் விதம் அமையலாயிற்று.

நவீன உலகில் மதங்களுக்கே பெரிய முக்கியத்துவம் கிடையாது. இத்தகைய படங்கள், வலிந்து கலவர உணர்வைத் தூண்டுவது ஒன்றையே நோக்கமாகக் கொண்டிருக்கின்றனவே தவிர இதன் செய்தி என்று நல்லவிதமாக யாருக்கும் எதுவும் போய்ச்சேரும் சாத்தியம் இருப்பதாக நான் கருதவில்லை.

இதன்மூலம் இஸ்லாமியச் சகோதரர்கள் பொங்கியெழலாம். நாலு இடங்களில் தீ வைக்கலாம். யாரையாவது பிடித்துக் கொல்லலாம். ஊர்வலம் போகலாம். கடையடைப்புச் செய்யலாம். ஆஹா, பார் நான் சொன்னேனல்லவா? இவர்கள் இனமே பயங்கரவாத இனம் என்று எதிர்த்தரப்பு முத்திரைத் தாளில் எழுதிக் கையெழுத்திட்டு மகிழலாம்.

சமீபத்தில் என் நண்பர் ஒருவர் ‘உலகிலுள்ள 42 முக்கியமான தீவிரவாத இயக்கங்களுள் 26 இயக்கங்கள் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவை. இதுபற்றி நீ என்ன சொல்கிறாய்?’ என்று கேட்டார்.

அந்தளவுக்கு அவர்கள் அடக்குமுறைக்கும் ஆதிக்கத்துக்கும் உட்பட்டிருக்கிறார்கள் என்பது தவிர எனக்கு வேறு காரணம் தெரியவில்லை. மத்தியக் கிழக்கைச் சேர்ந்த அனைத்து இயக்கங்களும் அமெரிக்க – இஸ்ரேலிய ஆக்கிரமிப்புகளின் விளைவாக உதித்தவையே. வேறு ஏதாவது ஒரு காரணம் இருந்தால் யாரேனும் சுட்டிக்காட்டலாம்.

இதனாலெல்லாம் இந்த இயக்கங்கள் புரியும் கொடுஞ்செயல்கள் நியாயமாகிவிடாது என்பதையும் வலியுறுத்த விரும்புகிறேன். நமது தேசத்தின் அரசியல் நம்மை பாதிப்பதற்கும் இஸ்லாமிய தேசங்களின் இன்றைய அரசியல் சூழ்நிலைகள் அவர்களை பாதிப்பதற்கும் அடிப்படையில் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. முப்பது ஆண்டுகளாக, பிரதி சனி ஞாயிறு விடுமுறை கூட இல்லாமல் யுத்தம் நிகழ்ந்துகொண்டிருக்கும் ஆப்கனிஸ்தானிலிருந்து – ஆட்சி மாறிய உடனே – அமைதிப்புறாக்கள் பறக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது அபத்தம். இன்றைக்கு இராக்கில் அமெரிக்கா புரிந்திருக்கும் திருவிளையாடல்களின் விளைவு இன்னும் பத்தாண்டுகளுக்கேனும் அந்த தேசத்தை மேலும்மேலும் உருக்குலைத்தவண்ணம்தான் இருக்கும்.

ஆதிக்க சக்திகளின் பகடைகளாகிவிட்ட மக்கள் நிறைந்த சமூகம் எப்போதும் தீவிரக் குழுக்களை உற்பத்தி செய்துகொண்டேதான் இருந்துவந்திருக்கிறது. காலம் காலமாக. எதைச் சொல்லியும் நியாயப்படுத்த முடியாத அவர்களுடைய வன்முறை எத்தனை நிஜமோ, அத்தனை நிஜம் அதற்கான சூழலை உருவாக்குவோரின் தடித்தனத்தையும் மாற்ற முடியாமலேயே இருக்கிறது என்பது.

நிலைமை இவ்வாறிருக்க, 9/11 காட்சித் துணுக்குகளையும் பிணைக்கைதி ஒருவரை உட்காரவைத்துத் தலை[யைச்]சீவும் காட்சியையும் முஸ்லிம் சிறுமி ஒருத்தியின் உதடுகள் யூதர்களைக் குரங்கு என்று வருணிக்கிற காட்சியையும் இம்மாதிரி வேறு சிலவற்றையும் தொகுத்துப் போட்டு, பின்னணியில் சில சூராக்களை ஓடவிட்டு அபாய எச்சரிக்கை தருவது அருவருப்பாகவும் அபாயகரமாகவும் உள்ளது.

உண்மையில் 9/11ஐவிட இந்தத் துண்டுப்படம் அபாயகரமானது என்று எனக்குத் தோன்றுகிறது. உயிரைப் பறிக்கிற தீவிரவாதத்தைக் காட்டிலும் இந்த அறிவுத் தீவிரவாதத்தின் [Intellectual Terrorism] வீரியம் அதிகம்.

தனது பத்தாண்டுகால நாடாளுமன்ற வாழ்வில் கீர்ட் வைல்டர்ஸ் இம்மாதிரியான பெரும்புயல் ஒன்றை எழுப்பியதில்லை. ஆனால் இஸ்லாத்துக்கு எதிராகத் தொடர்ந்து பேசியும் எழுதியும் வந்திருக்கிறார். நெதர்லந்தில் பிரபலமான வைல்டர்ஸை இந்தத் துணுக்குப் படம் சர்வதேசப் பிரபலமாக்கியிருக்கிறது.

இதைத் தவிர அவரது படம் வேறென்ன சாதிக்கும் என்று தெரியவில்லை.

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி