ஒரு மனிதன் எதற்கெல்லாம் கவலைப்படுவான் என்பதற்குக் கணக்கே கிடையாது. ஒவ்வொருத்தனது பிரத்தியேகக் கவலையானது அடுத்தவருக்கு சமயத்தில் வினோதமாக இருக்கும். புரியாது. கிறுக்குப்பயல் என்று நினைத்துவிடுவார்கள். இதெல்லாம் கருதிக் கருதிக் கவலைப்படுகிற ஜென்மம் என்று சொல்லிவிட்டுக் கடந்துவிடுகிற கெட்ட பேருலகில் வசிக்கவே நாம் விதிக்கப்பட்டிருக்கிறோம். என்ன செய்ய? வாழ்ந்துதான் தீரவேண்டும்.
இந்தக் கவலையைக் கேளுங்கள். நான் எழுத்தூழியம் செய்கிற ஜாதி. இது உங்களுக்குத் தெரியும். என் தலைமுறையிலும் சரி, எனக்கு முந்தைய தலைமுறையிலும் சரி. இந்தத் துறையில் விற்பன்னர்களாக இருக்கும் பலபேர் சமைப்பதில் ஆர்வமும் தீவிரமும் திறமையும் கொண்டவர்கள். வீட்டு வேலைகளை இழுத்துப் போட்டுக்கொண்டு செய்கிறவர்கள். ஒரு சாதாரண மாடர்ன் பிரெட்டில் என்னென்ன விதமான பலகாரங்கள் செய்ய முடியும் என்பது குறித்து ஜெயமோகன் ஒரு காவியமே எழுதியிருக்கிறார். சமைப்பது குறித்தும் சாப்பிடுவது குறித்தும் சாரு நிவேதிதா எழுதியிருக்கும் வியாசங்களைப் படித்தீர்களென்றால் நாமெல்லாம் எதற்கு வாழ்கிறோம் என்றே நினைக்கத் தோன்றிவிடும். அடை தெரியுமல்லவா? சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் ஓர் அடை எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு மிகத் துல்லியமான இலக்கணம் வகுத்தவர் மறைந்த மாபெரும் படைப்பாளி லா.ச. ராமாமிருதம். அவரது சிந்தா நதியில் ஓர் அத்தியாயத்தில் தரமிகு அடையைப் பற்றி விவரிப்பார் பாருங்கள், படிக்கும்போதே பத்து அடை சாப்பிட்ட உணர்வு வரும். பிறகு உண்ணக்கிடைக்கும் சுமார் ரக அடைகளை ஏறெடுத்தும் பார்க்கத் தோன்றாது.
நல்ல கலைஞன் சமைக்கப்படுவது அடுப்படியில்தானோ என்னமோ. நெருப்பிலிடாமல் புடம் போடுதலேது?
சமைக்கலாமென்று களமிறங்கிய முதல் நாள் எனக்கு மேற்படி உன்னதக் கலைஞர்களெல்லாம் நினைவுக்கு வந்தார்கள். படைப்பின் நேர்த்தி என்பது ஒன்றுதான். கலை வெற்றி என்பதும் ஒன்றேதான். அதன் ஸ்தூல, சூட்சும வடிவங்கள் வேறு வேறானாலும் ஆன்மா வேறு வேறல்ல.
பனீரைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தேன். பக்கத்து அடுப்பில் கொதி நீரில் அந்தத் தக்காளி வேறு வெந்துகொண்டிருக்கிறது. பதம் பார்த்து இறக்கியாக வேண்டும். அன்றைய என் நோக்கம் என்னவென்றால், என் மனமே போன்ற தூய உணவுப் பொருளான பனீரில் வேகவைத்த தக்காளியொன்றை மசித்துப் போட்டுக் கலப்பதன்மூலம் அதற்கு இளஞ்சிவப்பு வண்ணமும் மெல்லிய புளிப்புச் சுவையும் தருவது. புளிப்புச் சுவைக்குப் புளியை அண்டுவது ரசனைக் குறைவு சார்ந்த நடவடிக்கை என்பது என் அபிப்பிராயம். தக்காளி அல்லது எலுமிச்சை போதும். தக்காளியிலும் நாட்டுத் தக்காளிக்குப் புளிப்புச் சுவை சற்று அதிகம்தான். ஆனாலும் அது விதைகள் உள்ளது. விதையுள்ள தக்காளி அத்தனை உத்தமமில்லை என்பதால் நான் பெங்களூர் தக்காளியையே தேர்ந்தெடுத்தேன்.
வாணலியில் நெய் விட்டுத் தாளித்த பிறகு பனீரை உதிர்த்துப் போட்டேன். ஒரு சிட்டிகை சீரகப் பொடி. ஒரு சிட்டிகை தனியாப் பொடி. கொஞ்சம் காஷ்மீரத்து மிளகாய்த் தூள். அடுத்தபடி உப்பு. ஒரு பாக்கெட் பனீருக்கு எவ்வளவு உப்புப் போட வேண்டும்? இதற்குத் தனியே எந்தக் கோனாரும் குறிப்பு எழுதி வைத்ததில்லை. சமையல் புஸ்தக மாமிகளெல்லாம் நைசாக நழுவியோடுகிற இடமும் இதுவே. உப்பு தேவைக்கேற்ப என்று சொல்லிவிடுவார்கள். அந்தத் தேவையின் அளவுதான் என்ன என்று கேட்டால் ஒரு பயல் பதில் சொல்ல மாட்டான்.
ஒரு வார்த்தை என் மனைவியிடம் கேட்டால் சொல்லிவிடுவார். அல்லது அவரே வந்து உப்பு மட்டும் போட்டுக் கொடுத்துவிட்டும் போவார். ஆனால் புரொபசரைப் பரீட்சை எழுத வைத்த வசூல்ராஜாவாக அல்லவா நான் சரித்திரத்தில் அறியப்பட வேண்டிவரும்?
அந்த அவமானத்துக்கு ஆளாகிவிடக் கூடாது என்று தோன்றியது. யோசித்தேன். உப்பைத் தீர்மானிப்பது பண்டமல்ல. உள்ளுணர்வு என்று தோன்றியது. இது படைப்பின் கலையம்சத்தைத் தீர்மானிக்கும் காரணியைப் போன்றது. சூட்சும சங்கதி. ஸ்பூனால் எடுக்கவே கூடாத பண்டம் உப்புதான் என்று தீர்மானமாகப் பட்டது. விரல்கள்தாம் சரியான கருவி.
எனவே மூன்று விரல்களைப் பயன்படுத்தி உப்பை எடுத்தேன். வாணலியில் நிறைந்திருக்கும் பனீர்க் குவியலின் மேற்புறம் முழுதும் படுகிற வண்ணம் தூறல் போல் உப்பைத் தூவினேன். முப்பது பனீர் அணுக்களுக்கு ஓர் உப்பு அணு என்று என்னமோ ஒரு குத்துமதிப்புக் கணக்கு மனத்துக்குள் ஓடியது. சரியாக இருக்கும் என்றுதான் தோன்றியது. போட்டாயிற்று. இனிமேல் விதி விட்ட வழி.
மறுபுறம் நறுக்கி வைத்த வெங்காயத்தையும் குடை மிளகாயையும் அவற்றின் பச்சை வாசனை போகிறவரை வதக்கி எடுத்து இதன் தலையில் போட்டேன். மொத்தமாக ஒரு கிளறு. இப்போதுதான் வெந்த தக்காளி. அதைக் கரண்டியால் மசித்துக் கொஞ்சம் நீர் சேர்த்து தக்காளி சாஸ் போல ஆக்கினேன். திடீரென சந்தேகம் வந்துவிட்டது. தக்காளியில் தண்ணீர் சேர்த்துவிட்டால் புளிப்புச் சுவை குறைந்துவிடுமோ?
அதையும் பார்த்துவிடலாம் என்று மேற்படி தக்காளி சாஸைப் பனீரில் கொட்டிச் சேர்த்துக் கிளறத் தொடங்கினேன். பனீரானது தனது சகல சகாய பரிவாரங்களுடன் சேர்ந்து தளதளவென ஒரு நூதன உருமாற்றம் எய்திக்கொண்டிருந்தது.
இப்போது எனக்கு இன்னொரு கவலை வந்தது. தாளிப்பில் இஞ்சி சேர்த்திருந்தேன். வண்ணமயமான காஷ்மீரத்து மிளகாய்த் தூளையும் ஒரு ஸ்பூன் போட்டிருந்தேன். இதற்குமேல் பச்சை மிளகாய் என்கிற பொருளுக்கு இந்த உணவில் இடமுண்டா? அதையும் போட்டுத் தொலைத்தால் உண்ண முடியாத அளவுக்குக் காரமாகிவிட்டால் என்ன செய்வது?
யோசனையுடன் அடுப்படிக்கு மேலிருந்து அலமாரிகளை ஒரு நோட்டம் விட்டபோது நான் மறந்திருந்த இன்னொரு பொருள் கண்ணில் பட்டது. மஞ்சள் தூள். அடக்கடவுளே. இதை எப்போது சேர்க்கவேண்டும் அல்லது சேர்க்கத்தான் வேண்டுமா?
நான் பனீரைப் பார்த்தேன். அது இளஞ்சிவப்புக் கிச்சடி பதத்துக்கு வந்திருந்தது. இதற்குமேல் இதில் மஞ்சள் சேர்த்தால் இலக்கணப்படி அது இன்னும் அடர் சிவப்புக்குப் போகவேண்டும். அது வேண்டாம் என்று நினைத்தேன். மஞ்சளில்லாமல் செய்து பார்த்தால்தான் என்ன?
எனவே மஞ்சளைத் தவிர்த்தேன். ஒரு கேரட், அரை மூடி தேங்காயைத் துருவி வைத்துக்கொண்டேன். உப்புமா செய்கிறபோது கேரட், பீன்ஸ் வகையறாக்களையெல்லாம் நறுக்கிப் போடுகிற என் மனைவியின் பாணி உண்டாக்கியிருந்த தாக்கத்தின் விளைவு. அவரைப் போலவே நானும் நறுக்கிப் போட்டால் என் தனித்துவம் என்னாவது? அதனால்தான் பச்சையாகத் துருவிப் போடுதல். இதன்மூலம் ஒரு நூதன ருசி கிடைக்குமென்றால் அதை ஏன் மறுக்க வேண்டும்?
பனீரைத் தொட்டுப் பார்த்தேன். பதம் கூடி வந்துவிட்டதாகவே தோன்றியது. கொஞ்சம் கொத்துமல்லி, கருவேப்பிலை, புதினா மேற்படி கேரட், தேங்காய்த் துருவலுடன் உதிர்த்துப் போட்டேன். மேலுக்கு ஒரு ஸ்பூன் நெய்யையும் ஊற்றி, அடுப்பை அணைத்து கப்பென்று வாணலியை மூடி வைத்தேன். இதுதான். இவ்வளவுதான். இது பனீர் உப்புமா அல்ல. பனீர்க் கிச்சடியும் அல்ல. வேறெதுவும் அல்ல. புதிதாக இந்த உலகுக்குள் அடியெடுத்து வைத்திருக்கும் ஓர் உணவுக் குழந்தை. இன்னும் பெயரிடப்படாத குழந்தை.
ஒருவேளை நன்றாக இருந்துவிட்டால் என் படைப்பூக்கம் மேலும் வீரியம் கொள்ளும். விதவிதமாக யோசித்து, ரக ரகமாகச் செய்து பார்க்கலாம். ஆனால் இல்லத்து கநாசுவின் கணிப்பில் இது கலைத்தோல்வி எய்திவிட்டால் என்ன செய்வது? சிறு குழப்பத்தோடுதான் என் மனைவியை அழைத்தேன்.
ப்ரியே, நான் பாண்டத்தைச் செய்த குயவனல்லன். பண்டத்தைச் செய்த கலைஞன். வந்து பரிசோதித்துப் பார்.
[ருசிக்கலாம்]