ருசியியல் – 36

நீரும் நெருப்பும் இன்றிச் சமைப்பதில் வல்லவனாக அறியப்பட்ட நளன், தனது அடுத்தடுத்த பிறப்புகளில் என்னவாக இருந்தான் என்று எனக்குத் தெரியாது. ஆனால் ஜான் லெனன் தனது உலகப் புகழ்பெற்ற ‘இமேஜின்’ ஆல்பத்தை வெளியிட்ட தினத்தன்று நிகழ்ந்த அவனது பிறப்பொன்றில் அவன் பாராகவனாக அறியப்படுவான் என்று சுவேத வராக கல்ப காலத் தொடக்கத்தில் செதுக்கப்பட்ட குகைக் கல்வெட்டு ஒன்று கூறுகிறது – என்றால் உடனே சிரிக்கப்படாது. இப்படியெல்லாம் நினைத்துக்கொண்டுதான் நான் சமையல் களத்தில் இறங்க ஆயத்தமானேன்.

சும்மா நானும் சமைத்தேன் என்று என்னத்தையாவது கிண்டிக் கிளறி வைப்பதில் என்ன பயன்? சராசரிகளின் உற்பத்திகளுக்கும் ஒரு கலைஞனின் படைப்புக்கும் குறைந்த பட்சம் ஐந்தரை வித்தியாசங்களாவது அவசியம் தேவை. இல்லாவிட்டால் சரித்திரத்தின் சமச்சீர் கல்விப் புத்தகங்களில்கூட இடம் கிடைக்காது போய்விடும்.

நான் சமைக்கிறேன் என்று சொன்னதும் எனது உள்துறை மற்றும் வீட்டு வசதித்துறை அமைச்சர் மிகவும் கலவரமானார். சமையல் எத்தனை கண்ணராவியாக இருந்தாலும் பரவாயில்லை; ஆனால் கிச்சனை சர்வநாசப்படுத்திவிடுவாயே என்கிற அவரது விசாரம் என்னைத் தீவிரமாகச் சீண்டியது. ஒரு பயிற்சி நிலைக் கலைஞனாகத்தான் நான் சமையல் கட்டுக்குள் நுழையவிருந்தேன் என்றபோதும் மகத்தான சாதனைகள் இதில் எனக்கு எளிதாகவே இருக்கும் என்று தோன்றியது. ஆர்மோனியம் வாசிப்பவனுக்கு சிந்தசைசர் எளிது. பியானோ எளிது. புல்லாங்குழல்க்காரனுக்கு க்ளாரினட் எளிது. ஒரு மிருதங்க வித்வானால் ஒப்பேற்றும் அளவுக்கேனும் தபேலா வாசிக்க முடியாதா! கலை விரல் நுனியில் இருந்தால் தகர டப்பாவில்கூடத் தாளம் தப்பாது வாசித்துவிட முடியும்.

இப்படியெல்லாம் நினைத்துக்கொண்டேனே தவிர, சொல்லவில்லை. எனது முதல் முயற்சியின் மகத்தான வெற்றிக்குப் பிறகு பறைசாற்றிக்கொள்ள முடிவு செய்து வேலையை ஆரம்பித்தேன்.

நான் திட்டமிட்டிருந்தது பனீரில் ஓர் எளிய உணவு. மிக நீண்டதொரு இலக்கியப் பயணத்தை ஒரு பக்கச் சிறுகதையில் ஆரம்பிப்பது போல. என் நோக்கம் இதுதான். ஒரு பொரியலைப் போன்ற தோற்றத்தில், சிறப்பான சிற்றுண்டித் தரத்தில், முழு உணவாக அது இருக்க வேண்டும். எடுத்த உடனே நாலைந்து ரகங்கள் காட்டி அச்சுறுத்த விரும்பாததன் காரணம், நமக்கு அத்தனை சாமர்த்தியம் கூடுமா என்கிற ஐயம் மட்டுமே. ஆனால் இதை வெளியே சொல்ல முடியாதல்லவா? எனவே நாலைந்து உணவின் தேவைகளை ஒரே உணவுக்குள் அடக்க, குறுகத் தரித்த குறள் வழியைப் பின்பற்ற முடிவு செய்தேன்.

பிளாஸ்டிக்கால் ஆன நீண்ட அட்டை ஒன்றை எடுத்து வைத்துக்கொண்டு அதில் ஒரு முழு வெங்காயம், தக்காளி, குடை மிளகாயை நறுக்கத் தொடங்கினேன்.

காய்கறிகளை நறுக்குவதில் வெளிப்படுகிற நேர்த்திதான் ஒரு தரமான சமையலின் முதல் வெற்றி சூத்திரமாகிறது என்பது என் எண்ணம். எனவே ஒரு குகைச் சிற்ப வல்லுநரின் தீவிர நேர்த்தியுடன் நறுக்கத் தொடங்கினேன். ஆனால் வெங்காயம் ஒரு வில்லன். மேலுக்குத் தொட்டுப் பார்க்க மொழுங்கென்று கன்னம் போலிருந்தாலும் கத்தியை வைத்தாலே கந்தரகோலமாகிவிடுகிறது.

அடக்கடவுளே. இதென்ன விபரீதம்! என்னால் ஏன் கத்தியை வெங்காயத்தின்மீது வைத்து ஸ்கேல் பிடித்த நேர்த்தியில் ஒரு கோடு போட முடியவில்லை? நாலைந்து தரம் இழுத்துப் பார்த்தும் கத்தியானது கோணிக்கொண்டு எங்கோ சென்றது. நான் நறுக்கிய லட்சணம் எனக்கே சகிக்கவில்லை.

என் மனைவி வெங்காயம் நறுக்கும்போது அருகே அமர்ந்து பார்த்திருக்கிறேன். அவரது பார்வை வெங்காயத்தின்மீது இருக்காது. எதிரே இருக்கும் என்னைத்தான் பார்ப்பார். பெரும்பாலும் குற்றப்பத்திரிகை வாசிக்கிற போலிஸ்காரப் பார்வையும் மொழியும்தான் தென்படும் என்றாலும் குற்றச்சாட்டுகளில் அவர் காட்டுகிற அழுத்தமும் தீர்மானமும் வெங்காயம் நறுக்கும் கரங்களிலும் இருக்கும். வறக் வறக்கென்று நறுக்கித் தள்ளும் வேகத்தில் வையம் தகளியாய், வார்கடலே நெய்யாக, வெய்ய கதிரோன் விளக்கொளியாய் அவரது விழிகள் சுடர்விடும். எனது பிழைகளைச் சுட்டிக்காட்டி முடிப்பதன் முன்னால் வெங்காயமானது நறுக்கப்பட்டிருக்கும். ஒரு மில்லி மீட்டர் பிசகும் இல்லாமல் அனைத்து இழைகளும் ஒரே அளவில், ஒரே உயர அகலத்தில் வந்து விழுந்திருக்கும்.

ஒருவேளை யாரையாவது கரித்துக்கொட்டிக்கொண்டே நறுக்கினால்தான், நறுக்கல் பதம் நன்கு வரும்போலிருக்கிறது என்று எண்ணிய கணத்தில், தொலைக்காட்சியில் நான் அவ்வப்போது பார்க்க நேரிடும் வெங்கடேஷ் பட் நினைவுக்கு வந்தார். சமகாலத்தில் சமையல் கலையில் யாரையாவது எனது போட்டியாளராகக் கொள்ள வேண்டுமென்றால் அது அவராகத்தான் இருக்க வேண்டும் என்று எப்போதும் எண்ணிக்கொள்வேன். தோழர் வெங்கடேஷ் பட், காய் நறுக்கும் கலையில் என் மனைவியின் நேரெதிர் துருவ வாசி. சும்மாவேனும் சிரித்துக்கொண்டு, ஏதாவது ஜோக்கடித்துக்கொண்டு, தன் கலை நேர்த்தியைத் தானே வியந்துகொண்டு, சர்வ அலட்சியமாக அவர் நறுக்கிக் கடாசும் வித்தையைக் கண்கொட்டாமல் பார்த்து ரசிப்பது எனக்கு மிகவும் பிடித்தமான பொழுதுபோக்கு.

நான் அவரைப் போலவும் முயற்சி செய்து பார்த்தேன். என்னால் கரித்துக்கொட்டவும் முடிந்தது, ஜோக்கடிக்கவும் முடிந்ததே தவிர வெங்காயம் மட்டும் ஒழுங்காக நறுக்க வரவில்லை. சட்டென்று யோசித்து ஒரு முடிவுக்கு வந்தேன். ஒரு சிற்பியாக என்னை ஏன் நான் கருதிக்கொள்ள வேண்டும்? ஒரு நவீன ஓவியனின் லாகவத்தில் எனது வெளிப்பாட்டு முறையை அமைத்துக்கொள்வதே நல்லது என்று தோன்றியது.

அதுதான் தரிசனம் என்பது. அடுத்தக் கணம் எனது கரங்கள் களிநடம் புரியத் தொடங்கின. ஒரு கொத்து பரோட்டா மாஸ்டரின் லாகவத்தில் வெங்காயத்தைக் குத்திக் குதறி உருவற்ற பெருவெளியில் பிடித்துத் தள்ளினேன். பார்த்துக்கொண்டிருந்த என் பத்தினி தெய்வத்துக்கு பயம் வந்துவிட்டது. அந்த ஒரு வெங்காயத்துடன் நான் நிகழ்த்திய துவந்த யுத்தத்தின் இறுதியில் வெற்றி எனக்கே என்றாலும் என் தலைமுடி மூஞ்சியெல்லாம் எண் திசையும் சிதறி, கண்முழி வெளியே வந்து, நாக்குத் தள்ளிவிட்டிருந்தது.

எனக்கு என்ன ஆகிவிட்டது என்று அவர் கேட்க வாயெடுத்த சமயம் நான் தக்காளியை அடுத்து எடுத்திருந்தேன். மென்மையும் வழவழப்பும் வாளிப்பும் மிக்க பழம். இதில் கத்தியை வைப்பது கலையாகுமா? ஒரு கலைஞன் அதைச் செய்வானா? அப்புறம் அவன் எப்படிக் கலைஞனாக இருக்க முடியும்? மென்மையை ஆராதிப்பதல்லவா கலை மனம் விரும்பக்கூடியது?

யோசித்தேன். ம்ஹும். நான் தக்காளியை நறுக்கப் போவதில்லை என்று அறிவித்தேன்.

பிறகு?

மனத்துக்குள் ஒரு திட்டம் உதித்திருந்தது. சரி, பார்க்கலாம் என்று குடை மிளகாயைக் கொஞ்சம்போல் கீறி, பல துண்டுகளாக்கிக் கொண்டு அடுப்படிக்கு வந்தேன். தேவை ஒரு வாணலி. தாளிக்க நாலு சாமக்கிரியைகள். ஒரு பாத்திரத்தில் நீர் ஊற்றி அடுப்பில் ஏற்றினேன். அது கொதிக்கத் தொடங்கிய நேரம் தக்காளியைத் தூக்கி அதில் போட்டேன். அடுப்பின் இன்னொரு பிரிவில் வாணலியை ஏற்றி இரண்டு ஸ்பூன் நெய் விட்டேன். முன்னதாக ஃப்ரிட்ஜிலிருந்து பனீர் பாக்கெட்டை எடுத்து வெளியே வைத்திருந்தேன். தொலைக்காட்சி விளம்பரங்களில் வரும் பெண்கள் எப்படித்தான் பனீரை அளந்த சதுரத் துண்டுகளாக வெட்டுகிறார்களோ தெரியவில்லை. அது என்ன மைதா மாவு கேக்கா? எதற்கு அங்கே ஒரு அலங்காரம்? ஒரு படைப்பில் அலங்காரமென்பது இலைமறை காயாக இடைபோலத் தெரியவேண்டுமே தவிர, இந்தா பார் நான் இருக்கிறேன் என்று கழட்டிக் கடாசிக் காட்டக்கூடாது.

நிற்க. இது நீண்ட கதை. அடுத்தப் பகுதியை அடுத்த வாரம் சொல்கிறேன். காத்திருப்பது உமது தலைவிதி.

[ருசிக்கலாம்]
Share

Discover more from Pa Raghavan

Subscribe to get the latest posts sent to your email.

Add comment

By Para

தொகுப்பு

Random Posts

Recent Posts

Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

error: Content is protected !!

Discover more from Pa Raghavan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading