ருசியியல் – 35

திடீரென்று ஒருநாள் சமைத்துப் பார்த்தால் என்னவென்று தோன்றியது. ருசி இயலில் சாப்பிடுவது என்ற ஒன்று மட்டுமே அதுவரை நான் அறிந்தது. சமைப்பது என்றொரு முன் தயாரிப்பு உண்டு என்று தெரியும். ஆனால் அதெல்லாம் கலைஞனின் பணியல்ல என்று சாய்ஸில் விட்டிருந்தேன். எம்பெருமான் என்ன நினைத்தானோ, போன வருஷம் இதே செப்டெம்பரில் திருப்பூரில் நடைபெற்ற பேலியோ மாநாட்டுக்கு என்னை அழைத்துச் சென்று ஒரு நாள் பூரா தங்கவைத்தான். அங்கே யாரும் எனக்கு சமைக்க சொல்லிக் கொடுக்கவில்லைதான். ஆனாலும் ‘சமைத்துப் பார்!’ என்று மானசீக மீனாட்சியம்மாள் உத்தரவிட்டதன் பேரில் திரும்பி வந்ததும் என் திருப்பணிகளை ஆரம்பித்தேன்.

இந்த கவிதை எழுதுவது, மூன்று மாதங்களுக்கொரு முறை ஆயிரம் பக்க அளவில் அல்லது ஆயிரம் ரூபாய் அளவில் ஹார்ட் பவுண்டு நாவல் ரிலீஸ் செய்வது, ஹார்பிக் போட்டு டாய்லெட் கழுவுவது, வீடு பெருக்கி சுத்தம் செய்வது, பாத்திரம் தேய்ப்பது, சுருக்கமில்லாமல் துணி மடிப்பது, பிழையில்லாமல் டைப்படிப்பது, மேலே சிந்திக்கொள்ளாமல் காப்பி குடிப்பது, பிசிறில்லாமல், ரத்த சேதாரமில்லாமல் சவரம் செய்வது, சொத்தையில்லாமல் கறிகாய் வாங்குவது இதெல்லாம் கலையின் பல்வேறு எளிய வெளிப்பாட்டு வடிவங்கள். சமைப்பதும் இவற்றுள் ஒன்று.

ஆனால் நமது மங்கையர் திலகங்கள் அதை ஒரு ராக்கெட் விஞ்ஞானம் போன்ற சிரம சாத்திய சாதனையாகவே உணரவைத்து, அமைதி காக்க வைத்திருக்கிறார்கள். இது பல நூற்றாண்டுக் காலமாக நடந்து வருவது. வீட்டுச் சாப்பாட்டில் என்னவாவது ஒரு சிறு குறைபாடு சொல்லிப் பாருங்கள்? உடனே ஆழிப் பேரலை மாதிரி ஒரு தாக்குதல் எழுந்து வரும். ‘பண்ணித்தான் பாரேன். அப்ப தெரியும் லச்சணம்.’

இது ஏதடா, முன்னப்பின்ன அறிமுகமில்லாத இட்சிணியிடம் சிக்கி நசுங்கிவிடப் போகிறோமே என்று பயந்து பதுங்கி, ‘நான் அதுக்கு சொல்லலம்மா..’ என்று ஆரம்பித்து சமரச சன்மார்க்க சங்கத்துக்கு சந்தா கட்டிவிடுவோம். ஆனால், அத்தனை அச்சப்படத் தேவையில்லை என்று தோன்றியது. இலக்கியத் தரமாக சமைப்பது ஒன்றும் அத்தனை பாடு படுத்தாது என்று உள்ளுணர்வு சொன்னது. அட, படுதோல்வி கண்டால்தான் என்ன? மாபெரும் கலைஞர்களின் தோல்விப் படைப்புகளும் சரித்திரத்தில் தொடர்ந்து செருப்படி வாங்கியே சாகாவரம் பெறுவதில்லையா? சங்கதி என்னவெனில், சமைக்கக் கற்பது இரண்டாம் பட்சம். தொடங்குவதற்கு முன்னாலேயே நம்மை ஒரு கலைஞனாக உணரவேண்டுமென்பதே அடிப்படை.

நான் பிறப்பதற்குப் ஏழரை நாள் முன்னாலிருந்தே அப்படித்தான் என்பதால் மேற்படி திடீர் முடிவும், விளைவான முயற்சிகளும் எனக்கு சிரமமாக இருக்கவில்லை.

ஆனால் ஒரு சமையல், சுமாருக்குச் சற்று மேம்பட்ட தரத்திலாவது அமையவேண்டுமானால் அதற்குப் பின்வரும் குறைந்தபட்சத் தகுதிகள் கலைஞனுக்கு இருக்க வேண்டும்:

1. காய்கறிகளை ஒரு செண்டிமீட்டர் தொடங்கி, முக்கால் இஞ்ச் வரையிலான தேவைப்படும் அளவுகளில் சரியாக வெட்டத் தெரிந்திருப்பது. பீன்ஸை நீங்கள் பத்தை பத்தையாக நறுக்கினாலோ, முருங்கைக் காயைப் பொடிப்பொடியாகத் திருத்தினாலோ முடிந்தது கதை.

2. அடிப்படை தாளிப்புப் பொருள்கள் நான்கு வகைப்படும். அவையாவன: கடுகு, சீரகம், கடலை / உளுத்தம்பருப்பு, பெருங்காயம். எல்லா பதார்த்தங்களுக்கும் இந்த நான்கையும் கொட்டிக் கிளறுவது அடாது. எதற்கு எது போதும், எவ்வளவு போதும் என்று உள்ளுணர்வுக்குத் தெரிந்திருக்க வேண்டும்.

3. பச்சை மிளகாய், சிவப்பு குண்டு மிளகாய், இஞ்சி. இந்த மூன்றும்தான் காரத்தின் அதிதேவதைகள். இவற்றை, சம்சார வாழ்வைக் கையாள்வது போலவே லாகவமாகக் கையாளத் தெரிந்திருப்பது அவசியம்.

4. உப்பு. ருசியின் அதிதேவதை இது. மூக்குப் பொடி போடுகிறவர்களை இதற்கு முன்னுதாரணமாகக் கொள்ளவும். இரு விரல்களைப் பயன்படுத்தி அவர்கள் டப்பாவுக்குள் இருந்து எடுக்கிற அளவு ரொம்ப முக்கியம். பொடி போடுவதன் கலைத்தரம் என்பது லேசாகக் கண் கலங்குவதில் தெரியும். அதே மாதிரிதான் சமைக்கும்போது உப்பை எடுப்பதும். உங்களுக்கு ஸ்பூன் வசதியா, கையால் எடுப்பது வசதியா என்பது உங்கள் சௌகரியம். அது கையால் எழுதுவது, கம்ப்யூட்டரில் எழுதுவதைப் போன்றதுதான். ஆனால் எடுக்கிற கணத்தில் அளவை மனமானது தீர்மானிக்க வேண்டும். இதற்கு கவனக் குவிப்பு அவசியம். தரிசனம் அவசியம். தியானம் முக்கியம். சொற்களைக் காதில் போட்டுத் தட்டிப்பார்த்து எழுதுவேன் என்று லாசரா ஒரு சமயம் சொன்னார். அந்த மாதிரி உப்பை சிந்தனையில் இட்டு அளவு பார்த்த பின்பே கொதிபடு பொருளில் சேர்க்க வேண்டும். [இங்கேதான் கலைஞனுக்கு வேலை.]

5. சமைப்பதன் ஆகப்பெரிய சூட்சுமம், கரண்டி கையாள்வது. எதை எவ்வளவு கிளற வேண்டும், எத்தனை நேரம் வதக்க, வறுக்க வேண்டும் என்று அறிந்திருப்பது. ஒரு கத்திரிக்காய் பொரியலைப் போட்டுப் புரட்டிக்கொண்டே இருந்தால் அது முனியதரன் பொங்கல் பதத்துக்குப் போய்விடும். ரசம் வைக்கிறபோது கரண்டிப் பயன்பாடே இருக்கக்கூடாது. இதுவே ஒரு உப்புமாவையோ, கேசரியையோ போதிய அளவுக்குக் கிளறாது விட்டால் உண்ண நாராசமாயிருக்கும்.

6. ஆர்டரிங் அண்ட் ஃபார்மட்டிங். எதற்குப் பின் எது என்கிற சூட்சுமம். சப்ஜெக்ட் வாரியாகப் புத்தக அலமாரியை அடுக்கி ஒழுங்கு செய்வது போன்றது இது. எல்லா உணவுக்கும் உப்பு, காரம், புளிப்பு, வாசனை தேவைப்படும். இதற்கான சாமக்கிரியைகளை எந்த வரிசையில் சேர்ப்பது என்பது ரொம்ப முக்கியம்.

7. மேற்படி கலைக்கூறுகள் சற்று முன்னப்பின்ன இருக்குமானால், சமைத்து முடித்ததும் செய்கிற அலங்கார ஜோடனையில் அதை மறைத்துவிடுகிற திறமை வேண்டும்.

மேற்படி ஏழு பொருத்தங்களும் எனக்கு ஏராளமாக இருப்பதாக எனது உள்ளுணர்வு சொன்னபடியால், சமைக்கலாம் என்று முடிவு செய்து களத்தில் இறங்கினேன். இந்தத் தொடரின் ஆரம்ப அத்தியாயம் ஒன்றில் சொன்னபடி, கடைக்குப் போய் என் பிரத்தியேகக் கத்தி கபடாக்களையும், இன்றுவரை என்றுமே அணியாத ஏப்ரன் என்கிற மேல் வஸ்திரத்தையும் வாங்கி வந்து வைத்துவிட்டு ஒரு நல்ல நாள் பார்த்து என் பரிசோதனைகளை ஆரம்பித்தேன்.

இந்தத் தொடரின் அடுத்த ஓரிரு அத்தியாயங்களில் என்னுடைய சமையல் முயற்சிகளைச் சற்று விரிவாக விவரிக்க இருக்கிறேன். கொஞ்சம் களேபரமாக இருந்தாலும் ருசி வேட்கை ஒரு மனுஷனை எம்மாதிரியான இசகுபிசகு எல்லைகளுக்கு இட்டுச் செல்லும் என்பதைப் புரிந்துகொள்ள அது கொஞ்சம் உதவக்கூடும்.

உணவின் ருசி என்பது வாழ்வின் ருசியை நிகர்த்ததுதான். ஆனால் சமைப்பதன் ருசி அப்படியல்ல. அது வாழ்வின் குரூரமான கூறுகளை மட்டுமே தேடிப் பொறுக்கிக் கோக்கிற கோக்குமாக்குத்தனத்தை நிகர்த்தது.

இது சமைக்க ஆரம்பித்த பிறகுதான் எனக்குப் புரிந்தது.

[ருசிக்கலாம்..]
Share

Add comment

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter