ருசியியல் – 34

என் சிறு வயதுகளில் நான் மிக அதிகம் வெறுத்த பண்டமாக வடைகறி ஏன் இருந்தது என்பதைச் சொல்வதற்கு முன்னால் ராமசாமி ஐயங்கார் எனக்குச் செய்த துரோகத்தைப் பற்றிச் சொல்ல வேண்டும். இந்த ராமசாமி ஐயங்காரை உங்களுக்குத் தெரியாது. இருபதாம் நூற்றாண்டின் எண்பதாவது வருடங்கள் வரைக்கும் சென்னை சைதாப்பேட்டையில் இவர் ஒரு முக்கியப் புள்ளி. தொளதொளத்த ஜிப்பாவும் எப்போதும் தாளமிடும் விரல்களும் பட்டணம் பொடி வாசனையுமாகப் பெருமாள் கோயில் தெருவில் அவரைக் காணலாம். வீட்டு வாசலில் ஒரு சாய்வு நாற்காலி போட்டு அமர்ந்திருப்பார். போகிற வருகிறவர்களையெல்லாம் இழுத்து வைத்து உலக விஷயம் பேசுவார். பழங்கால நினைவுகளையெல்லாம் சுருக்கம் நீக்கி விரித்து வைத்துக்கொண்டு மணிக்கணக்கில் விவரித்துக்கொண்டிருப்பார். அப்படி அவர் சொன்ன கதைகளுள் எனக்கு இன்றும் மறக்காத ஒரு கதை, அவர் பாரதியாருக்கு பக்கோடா வாங்கிக் கொடுத்தது.

பாரதியாரின் நண்பர் பரலி சு. நெல்லையப்பர் சைதாப்பேட்டைக்காரர். ராமசாமி ஐயங்காரின் இளவயதில் அவருக்கும் தெரிந்தவராக இருந்திருக்க வேண்டும். ஆனால், அதனாலேயே பாரதியாரையும் அவருக்குத் தெரிந்திருக்கும் என்று நம்ப எனக்குச் சிரமமாக இருந்தது.

‘டேய், நான் சத்தியம் பேசுறவண்டா! கவிஞர், நெல்லையப்பன பாக்க வருவாரு இங்க. அப்பத்தான் எனக்கும் பழக்கம். சீனன் கடை பக்கோடான்னா அவருக்கு ரொம்பப் பிடிக்கும். எத்தன தடவ நான் கூட்டிட்டுப் போய் வாங்கிக் குடுத்திருக்கேன் தெரியுமா? நெல்லையப்பன் இருந்தா சொல்லுவான். பாவி, அவனும் செத்துத் தொலைச்சிட்டான்!’

பாரதியாரும் செத்துப் போய், பரலி நெல்லையப்பரும் செத்துப் போய், ராமசாமி ஐயங்காரும் செத்துப் போய்விட்ட காலத்தில் இதை யாரிடம் போய் விசாரிப்பது? பாரதி சரித்திரம் எழுதிய வ.ராவோ, சீனி விசுவநாதனோ மேற்படி சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சம்பவத்தை எங்கும் குறிப்பிட்டிருக்கவில்லை என்பதால் அதை ஒரு மாய யதார்த்தச் சம்பவம் என்றே எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஆனால் ஒன்று சொல்லவேண்டும். அவர் பாரதியாருக்கு பக்கோடா வாங்கிக் கொடுத்தது வேண்டுமானால் சந்தேகத்துக்கிடமான விஷயமே தவிர, என் தம்பிக்கு வாரம் தோறும் வடைகறி வாங்கிக் கொடுத்தது யாராலும் மறுக்க முடியாத உண்மை. அவர் சைதாப்பேட்டை மாரி ஓட்டலுக்கு வாழ்நாள் சந்தா செலுத்தியிருந்த மனிதர். நினைத்துக்கொண்டால் கிளம்பிவிடுவார். காலைப் பொழுதென்றால் இரண்டு இட்லி வடைகறி. மாலை என்றால் ஆனியன் ரோஸ்ட், வடைகறி. இரவென்றால் சப்பாத்தி வடைகறி. மெயின் டிஷ் மாறுமே தவிர, சைட் டிஷ் மாறாது. அவரது ரத்தமானது சிவப்பணுக்கள், வெள்ளை அணுக்கள் தவிர, வடைகறி அணுக்களாலும் ஆனது.

நிற்க. அது இங்கே முக்கியமில்லை. என் தம்பிக்கு அவர் வடைகறி ருசியை ஊட்டியதும் முக்கியமில்லை. அவனைப் போலவே நானும் அவருக்கு ஒரு பேரன் என்றபோதும் ஒருநாளும் அவர் என்னை மாரி ஓட்டலுக்கு அழைத்துச் சென்று வடைகறி வாங்கித் தந்ததில்லை என்பதே முக்கியம்.

ராமசாமி ஐயங்காருக்கு மொத்தமாக எட்டு வாரிசுகளும் சுமார் இருபது இருபத்தி ஐந்து பேரன் பேத்திகளும் உண்டு. ஆனால் என் தம்பிக்கு மட்டும்தான் வடைகறி யோகம் இருந்தது. மாரி ஓட்டல் வடைகறி. அதைச் சாப்பிட்டுவிட்டு வந்து அதன் ருசியைப் பற்றி அவன் விவரிக்கும்போதெல்லாம் எனக்கு ராமசாமி ஐயங்கார் மீது கட்டுக்கடங்காத வெறுப்பும் கோபமும் வரும். சகோதரர்களுக்கிடையே கேவலம் ஒரு வடைகறியை வைத்துப் பிரிவினை வளர்க்கிற மனிதர் என்றே அந்நாளில் அவரை நான் நினைத்தேன்.

பிறகு புரிந்தது. அவரது பொருளாதார நிலைமைக்கு அன்று ஒரு பேரனை மகிழ்விக்கும் சக்தி மட்டுமே இருந்திருக்கிறது. உள்ளவர்களிலேயே சிறியவனாகப் பார்த்துத் தேர்ந்தெடுத்திருக்கிறார். இது புரிந்த பிறகுதான் எனக்கு என் தாத்தா மீதிருந்த கோபமும், வடைகறி மீதிருந்த விரோதமும் அகன்றன. ஏதோ ஒரு நல்ல நாளில் நானும் அந்த ஓட்டலுக்குச் சென்று வடைகறி ஆர்டர் செய்து உண்டு பார்த்தேன். சந்தேகமில்லை. ராமசாமி ஐயங்கார் ஒரு சிறந்த ரசனைக்காரர்தான். சென்னை நகரின் புராதன, பாரம்பரிய உணவினங்களுள் வடைகறியை அடித்துக்கொள்ள இன்னொன்றில்லை. குறிப்பாக மாரி ஓட்டல் வடைகறி.

வடைகறி என்றால் மீந்த வடையில் செய்வது என்பது ரசனையற்றவர்களின் வழிமுறை. உண்மையில் வடைகறி என்பது வடையைக் காட்டிலும் அக்கறை கோரும் பதார்த்தம். கடலைப் பருப்பு மட்டுமல்ல. அதை அரைக்கும்போது பிடி பட்டாணி மாவு சேர்த்து அரைக்க வேண்டும். வடைகறியின் ஒரிஜினல் ருசி என்பது கடலை – பட்டாணி மாவுக் கலவைக்குள் அடங்கியிருப்பது. அந்த விகிதாசாரம் மிகச் சில சமையல் கலைஞர்களுக்கு மட்டுமே தெரிந்தது. திருப்பதி லட்டு ஃபார்முலா மாதிரி.

இப்போதெல்லாம் உணவகங்களில் வடைகறிக்குப் பொரித்த வடை பயன்படுத்தப்படுவதில்லை. மாவை பக்கோடா பிடிப்பது போல வடிவற்ற உருண்டையாகப் பிடித்து ஆவியில் வேகவைத்து எடுத்துவிடுகிறார்கள். பிறகு வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு வகையறாக்களைப் போட்டு வதக்கி, இதை அதன்மீது கொட்டிக் கவிழ்த்து சேர்த்துக் கிளறி, வாசனைக்கு சோம்பு, பட்டை, இலவங்கம் சேர்த்தால் முடிந்தது என்று சொல்லிவிடுகிறார்கள். இது மகா பாவம். சென்னையின் பாரம்பரியச் சின்னங்களுள் ஒன்றான வடைகறிக்குச் செய்யும் மகத்தான துரோகம்.

அரைத்த கடலைப் பருப்பு – பட்டாணி மாவுக் கலவையை சிறு சிறு போண்டாக்களாக எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுப்பதே உண்மையான வடைகறி பதத்துக்கு உதவும். முக்கால்வாசி வெந்ததுமே எடுத்துவிட வேண்டும் என்பது முக்கியம். அதே போல, இந்த முக்கால் வெந்த போண்டாக்களை மசாலாக் கலவையில் போட்டுக் கிளறும்போது, சோம்பு வாசனையை மீறி வடை வாசனையொன்று காற்று வழி நாசியில் சென்று ஏறும். அந்தக் கணத்தில் கிளறுவதை நிறுத்திவிட்டு அடுப்பை அணைத்துவிட வேண்டும்.

நேற்றைய தி இந்துவில் இந்த வடைகறியைப் பற்றி யாரோ ஒருவரி சொல்லியிருந்ததைக் கண்டதும் இந்த நினைப்பெல்லாம் அடக்க மாட்டாமல் பீறிட்டுவிட்டது.

இந்தக் கட்டுரையில் முதலில் குறிப்பிட்ட ராமசாமி ஐயங்கார் செத்துப் போய் பல வருடங்களாகிவிட்டன. சைதாப்பேட்டையோடு எனக்கிருந்த உறவு அதன்பின் மெல்ல மெல்ல நைந்துபோகத் தொடங்கியது. கடந்த பத்துப் பதினைந்து வருடங்களில் நாலைந்து முறை போயிருப்பேனோ என்னமோ. ஆனால் அந்த சைதாப்பேட்டை வடைகறி மட்டும் நினைவோடு இணைந்துவிட்ட ஒன்றாகிப் போனது.

நான் புருஷ லட்சண உத்தியோகம் என்று ஒன்று பார்த்துக்கொண்டிருந்த காலத்தில் சைதாப்பேட்டையில் எனக்கு சம்பத் என்ற நண்பர் ஒருவர் இருந்தார். என்னோடு பணியாற்றிக்கொண்டிருந்தவர். அவரது புண்ணியத்தில் சில நாள் எனக்கு மாரி ஓட்டல் வடைகறி கிடைத்திருக்கிறது. மயிலாப்பூர் மாமி மெஸ்ஸில் இருந்து பொங்கல் வாங்கி வைத்துக்கொண்டு மாரி ஓட்டல் வடைகறியோடு சேர்த்து ருசித்திருக்கிறேன். ஒரு சமயம் ரத்னா கஃபே வடைகறிக்கும் சைதாப்பேட்டை வடைகறிக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளைக் கண்டறிய இரண்டையும் ஒன்றாக வாங்கி அடுத்தடுத்து உண்டு பார்த்து இரண்டு நாள் இந்திரியக் கதறல் உற்சவம் நடத்தியிருக்கிறேன்.

காலப் போக்கில் என் ருசியும் ரசனைகளும் இடம் பெயர்ந்து எங்கெங்கோ நகர்ந்துவிட்டன. இப்போது வடைகறி மீது பெரிய பிரியமெல்லாம் இல்லை. ஆனால் நினைக்கும்போது நாவூறும் பண்டமாகத்தான் இன்னும் அது இருக்கிறது.

[ருசிக்கலாம்]
Share

Add comment

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி