ருசியியல் – 33

என்ன பேசிக்கொண்டிருந்தோம்? ஆம், அந்தக் கையேந்தி விருந்து.

ரசனை மிக்க அந்தத் தயாரிப்பாளர் அன்றைய விருந்தின் மெனுவை மிகச் சிறப்பாகத் திட்டமிட்டிருந்தார். எல்லா கையேந்தி பார்ட்டிகளிலும் எப்போதும் இடம் பிடிக்கும் ஐட்டங்களாக அல்லாமல் புது விதமாக அவர் யோசித்திருக்கிறார் என்பது புரிந்தது.

அன்று அங்கே சூப் இல்லை. மாறாக இரண்டு இஞ்ச் உயரமுள்ள கண்ணாடிக் குப்பிகளில் பச்சை, ஆரஞ்சு, வெளிர் மஞ்சள் நிறங்களில் மூன்று பானங்கள் இருந்தன. அதில்தான் தொடங்கவேண்டும். ஒன்று கொத்துமல்லிச் சாறு. இன்னொன்று தக்காளிச் சாறு. அந்த மஞ்சள் நிற ஜூஸ் என்னவென்று இன்றுவரை எனக்குத் தெரியாது. ஆனால் அதில் இஞ்சி இருந்தது. அது நினைவிருக்கிறது.

நான் ஒரு பீங்கான் தட்டை எடுத்துக்கொண்டேன். அணிவகுப்பு வரிசையில் நின்றுகொண்டேன். எடுத்து உண்ண உதவும் கத்தி, கபடாக்களில் தலா ஒன்று எடுத்து வைத்துக்கொண்டேன். சூப்பை எதிர்பார்த்துப் போன இடத்தில் மேற்படி கண்ணாடிக் குப்பிகள் மூன்றை எடுத்துத் தட்டில் வைத்துவிட, அது கால்வாசி இடத்தை அடைத்துக்கொண்டது. என்ன செய்வதென்று புரியவில்லை. நகர்ந்து சென்று அதைக் குடித்து முடித்துவிட்டு மீண்டும் வந்து வரிசையில் நிற்கலாம் என்றால், வரிசை மிகவும் நீளமாக இருந்தது. பார்ட்டி வரிசைகளில் பொதுவாகத் துண்டு போட்டு இடம் பிடிப்பது நாகரிகமில்லை என்பதால் கைவிளக்கேந்திய காரிகை போல அந்தக் குப்பிகள் வைத்த தட்டை அலேக்காக ஏந்தியபடியே அடுத்த இடம் நகர்ந்தேன்.

சீருடைப் பணியாளர் சட்டென்று என் தட்டில் இரண்டு வீச்சு பரோட்டாக்களை எடுத்து வைத்தார். ஒரு காலத்தில் எனக்கு ரொம்பப் பிடித்த உணவு அது. வீச்சு பரோட்டாவுக்குக் குருமாவைக் காட்டிலும் புதினா சட்னிதான் சரியான ஜோடி. சட்னியில் அதை இரண்டு நிமிடம் ஊறவைத்து உண்டால் பிரமாதமாக இருக்கும். எனவே நண்பரே, இந்த மெனுவில் சட்னி இருக்கிறதா?

அதோ இருக்கிறது என்று அடுத்த மூலையைக் காட்டினார் அந்த வெண்ணுடை வேந்தர். சரி, வரிசையில் போயே எடுத்துக்கொள்ளலாம் என்று அங்கிருந்து அடுத்தக் கட்டத்துக்கு நகர்ந்தேன்.

இங்கே ஒரே மாதிரி நிறத்தில் நான்கைந்து காய்கறி, கூட்டு வகையறாக்கள் இருந்தன. அவற்றில் எது குருமா என்று கேட்டு, அது வேண்டாம் என்று சொல்வதற்குள் சிப்பந்தி சிகாமணி அனைத்திலும் ஒரு கரண்டி எடுத்துத் தட்டில் வைத்துவிட்டார். இப்போது தட்டில் முக்கால்வாசி இடம் நிரம்பிவிட்டது.  தட்டைப் பிடித்திருந்த இடது கை வலிக்க ஆரம்பித்தது. தவிரவும் அந்தக் குப்பிகள் விழுந்துவிடுமோ என்கிற அச்சம். தட்டுக்குள்ளேயே கவிழ்ந்தால் பிரச்னை இல்லை. வீச்சு பரோட்டாவுக்குக் கொத்துமல்லி ஜூஸ் தொட்டுக்கொண்டு சாப்பிட்டுவிடலாம். வெளியே சிந்தினால்தான் கலவரம்.

வரிசையில் எனக்கு முன்னால் நின்றுகொண்டிருந்தவர் ஒரு பிரபல நடிகை. அவர் கையில் இருந்த தட்டில் மேற்படி குப்பிகள் இல்லாததைக் கவனித்தேன். ஒருவேளை குப்பி கண்ட இடத்தில் குடித்துவிட்டு வைத்திருக்க வேண்டுமோ? தெரியாமல் நான் மட்டும்தான் எடுத்துத் தட்டில் வைத்துக்கொண்டுவிட்டேனோ?

சந்தேகம் வந்ததும் பின்புறம் இருந்தவரைத் திரும்பிப் பார்த்தேன். அவர் தட்டிலும் குப்பிகள் இல்லை. இது ஏதோ திட்டமிட்ட சதி போலத் தெரிந்தது. சரி, சமாளிப்போம் என்று மேலும் நகர்ந்தபோது மூடி வைத்திருந்த மாபெரும் எவர்சில்வர் கொள்கலனை தடாலென்று திறந்தார் அங்கிருந்த பணியாளர். வந்தது பாருங்கள் ஒரு வெஜ் பிரியாணி நெடி!

எனக்கு உடனே தும்மல் வந்துவிட்டது. அது வேண்டாம் என்று சொல்லுவதற்கு வாயெடுத்து, தும்மலாக வெளியிட்டதை அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை. என் வலக்கையில் உள்ள கத்தி கபடாக்களுடன் நான் குறுக்கே நீட்டித் தடுத்ததையும் பொருட்படுத்தாமல் இரு பெரும் கரண்டிகள் அள்ளிப் போட்டார். கனம் தாங்கமாட்டாமல் என் தட்டு நடனமாட ஆரம்பித்தது.

நான் அதை வேண்டாம் என்று சொல்ல நினைத்ததன் காரணம், வரிசையில் அடுத்து இருந்த ஐட்டம் எனக்கு மிகவும் பிடித்த புதினா சாதம். அதனருகே எலுமிச்சை சாதம், தேங்காய் சாதமும் இருந்ததைக் கண்டேன். தொட்டுக்கொள்ள பொரித்த அப்பளம், சிப்ஸ் வகையறாக்கள் தவிர, கேரம் போர்ட் ஸ்டைக்கர் அளவில் ஒரு தாம்பாளம் நிறைய மசால் வடைகளை வைத்திருந்ததில் தயாரிப்பாளரின் கலையுள்ளம் புரிந்தது.

பொதுவாக இம்மாதிரி கையேந்தி விருந்துகளில் கலவை சாதங்கள் அதிகம் இராது. சாஸ்திரத்துக்கு பிரியாணிக்கு அடுத்து ஒரு சாம்பார் சாதம் மட்டும்தான் இருக்கும். எவனும் எடுக்கமாட்டான் என்று உள்ளதிலேயே சின்ன பாத்திரத்தில் கொஞ்சம் தயிர் சாதம் வைப்பார்கள். ஆனால் இந்த விருந்தில் சற்றே மாறுதலுக்கு ரசம் சாதம் இருந்தது! கவனிக்கவும். ரசம் தனியே, சாதம் தனியே அல்ல. ரசம் சாதமே. அதுவும் அன்னாசிப் பழ ரசம். தவிரவும் எனக்குப் பிடித்த குழிப் பணியாரம், எனக்குப் பிடித்த ஆனியன் ஊத்தப்பம், எனக்குப் பிடித்த முந்திரி அல்வா, எனக்குப் பிடித்த ரசமலாய் – ரொம்ப முக்கியம் என் உயிரனைய இட்லி உப்புமா!

ஐயோ அதைப் பற்றித் தனியே ஒரு காவியமே எழுதலாம். எனக்குத் தொண்ணூற்றொன்பது வருஷ லீசுக்குத் தன் பெண்ணைக் கொடுத்த பெண்மணி ஒரு மாபெரும் இட்லி உப்புமாக் கலைஞர். இட்லி மீந்தால் செய்வதல்ல அது. தனியே ஒரு பிரத்தியேகப் பதத்தில் இட்லி வார்த்துச் செய்வது. விட்டால் நான் அதை மட்டுமே கிலோ கணக்கில் சாப்பிடுவேன்.

ஆனால் என்ன துரதிருஷ்டம்? வரிசையில் அதை நெருங்குவதற்கு முன்னால் இப்படி வெஜிடபிள் பிரியாணியால் இடத்தை அடைத்துவிட்டானே பரதேசி?

சரி, அடுத்த ரவுண்டில் பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்துக்கொண்டு அந்த ரவுண்டுக்கு மேலும் சில ஐட்டங்களுடன் வரிசையை விட்டு நகர்ந்து வந்தேன். பிரச்னை இங்கேதான் ஆரம்பித்தது.

நான் வருவதற்குள் இருக்கைகள் அனைத்தும் நிரம்பிவிட்டிருந்தன. பலபேர் பேசிக்கொண்டே நின்றபடி சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். எனக்கோ தட்டைப் பிடிக்க ஒரு கை போதவில்லை. இரண்டு கைகளாலும் பிடித்தால் பிறகு எப்படிச் சாப்பிடுவது? பதட்டமாகிவிட்டேன். சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டே இருந்தேன். யாராவது எழுந்தால் ஓடிப் போய் ஒரு நாற்காலியைப் பிடித்துவிடுகிற வெறி. ஆனால் யாரும் எழுந்துகொள்வதாகவே தெரியவில்லை.

இதற்கிடையில் நின்றவாக்கில் சாப்பிட்டுக்கொண்டிருந்த அத்தனை பேரின் தட்டுகளையும் கவனித்தேன். ஒருவர் தட்டிலும் அந்தக் குப்பிகள் இல்லை. சனியன், அதை முதலில் குடித்துக் கவிழ்த்துவிட வேண்டும் என்று எண்ணி முதல் குப்பியை எடுத்தேன். என்னமோ பெரிய ஆசாரசீலன் மாதிரி உதட்டில் படாமல் உயர்த்திக் கொட்டப் பார்க்க, விளிம்பற்ற அந்தக் குப்பி கால் வாசி ஜூஸை என் வாயிலும் முக்கால் வாசி ஜூஸை என் சட்டையிலும் கொண்டு சேர்த்தது.

பதறிப் போனேன். அந்தப் பதற்றத்தில் கையில் இருந்த கனத்த தட்டு ஆட, மீதமிருந்த இரு குப்பிகளும் சிந்தின. தட்டே வண்ணமயமாகிவிட்டது. இப்போது இதைச் சாப்பிடுவதா வேண்டாமா?

அன்று நான் பெற்ற பாடங்கள் இரண்டு.

1. படு பங்கரைகள் கையேந்தி விருந்துகளைத் தவிர்த்துவிட வேண்டும்.

2. தவிர்க்க முடியாத பட்சத்தில் இரண்டு இட்லியாவது சாப்பிட்டுவிட்டு விருந்துக்குப் போகவேண்டும்.

[ருசிக்கலாம்]

 

Share

2 comments

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter