ஓர் அத்யாயத்தில் ஒருவண்டி கதையைத் திணித்து, வாசகர்களைத் திகட்ட திகட்ட வாசிக்குமாறு செய்திருக்கிறார். புதிது புதிதாகக் கதைமாந்தர்கள் வந்து குதித்துக்கொண்டே இருக்கின்றனர். அவர்கள் அனைவரும் உடலளவிலும் மனத்தளவிலும் புதுமையாகவே இருக்கின்றன. கோவிந்தசாமிக்கு ஞானம், ஆன்ம அனுபூதி, திவ்யதரிசனம் இன்னும் இத்யாதி இத்யாதி கிடைத்துவிடும்போல. சாகரிகாவின் ‘நவீனப் பெண்ணிய வாழ்வுமுறை’ போற்றத்தக்கதாக உள்ளது. அதனால்தான் அவளை அடுத்த விநாடியே மேலும் நாற்பது பேர் விரும்பத் தொடங்கிவிட்டனர். பெண்குலத்தின் முன்னோடியாகச் சாகரிகா கதைமாந்தரைப் படைத்துள்ள இந்த எழுத்தாளரைப் ‘முற்போக்கு, பிற்போக்கு, நடுநிலைப்போக்குப் பெண்ணியவாதிகள்’ என அனைத்துத் தரப்பினரும் போற்றிப் புகழ்வார்கள். வாசகர்கள் சாகரிகாவுக்கு ரசிகர் மன்றம் திறக்கட்டும். முடிந்தால் ஆலயம் கூடக் கட்டலாம்தான். நீலநகரத்திற்குக் குடிபெயர விரும்பும் வாசகர்கள் எழுத்தாளரிடம் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம்.