சமூக வலைத்தளம்

எழுத்தாளர்-வாசகர் உறவு எப்படி இருக்க வேண்டும்?

கணவன் மனைவி உறவினைப் போல. காதலன் காதலி உறவினைப் போல. ஆசிரியர் மாணவர் உறவைப் போல. நண்பர்களைப் போல. கடவுள் பக்தன் உறவு நிகர்த்து.

இன்னும் சொல்லலாம். அவரவர் உவப்பு. அவரவர் மனப்பாங்கு. ஆனால் சமூக வலைத்தளங்களில் ஒரு வாசகரின் கமெண்ட்டுக்கு பதில் சொல்லாமல் நகர்ந்து சென்றால் உடனே அதனை ஒரு கொலை பாதகச் செயலாகக் கருதிவிடும் போக்கு பல்கிப் பெருக ஆரம்பித்துவிட்டது. அதைக் கூடச் சகித்துக்கொள்ளலாம். கேவலம் கொலை பாதகம்தானே? நாம் அடுத்தடுத்து வெளியிடும் ஒவ்வொரு குறிப்பின் அடியிலும் வந்து நான் கேட்ட இன்ன கேள்விக்கு நீங்கள் பதிலே சொல்லவில்லையே என்று இடுப்பில் ஏறி உட்காரத் தொடங்கிவிடுகிறார்கள். என்னதான் நமது இடுப்பு மாநகரப் பேருந்தின் டயரளவு அகன்று பரந்ததென்றாலும் நேரடியாகத் தூக்கிச் சுமக்கும் பொறுப்பை டயர் ஏற்றால் அது எப்படி உருண்டோடும்?

இரண்டு நாள்களுக்கு முன்பு யாரோ ஒரு வாசகர் நான் எழுதிய ஒரு குறிப்பின் அடியில் வந்து, ‘உங்களுடைய ஆதியிலே நகரமும் நானும் இருந்தோம்’ புத்தகத்தில் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் காப்பிப் பொடிக்கடையை ஏறக்கட்டி வெகுநாளாகிவிட்டன. உங்களை நம்பி நான் அலைந்ததுதான் மிச்சம். அடுத்தப் பதிப்பில் அதை மாற்றுங்கள்’ என்று ஒரு கமெண்ட் போட்டிருந்தார். கொரோனா ஆரம்பித்த முகூர்த்தத்திலிருந்து நான் அந்தப் பக்கமே போகவில்லை என்பதால் அந்தக் கடை மூடிய விவகாரமே எனக்குத் தெரியாது. எல்லா வியாபாரிகளுக்கும் சிரமம்தான். எவ்வளவோ பேர் இழுத்து மூடிவிட்டு ஊரைப் பார்க்கப் போய்விட்டார்கள். அந்தக் குறிப்பிட்ட நல்லவருக்கு எப்போது என்ன பிரச்னை வந்ததோ எனக்குத் தெரியவில்லை. எதற்கும் ஒரு நடை அந்தப் பக்கம் போய் விசாரித்துவிட்டு நண்பருக்கு பதில் சொல்லலாம் என்று நினைத்திருந்தேன்.

பார்த்தால், அடுத்த போஸ்டில் அதே கமெண்ட்டைத் தூக்கிப் போடுகிறார். இப்போது இதை நான் எழுதாதிருந்தால் ஒவ்வொரு போஸ்டிலும் அந்த காப்பிப் பொடிக் கடைக்காரர் என்ன ஆனார் என்று காப்பி பேஸ்ட் செய்துகொண்டே இருப்பார். பஞ்சாயத்து என்றாகிவிட்டால் தீர்த்துவிடுவதுதான் சரி.

அன்பின் வாசகச் செல்வங்களே, மெய்ஞ்ஞான முயல் என்ற பெயரில் உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் ஒருவர் இருக்கின்றார். இப்போது அவர் ஸ்விச்சர்லாந்தில் வசித்துக்கொண்டிருக்கிறார். அவரது பெற்றோருக்கு அந்தப் பெயரை வைக்கும்போதே ஒரு சிறு சந்தேகம் இருந்திருக்கிறது. உண்மையிலேயே இந்தப் பயல் மெய்ஞ்ஞானம் பெறுவானோ? மெய்யாகவே இவன் முயல் போன்ற துறுதுறுப்பும் வேகமும் சுண்டி இழுக்கும் ஆளுமையும் படைத்தவன்தானோ? இப்படித் தங்களுக்கு எழுந்த இரண்டு சந்தேகங்களையும் இணைத்தே பெயராக வைத்துவிட்டார்கள். மெய்ஞ்ஞான முயல்.

மெய்ஞ்ஞான முயல் வளர்ந்து பெரியவனாகி, எழுத்தாளரான பிறகு பெற்றோர் வைத்த பெயரை நியாயப்படுத்த முடிவு செய்தார். சிறுகதை, நாவல், கவிதை என்ன எழுதினாலும் பக்கத்துக்குப் பத்து பொன்மொழிகளை அள்ளி வீசி விதைத்துத்தான் எழுதுவார். தவிர அவரது மொழி நடையும் முயல் பாய்ச்சலாகத்தான் இருக்கும். இதனாலெல்லாம் அவருக்குப் பல்லாயிரக் கணக்கில் தொடங்கிய வாசகர் எண்ணிக்கை மேலும் பெருகிப் பல லட்சக் கணக்கானது. இந்த உலகத்தில் அவரை வாசிக்காத ஒரு வாசகனும் இல்லை என்று அடித்துச் சொல்வேன். இது மெய்ஞ்ஞான முயல் எழுதியதுதான் என்று தெரியாமலேகூட வாசித்திருப்பார்கள். பிரபல பொன்மொழியாளர் யாரோ அவர்கள் எழுதியதாகப் பிய்த்துப் பிய்த்துப் போடப்பட்ட குறிப்புகளாகவேனும் கடந்து சென்றிருப்பார்கள். அப்படியொரு பிரபலம் அவர்.

அப்பேர்ப்பட்டவர் இன்ஸ்டாக்ராமில் ஒரு கணக்குத் தொடங்குகிறார். விடுவார்களா நமது வாசகத் தீவிரவாதிகள்? ஓடோடிச் சென்று நூற்றுக் கணக்கான வினாக்களால் அவரைப் போட்டு சாத்திவிடுகிறார்கள். தான் ஒரு கேள்வி கேட்டு அதற்கு மெய்ஞ்ஞான முயல் ஒரு பொன்மொழி பதில் சொன்னால் அதைத் தூக்கித் தனது ஸ்டேடஸாகப் போட்டுக்கொண்டு பெருமைப்படலாம் என்ற எளிய ஆசை தவிர இதற்கெல்லாம் வேறு காரணம் இருக்காதுதான். ஆனால் மெய்ஞ்ஞான முயலின் இடத்தில் இருந்து சிந்தித்துப் பாருங்கள். அவரால் ஒரு நாளைக்கு எவ்வளவு பொன்மொழிகள் உற்பத்தி செய்ய முடியும்? அவர் ஒரு அசெம்ப்ளி லைன் பொன்மொழத் தொழிற்சாலைதான். இருந்தாலுமே ஓர் அளவு இல்லையா?

பார்த்தார் மனிதர். தனது முகப்புப் பட்டையில் I don’t read messages here என்று எழுதி வைத்துவிட்டார். ஆனாலும் தனது தினசரி பொன்மொழித் திருப்பணிகளை அவர் நிறுத்தவில்லை. (இவ்வகையில் ட்விட்டரில் தலாய் லாமா செய்யும் திருப்பணிகளைக் காட்டிலும் இன்ஸ்டாக்ராமில் மெய்ஞ்ஞான முயல் செய்யும் பணிகள் படு பயங்கர மகத்தானவை.) அவரது இருபத்து மூன்று லட்சம் ஃபாலோயர்களும் அம்முடிவினை மனமார ஏற்றுக்கொண்டு இன்றுவரை அவரைப் பாராயணம் செய்து வருகிறார்கள். சந்தேகமிருந்தால் நீங்களும் இன்ஸ்டாகிராமுக்குச் சென்று மெய்ஞ்ஞான முயலைப் பின்பற்றிப் பார்க்கலாம்.

கூடவே இப்படியெல்லாம் ஒரு தமிழ் எழுத்தாளன் முகப்புப் பட்டையில் எழுதி வைத்தால் சமூகம் அவனை என்ன செய்யும் என்றும் சிந்திக்கலாம். நான் உங்களிடம் கேட்டுக்கொள்வதெல்லாம் ஒன்றுதான். நாம் உரையாடுவோம். கூடிக் களிப்போம். கட்டிப் புரண்டு சண்டை இடுவோம். எல்லாமே சாத்தியம்தான். ஆனால் மூச்சு விட்டுக்கொள்ளச் சிறிது இடைவெளி கொடுங்கள்.

இவ்வளவையும் படித்துவிட்டு, சொல்ல வந்த விஷயத்தைக் கடாசிப் போட்டு, யாரந்த மெய்ஞ்ஞான முயல் என்று மட்டும் கேட்டுவிடாதீர்கள். இரண்டு நிமிடம் யோசியுங்கள். உங்களால் மறக்க முடியாத பொன்மொழிகள் சிலவற்றை திரும்ப எண்ணிப் பாருங்கள். முயலாவது கேரட்டாவது அகப்படாமல் போகாது.

Share

Add Comment

Click here to post a comment

தொகுப்பு

அஞ்சல் வழி


எழுத்துக் கல்வி