தனது முதல் சிறுகதையை எழுதி, ஒரு போட்டிக்கு அனுப்பிப் பரிசு பெற்ற ஒரு சகோதரி சில நாள்களுக்கு முன்னர் சந்திக்க வந்திருந்தார். திட்டங்களிலோ, மொழியிலோ, வெளிப்பாட்டிலோ அவருக்கு எந்தச் சிக்கலும் இல்லை. ஓரளவு வாசிப்பு இருந்தது. தொடர்ந்து படித்துக்கொண்டும் இருந்தார். இருப்பினும் எழுதுவதில் சிறு தயக்கம் இருப்பதாகச் சொன்னார். படித்துவிட்டு யார் என்ன சொல்வார்களோ என்கிற அச்சம் இருந்தது புரிந்தது. நண்பர்களுக்குப் படிக்கத் தருவதற்குக் கூட யோசிப்பதாகச் சொன்னார். புதிதாக எழுத வரும் பெரும்பாலானவர்களுக்கு இந்தத் தயக்கமும் அச்சமும் இருக்கின்றன. யார் என்ன சொல்வார்கள்? நன்றாக இல்லை என்று சொல்லிவிட்டால் என்ன செய்ய? குப்பை என்று ஒரு சொல்லில் நிராகரிக்கப்பட்டுவிடுமானால் அதைத் தாங்க முடியுமா?
இதற்கு பதில் சொல்லும்முன் ஒரு சம்பவம். மௌனி நினைவோடையில் சுந்தர ராமசாமி இதனை எழுதுகிறார். கிருஷ்ணன் நம்பியுடன் சுந்தர ராமசாமி சிதம்பரத்துக்குச் சென்று மௌனியைச் சந்திக்கிறார். அப்போது நம்பி மௌனியிடம் கேட்கிறார், ‘சார், தயக்கத்தோடு கேட்கிறேன். என் கதைகளைப் படித்திருக்கிறீர்களா? எப்படி சார் இருக்கு?’
‘உன் கதையா? நீலக்கடல்னு ஒரு கதை எழுதியிருந்தியே. ரொம்ப நன்னா இருக்கு. என்னோட சித்தப்பா ஒருத்தர் இருந்தார். அவருக்கு ஒரு வியாதி. ஒண்ணுக்கு கண்ட் ரோல் இல்லாம போயிண்டே இருக்கும். ஒரு குடம், ரெண்டு குடம் தண்ணியை உடம்புக்குள் எங்கு சேகரிச்சி வெச்சுக்கொண்டிருந்தார் என்று ஆச்சரியப்படும் அளவுக்குப் போய்க்கொண்டே இருப்பார். அந்தக் கதையில் என் சித்தப்பாவை நீ தோற்கடித்துவிட்டாய்.’
‘ராமசாமி கதைகள் படிச்சிருக்கேளா? அது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’
‘ரொம்ப நன்னா எழுதறான். அவனோட மூளை இருக்கில்லியா? அது அவனை எழுத விடாது. குறுக்கே புகுந்து லிட் ரேச்சர் ஆகாம பண்ணிண்டிருக்கும். அதுதான் லிட் ரேச்சர்னு அவன் நினைச்சிண்டிருக்கான். கடைசிவரை அது அப்படித்தான் போகும்.’
மேற்படி சம்பவத்தை சுரா விவரிப்பதில் இருந்து சில வரிகளை மட்டும் இங்கே எடுத்துத் தந்திருக்கிறேன். முழுதாகப் படிக்க விரும்பினால் காலச்சுவடில் வாங்கிப் படித்துக்கொள்ளுங்கள். சொல்ல வருவது இதுதான். சுந்தர ராமசாமியாகவே இருந்தாலும் எழுதியது எப்படி இருக்கிறது என்று இன்னொரு எழுத்தாளரிடம் (குறிப்பாக மூத்த எழுத்தாளர்) கேட்டால் இப்படி ஒரு பதில்தான் வரும்.
சமீபத்தில் லஷ்மி சரவணகுமாரின் வாசகர் ஒருவர் அவரிடம் இப்படி ஒரு கேள்வி கேட்டிருந்தார். ‘அந்தப் பையன் எழுதறதுல ஆர்ட் கூடல என்று … தனிப்பேச்சில் குறிப்பிட்டிருக்கிறார். இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?’ (நினைவில் இருந்து எழுதுகிறேன். சொற்கள் மாறியிருக்கலாம்.)
‘அவர் சொன்னா சரியாத்தான் இருக்கும்’ என்று லஷ்மி இதனைக் கடந்துவிடுகிறார்.
எழுத்துத் துறையில் இது ஒரு பிரச்னை. இன்னொருத்தன் மேலோங்கி வருவது பொதுவாகப் பழம் பெருச்சாளிகளுக்கு ஆகாது. புதிய எழுத்தாளர்களை இனம் கண்டு தூக்கி விடும் வழக்கம் உள்ளவர்களாகச் சித்திரிக்கப்படும் படைப்பாளிகள்கூடக் குறைந்த பட்சம் தனது விசுவாசியாக ஆயுள் சந்தா செலுத்தியிருக்கிறாரா என்று சரி பார்த்துக்கொண்ட பிறகுதான் குறிப்பிடுவார். அப்படிக் குறிப்பிடுவதால் புதியவர்களுக்கு என்ன லாபம் என்று பார்த்தால், உடனே நூறு பேர் கண்ணில் உங்கள் பெயர் தென்படும். அவ்வளவுதான். அவர் சொல்லிவிட்டாரே என்பதற்காகவெல்லாம் உடனே விழுந்து விழுந்து படித்துவிட மாட்டார்கள். இதெல்லாம் ரியாலிடி ஷோக்களில் கண் கலங்கி உணர்ச்சி வசப்பட்டு நிற்கும் கட்டம் வருமே, அதைப் போலத்தான். அதைப் பார்க்கும் நேயர்களும் கண் கலங்கும் காலமெல்லாம் முடிந்துவிட்டது.
என்னைப் பொறுத்தவரை எழுதுவதில் எனக்கு இருக்கும் ஒரே கவலை நான் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறேனா என்பதுதான். நான் எழுதுவது இலக்கியமா இல்லையா, காவியமா காப்பியமா கோமேதகமா குப்பையா என்றெல்லாம் நினைத்துப் பார்ப்பதே இல்லை. அதில் எந்தப் பயனுமில்லை. யாருடைய அபிப்பிராயத்தையும் எதிர்பாராமல், யாருடைய அபிப்பிராயத்தையும் பொருட்படுத்தாமல் எழுதும்போது, பணியில் கவனக் குவிப்பு நிகழும். எழுத்துக்கு அதுதான் முக்கியம். உண்மையிலேயே நன்றாக இருக்குமானால் ஒரு பொட்டு சர்க்கரையைக் கண்டறிந்த எறும்புக் கூட்டத்தினைப் போல எந்த வழியிலாவது வாசகர்கள் வந்து சேர்ந்துவிடுவார்கள். அது போதும். வல்லுநர்கள் வராதிருக்கும்வரை நல்லது.
அந்தப் பெண்ணிடம் அதைத்தான் சொல்லி அனுப்பினேன். யாருக்கும் அனுப்பி கருத்துக் கேட்காதீர்கள். யாராவது தானே படித்து, கருத்துச் சொன்னாலும் கண்டுகொள்ளாதீர்கள். நன்றாக இருப்பதாகச் சொன்னாலும் இந்த விதி பொருந்தும். நீங்கள் எழுதுவது உங்களுக்குப் பிடிக்கிறதா? போதும். உண்மையான தர மதிப்பீடு, எழுதுபவன் காலத்துக்குப் பிறகு என்றாவது நிகழும். பிழைத்துக் கிடந்தால் அடுத்த ஜென்மத்தில் அதைத் தேடி அறிந்துகொள்ளலாம்.