300 சொற்கள்

சில காலமாக ஒரு செயல்திட்டம் போல வைத்துக்கொண்டு தினமும் இரண்டு கதைகளாவது எழுதுகிறேன். எவ்வளவு வேலை இருந்தாலும் சரி. என்ன பிரச்னை இருந்தாலும் சரி. எதை நிறுத்தினாலும் இதை நிறுத்துவதில்லை. முதலில் இப்படிக் கட்டாயமாக எழுத வேண்டும் என்ற விதி சிறிது கஷ்டமாக இருந்தது. விரைவில் அது ஒரு மனப் பழக்கமாகி, எழுதாவிட்டால் Uneasy ஆகிவிடுகிறேன். இன்னொன்று, இது யாருக்காகவும், எந்தப் பத்திரிகைக்காகவும் எழுதவில்லை. என் இணையத் தளத்தில்கூட இன்னும் பிரசுரிக்கவில்லை. எழுதி எழுதி நானேதான் வைத்துக்கொள்கிறேன். மிகச் சில நண்பர்களுக்கு மட்டும் ஒரு சில கதைகளைப் படிக்கத் தந்திருக்கிறேன். அவ்வளவுதான்.

இந்தக் கதைகளுக்கு நான் வைத்துக்கொண்ட ஒரே இலக்கணம், முன்னூறு சொற்களைத் தாண்டக்கூடாது என்பதுதான். சிறுகதையா, குறுங்கதையா, மைக்ரோ கதையா, அல்லது வேறொன்றா என்றெல்லாம் சிந்திப்பதே இல்லை. எதையாவது சொல்லித் தொலைத்தால் இலக்கண ஸ்கேலைத் தூக்கிக்கொண்டு வந்துவிடுவார்கள். தமிழ்ச் சூழலில் ஒருவன் வெறும் எழுத்தாளனாக இருப்பது போன்ற பேஜார் வேறில்லை. ஓர் அடையாளம் இருந்தே தீரவேண்டுமென்றால் இவற்றை ஜாவா ஸ்கிரிப்ட் கதைகள் என்று சொல்வேன். முன்னூறு சொற்கள். ஓர் அனுபவத்தை அதற்குள் சொல்ல முடிகிறதா என்பதே சவால்.

குறைவான சொற்களில் ஒரு கதையை அதன் சரியான வடிவத்தில் கொண்டு வருவது பெரும் பாடு. குறுகத் தரிப்பது அவ்வளவு எளிதல்ல. எளிய, திடுக்கிடும் திருப்பக் கதைகளை எழுதிவிடலாம். எல்லைகளற்ற வாழ்வனுபவங்களை ஒரு ஓரத்தில் தொட்டுக்காட்டி முழு வாழ்வை உணர வைக்க முடிகிறதா என்று பார்க்கிறேன். இந்த ஆட்டம் நன்றாக இருக்கிறது. சுவாரசியமாக இருக்கிறது. என்ன ஒரே பிரச்னை, மூவாயிரம் சொற்கள் எழுத எனக்கு ஒன்றரை மணி நேரம் ஆகும். முன்னூறு சொற்களுக்கு அப்படியே இரு மடங்கு, சமயத்தில் மும்மடங்கு நேரம் எடுக்கிறது. இருந்தாலும் விடுவதாக இல்லை.

இன்னும் சில மாதங்கள் கழித்து, எழுதியவற்றைத் திரும்பப் படித்துப் பார்ப்பேன். அப்போது தேறும் கதைகளில் சிலவற்றை உங்களுக்கும் வாசிக்கத் தருவேன். இது என் நீண்ட நாள் திட்டம். ஐ. சாந்தனின் கடுகுக் கதைகளுக்கு 20-25 வயதுகளில் ரசிகனான நாள்களில் இருந்தே இருந்து வருவது. இப்போது வேகமெடுக்கக் காரணத்தை ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன் – பெருந்தேவி.

சென்ற வருட ஊரடங்கு காலத்தில் விளையாட்டாகத் தொடங்கினேன். இந்த வருட ஊரடங்கு இன்னும் சில நாள்களில் வந்துவிடும் போலிருக்கிறது. எல்லோருக்கும் இருக்கும் எல்லாக் கவலைகளும் எனக்கும் உண்டு. ஒரே வித்தியாசம், கவலைகளை நகர்த்தி வைத்துவிட்டு இறங்குவதற்கு எனக்கொரு நீச்சல் குளத்தை ஏற்கெனவே வெட்டி வைத்திருக்கிறேன்.

Share
By Para

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!