நெஞ்சில் நிற்கும் சித்திரம்

ஒரு மகத்தான கட்டுரை எப்படி இருக்கும்?

எப்போது யார் கேட்டாலும் நான் சுட்டிக்காட்டுவது முத்துலிங்கத்தின் ‘நீ சேக்ஸ்பியரிலும் மோசமாக எழுதுகிறாய்.’

இந்தக் கட்டுரையை முதலில் ‘அங்கே இப்ப என்ன நேரம்?’ தொகுப்பில் படித்தேன். பிறகு இப்போது முழுத் தொகுப்பின் முதல் பாகத்தில் கண்டபோதும் ஆர்வமுடன் படித்தேன். திரும்பவும் படிப்பேன். எனக்கு இது சலிக்காது. கட்டுரையின் சாரம் இதுதான்:

முத்துலிங்கம் வசிக்கும் வீட்டுக்கு அருகே உள்ள ஒரு வீட்டில் Garage Sale அறிவிக்கிறார்கள். வருடமெல்லாம் பயன்படுத்தி, தூக்கிப் போட்டுவிடலாம் என்று முடிவு செய்த பொருள்களைக் குறைந்த விலைக்குத் தள்ளிவிடும் நிகழ்ச்சி அது. வேண்டுபவர்கள் வாங்கிக்கொள்ளலாம். அங்கே காரில் வந்து இறங்கும் ஒரு கனவான், தல்ஸ்தோயின் war and peace நாவலின் பழைய பிரதியை அடக்க விலையில் இருபத்தைந்து சதத்துக்கு வாங்கிப் போகிறார். எதனாலோ அவருக்கு அது வேண்டாம் என்று தோன்றிவிடுகிறது. போன வேகத்தில் திரும்பி வந்து நாவலைத் திரும்பக் கொடுத்துவிட்டுப் பணத்தை வாங்கிக்கொண்டு போய்விடுகிறார். இதைப் பார்க்கும் முத்துலிங்கம், தான் அந்தப் பழைய பிரதியை வாங்கிக்கொண்டு போகிறார்.

இவ்வளவுதான். ஆனால் இந்தச் சட்டகத்துக்குள் முத்துலிங்கம் ஒரு பெரிய சரித்திரத்தையே சித்திரித்துக் காட்டிவிடுகிறார். வாங்கிச் சென்ற புத்தகத்தை அம்மனிதர் அரை மணி நேரத்தில் படித்துவிட்டாரோ என்ற சந்தேகத்தில் தொடங்கி, ஐந்து குடும்பங்களும் ஐந்நூறு கதாபாத்திரங்களும் உள்ள பெருங்கதை ஆயிற்றே என்ற குழப்பத்துடன் அந்த நபரிடமிருந்து விலகி தல்ஸ்தோயை நெருங்குகிறார். கவிதைக்கு எப்படி ஷேக்ஸ்பியரோ அப்படி உரைநடைக்கு தல்ஸ்தோய் என்று எழுதிவிடுகிறார்.

அட தல்ஸ்தோய்க்குப் பொருத்தமில்லாமல் ஷேக்ஸ்பியர் வந்துவிட்டாரே. தல்ஸ்தோய்க்கு ஷேக்ஸ்பியரைக் கண்டாலே ஆகாதே? ஷேக்ஸ்பியரின் கதாபாத்திரங்கள் செயற்கையாகப் பேசுகிறார்கள் என்பது அவரது குற்றச்சாட்டு. இதனை நினைவுகூர்பவர், சட்டென்று செகாவை அறிமுகம் செய்கிறார். அவர் தல்ஸ்தோயினும் 32 வயது இளையவர். தல்ஸ்தோயைத் தலையில் வைத்துக் கொண்டாடும் இன்னொரு பெரும் படைப்பாளி. மகத்தான சிறுகதை ஆசிரியர். ஆனாலென்ன? தல்ஸ்தோய்க்கு செகாவின் நாடகங்களும் பிடிக்கத்தான் செய்யாது. சந்திக்க வரும் செகாவிடம் தல்ஸ்தோய் சொல்கிறார், ‘நீ சேக்ஸ்பியரினும் மோசமாக எழுதுகிறாய்!’

அது ஒரு வசை என்றே செகாவுக்குத் தோன்றவில்லை. ஆ! தல்ஸ்தோயே சொல்லிவிட்டார். நான் சேக்ஸ்பியரினும் மோசமாக எழுதுகிறேன்! என்று உற்சாகமாகக் கத்திக்கொண்டு ஓடுகிறார்.

கட்டுரை இதோடு முடிந்திருந்தால் ஒரு சிறிய புன்னகையுடன் நாமும் நகர்ந்திருப்போம். ஆனால் இந்த இடத்தில்தான் முத்துலிங்கம் போரும் அமைதியும் நாவலைப் பற்றி விவரிக்கத் தொடங்குகிறார். தனது 34வது வயதில் அவர் திருமணம் செய்துகொண்ட சோஃபியா நமக்கு இங்கே அறிமுகமாகிறார். யாருக்கும் வாய்க்காத அபூர்வமாக தல்ஸ்தோயின் செயலாளர் போலவே செயல்படத் தொடங்கிவிடுகிறார் அந்தப் பெண். திருமணத்துக்குப் பின்புதான் தல்ஸ்தோய் போரும் அமைதியும் எழுதத் தொடங்குகிறார். ஆறு வருடங்களில் 1370 பக்கங்களில் எழுதி முடிக்கிறார்.

இந்தத் தகவல்களை விவரிக்கும்போதே போரும் அமைதியும் நாவலின் பிரதான பாத்திரங்களை அறிமுகம் செய்துவிடுகிறார். சட்டென்று ஓர் உதாரணம் வருகிறது.

‘துருப்பிடித்த கீல் கதவு மெல்லத் திறப்பது போல அவதானமான கண்கள் கொண்ட அந்த முகத்தில் ஒரு புன்னகை அரும்பியது.’

தல்ஸ்தோயின் விவரிப்புதான். முத்துலிங்கம் எழுதுகிறார்: ‘மறக்க முடியாத வசனம். அந்த க்றைஸ்லர் கார் மனிதருடைய இருபத்தைந்து சதக் காசு இந்த ஒரு வசனத்துக்கே சரியாகப் போய்விடும்.’

இதன் பிறகும் தல்ஸ்தோய் குறித்த பல தகவல்கள் வந்தவண்ணம் இருக்கின்றன. எழுதி முடித்த நாவலுக்கு தல்ஸ்தோய் இரண்டு முடிவுரைகள் எழுதியது; தல்ஸ்தோய்க்கும் சோபியாவுக்கும் பதிமூன்று பிள்ளகள் பிறந்தது; பதிமூன்றுக்குப் பிறகு தம்பதிகளுக்கிடையில் உண்டான மனக்கசப்பு, கிறித்தவ சபை அவரை ஜாதிப் பிரஷ்டம் செய்தது, இறுதியில் எண்பத்திரண்டாவது வயதில் அவர் ஒரு ரயில்வே ஸ்டேஷன் பெஞ்சில் காலமானது வரை ஒரு முழு வாழ்க்கை வந்து போய்விடுகிறது.

தல்ஸ்தோயின் வாழ்க்கை என்பது அன்றைய ரஷ்ய வரலாற்றின் ஒரு முக்கியப் பகுதி. ஒரு நூற்றாண்டையே பாதித்த மகத்தான கலைஞனின் ஒரு நாவல் அடக்க விலையில் இருபத்தைந்து சதவீதத்துக்குக் கூடப் பெறுமானமற்றுப் போவது சகிக்க முடியாமல் அதைத் தானே பணம் கொடுத்து வாங்கிப் போகிறார் முத்துலிங்கம்.

இந்தக் கட்டுரையின் ஆகப்பெரிய அதிசயம், இது மிகச் சிறிய கட்டுரை என்பதுதான். படிக்க ஐந்து நிமிடங்கள் போதும். இந்தக் குறுவெளிக்குள் பழைய பொருள்களை விற்பனை செய்யும் பெண்மணியின் தோற்றம் முதல், தல்ஸ்தோயின் புத்தகத்தை வாங்கிப் போகும் மனிதர் தொடங்கி (க்றைஸ்லர் காரில் வருபவர்) தன் வீட்டில் அந்தப் புத்தகத்தை எங்கே கொண்டு வைக்கப் போகிறார் என்கிற விவரத்தைக் கூட விடாமல் கொடுத்துவிடுகிறார். தல்ஸ்தோய், செகாவ் என்ற இரு பெரும் ஆளுமைகளின் சித்திரம் மிக அழகாகத் தீட்டப்பட்டுவிடுகிறது. அனைத்துக்கும் அப்பால் ஒரு வாசகனை ‘போரும் அமைதியும்’ நாவலை நோக்கிக் கையைப் பிடித்து இழுத்துச் சென்று படித்தே தீரவேண்டும் என்று எண்ண வைக்கும் முயற்சியில் மிகப்பெரிய வெற்றி பெற்றுவிடுகிறது இக்கட்டுரை.

இன்றைக்கு இங்கே குவி மையமே இன்றி எழுதிக்கொண்டிருக்கும் தலைமுறை இம்மாதிரி எழுத்துகளைத் தேடிப் படிப்பது நல்லது. ஒன்று, நல்ல எழுத்து எதுவென்று புரிந்துவிடும். அல்லது நாம் எழுதக்கூடாது என்பதாவது தெரிந்துவிடும்.

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter