எழுதும் மனநிலை – சில குறிப்புகள்

  • தினமும் எழுதுவது நல்லதல்ல. எழுத்து சடங்கல்ல.
  • நிறைய எழுதுவது நல்லதல்ல. நீர்த்துவிடும்.
  • ஆரம்பித்தால் முடித்தே தீரவேண்டும் என்பது அவசியமல்ல.
  • சுயமாக ஏற்படுத்திக்கொண்டாலும் ஒரு நிர்ப்பந்தத்தின் பேரில் எழுதினால் நன்றாக வராது.
  • ஆர்வம் எந்தத் திசையில் போகிறதோ, அதனைப் பின் தொடர்வதே நல்லது. நல்ல எழுத்து கட்டுப்பாடுகளுக்கு உட்படாதது.

இவையும், இவற்றை நிகர்த்த இன்னும் பல அறிவுரைகளும் எழுதுவது தொடர்பாகப் பல காலமாகச் சொல்லப்பட்டு வருகின்றன. எழுதத் தொடங்கிய நாள்களில் எனக்குக் கிடைக்கும் இத்தகைய அறிவுரைகளைக் கண்மூடித்தனமாகச் சிறிது காலமாவது பின்பற்றிப் பார்த்துவிடுவேன். இதற்கு நேரெதிரான சில அறிவுரைகளும் சொல்லப்பட்டிருக்கின்றன. சில உதாரணங்கள்:

  • தினமும் ஒரு மணி நேரமாவது எழுதவேண்டும்.
  • பத்து நிமிடங்களுக்குள் ஒரு கதைக் கருவைத் தீர்மானித்து, இரண்டு மணி நேரத்தில் எழுதிப் பார்ப்பது நல்லது.
  • எழுதியதை அப்படியே உள்ளே வைத்து, மறந்துவிட்டு ஒரு மாதத்துக்குப் பிறகு மீண்டும் எடுத்துப் படித்துப் பார்க்க வேண்டும். அப்போது பிடித்திருந்தால் பிரசுரத்துக்கு அனுப்பிப் பார்க்கலாம்.
  • அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் ஒவ்வொருவரையும் கதாபாத்திரமாக யோசித்துப் பார்ப்பது ஒரு பயிற்சி.
  • விடிந்தது முதல் படுக்கப் போகும் வரை நாம் சந்திக்கும் நபர்களைப் பற்றிய நமது அபிப்பிராயங்களை ஒரு நோட்டுப் புத்தகத்தில் எழுதிப் பார்த்தால் அதில் இருந்து கதை கிடைத்துவிடும்.
  • நம் கதையை எழுதக்கூடாது. அடுத்தவர் கதையை அடையாளம் மாற்றித்தான் எழுத வேண்டும்.
  • அடுத்தவர் கதையை எழுதக் கூடாது. சுய அனுபவங்களே கலையாக விரிவு கொள்ளும்.
  • பெரிய எழுத்தாளர்களின் ஒரு படைப்பையாவது அவசியம் படித்திருக்க வேண்டும். அப்போதுதான் எழுத்து நன்றாக வரும்.
  • யாருடைய பாதிப்பும் இல்லாமல் எழுத வேண்டுமானால் யாரையும் படிக்காதே.

இன்னும் நிறைய அறிவுரைகள். இவற்றின் மீது எனக்கு விமரிசனங்களே கிடையாது. ஒவ்வொருவரும் தத்தமது அனுபவங்களின் அடிப்படையில் சொல்கிற ஆலோசனைகள் என்ற அளவில் அனைத்தையும் மதிக்கிறேன். அனைத்தையும் சிற்சில காலம் பின்பற்றியும் இருக்கிறேன். அதே சமயம் இந்த எந்த அறிவுரையும் எனக்கு எழுத்தில் உதவி செய்யவில்லை என்பதை விழிப்புணர்வுடன் நினைவுகூர்கிறேன். முட்டி மோதி நானே உருவாக்கிக்கொண்ட வழி முறைகள் மட்டுமே எனக்குப் பயன்படுகின்றன. அவற்றைச் சொல்கிறேன். ஆனால் அதே விதிதான். இந்த வழி முறைகள் அடுத்தவருக்கு உதவுமா என்று எனக்குத் தெரியாது.

பொதுவாக எனக்கு எழுதும் மனநிலை என்று தனியே ஒன்று கிடையாது. அன்றாட வாழ்வில் தினமும் செய்கிற எளிய செயல்களைக் கூட (முகச் சவரம் செய்வது, தேய்த்துக் குளிப்பது, சாப்பிட்ட தட்டை வழித்து நக்குவது போன்றவை) செய்யும்போதே, இதை எழுதினால் எப்படி எழுதுவேன் என்று ஒரு பக்கம் சிந்தித்துக்கொண்டே இருப்பேன். ஒரு முறை முகச் சவரம் செய்யும்போது பிளேடு வெட்டிவிட்டது. ரத்தம். வலி தோன்றிய அதே கணம் ஒரு வரி தோன்றியது.

‘விடியும்போது ஷேவ் செய்யவேண்டும். எழுதும்போது சேவ் செய்யவேண்டும். இரண்டிலும் எப்போதும் சொதப்புகிறேன். இன்றைய இழப்பு 600 சொற்கள்.’

அடுத்தக் கணமே சவரத்தை நிறுத்திவிட்டு ஓடிப் போய் இதனை எழுதி வைத்துவிட்டு வந்து மீண்டும் விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்தேன். முந்தைய நாள் எழுதியதை save செய்யாமல் இழந்த துயரம் (அது ஒரு விண்டோஸ் கொடுங்காலம்.) இந்த ஒரு வரியில் தீர்ந்து போனது.

இதனாலெல்லாம் நாள் முழுதும் எழுதிக்கொண்டிருப்பேன் என்று பொருளல்ல. உண்மையில் யாராலும் எப்போதும் எழுதிக்கொண்டிருக்க முடியாது. ஒரு முழு நாளில் effective ஆக எழுதும் நேரம் என்று பார்த்தால் அதிகபட்சம் இரண்டில் இருந்து மூன்று மணி நேரமாகத்தான் இருக்கும். சில நாள் இது ஒரு மணி நேரத்தைக்கூடத் தாண்டாது. எழுதுவதற்கான கருப்பொருளைத் தீர்மானம் செய்தபின், அதைச் சிந்தித்து, உருத் திரட்டி, ஒரு வடிவத்துக்குக் கொண்டு வந்து வைத்துக்கொண்ட பிறகுதான் எழுத முடியும். புனைவு என்றால் தொடங்கும் இடமும் வழியெங்கும் தேவைப்படும் விவரங்களும். முடிவைக் குறித்துக் கவலைப்படத் தேவையில்லை. அது தன்னால் வந்து உட்காரும். எழுதும் மனநிலை என்பது மேற்சொன்ன உருத் திரள்வதன் தொடர்ச்சிதான். எழுதப் போவது என்னவென்பது தெளிவாகிவிட்டால் எழுதும் பணி ஒன்றுமே இல்லை. அந்த விவரத் தெளிவுக்கான உழைப்புதான் எழுதுவதன் அடிப்படைத் தேவை. அதுதான் சாகடிக்கும்.

கடவுள் தொடங்கிய இடம் என்ற நாவலை எழுதுவதற்கு மேற்கொண்ட முயற்சிகளைக் குறித்து அ. முத்துலிங்கம் இவ்வாறு எழுதுகிறார்:

‘ஹோமரின் காவியத்தில் ஒடீசியஸ் பத்து வருடங்கள் பயணம் செய்தான் என்று வரும். நான் சந்தித்தவர்களில் அநேகர் அதற்கும் கூடிய கால அவகாசம் எடுத்திருக்கிறார்கள். இந்த நாவலுக்காக அவர்களை நேர்காணல் செய்தபோது பல பிரச்னைகளைச் சந்தித்தேன். ‘அன்று ஆகாயம் என்ன நிறம்?’ என்று கேட்பேன். அவர்களுக்குத் தெரியாது. ‘ஏதாவது பறவைகளைப் பார்த்தீர்களா?’ மறந்துவிட்டது. ‘என்ன உணவு தந்தார்கள்?’ அதுவும் நினைவில் இல்லை. ‘டிக்கெட் பரிசோதகர் என்ன மாதிரி உடை அணிந்திருந்தார்?’ ‘சீருடைதான்.’ ‘என்ன நிறம்?’ ‘தெரியாது.’ ‘உக்கிரெய்ன் கோர்ட்டிலே நீதிபதி தீர்ப்பினை ரஷ்ய மொழியில் எழுதுவார். அதில் கைதி கையெழுத்துப் போட்டால்தான் தீர்ப்பு நிறைவேற்றப்படும். என்ன செய்தீர்கள்?’ என்று பேட்டி கண்டவரிடம் கேட்டேன். தீர்ப்பு வாசகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து, பின்னர் அதைத் தமிழில் வாசித்துக் காட்டி கையெழுத்துப் பெற்றதாகச் சொன்னார்…’

வாசிக்கும்போது இதெல்லாம் இல்லை என்றால் உங்களுக்கு அது வித்தியாசமாகத் தெரியாது. ஆனால் இதெல்லாமும் இருப்பதால்தான் முத்துலிங்கம் தனித்துத் தெரிகிறார். இதைத்தான் விவரத் தெளிவுக்கான உழைப்பு என்று குறிப்பிட்டேன்.

Non fiction எழுதும்போது இந்த விவரங்களை மொத்தமாகச் சேகரித்து முடித்த பிறகுதான் எழுத அமர்வேன். கதை எழுதும்போது அவ்வாறு இல்லை. எந்த இடத்தில் விவரம் வேண்டும் என்று கை எழுதுவதை நிறுத்துகிறதோ, அங்கே தேடத் தொடங்குவேன்.

சமீபத்தில் ஒரு வினோதமான அனுபவம் ஏற்பட்டது. கபடவேடதாரி நாவலின் ஓர் அத்தியாயத்தை எழுதிக்கொண்டிருக்கும்போது பழனி முருகன் சிலையைக் கட்டும் பணியில் இருந்த போகர் ஒரு குறிப்பிட்ட மூலிகையை (மருத்துவ குணம் இருந்தும்) நிராகரிப்பதாக ஒரு காட்சி மனத்தில் தோன்றியது. அவ்வளவுதான். போகர் நிராகரித்திருக்கக்கூடிய மூலிகை எதுவாக இருக்கும் என்று தேடத் தொடங்கினேன். விஷத் தன்மையும் மருத்துவ குணமும் ஒருங்கே உள்ள அனைத்து மூலிகைகளைக் குறித்தும் படிக்க ஆரம்பித்து (இந்த இயல் தொடர்பாக என்னிடம் ஒரு சிறு நூலகமே உண்டு.) மூன்று நாள் எழுத்து வேலை அறவே நின்றுவிட்டது. போகர் நிராகரித்த மூலிகையை சூனியன் பயன்படுத்தி வெற்றியடையப் பார்க்கிறான் என்பதுதான் நான் எழுதவிருந்ததன் சாரம்.

ஒரு சமகால வரலாற்றுச் சம்பவப் பொருத்தம் இதற்கு உள்ளது. அல் காயிதாவுக்கெனப் பிரத்தியேகமாக ஓர் அணு ஆயுதம் தயாரிக்க ஒசாமா பின் லேடன் ஒரு சமயம் விரும்பினார். அப்போது அவர் சூடானில் இருந்தார். யாரோ பெரிய கள்ளச் சந்தை வியாபாரியைப் பிடித்து வட கொரியாவில் இருந்து அதற்கான மூலப் பொருள்களைத் தருவித்து, அணு ஆயுதம் தயாரிக்கத் தெரிந்த வல்லுநர் ஒருவரை சோவியத் ரஷ்யாவில் இருந்து மிகவும் ரகசியமாக சூடானுக்கு வரவழைத்தார். இதற்கெல்லாம் அவர் செலவிட்ட தொகை, பல மில்லியன் டாலர்கள். தவிரவும் மூன்றாண்டுக் காலக் கடும் முயற்சி. அல் காயிதா அப்போது திட்டமிட்டிருந்த மற்ற அனைத்துச் செயல்பாடுகளையும் நிறுத்தி வைத்துவிட்டு இதில் மட்டுமே கவனம் செலுத்தினார். ஆனால் இறுதியில் அந்த மூலப் பொருளைக் கொண்டு ஒரு அலுமினிய டேக்சாவைத்தான் தயாரிக்க முடியுமே தவிர அணு ஆயுதம் தயாரிக்க முடியாது என்று வல்லுநர் சொல்லிவிட்டுப் போய்விட்டார். எவ்வளவு பெரிய தோல்வி! அந்தத் தோல்விக்கு பதிலாகத்தான் நான்கு அலுமினிய டேக்சாக்களைக் கொண்டு அமெரிக்காவின் மீது பின்னாளில் அவர் தாக்குதல் நிகழ்த்தினார்.

ஆனால் சூனியன் ஒசாமாவின் சாயலில் உருவானவன் என்பது தவிர, இதெல்லாம் கபடவேடதாரிக்குத் தொடர்பே இல்லாதவை. நான் தேடியது ஒரு மூலிகை. அதில் விஷம் ஏற்றி அவன் ஒரு பிண்டத்தை உருவாக்கி அதற்கு உயிர் மூச்சளித்து உலவ விடப் போகிறான். அவ்வளவுதான். கிட்டத்தட்ட எண்பது மூலிகைகளைப் பற்றிப் படித்த பிறகுதான் ஜிங்கோ பிலோபாவைக் கண்டுபிடிக்க முடிந்தது. கதையில் அது ஒரு வரியில் வந்து போகும். அந்த மூன்று நாள் உழைப்பு இல்லாவிட்டால் அந்த ஒரு வரி இருக்காது. அந்த ஒரு வரியும் கண்டடைதலும் இல்லாவிட்டால் கதைக்குள் போகரே வந்திருக்க மாட்டார். போகர் வராது போயிருந்தால் பாஷாணக் கட்டு என்ற கருத்தாக்கத்தைத் தொட்டுக் கதை சென்றிருக்காது. போகரைப் போன்ற ஓர் ஆளுமையை எதிரே நிறுத்தி, அவரை வென்று காட்டுவேன் என்று சூனியன் சொன்னால்தான் அவன் இந்தக் கதையின் நாயகனாக முடியும்.

எழுதும் மனநிலை என்பது இத்தகைய தேடுதல்களாலும் அவற்றில் கிடைக்கும் வெற்றியாலும்தான் தக்க வைக்கப்படுகிறது.

ஆனால் நான் நாவல் மட்டும் எழுதுவதில்லை. பிழைப்புக்காகச் செய்வதும் எழுத்து சார்ந்த வேலைதான். அதில் மன நிலைக்கெல்லாம் இடம் கிடையாது. ஒரு நாளைக்கு இவ்வளவு கிலோ எழுத வேண்டுமென்றால் எழுதித்தான் தீர வேண்டும்.

ஒரு சம்பவத்தை மறக்கவே முடியாது. அப்போது நான் நான்கைந்து தொலைக்காட்சித் தொடர்களுக்கு வசனம் எழுதிக்கொண்டிருந்தேன். தினமும் பத்தொன்பது மணி நேரம் வேலை இருக்கும். உடல் நலம் சரியில்லாதிருந்த என் மனைவியின் தாயார் ஒருநாள் இறந்து போனார். காலை ஆறு மணிக்குத் தகவல் வருகிறது. நான் போகிறேன்; நீ அவசர வேலையை மட்டும் முடித்துவிட்டு வந்து சேர் என்று சொல்லிவிட்டு என் மனைவி மட்டும் கிளம்பிச் சென்றாள். என் மனைவியின் தாயாருக்காக நான்கு படப்பிடிப்புகளை ரத்து செய்ய முடியாது. ஒளிபரப்பை நிறுத்த முடியாது. எனவே மாலை வரை ஷூட் செய்வதற்குத் தேவையானவற்றை மட்டும் நான்கு யூனிட்டுகளுக்கும் எழுதி அனுப்பிவிட்டுக் கிளம்பிச் சென்றேன். காரியம் முடித்துத் திரும்பி வந்து இரவு மீண்டும் வேலையைத் தொடங்கினேன். மகிழ்ச்சியல்ல; துயரங்களுக்குக் கூட அனுமதியில்லாத வாழ்க்கை. என்ன செய்ய முடியும்?

இதனால்தான் எழுதும் மனநிலை என்பது எப்போதைக்குமானதாக இருக்க வேண்டும் என்கிறேன். சொந்த சுக துக்கங்கள் என்னவானாலும் அது எழுதுவதை பாதிக்கக்கூடாது. இரக்கமே இல்லாமல் மனத்தை இரண்டாகப் பிளந்து வைத்துக்கொண்டு விடுவது. சொந்த மனம் வேறு; எழுதும் மனம் வேறு. இரண்டுக்கும் தொடர்பு இருக்கக்கூடாது.

சொல்வது சுலபம். ஆனால் இதனைச் சாதிப்பதற்கு இடைவிடாத பயிற்சி தேவைப்பட்டது. பயிற்சி என்பது ஒழுக்கங்கள் சார்ந்தது. ஒரு நாளில் ஆறேழு மணி நேரங்கள் மட்டுமே தொலைக்காட்சித் தொடர்களுக்கு எழுத வேண்டும் என்று முடிவு செய்தேன். இதனால் நான்கைந்து தொடர்களுக்கு ஒரே சமயத்தில் எழுதும் வழக்கத்தை விட்டேன். வருமான இழப்பை நினைக்கவே கூடாது என்று முடிவு செய்த பின்புதான் இதனைச் செய்தேன். இதன் மூலம் திடீரென்று ஒருநாள் எனக்கு ஏழெட்டு மணி நேரம் கூடுதலாகக் கிடைத்துவிட்டது. அதில் சரி பாதி நேரம் படிப்பதற்கு; மீதி நேரம் எழுதுவதற்கு என்று பிரித்து வைத்தேன். இதனைச் செய்யாமல், தொடர்களின் மூலம் வரும் வருமானத்தை மட்டும் கருதியிருந்தால் இந்நேரம் மிகப்பெரிய பணக்காரன் ஆகியிருக்கலாம். விளையாட்டல்ல. இந்தத் துறையில் எனக்கு அவ்வளவு வாய்ப்புகள் வந்தன. நிர்த்தாட்சண்யமாக அனைத்தையும் நிராகரித்துவிட்டு, என் எளிய சொகுசுக்கு பங்கமில்லாத அளவுக்கு வருமானம் இருந்தால் போதும் என்று நிறுத்திக்கொண்டேன்.

காலைப் பொழுதுகளில் வருமான எழுத்து. ஒன்பதில் இருந்து ஒரு மணி வரை. அதில் மிச்சம் விழுவதை மாலை எழுதி முடித்துவிட்டு (ஆறு முதல் ஒன்பது வரை) இரவு ஒன்பது மணிக்குப் பிறகு என் சொந்த விருப்பத்துக்கு எழுதுவது. அது கதையாக இருக்கலாம். கட்டுரையாக இருக்கலாம். வெறும் ஃபேஸ்புக் குறிப்புகளாகவும் இருக்கலாம். அனைத்தையும் நான் ஒன்றாகவேதான் பார்க்கிறேன். just like that அடித்து விடுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. நினைவு தெரிந்து இதுவரை என் ஒரு ஃபேஸ்புக் ஸ்டேடஸ்கூட நேரடியாக எழுதப்படவில்லை. நோட்ஸில் எழுதி, சரி பார்த்து, தேவைப்பட்டால் எடிட் செய்து அதன் பிறகே வெளியிடுகிறேன். நோட்ஸில் எழுதியது திருப்தியாக இல்லாமல் பல நாள், பல மாதங்கள் வெளியிடாமல் வைத்திருக்கும் ஃபேஸ்புக் ஸ்டேடஸ்கள் குறைந்தது நூறாவது என்னிடம் உள்ளன. சுமார் முப்பது சிறுகதைகள், இரண்டு நாவல்கள், பத்தொன்பது குறுங்கதைகள், ஆயில் ரேகையின் இரண்டாம் பாகம் அனைத்தும் இவ்வாறு நிற்கின்றன. இதைத்தான் ஒழுக்கம் என்று வரையறை செய்கிறேன். எழுதி முடிப்பதை அல்ல. இடைவிடாமல் செயல்பட்டுக்கொண்டிருப்பதையும், திருப்தி ஏற்படாத வரை வெளியிடக் கூடாது என்பதையும். இந்தச் செயல்பாடு ஒரு தினசரி வழக்கமாகிவிடும்போது முற்றுப் பெறாதவற்றின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வரும். மொழியின் இண்டு இடுக்குகள் வசப்பட்டுவிடும்போது ஒரு கட்டத்தில் கதையை அதுவே எழுதிச் செல்லத் தொடங்கிவிடும். இது என் அனுபவம்.

இத்தனைக்குப் பிறகும் எழுதியது நன்றாக இல்லை என்று நான்கு பேர் சொல்லிவிட்டால் பொதுவாக யாராக இருந்தாலும் மனம் சோர்ந்துவிடும். எனக்கு அப்படி ஆகாது. ஏனெனில் நான் சொன்ன பயிற்சிக்குப் பிறகு, எழுதுவதன் நோக்கம் எழுதுவது மட்டுமாகத்தான் இருக்குமே தவிர, அடுத்தவர் கருத்தாக அறவே இராது. மீண்டும் இதற்குக் கபடவேடதாரியையே உதாரணமாகக் காட்ட விரும்புகிறேன்.

இந்த நாவலை நான் ஏற்கெனவே இரண்டு முறை எழுத ஆரம்பித்து பல நூறு பக்கங்கள் வரை எழுதி, பாதியில் நிறுத்தினேன். மூன்றாவதாக முற்றிலும் வேறொரு வடிவத்தில் எழுத ஆரம்பித்த பிறகுதான் இதனைத் தொடராக வெளியிட அனுமதித்தேன். ஆரம்பத்தில் இதன் காமிக்ஸ் கதை சொல்லும் வடிவம் நிறையப் பேரைச் சுண்டி இழுத்தது. ஒரு மாய உலகத்தினுள் நுழையும்போது உண்டாகும் மகிழ்ச்சியும் பரவசமும் அவர்களைக் கட்டிப்போட்டது. ஆனால் நான் காமிக்ஸ் கதை எழுதவில்லை. ஒரு மெய் நிகர் உலகத்தை மேலிருந்து பார்ப்பதற்கு வசதியாகத்தான் அம்மாய உலகத்தை உருவாக்கினேன். எனவே, சப்ஜெக்ட் மாய உலகமல்ல என்பது தெளிவாகிவிடுகிறது. இதனால் மாயாவிக் கதை படிக்க மட்டும் விரும்பி வந்தவர்கள் ஏமாற்றமடைந்தார்கள்.

இரண்டாவது, நான் விவரிக்கும் மெய் நிகர் உலகம், யதார்த்த உலகின் ஒரு பகுதியாக இயங்குவது. அன்றாடம் நாம் பேசும் அரசியல், கலை இலக்கிய சமூகச் சூழல் அனைத்துடனும் தொடர்புடையது. ஒரு இந்துத்துவக் கதாபாத்திரம் கிண்டல் செய்யப்படும்போது கைகொட்டி ரசிக்கும் வாசகர்கள், இதர இயக்கங்களின் பிரதிநிதிகளுக்கும் அதுவே நிகழும்போது சோர்ந்து போய்விடுகிறார்கள். தான் அறிந்த ஒருவரைக் குறித்து ஒரு கதாபாத்திரம் பேசும்போது மகிழ்ச்சியடைவதும், தன்னைப் பற்றியே இன்னொரு பாத்திரம் பேசும்போது அதிர்ச்சியடைவதும் இம்மாதிரியான எழுத்தில் நீங்கள் எதிர்கொண்டே ஆகவேண்டியவை. ஏனெனில் ஒரு சரியான எழுத்தாளன் எழுத்துக்கு மட்டுமே கடமைப்படுகிறானே தவிர ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கோ, ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்துக்கோ அல்ல. அவன் வாசக மகிழ்ச்சிக்கும் கடமைப்படுவதில்லை என்னும் எல்லையை எட்டும்போது கதை போரடிக்கிறது என்று சொல்லிவிட்டு நகர்ந்துவிடுவார்கள்.

ஒரு புன்னகையில் இவற்றை நான் கடந்துவிடுகிறேன். ஏனெனில், ஒவ்வொரு அத்தியாயத்தை எழுதும்போதும் எனக்குக் கிடைக்கும் கிளர்ச்சியும் திருப்தியும் எந்தப் புகழுரையாலும் தர இயலாதது. இந்த உலகில் ஒரே ஒருவர்கூட இந்த நாவலைப் பாராட்டாவிட்டால்கூட எனக்கு வருத்தம் இருக்காது. காரணம், இதன் மொத்தச் சிறப்பும், சில்லறைப் பிசகுகளும் எனக்குத் தெரியும். எனக்கே இது பிடிக்காமல் போனால்கூட அடுத்ததைப் பிடித்த விதமாக எழுத முயல்வேனே தவிர, இது பிடிக்காமல் போனதைப் பற்றி வருந்திக்கொண்டிருக்க மாட்டேன். முன் சொன்ன ஒழுக்கப் பயிற்சிதான் இம்மனநிலைக்குக் கொண்டு வந்து சேர்த்தது.

ஒவ்வொரு நாளும் குறைந்தது ஆயிரத்தைந்நூறு; அதிகபட்சம் இரண்டாயிரம் சொற்கள் என்பது என் கணக்கு. இதுதான் அதுதான் என்றில்லை. எதையாவது எழுதுவது. எதில் மனம் நிற்கிறதோ அதனை எழுதுவது. ஆனால் கண்டிப்பாக எழுதிவிடுவேன். ஒருநாள் நாவல் பகுதியை எழுதினேன் என்றால் மறுநாள் குறுங்கதைகள் எழுதுகிறேன். அல்லது ஒரு கட்டுரை எழுதுகிறேன். சிறுகதை எழுதுகிறேன். கதைக்கான குறிப்புகளை எழுதுகிறேன். ஏதோ ஒன்று. ஆனால் எழுதாதிருப்பதில்லை.

ஆனால் நானே வகுத்து வைத்துள்ள எல்லையைத் தாண்டி எதையும் முயற்சி செய்வதில்லை. உதாரணமாக, திரைப்படங்களைப் பற்றி எழுதுவதில்லை என்று வைத்திருக்கிறேன். தத்துவங்களை விரும்பிப் படிப்பேன். மதங்கள் சார்ந்து நிறைய படிக்கிறேன். ஆனால் அதைப் பற்றி எழுத மாட்டேன். சித்த மருத்துவம், சித்தர் இலக்கியங்கள், மொழிபெயர்ப்பு நூல்கள், மத்தியக் கிழக்கு அரசியல் தொடர்பாக விடாமல் படிக்கிறேன். ஆனால் எழுதுவதில்லை. கதைகளுக்குள் அவை இயல்பாக வருமானால் சரி. தனியே எழுதுவதில்லை. சென்ற ஆண்டு, முதல் முறை ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது, மிகப்பெரிய பத்திரிகையின் ஆசிரியர் ஒருவர் நான் வணங்கும் ஒரு சித்தர் பெருமானின் வாழ்வைத் தொடராக எழுத முடியுமா என்று கேட்டார். கணப் பொழுதுகூட யோசிக்காமல் முடியாது என்று சொல்லிவிட்டேன். தெளிவான இலக்கணம் வரையறுக்காவிட்டாலும் குத்துமதிப்பாகவேனும் மொழி சார்ந்த ஒரு கவனக் குவிப்பு தேவைப்படுகிறது. பல்வேறு விதமான துறைகள் சார்ந்து எழுதும்போது மொழியின் லயக்கட்டு குலைந்து விடுவதாக நினைக்கிறேன். எனக்கு நாவலுக்கான மொழிதான் முக்கியம்.

எப்படி யோசித்தாலும், திரும்பத் திரும்பப் படிப்பதும் எழுதுவதும் மட்டும்தான். கவனம் இதிலிருந்து நகராத வரை உள்ளுக்குள் என்ன செய்தாலும் அது எழுத்து சார்ந்ததே.

சும்மா இருந்தாலும்கூட.

Share

12 comments

  • புதிதாக எழுத வருபவர்களும் ஏற்கனவே எழுதிக்கொண்டிருப்பவர்களும் நிச்சயம் வாசிக்க வேண்டிய குறிப்பு சார். மிக்க நன்றி!

  • எனக்கு மிச்சமிருக்கும் நேரத்தினை உங்களது வலைப்பக்கம் தின்று தீர்த்துவிடும் போல…. உங்களது வலைப்பக்கத்திற்கு விரைவில் அடிமை ஆகிவிடுவேன் என்று நினைக்கிறேன்… மிக்க மகிழ்ச்சி…

  • மிகவும் பயனுள்ள கட்டுரை பா.ரா சார். என் சோம்பேறித் தனத்தின் மீது மூஞ்சி அரைவதாக இருக்கிறது உங்களின் இந்தக் கட்டுரை.

  • மிக்க நன்றி sir, எழுத்துக்கு மட்டுமல்ல மற்ற எல்லா துறைகளுக்கும் இந்த decipline and Practice அவசியம் என்று புரிகிறது.

  • பா.ரா அவர்களுக்கு மிகவும் நன்றி. தக்க சமயத்தில் யாரை வந்தடைய வேண்டுமோ அது உங்கள் மூலம் வந்தடைந்தது.

  • மிகவும் அருமையான குறிப்புகள். சுவாரஸ்யமாகவும் சொல்லியிருக்கிறீர்கள் சார். பயன்படுத்திக் கொள்வேன்.

  • உங்கள் எழுத்தின் இரகசியம் என்ன என்று நான் கேட்க விரும்பியது இது. //மகிழ்ச்சியல்ல; துயரங்களுக்குக் கூட அனுமதியில்லாத வாழ்க்கை. என்ன செய்ய முடியும்?// எவ்வளவு யதார்த்தமான வாழ்க்கை பாடம். எழுத்தாளருக்கு கூட இது தான் வாழ்க்கையா?? உங்கள் எழுத்தை இரசிக்கிறேன் சார். அதிலும் உங்களுடைய தனிப்பட்ட எழுத்து சார்ந்த முடிவுகள் வியப்பளிப்பவை.

  • டிசிப்ளின்,டெடிகேஷன் இவற்றுக்கு பொது இலக்கணம் இல்லை.
    நம் விருப்பத்திற்கு கொஞ்சம் சோம்பேறியாக, கொஞ்சம் ஒழுங்கீனமாக(அதாவது இன்றைக்கு இத்தனை மணிக்கு இதைத்தான் செய்வேன் என்பது போல இல்லாமல்) இருப்பதுகூட நம் வரையில் ஒழுங்கு தான்.
    இந்த article படிக்கலாமா விடலாமா என்று நேற்று யோசித்தேன். கபடவேடதாரி குறித்த சில அடிப்படை விஷயங்களை சேர்த்திருப்பதை படிக்கும்போது தேவையானதை தான் படித்திருக்கிறேன் என தோன்றுகிறது.
    நம் கதையை எழுதக்கூடாது. அடுத்தவர் கதையை அடையாளம் மாற்றித்தான் எழுத வேண்டும்.-– இதை சொன்ன அந்த அறிஞர் பேசும்போது மட்டும் தூங்கி விடுங்கள்

  • ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன் கோவை.
    சிறப்பான கட்டுரை… அடிக்கடி . படைப்பூக்கம் குறைந்துவிடும் என் போன்றோருக்கு மிகப் பயனுள்ள தகவல்கள். நன்றி சார்.

  • சிறப்பான பதிவு. பொறுப்பான பதிவு. எழுத்தை மறந்து தவிக்கும் எனக்கு உவப்பான பதிவு.

  • அருமையான பதிவு சார். எழுத நினைப்பவர்களுக்கு ஒழுக்கம் நேர்மை முக்கியம் என்பதை புரிந்து கொண்டேன்.

By Para

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!