மீண்டும் ஒரு நாவலுக்குள் வாழத் தொடங்குகிறேன். எனக்கு இதைத் தவிர வேறொன்றும் தெரியாது. எழுதுவது. அல்லது எழுதுவதைக் குறித்து நினைத்துக்கொண்டிருப்பது. நினைத்துக்கொண்டிருக்கும் நாள்களில் எதையாவது கிறுக்கிக்கொண்டிருக்கிறேன். எழுதத் தொடங்கிவிட்டால் வேறு ஒருவனாகிவிடுகிறேன்.
இப்போது தொடங்கியிருக்கும் இந்நாவல் எனக்குச் சிறிது வினோதமானது. ஏனென்றால் இரண்டு முறை இதனை எழுத ஆரம்பித்துப் பாதியில் நிறுத்தியிருக்கிறேன். இரண்டு முறை ஆரம்பிப்பதோ நிறுத்துவதோ பெரிதல்ல. இரண்டு முறையும் வேறு வேறு வடிவங்களில் முயற்சி செய்திருக்கிறேன். முற்றிலும் மாறுபட்ட மொழி நடை. முதல் முறை முன்னூறு பக்கங்களைத் தாண்டி எழுதிவிட்டு நிறுத்தினேன். இரண்டாவது முறை எண்பது பக்கங்கள். திருப்பி எழுதுவதோ, திருத்தி எழுதுவதோ எனக்கு ஒரு பொருட்டே அல்ல. ஆனால் மேற்சொன்ன இரண்டு வடிவங்களுமே எனக்குத் திருப்தியாகத்தான் இருந்தன. அதையும் மீறி இப்போது வேறொரு வடிவத்துக்கு இந்தக் கதை தன்னைப் பொருத்திப் பார்க்கிறது. சுவாரசியம்தான்.
இதுவரை நான் எழுதிய கதைகளெல்லாம் பெரும்பாலும் என்னைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தன. முதல் முறையாக இந்நாவலில் உங்களைக் குறித்துப் பேசுகிறேன். உங்களை என்றால் இவ்வளவு ஆண்டுகளாக இச்சமூகப் பொதுவெளியில் நான் கண்ட உங்களை. எனது மகிழ்ச்சிகளை, துயரங்களை, கோபத்தை, எள்ளலை, மௌனத்தைத் திரையிடாமல் உங்கள் முன் வைத்து வந்திருக்கிறேன். அதே போல நீங்கள் காட்டும் முகத்தையும் அகத்தையும் உண்மை என்று நம்பி தினமும் கண்டு வந்திருக்கிறேன். இப்பேருலகம் எப்போதும் எனக்கு வியப்பையும் திகைப்பையும் அளித்து வந்திருக்கிறது. எத்தனை விதமான மனிதர்கள். எவ்வளவு கருத்துகள், எத்தனை சிந்தனைப் போக்குகள்!
விமரிசனமற்று அனைத்தையும் கவனிப்பதனாலேயே இதற்குள் இருந்து ஒரு கதையை எடுக்க முடிந்தது. ஒரு கதைதான். ஆனால் ஒரு லட்சம் வாழ்க்கை. எந்த வீட்டுக்குள்ளும் தடையற்று நுழையும் காற்றைப் போல எவர் வாழ்வினுள்ளும் சிறிது நுழைந்து, வாழ்ந்து பார்த்துவிட்டுத் திரும்பும் அனுபவம் பிரமாதமாக இருக்கிறது. அடுத்தவர் கதையை எழுதுவது மற்றவர்களுக்கு இயல்பானதாக இருக்கலாம். எனக்கு இது முற்றிலும் புதிது. இந்நாவலில் நீங்கள் உங்களைப் பார்ப்பீர்கள். உங்கள் நண்பர்களைப் பார்ப்பீர்கள். எதிரிகளைப் பார்ப்பீர்கள். நீங்கள் முற்றிலும் அறியாத வேறு பலரைப் பார்ப்பீர்கள். என் கண்ணால் உங்களைப் பார்க்கவைப்பது என் இலக்கல்ல. உங்கள் கண்வழி என் சிந்தனைக்குள் உங்களை ஊடுருவ வைக்கிறேனா என்பதே சவால்.
இந்த ஆட்டம் எனக்கு சுவாரசியமாக இருக்கிறது. ஒரு புராதனமான மாயாஜால காமிக்ஸ் கதை சொல்லும் உத்தியில் ஒரு நவீன கதை. ஆனால் உங்களுடையதுதான். அதில் சந்தேகமில்லை.