ByngeThamizh அறிவித்திருந்ததை ஏற்றுக் கேள்விகள் அனுப்பிய அனைத்து வாசக நண்பர்களுக்கும் நன்றி. சுமார் இருநூறு கேள்விகள் வந்திருந்தன. அனைத்தையும் படித்து, கூடியவரை அந்தப் பக்கத்திலேயே அவற்றுக்கு பதில் சொல்லியிருக்கிறேன். சில கேள்விகளுக்கு இன்னும் பதில் எழுதவில்லை. நேரமின்மையே காரணம். ஓரிரு நாள்களில் எழுதிவிடுகிறேன்.
ஆனால் இன்று பரிசுக் கேள்வி பதிலை அறிவித்துவிட வேண்டும் என்று சொன்னார்கள். ஐந்து சிறந்த கேள்விகளைத் தேர்ந்தெடுத்து, அவற்றுக்கு மட்டும் வீடியோவில் பதில் சொல்லி, அதிலொன்றைப் பரிசுக்குரியதாகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது உத்தரவு.
விதிகளுக்கு உட்படாதது நமது பிறவிக் குறைபாடு. என்ன செய்ய? ஐந்து கேள்விகள் என்று அவர்கள் சொன்னாலும் ஆறு சிறந்த கேள்விகளை நான் தேர்ந்தெடுத்திருக்கிறேன். அவற்றுக்கு எழுதியுள்ள பதில்களைப் பாருங்கள். இதை எப்படி நான் வீடியோவில் பேச முடியும்? நான் அவ்வளவு தெளிவான, சிறந்த சொற்பொழிவாளனல்ல. எனவே எனக்குத் தெரிந்த எழுத்து மொழியிலேயே பதில் சொல்லியிருக்கிறேன்.
இந்த ஆறு கேள்விகளில் மிகச் சிறந்ததென ஜெயச்சந்திர ஹஷ்மியின் கேள்வியைத் தேர்ந்தெடுக்கிறேன். அவருக்கு byngethamizh ரூபாய் ஆயிரம் பரிசளிக்கக் காத்திருக்கிறது. மறுமொழியில் உள்ள அந்தக் கேள்வி பதில் லிங்க்கில், உங்கள் வினாவுக்குக் கீழேயே உங்களுடைய வங்கிக் கணக்கு விவரங்களைத் தந்தால் அவர்கள் பரிசுத் தொகையை அனுப்பிவிடுவார்கள்.
ஆனால் என்னைப் பொறுத்தவரை இந்த ஆறு கேள்விகளைக் கேட்டவர்களுக்கும் பரிசு தருவதே சரி. எனவே அவர்கள் தரும் ஆயிரம் ஒரு பக்கம் இருக்கட்டும். இந்த ஆறு நண்பர்களுக்கும் கபடவேடதாரி நூலாக வெளிவரும்போது (ஜீரோ டிகிரி பப்ளிஷிங், ஜனவரி 2022) என் பிரத்தியேகப் பரிசாகத் தருவேன்.
கலந்துகொண்டு கேள்விகள் கேட்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. இனி, சிறந்த ஆறு கேள்விகளும் அவற்றுக்கு என்னுடைய பதில்களும்:
—
1) எழுதிய பல நூறு பக்கங்களை டெலிட் செய்ய நேரும்போது ஏன் அப்படிச் செய்ய நேர்ந்தது என எப்பொழுதாவது நினைத்ததுண்டா? திருப்தி இல்லை; அதனால் டெலிட் தவிர வேறு வழியிருக்கவில்லை என்றாலும், பல நேரங்களில் அப்படிச் செய்ய நேர்கையில் என்ன நினைத்துக்கொள்வீர்கள்?
கோபி சரபோஜி
எப்போதும் ஏராளமாக டெலிட் செய்ய வேண்டியிருக்காது. சில சமயம் அப்படி ஆகிவிடும். என்னிடம் ஒரு பிரச்னை உண்டு. எழுதிக்கொண்டிருக்கும்போது பாதியில் நிறுத்தினால் விட்ட இடத்தில் இருந்து இரண்டு மூன்று நாள் இடைவெளிக்குப் பிறகு திரும்பத் தொடங்கத் தெரியாது. மிகவும் தடுமாறிவிடுவேன். மீண்டும் முதலிலிருந்து ஆரம்பிப்பேன். இதனாலேயே தொடர்ந்து எழுதி முடிக்கும் மனநிலை, சூழல், உடல் நிலை அமையும்போது மட்டுமே பெரிய பணிகளைத் தொடுவேன். அப்படியும் எழுதியதில் திருப்தி வராமல் டெலீட் செய்யத் தோன்றினால் அது பற்றி யோசிக்கவோ வருந்தவோ மாட்டேன். திரும்பத் திரும்ப அழித்துவிட்டு எழுதுவது எனக்குப் பிடிக்கும். யதியின் இறுதியில் வரும் மயானக் காட்சியை மட்டும் சுமார் அறுபது விதமாக எழுதிப் பார்த்திருக்கிறேன். இறவானில், ஹராரி சிம்பொனியை அரங்கேற்றும் கனவுக் காட்சிக்கு என்னிடம் 17 வர்ஷன்கள் இருந்தன. அனைத்திலிருந்தும் சில வரிகளை எடுத்துத் தொகுத்துத்தான் அந்த அத்தியாயத்தை இறுதி செய்தேன்.
—
2) எழுத்துதான் வாழ்வு என்றாலும் ஏதோ ஒரு நொடியில் அந்தந்த வயதுக்கான, வருடங்களுக்கான விஷயங்களை miss பண்ணியதாக நினைத்ததுண்டா?
அனுராதா பிரசன்னா
இந்தக் கேள்விக்கு நெடு நேரம் மிகவும் நேர்மையாக யோசித்துப் பார்த்தேன். இல்லை என்கிற பதில்தான் உறுதியாகத் தோன்றுகிறது. கல்லூரி நாள்களில் செய்த அத்துமீறல்களைக் கூட ஆர்வத்துடன் செய்த நினைவில்லை. நான் ஒரு மக்குப் பையன் என்கிற தாழ்வுணர்ச்சிதான் என்னைப் பொறுக்கித்தனங்களை நோக்கித் தள்ளுகிறது என்பதை உணர்ந்தேதான் அவற்றைச் செய்தேன். அதனால்தான் கணப் பொழுதில் அனைத்தையும் உதறிவிட்டு ஆன்மிகத்துக்குள் ஒளிந்துகொள்ள இடம் தேடி ஓட முடிந்தது. அதில் எனக்கு அறியக் கிடைத்த அனைத்துமே என் தகுதிக்கு அப்பாற்பட்டவை என்று இப்போதுவரை தோன்றுகிறது. அதனால்தான் அடங்கி ஒடுங்க முடிந்தது. நான் மூச்சுவிட்டுக்கொண்டிருக்க எழுத்துதான் வழி என்று அங்கே உத்தரவாகிவிட்ட பிறகு மறு சிந்தனையே இல்லை. எழுத ஆரம்பித்த மிகத் தொடக்க காலத்திலேயே அசோகமித்திரனை சந்தித்துவிட்டேன் என்பதால் இது அகங்காரம் கொள்ள இடமே இல்லாத பாதை என்ற தெளிவு உண்டானது. என்ன ஒன்று; இன்னும் சிறிது முன்னால் தொடங்கியிருக்கலாம். இன்னும் நிறைய படித்திருக்கலாம். காலத்தை மிகவும் வீணடித்திருக்கிறேன். அந்த ஒரு வருத்தம் தவிர வேறு குறையே இல்லை.
—
3) யதி, இறவான், கபடவேடதாரி மூன்று படைப்புகளிலும் முக்கியக் கதாபாத்திரங்கள் அறிவும் ஞானச் செருக்கும் கொண்டவர்களாக அமைந்தது திட்டமிட்டதா? தற்செயலா?
அபிநயா ஶ்ரீகாந்த்
திட்டமிட்டு இதையெல்லாம் செய்ய முடியாது. எல்லாம் அமைவதுதான். எப்படியோ எல்லா கதாபாத்திரங்களிலும் பகுதியளவு நான் இருந்துவிடுகிறேன் அல்லவா! அதைத் தவிர்க்க முடியாது. நான் என்னவாக இல்லையோ அதைச் சில பாத்திரங்களின் மீது ஏற்றிப் பார்க்க மனம் விரும்புகிறது என்று நினைக்கிறேன்.
—
4) எளிதில் திருப்தியடையச் செய்யும் தொலைக்காட்சித் தொடருக்கான எழுத்தை மேற்கொள்ளும் அதே நாளில் ரசனை மிகு இலக்கியப் புதினங்களையும் கால அட்டவணைக் கிரமத்தில் எழுதுவதாக ஒருமுறை பதிவிட்டிருந்தீர்கள். முதலாமதன் அயற்சியோ மந்தமோ, இரண்டாவதை பாதிக்காமல் எப்படித் தற்காத்துக்கொள்கிறீர்கள்?
ஜினோவி
தொலைக்காட்சித் தொடர்களுக்கு எழுதுவது என் ஜீவனோபாயம். அங்கே நான் எழுத்தாளனல்ல. தொழிலாளி மட்டுமே. தவிர, காதல் கொண்டு மனத்தைப் பறிகொடுக்கும் அளவுக்கு இந்தத் தொழில் பேரழகியல்ல. தொடர்களுக்கான கதை உருவாக்கங்களில் நான் பங்குபெறுவதில்லை. கதை அல்லது திரைக்கதை எழுதுவதுமில்லை. தரப்படும் காட்சிகளை வசன வடிவத்தில் மாற்றித் தருகிறேன். அவ்வளவுதான். எனது மொழி வங்கியின் ஒரு சதவீதம்கூட இதற்குப் பயன்படுவதில்லை. மொத்தமே முன்னூறு சொற்களுக்குள் தொடர் வசனங்களை அடைத்துவிட முடியும் என்று நினைக்கிறேன். கடுமையான வேலை நெருக்கடி நாள்களில் உடல் சோர்வு இருக்குமே தவிர இது மனத்தளவில் எந்த பாதிப்பும் தராது. கொலைக் காட்சி, மரணக் காட்சி, திருமணக் காட்சி, முதலிரவுக் காட்சி, குடும்பம் பிரியும் காட்சி, சேரும் காட்சி என்று எதை எழுதினாலும் உணர்ச்சிவசப்பட வாய்ப்பே இருக்காது. ஏனெனில் அனைத்தையும் குறைந்தது ஐந்நூறு முறை ஏற்கெனவே எழுதியிருப்பேன். அதே முன்னூறு சொற்களுக்குள் அவை அடங்கியிருக்கும். எனவே, வேலை முடிந்ததும் என் விருப்பமான செயல்பாடுகளில் ஈடுபட இது ஒரு தடையாகவே இராது. ஒரு நான்கு பக்கம் அசோகமித்திரனையோ, ராமசாமியையோ, பஷீரையோ படித்துவிட்டு எழுத ஆரம்பித்துவிட்டால் நான் வேறு ஆள்.
—
5) இறவான் நாவல்ல, பேருண்மைகள் சிறுவர்களுக்கு எப்போதும் தரிசனமாக அகப்படுகின்றன. பெரியவர்களால் தரிசனங்களின் மயிர்க்கூச்செரியச் செய்யும் பிரகாசத்தைத் தாங்க முடிவதில்லைன்னு சொல்லியிருக்கிங்க. அப்படி உங்களால் தாங்க முடியாத பிரகாசம் என்ன?
அன்பின் ஷிஜோ
இந்த அன்பு, பேரன்பு, நிபந்தனையற்ற அன்பு, கட்டுக்கடங்காத பாசம், உயிரனைய உறவு எல்லாமே அழகிய மீபுனைவுகள் என்பதை உணர்ந்தறிந்ததைச் சொல்வேன். நம்மை நாமேகூட நூறு சதம் விரும்ப முடியாது என்பதுதான் உண்மை. திரும்பத் திரும்ப இது எனக்கு நிரூபிக்கப்பட்ட தருணங்களை என்னால் சரியாக எதிர்கொள்ள முடிந்ததில்லை. பல பெரிய தோல்விகளை, அவமானங்களைச் சந்தித்திருக்கிறேன். வேறொருவர் என்றால் எழுந்திருக்கக்கூட முடியாத அளவுக்கு மகத்தான தோல்விகள். ஆனால் அப்போதெல்லாம் அநாயாசமாக எழுந்து வந்திருக்கிறேன். அதே சமயம் யுக யுகாந்திரமாகத் தொடரப் போவதென நினைக்கும் உறவுகள் கணப் பொழுதில் முறிந்து போய்விடுகின்றன. எல்லாமே அன்பில் ஊறிய தோஷம்தான்.
—
6) எழுத்தைப் பொறுத்தவரையில் ஒரு எழுத்தாளனுக்குக் கிடைக்கக்கூடிய ஆகப் பெரிய விடுதலை எது? ஆகப் பெரும் சிறை எது?
ஜெயச்சந்திர ஹஷ்மி
எனக்கு இதற்குப் பொதுவான பதில் சொல்லத் தெரியவில்லை. என்னை மட்டும் முன்வைத்துச் சொல்லவா? எழுதுவதை ஒரு சுத்திகரிப்பு நடவடிக்கையாகவே நான் பார்க்கிறேன். என் கசடுகளை என்னால் முற்றிலுமாகப் பெருக்கித் தள்ள முடியுமோ முடியாதோ. என் கசடுகள் என்னென்ன என்று அறிவதற்கு எழுத்து எனக்கு உதவுகிறது. என் குறைகளை நான் பூரணமாக அறிந்தவன் என்பது எவ்வளவு பெரிய விடுதலை தெரியுமா? இதை விவரிக்கவே முடியாது. அவ்வளவு ஆசுவாசம் தரும். ஆனால் என்ன பிரச்னை என்றால், அந்த ஆசுவாசம் குற்ற உணர்வு என்னும் ஒரு பை-ப்ராடக்டுடன் வரும். எந்தக் குற்ற உணர்வில் இருந்து தப்பிப்பதற்காக ஆன்மிகத்தைத் தேடி ஓடினேனோ, எந்த ஆன்மிகம் என்னைப் பொருந்தாதவன் என்று இந்தப் பக்கம் திருப்பிவிட்டதோ, இந்த எழுத்தும் அந்தக் குற்ற உணர்வை அதன் மினுமினுப்பு குலையாமல் அப்படியேதான் பராமரிக்கிறது. இதைக் காட்டிலும் ஒரு சிறைப்படுதல் இருக்க முடியுமா? ஒரே ஒரு வித்தியாசம், காரணம் புரியாத துக்கம் என்று எனக்கு இன்று ஏதுமில்லை. என் அனைத்துத் துயரங்களுக்கும் எனக்குக் காரணம் தெரியும். அது, எழுதுவதன் மூலம் நான் கண்டறிந்ததே.