பாபர் நாமா

முகலாய மன்னர் பாபரின் நினைவுத் தொகுப்பு நூலான பாபர் நாமா தமிழில் வெளியாகியிருக்கிறது. இதன் ஆங்கில வழித் தமிழாக்கத்தைச் செய்திருப்பவர் என்னுடைய தந்தை.

2007ம் ஆண்டு இறுதியில் (நான் கிழக்கில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது) பாபர் நாமாவைத் தமிழில் கொண்டு வரலாம் என்று முடிவு செய்து அவரிடம் பொறுப்பை ஒப்படைத்தேன். உண்மையில் எனக்கு இதனை ரூமி செய்யவேண்டும் என்பதுதான் அப்போது விருப்பமாக இருந்தது. அவர் வேறு பல பணிகளில் அப்போது மும்முரமாக இருந்தபடியால் என் தந்தையிடம் கொடுத்தேன். சாகதேய துருக்கி மொழியில் எழுதப்பட்டு, ஆங்கிலத்துக்குச் சென்று அங்கிருந்து தமிழுக்கு வருகிறபடியால் சேதாரம் குறித்த அச்சம் இருந்தது. தவிரவும் பாபர் காலத்து ஊர்கள், பெயர்கள், உச்சரிப்பு போன்றவை அநேகமாக முழுமையாகவே இன்று மாறிவிட்டிருக்கின்றன. இன்றைய வாசகர்களுக்குக் கூடியவரை குழப்பமில்லாத வாசிப்பு அனுபவத்தை, பிழையற்ற மொழியாக்கத்தைத் தரவேண்டும் என்ற பொறுப்புணர்வுடன் இப்பணி ஆரம்பிக்கப்பட்டது.

பாபர் எழுத்தாளரல்லர். அவரது சொற்றொடர்கள் எளிமையானவையல்ல. அவர் டைரிக்குறிப்பு போலத்தான் இதனை எழுதியிருக்கிறார் என்றபோதிலும் விறுவிறுவென்று படித்துச் சென்றுவிட முடியாது. தவிரவும் அந்தப்புர அனுபவங்களை மட்டும் சரித்திரமாக்கிவிட்டுச் செல்லும் உத்தேசம் அவருக்கு இருக்கவில்லை. நம்ப முடியாத பெரும் தோல்விகளாலும் ஏமாற்றங்களாலும் நயவஞ்சகங்களாலும் ஆன தனது வாழ்க்கையை நம்பிக்கை என்னும் ஒற்றை மந்திரத்தின் துணையுடன் மாற்றியமைத்த சாதனையாளர் அவர். பார்த்துப் பார்த்து ஒரு வீடு கட்டுவது போலத்தான் முகலாய சாம்ராஜ்ஜியத்தை அவர் இந்தியாவில் நிறுவினார். அப்படி ‘நிறுவிய’ தருணத்துக்கு முந்தையக் கணம் வரை வாழ்வில் அவர் எதிர்கொண்ட சவால்களை, சந்தித்த மனிதர்களை, பயணம் செய்த இடங்களை, கண்ட போர்க்களங்களை, கையாண்ட யுத்த நெறிகளை, தந்திரங்களை, நுணுக்கங்களை, பயணங்களின்போது கடந்த நிலப்பரப்புகளை, அங்கெல்லாம் வாழ்ந்த மக்களை, அவர்களது வாழ்வனுபவங்களை, கலாசாரங்களை, நம்பிக்கைகளை – ஒன்றையும் அவர் விடவில்லை. பாபரின் ஆப்சர்வேஷன் அசாத்தியமானது. அதே சமயம் அவரது வெளிப்பாட்டு முறை கரடுமுரடானது.

தமிழில் இவை அனைத்தையும் எளிதாகப் புரியும் விதத்தில் கொண்டு வருவது மொழிபெயர்ப்பில் மிகப்பெரிய சவாலாக இருந்தது. கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகாலம் என்னுடைய தந்தை இதனை ஒரு தவம் போலச் செய்தார். அவருக்கு 77 வயது. அத்தனை வேகமாக எழுத முடியாது. அவர் பிறவிக் கைவல்யர் (என்றால் இங்கே கைவலிக்காரர் என்று பொருள்). பல சமயம் (அநேகமாக சரி பாதி) அவர் சொல்லச் சொல்ல என் அம்மாதான் இதனை எழுதினார். நாலைந்து டிக்‌ஷனரிகளும் சரித்திரப் புத்தகங்களுமாகவே அந்நாள்களில் அவரை நான் எப்போதும் பார்த்தேன். போனில் அழைத்தால்கூட பாபரைக் குறித்துப் பேசாதிருக்க மாட்டார். எனக்கே போரடிக்குமளவுக்கு அவர் பாபருடன் இரண்டறக் கலந்துவிட்டிருந்தார்.

ஆனால் பாபர் பட்ட கஷ்டங்களை அவர் அதன்பிறகுதான் படவேண்டியதானது. கிழக்கு போன்ற ஒரு நிறுவனத்தில் காரணமற்ற தாமதங்கள் என்பது இராது. ஏனெனில் மிகவும் திட்டமிட்டு, மிகவும் சரியாகவே எந்தப் பணியையும் மேற்கொள்ளும் நிறுவனம் அது. கிழக்கின் ஒழுங்கை மீறியும் பாபர் நாமா புத்தகமாவது தள்ளிக்கொண்டே போனதன் காரணம், இதன் எடிட்டிங் முடியாமல் இழுத்துக்கொண்டே போனதுதான்.

முதலில் நான் கொஞ்சம் முயற்சி செய்தேன். கட்டுப்படியாகவில்லை. மற்ற வேலைகள் கெடும் என்று தோன்றி வேறொருவரிடம் தந்தேன். இன்னும் ஓரிரு கரங்களுக்கு பாபர் மாறிக்கொண்டே இருந்தாரே தவிர தேர் நிலையிலிருந்து புறப்படவேயில்லை. வரிக்கு வரி, பக்கத்துக்குப் பக்கம் அடிக்குறிப்புகள் என்பது எந்த எடிட்டரையும் அச்சம் கொள்ளச் செய்யும். அடிக்குறிப்புகளை மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்ப்பது எளிய பணியல்ல. தவிரவும் மொழி சார்ந்த பிரச்னைகள். மொழியாக்கத்தின்போது கவனக்குறைவால் விடுபட்டிருக்கக்கூடிய வரிகள், பத்திகள், பக்கங்கள். (சுமார் 700 பக்கங்கள்!)

இவையெல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிடும்விதமாக, என் தந்தை கையால் எழுதியதை (கையெழுத்துப் பிரதியாக சுமார் 1500 பக்கங்கள்) கம்போஸ் செய்ததில் ஒரு குறிப்பிட்ட பகுதி காணாமலே போய்விட்டது. பக்கங்கள் காணாமல் போவது பாபரின் ராசி. மூலத்திலேயே பாபர் மசூதி குறித்த பக்கங்கள் கிடையாது.

அனைத்துப் பிரச்னைகளும் தீர்ந்து, மொத்த கச்சாப்பொருளாக இதனைச் சேர்த்துக்கட்ட இன்னும் இரண்டாண்டுகள் ஆயின. அதற்குள் நான் கிழக்கிலிருந்து வெளிவந்திருந்தேன். கிழக்கிலிருந்து வெளியேறி, மதி நிலையத்துக்காகப் பணியாற்றத் தொடங்கியிருந்த என் நண்பர் பார்த்தசாரதி, இதனைத் தான் எடுத்துக்கொண்டு முடிப்பதாகச் சொன்னார். கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் இதில் அவர் உழைத்தார். இந்நூல் வெளிவருவதன் முக்கியத்துவத்தை உணர்ந்த நண்பர் அப்பு (ட்விட்டரில் @zenofzeno) ஆங்கில மூலத்துடன் வரிவரியாக ஒப்பிட்டுப் பார்த்து விடுபட்ட இடங்களை நிரப்பும் பொறுப்பை மனமுவந்து ஏற்றார். பார்த்தசாரதி, அப்பு இருவரின் உழைப்பின்றி இந்நூல் இன்று சாத்தியமில்லை.

பாபர் நாமாவின் தமிழ் மொழிபெயர்ப்பு இன்று வெளியாகிவிட்டது. ஐந்து வருடங்களாக அநேகமாக தினமும் என் தந்தை பாபர் நாமா என்ன ஆச்சு என்று கேட்டுக்கொண்டிருந்தார். வரும், வரும் என்பதற்குமேல் ஒரு வார்த்தைகூட நான் சொன்னதில்லை. ஏனெனில், இப்பணி முடியும், இந்நூல் வரும் என்னும் நம்பிக்கை எனக்கே அநேகமாக வடியத் தொடங்கியிருந்தது. என் அனுபவத்தில் இதைவிடக் கடினமான ஒரு நூலை நான் கண்டதில்லை. மொத்தமாக, புத்தகமாக இப்போது வாசித்துப் பார்க்கும்போதுதான் அப்பா எப்பேர்ப்பட்ட காரியத்தைச் செய்திருக்கிறார் என்ற பிரமிப்பு வருகிறது. இதனை மொழிபெயர்த்த பிறகு அவர் ராமச்சந்திர குஹாவின் India after Gandhiஐ மொழிபெயர்த்து முடித்து [பாகம் 1பாகம் 2] அது வெளிவந்து பல சுற்றுகள் விற்றேவிட்டது. அதைக் காட்டித்தான் இதை அவருக்கு மறக்கடித்துக்கொண்டிருந்தேன். இனி அதற்கு அவசியமில்லை.

பாபர் நாமா என்பது ஒரு மன்னரின் சுயசரிதம் மட்டுமல்ல. ஒரு காலக்கட்டத்தின் எழுத்தாலான படப்பிடிப்பு. தமிழுக்கு இது வந்திருப்பது என்னைப் பொறுத்தவரை ஒரு முக்கிய நிகழ்வேயாகும். வாசிக்கும்போது நீங்கள் அதை உணரலாம்.

பாபர் நாமா – தமிழில் : ஆர்.பி. சாரதி – வெளியீடு : மதி நிலையம், எண் 2/3 4வது தெரு, கோபாலபுரம், சென்னை 86. தொலைபேசி : 044-28111506. மின்னஞ்சல் : mathinilayambooks@gmail.com . விலை ரூ. 400

*

இந்நூலையும் மதி நிலையத்தின் மற்ற நூல்களையும் இணையத்தில் வாங்க இப்போதைக்கு வழி இருப்பதாகத் தெரியவில்லை. ஏற்பாடு செய்துகொண்டிருக்கிறார்கள். எப்போது முடியும் என்று தெரியவில்லை. ஆனால் அனைத்து புத்தகக் கடைகளிலும்  நாளை முதல் கிடைக்கும்.

Share

9 comments

  • பள்ளிக்கூடத்தில் இதை எழுதி வாங்கிய மதிப்பெண் நினைவுக்கு வருகின்றது. 25 வருடத்திற்குப் பிறகு பாபர் நாமா என்று படிக்கின்றேன். இதற்கு உழைத்த உங்கள் தந்தையின் உழைப்புக்கு என் வாழ்த்துகள். அதை விட மூல ஆங்கிலத்தை இறுதியாக ஒப்பிட கொடுத்து முழு உருவமாக கொண்டு வந்தமைதான் ஆச்சரியம்.

    செய்வதை திருந்தச் செய் என்பது இது தானோ?

  • மகன் தந்தைக்காற்றும் உதவி தந்தை மகனுக்காற்றும் உதவி இரண்டையும் சேர்த்துக் கண்டோம். பாபர் நாமா புத்தக விழாவில் இம்முறை பட்டையைக் கிளப்பும் என நினைக்கிறேன்.

  • ஒரு தலைசிறந்த மொகலாய மன்னரின் வரலாற்றை தற்கால மக்கள் படிக்க செய்திருப்பதே ஒரு சிறப்பான காரியம். தங்கள் தந்தை ஒரு மொழிபெயர்ப்பாளர் என்ற செய்தி ஆச்சர்யம் அளிக்கிறது.(ஒரு வேளை அவர் மகனின் தூண்டுதலால் அப்படி ஆகியிருக்கிறாரோ). சரித்திரத்தை எழுதுவதும் மொழிபெயர்ப்பதும் ஒரு சிக்கலான, சவாலான வேலையாகும். படிக்க மிகுந்த ஆர்வமாக உள்ளது. விரைவில் படித்து விடுவேன்.

  • உங்கள் தந்தையாரின் உழைப்பு அசாத்தியமானதாக தெரிகிறது. ஒரு விதத்தில் என்னை கூச்சம்கொள்ள வைக்கிறது. இது அவரே எழுதினது என தெரியாது. யாரும் “புலவர்கள்” எழுதிருக்கலாம் என்றே நினைத்திருந்தேன்.
    புத்தகம் விலை சற்று விற்பனைக்கு deterrentஆக இருக்ககூடும் என கருதுகிறேன். வொர்த் தான். அதில் டவுட்டில்லை.

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி