யதி – வாசகர் பார்வை 9 [ரஞ்சனி பாசு]

நாம் அனைவரும் இப்பூவுலகில் பயணிகளே.. பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையே நிகழும் பயணம் ஒவ்வொருவருக்கும் தனித்துவமானது. ஒரே இலக்கை அடைவதற்கு அவரவருக்கான வழித்தடம் வேறு.. ஒரே பாதையில் பயணித்தாலும், அவரவர் இலக்குகள் வேறு.. ஆனாலும் எல்லோரும் பயணப்பட வேண்டும். ஒருவரின் பயண அனுபவம் போல் பிறிதொன்று இல்லை என்ற பிரத்யேகத் தனித்தன்மை தான் மனித வாழ்வின் சுவாரஸ்யம். யதி யை வாசிக்க தூண்டியதே –துறவறம் எனும் ஜீவநதியின் சத்தியத்தடம் தேடிச் செல்லும் பயணம் என்ற அறிமுக வாசகம் தான்.
“கதிரவனால் உலகம் இயக்கம் பெறுகிறது. ஆனால் கதிரவன் நேரடியாக எதிலும் ஈடுபடுவது இல்லை. அவன் முன்னிலையில் அனைத்தும் நடைபெறுவது போல, ஆன்மா ஒரு சாட்சியாக இருக்க, உயிர் உலகின் இன்ப துன்பங்களை அனுபவிக்கிறது. ஆன்மா அனைத்தையும் கடந்தது என்றாலும், அதுவே உடம்பின், மனதின் இயக்கங்களாக திகழ்கிறது. தனிநபர் நிலையில் மட்டுமல்லாமல், பிரபஞ்ச நிலையிலும் அனைத்திற்கும் ஆதாரமான ஆன்மாவே இறைவன்.” ப்ரஜ்ஞானம் ப்ரஹ்ம” என்னும் சொற்றொடர் இதைத் தெளிவாக்குகிறது. இந்த உண்மையை அனுபூதியில் உணர்பவன், மரணமிலாப் பெருவாழ்வை பெறுகிறான் – இவ்வாறு ஐதரேய உபநிஷதம் கூறுகிறது. இதையே ‘பிரபஞ்சத்தைப் படைத்த இறைவன், உலகத்தினர் தமக்குள் சண்டையிட்டுக் கொள்வதையோ அல்லது சமரஸம் செய்து கொள்வதையோ, ஒதுங்கிய நிலையில் தன் கை விரல் நகத்தைச் சீவியவாறு பார்த்துக் கொண்டிருக்கிறான்’ என்று சென்ற நூற்றாண்டின் முக்கியமான எழுத்தாளர் ஜேம்ஸ் ஜாய்ஸ் கூறுகிறார். நம் வாழ்க்கையின் நிகழ்வுகளை அவ்வாறாக எட்ட நின்று பார்ப்பதற்கு யதி உதவுகிறது.

விமல் என்ற துறவிதான் கதைசொல்லி. அவருடன் பிறந்த மூன்று மூத்த சகோதரர்களும் இவரும் எவ்வாறு வீட்டை விட்டு வெளியேறி, தங்களின் மனத்தேடலை நோக்கிப் பயணித்தார்கள் என்பதுதான் யதி. சம்பவங்கள் முன்னும் பின்னும் காலவரிசை கலைந்து இருந்தாலும், விமல் என்ற கதாபாத்திரத்தின் வழி சொல்லப்படுவதால், வாசகர் எளிமையாகப் பின்பற்ற முடிகிறது. திருவிடந்தை திருத்தலமாகப் பிரபலமானது. அது எளிய பிராமணக் குடும்பத்தின் வசிப்பிடமாக, 40 வருடத்திற்கு முந்தைய கடலோர கிராமமாக இருந்த சித்திரத்தை மிக அழகாகக் கண்முன் வரைந்துள்ளார் பா.ராகவன். சஞ்சய் காந்தியின் மரணம், ரஜனீஷ் பிரபலமானது, பெங்களூரில் இஸ்கான் உருவானது என்று அவ்வப்போதைய வரலாற்றுத் தகவல்களுடன் பிணைக்கப்பட்டுள்ளது நாவல். நான்கு சகோதரர்களின் எளிய இளமைக்காலம், பதின்மத்தில் ஏற்படும் மனத்தடுமாற்றங்கள், கேள்விகள், அவர்களுக்குள் நடைபெறும் உரையாடல்கள், அவரவர் வீட்டை விட்டு வெளியேறும் கணம் என்று கண்முன் உயிர்ப்புடன் உலவச் செய்தது சிறப்பு. விஜயின் சிறுவயது முதிர்ச்சி, அது விமலிடம் ஏற்படுத்தும் வியப்பு, விஜயைப் பின்பற்றி வினய் வெளியேறுவது, விஜய் மற்றும் வினயை தேடும் கணத்தில், விமல் வெளியேறுவது, யாரும் எதிர்பாரா பொழுதில் வினோத் வெளியேறுவது என அவரவருக்கான நியாயங்களுடன் கதைப்போக்கு அமைகிறது. மூவரின் மனதிலும் புகுந்து சென்றவளாய் சித்ரா. சொரிமுத்துவின் பாத்திரப்படைப்பு விசித்திரமானது. விஜய், வினய், விமல் மூவரின் வாழ்விலும் வந்து போனாலும், அன்றாட வாழ்விற்கு அப்பாற்பட்ட மாந்தரீக உலகின் பிரதிநிதியாக அவரைக் காணலாம். வினயின் அலைச்சல் வாசகருக்கே அலுப்பூட்டுவதாய் இருக்கிறது. கேசவன் மாமா அக்காவிற்கு பணி செய்வதும், நால்வருக்காக வருந்துவதுமாக தன் வாழ்நாளைக் கழிக்கிறார். சித்ராவின் வாழ்க்கை எளியது. வாசகரின் மென்முனையை அசைப்பது. ஆனால், இந்த நால்வரின் தேடலையும், தன் அமைதியான, அழுத்தமான செயல்பாட்டால் எதிர்கொள்ளும் அம்மாதான் துறவின் உச்சத்தைக் கண்டடைகிறாள். சேஷாத்ரி சுவாமிகள் அதிஷ்டானத்தில் கிடைத்த நான்கு பொம்மைகள் அம்மாவின் பிறவியின் நோக்கத்தை அவளுக்கு உணர்த்துகின்றன. சொற்ப வருமானத்தில் நிறைவாய் குடித்தனம் செய்து, நான்கு குழந்தைகளின் பிரிவு, கணவரின் மரணம் அனைத்தையும் நடுத்தர வயதுக்குள் சந்தித்து, இறுதிவரை குடும்ப ரகசியங்களை வெளிவிடாமல் வாழ்ந்து தனக்கு யார் கொள்ளியிட வேண்டும் என்பது வரை தெளிவாகச் சொல்கிறாள். ரிஷிமூலம் பார்க்கக் கூடாது என்பதற்கிணங்க, நால்வரின் பிறப்பு ரகசியத்தின் பெட்டியைத் திறக்கும் சாவியைக் கடைசிவரை ஆசிரியர் ஒளித்து வைத்து விட்டார். “உறவு நிலைகளின் புதிர்த்தன்மை பேரெழில் கொண்டது” என்று அவரே சொல்வது போல, புதிராய் இருப்பதனாலேயே அது அழகாய் இருக்கிறது.

பா.ராகவனின் வார்த்தைகளில் “ஒரு புன்னகையைத் தனது நிரந்தரக் கையெழுத்தாக எங்கள் நினைவில் அவள் பதித்திருந்தாள்”. என்ற விவரிப்பு பெயரற்ற அம்மாவின் பேருருவைக் காட்டுகிறது. “வாழ்வினின்று தப்பி ஓடுவதல்ல; பெருங்காதலுடன் ஒட்டுமொத்த மானுட சமூகத்தையும் அள்ளி அரவணைக்கும் பக்குவமே துறவு” என்ற ஆசிரியரின் கூற்றுக்கு இலக்கணமாய் திகழ்பவள் அம்மா.

“நீலக்குறிஞ்சி” யில் துவங்கி கருவி, தியானம், காமரூபிணி, தீட்சை, சதுரங்கம், வன்மத்தின் வண்ணம், தரிசனம், எட்டணா, செம்பவழக்கல், கோடிட்ட இடங்கள், திருமுக்கூடல் வரை இந்நாவலின் அத்தியாயத் தலைப்புகளே தனிக்கதை சொல்கின்றன. ஆனால் ஆசிரியரின் வழக்கமான நகைச்சுவை இந்நாவலில் கிடையாது. சில இடங்களில் மட்டும் வெளிப்படையாய் இல்லாமல், சிறு புன்னகை ஏற்படுத்தும் இழையாய் ஊடுருவியிருக்கிறது. “வினோத், நீ ஒரு நல்ல தினகரன்” என்று விமல் சொல்வது ஒன்று போதும். “ஒரு திருடனைப்போலக் கானகத்துக்குள் ஊடுருவிக்கொண்டிருந்தது வெளிச்சம்” “சிதையிலிருந்து உருவியெடுத்த தழல் துண்டுகளைப்போலத் தகித்துக்கொண்டிருந்தன அம்மாவின் விழிகள்”. “சாம்பல் பூத்த எரிந்த கட்டை போலிருந்தது அவர் முகம்”.“அம்மா ஒரு ரோமம் போல உதிர்ந்து கிடந்தாள்.” இது போன்ற துல்லியமான உதாரணங்கள் ஆழமாய் மனதில் பதிந்து விடுகின்றன.
” ஆசைகளின் வேகத்துக்கு வாழ்க்கை ஒரு வழுக்கு மரம்தான்.” “நான் சூனியத்தில் இருந்து பூரணத்தை எடுக்கத்தான் வேண்டும்’ “வாழ்வின் வாசனை நிதானத்தில் உள்ளது” “சன்னியாசம் என்பது இறுதிவரை முயற்சியும் பயிற்சியும் மட்டுமே’” ஆங்காங்கே இடம் பெறும் இத்தகைய வாசகங்கள், மனதில் என்றும் இருத்திக் கொள்ள வேண்டியவை

வாசிப்பு ஒரு அந்தரங்க செயல்பாடு. ஒரு படைப்பு வாசிக்கப்படுகையில் அவரவர் மனதில் ஏதோ ஒரு நுண் உணர்வை அதிர வைக்கிறது. அந்த அதிர்வு வாசகர் மனதில் தொடர் சிந்தனைகளை, எண்ணக் குவியல்களை உருவாக்குகிறது. வாசகரின் செயல்பாட்டில் அது பிரதிபலிக்கிறது. அது தான் அப்படைப்புக்கும், வாசகருக்குமான நீங்கா பிணைப்பாக மாறுகிறது. அவ்வகையில், யதி துறவறம் நோக்கிய நால்வரின் பயணத்திற்குள் சஞ்சரிக்க வைத்து வாசகரின் மனதை உள்முகமாய் திசை திருப்புகிறது.

– ரஞ்சனி பாசு, மதுரை.

Share

Discover more from Pa Raghavan

Subscribe to get the latest posts sent to your email.

By Para

தொகுப்பு

Random Posts

Recent Posts

Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

error: Content is protected !!

Discover more from Pa Raghavan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading