யதி – வாசகர் பார்வை 10 [முருகு தமிழ் அறிவன்]

சுமார் பத்தாண்டுகளுக்கு முன்னர் கிழக்கிலிருந்து விலகுகிறேன் என்று பாரா அறிவித்த நேரத்தில் அதைப் பற்றி விசனப்பட்ட அவரது வாசகர்களில் நானும் ஒருவன்.

நேர்த்தியான கதைசொல்லியும், சமூகத்திற்குத் தேவையான சிந்தனைகளையும் அனுபவங்களையும் சொல்லும் வல்லமை கொண்டவரும் மொழியாளுனருமான எந்த ஒரு எழுத்தாளர் அவ்வாறு அறிவித்தாலும் வாசகப் புலத்தில் சலசலப்பும், விசனமும் ஏற்படுவது இயல்பு; அவ்வாறு விலகி, ஓரிரு மாதங்களில் காட்சிப்புலத்தில் (சின்னத்திரை)  அவர் வசனகர்த்தாவாக நுழைந்தபோது  ஒரு எழுத்தாளராக அவர் நீர்த்துப் போகப் போகிறார் என்ற கவலையுடனும், ஆதங்கத்துடனும் பார்த்திருந்தேன். ஆனால் சின்னத்திரை வசனகர்த்தா பணி அவரது புனைவெழுத்தை பாதிக்கவேயில்லை. ராட்சச வேகத்தில் / அவதாரத்தில் விசுவரூபமெடுக்கவே செய்தார். பூனைக்கதை முந்தைய உதாரணம். யதி இப்போது.

அவரை ஒரு எழுத்தாளராக எனது பதின்ம அல்லது இருபதின்ம நாட்களில் அவர் கல்கி குழுமத்திலிருந்த காலத்திலிருந்து வாசிக்கிறேன். தொடர்ந்து வாசிக்கிறேன் என்று சொல்லாவிட்டாலும் அவ்வப்போது, கண்ணில் படுகிற அவரது முக்கியமான புத்தகங்களை வாசித்திருக்கிறேன். கல்கியில் அவர் புழங்கத் தொடங்கிய காலத்தில் அவர் வேண்டியமைத்துக் கொண்ட ஒரு தனித்துவமான நடை அவரை தனித்துக் காட்டியது; பிற்காலங்களில் அந்த நடை வலிந்து அமையாமல் அவ்வப்போது இயல்பாக நுழைந்து வெளியேறுவது போலவே அவரது எழுத்தில் தோன்றவாரம்பித்தது; இதற்குக் காரணம்  ஒரு கதைசொல்லியாக அவருக்கு கைவந்த மொழியின் இலாகவம். எந்த ஒரு விடயத்தைப் பற்றியும் பாராவால் நேர்த்தியாக எழுத முடியும் என்ற நிலைக்கு அவர் வந்து வெகுகாலம் ஆயிற்று. இந்த நிலையை அடைவது ஒரு எழுத்தாளருக்கான பூரணத்துவங்களுள் ஒன்று. [யதியின் கதைசொல்லியாக தன்மை நிலையில் வரும் விமல் பாத்திரமும் கூட இப்படி ‘மொழியின் குழந்தை’ என்றுதான் விளிக்கப்படுகிறான்].

அப்படியான நிலையை அவர் அடைந்த பின்னர் (என்ற எனது கருத்தில் ) அவர் எழுதிய முதல் நாவல் அலகிலா விளையாட்டு; பின்னர் புவியிலோரிடம்; பின்னர் ‘ரெண்டு’ ஒரு வித்தியாசமான கதைக்களனுக்காக சலசலக்கப் பட்ட ஒரு புனைவு.

ஆனால் இதுநாள் வரையான அவரது 20 ஆண்டு கால, அல்லது சற்றேறக்குறைய முன்பின்னான, கால அவகாசத்தில் அவரெழுதிய புனைவுகளில் எனக்கு துலக்கமாக நினைவில் நிற்பது அலகிலா விளையாட்டு. இரண்டாவதாக புவியிலோரிடம்.

இப்போது யதி, பூனைக்கதை இரண்டும் !

இவற்றில் யதி அதனது அடர்வு, களம், நெடிதோட்டம், சாகசம், புனைவின் அழகியல், அவ்வப்போதான பாத்திரங்கள் வாயிலான பாராவின் தத்துவக் குறிப்புத் தெறிப்புகள் போன்ற காரணங்களால் இனி எளிதாக முதலிடம் பெற்று விடும் என்று தோன்றுகிறது.

 களம், இரசிப்புகளுக்கான கூறுகள் :

 புனைவோ அல்லது அபுனைவோ நல்ல நூல்கள் பலவற்றுக்கான ஆதார குணம் ஒன்று உண்டு; அது வாசகனின் மன விவாதத்தைக் கிளப்பி அவனை சிந்திக்க விடுவது.

பதின்மங்களில் நான் படித்த ஒரு புனைவு, வாழ்வில் நான் எதிர் நோக்கப் போகின்ற அத்தனை பொருதங்களையும் அதன் நடு மண்டையின் உச்சியில் அடித்து எதிர் கொள்ள வைத்த ஒரு வல்லமையை எனது சிந்தனைக்குள் விதைத்தது; அது 16 வயதில், அன்றிலிருந்து இன்று வரை எனது நெருங்கிய நட்புகளில் ஒருவனான தங்கமணி பரிந்துரைத்த,  ஒரு மனிதனின் கதை என்ற உருஷ்ய புனைவின் தமிழாக்கம்.  பதினேழு வயதில் திஜா வின் மோக முள்ளைப் படித்து அந்த முள் கிளறிய வலியை பல நாட்கள் விவாதித்துச் சுமந்து கிடந்து கடந்த வாலிபம் எங்களது; ஜெயகாந்தனைத் தொட்ட கணங்களில் படித்த அக்கினிப் பிரவேசம் படித்த  அக்கணத்தின் அதிர்வும், அட, சரிதானே இந்த ஆள் சொல்றது.. என்று பின்னரேற்பட்ட உணர்வும் இப்போதும் நினைவில் நிழலாடுகிறது; பதினெட்டு வயதில், ஜெயகாந்தனின் பாரிசுக்குப் போ’வைப் படித்து விட்டு நண்பர்களோடு  இரண்டரை மணி நேரம் விவாதித்திருக்கிறேன்.

யதியும் இவ்விதமான மன விவாதத்தை எனக்குள் நிகழ்த்தியது.

இது சன்னியாசிகளின் உலகில் உழலும் கதை. நான்கு சகோதரர்களும் துறவறம் பூண்ட, வேறு குழந்தைகள் இல்லாத ஒரு குடும்பத்தில்,  அவர்களுக்குள் நிகழ்கிற வாழ்வின், அவர்கள் அமைத்துக் கொண்ட அல்லது தேடியடைகிற துறவின், வேறுபாடுகளுக்குள் திளைத்துக் கிளம்புகிற, அந்த முயற்சியில் இடம் பெறுகிற பல்வேறு செய்திகள், தத்துவங்கள், திடுக்கிடல்கள், கதை போகிற போக்கில் இடம் பெறுகிற சில சமகால அல்லது சமீபத்திய உண்மை நிகழ்வுகளின் படிமங்கள், சில கொலைகள் அனைத்திலும் ஊடாடிப் பரவுகிற கதை யதி.

இப்படித் துறவின் பல கிளைத்துவங்களைப் பாடுபொருளாக வைத்து இன்னொரு புனைவு தமிழில் இருக்கிறதா என்று தெரியவில்லை. அவ்வாறில்லையெனில் அக்காரணத்திற்காகவும் யதி முதன்மை பெறும்.

கதைக்களனுக்கு அப்பால் மேலும் துலக்கமாக நான் இரசித்தது அவ்வப்போது யதியின் பாத்திரங்கள், பெரும்பாலும் விமலன், வெளியிடுகின்ற அல்லது சிந்திக்கின்றனவாக கதையில் வருகிற சில வாக்கியங்கள் !  மாதிரிக்கு –

ஆனாலும் வனத்தின் ஆகிருதி நதிக்குப் பொறுக்க முடியாது போய்விடும் போலிருக்கிறது. அதன் அடர்த்தியைக் கிழித்துக்கொண்டு சீறுவதில் வெறி கொண்ட சந்தோஷம். உன்னைவிட நான் வீரியம் மிக்கவன். உன்னைக் காட்டிலும் என் உரு பெரிது. உனது அமைதியை எனது ஆவேசம் புணர்ந்து பெருகுவதே இயற்கை.

நல்லது. இயற்கை பெரிதுதான். அது பெரிது என உணரும் மனத்தைவிடவா என்று யோசிக்க ஆரம்பித்தேன்.

 ()

சிப்பிக்குள் சித்திரம் எழுதுவது போல. தவிர, ஒரே உயிர்தான் என்றாலும் ஒன்றிலிருந்து கிளைக்கிறபோதே தன் உருவையும் வெளிப்பாட்டையும் வேறுபடுத்திக் காட்டிக்கொள்வதில்தான் எத்தனை வேட்கை இந்தச் செடிகளுக்கு! ஆயினும் கலவையான வாசனையில் அவை புதர்த்தன்மை எய்திவிடுகின்றன. நெருங்கிப் படர்ந்த அடர்த்தியில் ஓர் அச்சுறுத்தல் சேர்ந்துவிடுகிறது.

 ()

சிந்தனை ஒரு புதர். நெருங்கி அமர்ந்து ஒவ்வொரு செடியாக, ஒவ்வொரு இலையாக எடுத்து நீவிவிட்டு உற்றுக் கவனிக்கலாம். முகர்ந்து பார்த்து பேதம் அறியலாம். எது நல்லது? எது கெட்டது? எது மருந்தாகும்? எது விஷமாகும்? யாரையாவது கேட்கலாம்.

 0

குருஜி, நீங்கள் பெண்களின் முலைகளை எண்ணிப் பார்ப்பதுண்டா?’  

அவர் யோசிக்கவேயில்லை.

சட்டென்று பதில் சொன்னார்,

கண் திறந்த கணத்தில் பார்த்த முதல் உறுப்பு. எப்படி நினைக்காதிருப்பேன்? முலைகள்தாம் என் கடவுள். ஆனால் கடவுளைத் தொட்டு, கசக்கிப் பார்க்க எனக்குச் சக்தி இல்லை.

இப்படியான பல தெறிப்புத் தெளிப்புகள் நாவல் நெடுகிலும் உண்டு.

தகவல்கள்:

யதியின் கதை போகிற போக்கில் சொல்லப்படும் பல தகவல்கள் சுவையானவை, உதகையில் மூப்பர்களின் வயதை குறிஞ்சி மலர்ப்புடன் ஒத்துக் கூறுவது (மூன்று குறிஞ்சி கண்டவர்), பலார்ஸா சப்பாத்திக் கல்லில் சப்பாத்தி மெல்லிசாக வரும், (எங்கு இந்தக் கல் சென்னையில் கிடைக்கிறது பாரா? ), திருப்பதியில் திருப்பாவை கோஷ்டியில் எவரும் பின்னால் இணைந்து கொண்டால், பத்து நிமிடம் அளவுக்கு தரிசனம் பார்க்கலாம் (மீசை மழித்திருக்க வேண்டும், திருமண் அணிந்திருக்க வேண்டும்) போன்று பல சுவையான தகவற்கூறுகள் கதை முழுவதும் விரவியிருப்பது.. இதுவெல்லாம் ஒரு சுவையா என்று கேட்டால், ஆம், நிச்சயமாக! வாசகனுக்கு வாசிப்பின் போக்கில் பல தகவல்களைக் கடத்துவதும் நல்ல எழுத்தின் ஒரு அறிகுறி.

சாகச நிகழ்வுகள்:

துறவின், சித்தர்களின் சாகச நிகழ்வுகள் பல கதைப்போக்கில் பல இடங்களில் வருகின்றன. பகுதி 38 ல் வரும் மீன் உண்டவன்’ல் வரும் திரைலங்கரின் கதை, மற்றும் விஜயன் நெருப்பில் படுத்திருப்பது போன்றவை காமிக்ஸ் நிகழ்வுகள் போலத் தோன்றினாலும், உண்மையான சித்தர்களின் அனுபவங்கள், சக்திகளை உணர்ந்தவர்கள் இந்த 20,21 ம் நூற்றாண்டிலும் உண்டு;  பாரா கூட இப்படிப்பட்ட சில அனுபவங்களைக் கண்டிருக்கக் கூடும்.

இந்த இடத்தில் பேராசிரியர் அசஞா அவர்கள் எழுதிய அருளாளர்கள் என்ற நூலின் நினைவு வருவதைத் தவிர்க்க இயலவில்லை; அதில் அவர் நேரில் கண்ட, உணர்ந்த அருளாளர்களின் செயல்களையும் அற்புதங்களையும் அவர் விவரித்திருக்கிறார். தேர்ந்த தமிழறிஞரும், தமிழ் இலக்கியத்தின் ஒப்பற்ற சமகால விற்பன்னரான பேச்சாளர் மற்றும் எழுத்தாளரான அவருடைய அந்த நூலே, இவ்விதமான சித்தர்களின் சாகசங்களுக்குச் சான்று.

யதியில் இத்தகைய சாகசங்கள் வேண்டுமளவு உண்டு; யதியின் நிறைவுப் பகுதி கூட இப்படி ஒரு சாகச ஆகுதியுடனேயே நிறைவுறுகிறது.

துறவு:

எளிமையான வாழ்வு வாழும் ஒரு பிராமணக் குடும்பத்தின் தாய், தந்தை, அவர்களது நான்கு குழந்தைகள், குழந்தைகளின் ஒரே தாய் மாமன், இரண்டு வயசாளிகளான சித்தர்கள் மற்றும் திருப்போரூர்ச் சாமி, நாயகி, அவளின் அம்மா… இவ்வளவுதான் பாத்திரங்கள்.

என்ன ஒரேயடியாகத் தூக்குகிறாய் என்று கூட இந்த முன்னுரையை வாசிப்பவர்களுக்கு ஒரு எண்ணம் வரக் கூடும்; இந்தக் குறைந்த எண்ணிக்கையிலான பாத்திரங்களைச் சுற்றிச் சுழலும், துறவைப் பின்புலமாகக்கொண்ட கதை, சுமார் 1,70,000 சொற்கள் கொண்ட, சுவாரசியம் குறையாத வாசிப்புக்கு உத்தரவாதமளிக்கிற புனைவாகப் பெருகுவது ஒரு அசாத்தியமான காரியம்!

யதியின் நாயகர்கள் நால்வரான விஜய், வினய், வினோத், விமல் ஒருவர் பின் ஒருவராகத் துறவுத் தேடலில் ஈடுபடுவதற்காகக் கிளம்புவதும், இறுதியில் அவர்கள் என்ன காரணத்திற்காகத் திரும்பச் சேரும் சூழல் வருகிறது என்பதும்தான் நாவலின் ஓரிழை.  இதில் நான்கு பேரும் நான்கு விதமான துறவு வர்க்கத்தில் நுழைந்து புறப்படுகிறார்கள்.

துறவிகளில் ‘கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்’ என்ற நிலையடைந்த ஞானிகள் உண்டு ; மந்திரம், மாந்திரீகம், கருப்புலகம், ஆவிகள், யட்சினிகள் என்ற புலத்திற்குள் உழலும் கேரளச் சாமியார்களின் பிரிவு உண்டு; ஏதோவொரு இயக்கத்தைப் பற்றிக் கொண்டு பாண்டுரங்கா, பண்டரி நாதா, ஹரே கிருஷ்ணா என்று பாடிக்கொண்டலையும் துறவு மார்க்கம் உண்டு, சாதாரண மக்கள் எண்ணி அச்சப் படுகிற அளவில் அரசின் அதிகார மட்டத்தின் சகல இழைகள், நிகழ்,நிழலுலகின் முடிசூடா மன்னர்களுடனான தொடர்புகளோடு இயங்கும் துறவிகள் வர்க்கம் உண்டு; இத்தைகய துறவின் அனைத்துப் புலங்களிலும் புகுந்து புறப்படுகிறது இக்கதை. இந்த ஒவ்வொரு இழையும் பிரித்து நெய்யப்பட்டால் கிடைக்கும் துறவின் பேரெழில் துகிலே யதி.

இவ்வாறு துறவின் நான்கு படிம நிலைகளை முன் வைக்கின்ற பொழுதில் அவை நான்கையும் ஒப்பிட்டுச் சிந்திக்கவும்; துறவு என்றால் என்ன என்பதன் ஆதாரக் கேள்வியை எழுப்புவதையும் யதி உங்களுக்குள் இடறி விடுவது நிச்சயம்; ஒரு வகையில் அதுவும் இந்தப் புனைவின் வெற்றிகளில் ஒன்று.

மேற்கண்ட நான்கு துறவு நிலைகளுள் ஒரு கூற்றைக் கொண்ட விமலன், கதையின் முடிவில் தான் கைக்கொண்ட துறவின் வழியை மீண்டும் துறவைத் தொடர்வானா அல்லது துறவின் மேன்மைகளின் உன்னதங்களை மட்டும் தனதாக்கி துறவின் உன்னதத்துவத்தை அடைந்து சிவனை ஒத்த சித்தனாகி விட்ட தன் ஒரு சகோதரனையும்,  வாழ்வின் பலவீனங்களின் சறுக்கல்களைத் தனது துறவு முயற்சியின் ஊடாகச் சந்தித்து அவற்றில் வீழ்ந்து, எழுந்து, வீழ்ந்து, எழுந்து கடைசியில் தியாகத்தின் மூலமும், எதனையும் பெற விரும்பாமல், எல்லாவற்றையும் கொடுக்க விரும்பிய நிலைக்கு தன்னை உயர்த்திக் கொண்டு தானும் சித்தனாகி விட்ட இன்னொரு சகோதரன் வழியிலான துறவின் வழியை மேற்கொள்வானா,  என்ற ஐயம் ஏற்படாமல் இல்லை; சொன்னால் அவன் துறவியாகவே தொடர்வானா என்ற ஐயத்தையும் கூடத் தொக்கி வைத்து முடிகிறது யதி. ஆனால் உறுதியாகத் தெரிவது ஒரு நல்ல மானுடனாக அவன் தொடர்வான் என்பது. அதுதானே என்றைக்குமான சமூகத் தேவை.

இந்தத் துறவிகளின் தாய் கதையின் பெரும்பகுதியிலும் படர்க்கை முறையில்தான் அறியப்படுகிறாள்; தன்மையில் அவள் பேசுவது, சொல்வதெல்லாம் மிகச்சில சொற்கள்தான்; மொழியின் குழந்தை’யாக அறியப் படுகிற ஒருவனைப் பெற்றெடுத்த அவள் பேசுகிற மிகக் குறைந்த சொற்கள் அவளைப் பற்றிய பிம்பம், கதையில் நியாயமாக, நிழலாகத் தேய்ந்து மறையவே துணை புரிந்திருக்க வேண்டும்; ஆனால் கதையின் எதிர்பாரா ஒரு கணத்தில் அவளது பிரம்மாண்டம் துலக்கம் பெறுகிறது. அந்த துலக்கம் சரியாகப் புரிந்து கொள்பவர்களுக்கு ஒரு தரிசனமும் கூட.

 துறவும், காமமும் :

துறவுக்கும், காமத்துக்குமான இழை எப்போதும் பேசு பொருளாவது. அருணகிரிநாதரிலிருந்து, பட்டினத்தடிகளிலிருந்து, ஓஷோ ரஜனீஷ் வரை காமத்தின் வேட்புக்கும், துறவின் வாசனைக்குமான இழை விரிவாகப் பேசப்பட்ட ஒன்று. காமத்தின் துறப்பும், துறவின் துவக்கமும் ஓரிழையில் அமைந்தவையா என்பது ஒரு ஆதாரக் கேள்வி. இதற்கு நோக்கர்களின் பார்வையில் பலவிதமான கருத்துகள், மாற்றுக் கருத்துகள் முன்வைக்கப் படலாம்.

இந்த – காமம் மற்றும் துறவு இரண்டுக்கிடையேயான ஆதாரக் கொக்கிக் கேள்விக்கான பதிலை யதி இரு விதமான நேரெதிர் பார்வைகளில், இருவிதமான பாத்திரங்கள் வாயிலாக முன்வைக்கிறது. அந்தப் பார்வைகளின் நியாய அநியாயங்களை வாசகனின் மன விவாதத்திற்கு விட்டு விடுகிற போக்கு யதியில் நல்ல ஒன்று.

தீண்டுவீராயின் திருநீல கண்டம் என்று சொல்லிக் கட்டி வைத்துவிட்ட யாழ்ப்பாணனின் மனைவி பற்றிச் சொன்ன திருமுறைகளை ஓதியறிந்தது தமிழுலகம்; அதன் ஒரு இழைக் கூற்று யதியிலும் உண்டு; இந்த இழை காமத்தை விலக்குவதே துறவின் வாயில் என்ற ஒன்று சொல்லப்படுவதாக நாம் புரிந்து கொண்டிருக்கிறோம். காமம் படிந்த துறவு, பாழ்பட்ட மேன்மையின் உச்சநிலை என்ற கருத்தாக்கத்தில் யதியின் விஜயன் எடுக்கும் முடிவு யதியின் அதிர வைக்கும் கட்டங்களில் ஒன்று.

எதிலும் திளைத்துக்கிளம்பி, வெளியேறி, புறந்தள்ளி இலக்கை நோக்கிச் செல்வதே வாழ்வு, துறவு எல்லாவற்றிற்குமான இலக்கணம் என்று சொல்லுகிற இன்னொரு இழைக்கூற்றும் யதியில் உண்டு. அப்படியாயின் இரண்டாவது பார்வையின் இலக்குதான் என்ன என்ற கேள்வி எழுவது இயற்கை.

யதியின் இறுதி அத்தியாயங்கள் ஒருவேளை இதற்கான விடையை, விளக்கத்தைத் தரக் கூடும் !

பெண்மையின் பிரம்மாண்டம்:

பெண்மை எப்போதும் உலகில் பிரவாகமெடுப்பது; பெண்மையின்றி அமையாது உலகு. பெண்மை பெரும்பாலும் அன்பின் அடித்தளம் கொண்டு அனைவரையும், அனைத்தையும் ஆண்டு கொள்வது என்பதும்; அம்மாவின் ஆதுரம், மனைவியின் கரிசனம், தங்கை, தமக்கைகளின் தோழமை, மகள்களின் பேரன்பு என்று பெண்மை அன்பின் பிரவாகத்தைத் தனது ஆயுதமாகக் கொண்டு ஆண்கள் உலகை ஆளுகிறது என்பதும் நிகழ்கின்ற வாழ்வின் புரிதல்.

இந்தப்பெண்மையின் இழைக்குள் ஊடுபாவாகத் திகழ்வது காமமும் அது விளைவிக்கும் விளைவுகளும்.

காமத்தை வேண்டாது துச்சமாக தூக்கி எறிந்து விடும் பெண்மை, பெண்மையின் பேரெழிலும், பேரச்சத்தின் பிரமாண்டமும் கொண்டது. அத்தகைய பெண்களைச் சந்தித்த ஆண்கள் சொற்ப எண்ணிக்கையிலேயே இருக்கவியலும். அத்தகைய ஆண்கள் அந்தப் பெண்மையின் பேரெழிலையும், பிரமாண்டத்தையும் கண்டிப்பாக உணர்வார்கள்; நானே உணர்ந்திருக்கிறேன். ஆனால் அப்படிப்பட்ட பெண்களை எதிர்நிலையில் எதிர்கொள்ள வேண்டிய ஆண்கள் பரிதாபத்துக்குரியவர்கள். அவர்கள் அந்தப் பெண்மைச் சக்தியின் ஆயிரத்தில் ஒரு கூறுக்கும் அடிமட்டத்தில் கிடந்து வாழ்ந்து போகவே ஏலும். யதியில் அப்படி ஒரு ஆண் அப்படி ஒரு பெண்மையை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது; ஆனால் அந்த ஆண் கணவனாகவும் போனால்? பெண்மையின் பெருவலிவு, விசுவரூபம், பெருந்தன்மை என அத்தனையைம் தழுவிச் செல்கிறது யதியின் இந்தப் பாத்திரப் படைப்பு.

காமம் விலக்கப்பட்ட, அல்லது மறுக்கப் பட்ட பெண்மையின் வடிவம் இன்னொரு எல்லை; அது பெண்மையின் பெரு ஊழியை ஒத்தது. இதோடு அப் பெண்ணுக்கு ஒரு தபஸ்வினியின் வலிமை சேருகிறது என்று வைப்போம்; கூடவே பழி உணர்ச்சி! என்ன ஆவான் இதை எதிர் நோக்க வேண்டிய ஆண்? யதியின் சித்ரா அந்த உணர்வோடு உக்கிரமாக நிற்கிறாள்; வினோதன் அவ்வளவு அழகாகத் தன்னை ஒப்புக்கொடுக்கத் தயாராக இருக்கிறான். அவள் தோற்றாளா, வென்றாளா என்பதில் யதி வெல்கிறது.

மேற்கண்ட இரண்டு கதை நிலைகளும் யதியின் முக்கியப் பாத்திரங்களோடு கலந்தோடுகின்றன.

கதைப்போக்கின் முடிவு:

துறவின்  பல நிலைகள், பெண்மையின் பிரமாண்டம் என்ற இரு தடத்தில் பயணம் செய்யும் யதியில், இரு சகோதரப் பாத்திரங்கள் துறவின் இருவிதமான உச்சநிலைகளை அடைகிறார்கள்.

ஒரு துறவுநிலை, யோகத்தைக் கைக்கொண்டு, சித்த ஞான நிலை எய்தி விடுகிற ஒரு நிலை; அங்கு உடல் ஒரு பொருட்டில்லை.

இன்னொரு நிலை துறவும் வாழ்வும் சந்திக்கின்ற ஒரு நிலை; வாழ்ந்து கொண்டே துறத்தலும், துறந்து கொண்டே வாழ்தலுமான ஒரு நிலை.

இந்த இரு நிலைகளும் பெண்மையின் பிரமாண்டத்துடன் ஒரு புள்ளியில் பொருதுகின்றன. பொருதலின் விளைவில் இந்த இரு துறவின் நிலைகளும் துலக்கம் பெறுகின்றன. யதியின் பூரணத்துவமான இடம் அதுதான். இரண்டு முக்கியமான பாத்திரங்கள் துறவின் இந்த இரு வித நிலைகளை அடைவதுடன் நிறைகிறது கதை.

யதி கிட்டத்திட்ட ஒரு நான் லீனியர் வடிவில் சம்பவக் கோர்வைகளைக் கொண்டு செலுத்துகிறது; அதாவது 30 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற சம்பவம் ஒன்று, 30 ஆண்டுகளுக்குப் பின் வந்த சம்பவத்தோடு கதைப்போக்கில் இணைந்து அடுத்தடுத்துச் சொல்லப் படும்; பல புனைவுகள், நெடுங்கதைகள் இவ்வாறு எழுதப் பட்டிருக்கின்றனதான். ஒரு எடுத்துக்காட்டு பாருங்கள், பின்வரும் பகுதியில் கடைசிப் பத்தி மட்டும் 35 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்து நிகழ்வு, முதல் இரண்டு பத்திகள், இப்போது நிகழ்வது; இவை இரண்டு இணையும் கணம் கதையில் எவ்விதம் தொய்வையும் ஏற்படுத்துவதில்லை.

‘இருக்கலாம். ஆனால் உங்கள் சப்பாத்திகள் மிகவும் கனமாகத் தெரிகின்றன. பலார்ஷா கற்களில் சப்பாத்தி மிக மெல்லிசாக வரும்.’  

‘அப்படியா? இது எனக்குத் தெரியாதே’ என்றவள் சட்டென்று வெளியே விற்றுக்கொண்டிருந்த ஒரு பையனைக் கூப்பிட்டு உடனடியாக ஒரு ஜன்னல் வியாபாரத்தை முடித்தாள்.  

யுனானி மருத்துவர் அந்தக் கல்லை வாங்கித் தடவிப் பார்த்தார். என்னிடமும் கொடுத்தார். நானும் தடவிப் பார்த்தேன். மென்மையாக, நன்றாக இருந்தது. எங்கள் வீட்டில் அம்மா இதே போன்றதொரு கல்லை வைத்திருந்தாள். அது ஒரு அபூர்வம். பொதுவாகத தமிழ்நாட்டில் சப்பாத்திக் கல் என்பது மரத்தாலான பொருளாகவே இருக்கும். இம்மாதிரி பாலீஷ் போடப்பட்ட கருங்கற்கள் பயன்பாட்டில் இருந்ததில்லை. வட்ட வடிவில் மரப்பலகை ஒன்றைச் செதுக்கி, அதன்மீது வழுவழுப்பான பிளாஸ்டிக் தாளை ஒட்டியிருப்பார்கள். வாரச் சந்தைகளில், திருவிழாக்காலங்களில் விற்பனைக்குக் கிடைக்கும். அம்மாவுக்கு எங்கிருந்து அந்தக் கருங்கல் கிடைத்தது என்று தெரியவில்லை. இந்த பலார்ஷா கல்லைவிட அது கனமானது. தூக்கித் தலையில் அடித்தால் கண்டிப்பாக மண்டை உடைந்து ரத்தம் கொட்டும்.

இதை எப்படி இவ்வளவு உறுதியாகச் சொல்கிறேன் என்றால், வினய் ஊரில் இருந்து புறப்பட்டுக் காஞ்சீபுரம் போய்ச் சேரவில்லை என்ற தகவல் வந்தபோது அப்பா அந்தச் சப்பாத்திக் கல்லில்தான் முட்டிக்கொண்டு அழுதார். நான்கு முறை முட்டிக்கொண்ட உடனேயே கேசவன் மாமா பாய்ந்து அவர் கையில் இருந்த கல்லைப் பிடுங்கி வீசியெறிந்துவிட்டார். ஆனால் அப்பாவின் நெற்றி புடைத்துக்கொண்டுவிட்டது. வினாடிப் பொழுதில் புசுபுசுவென்று ஊதி ஒரு குழிப் பணியாரம் போலாகிவிட்டது.

ஆனால் யதியில் இவை நிகழும் கணங்கள் அளவில் அதிகமானவை; இருந்தும் கதைப் போக்கு, சுவை சிறிதும் குன்றாமல் செல்வதுதான்  விசேஷம்.

பல புதுமைகள் சேர்ந்த யதி ஒரு நல்ல வாசிப்பனுபவத்தைக் கட்டாயமாக உங்களுக்குத் தரும்.

  • முருகு தமிழ் அறிவன்
Share
By Para

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!