அடேய் கிராதகா! உன் யதியைப் படிக்க, மூச்சுப் பயிற்சியெல்லாம் செய்ய வேண்டுமா?
இதயம் அதிகமாய்ப் படபடத்தது. சமயத்தில் சில துடிப்புகள் சில நொடிகளுக்கு நின்று மீண்டன. படித்து முடித்த போது புயல் தாண்டவமாடிக் கடந்த நிலமாய் என் மனம். நிசப்தத்தில் செவி. வானை வெறித்தபடி விழிகள். இன்னும் சில நாட்களுக்கு யதிலிருந்து மீள முடியாது என்று நினைக்கிறேன்.
இது வீட்டை விட்டு விலகி துறவு பூண்ட நான்கு சகோதரர்களின் கதை. இதில் இளையவன் விமல். தனது தாய் மரணப் படுக்கையில் இருப்பதாய் தந்தி கிடைக்க, தன் ஊருக்கு கிளம்புகையில் துவங்கும் நாவல், மீள் நினைவில் பயணித்து பின் தாயின் மரணத்தில் முடிகிறது. இதுவே கதையின் இருவரிச் சுருக்கம். இதில் என்ன பெரும் சுவாரஸ்யம் இருந்துவிட முடியும்? சில தத்துவங்களும், உபநிடத விளக்கங்களும், போலிகளின் முகமூடிகளும், சில அதிர்ச்சிகளும், இன்னும் சிலதும் இருக்குமென்றே சற்று அசிரத்தையுடன் படிக்கத் துவங்கினேன்.
ஆனால் இது வேறு வகை. எதிர்பாராதது. எதிர்பார்க்க இயலாததும்கூட. ஒன்றைப் படிக்கும்போதே அடுத்தடுத்த அத்தியாயங்களுக்குப் பரபரக்க வைத்திருக்கிறார் ஆசிரியர். அத்தியாயங்களை மொத்தமாகப் படித்த எனக்கே இக்கதியென்றால், இதை தினமணி.காம்-இல் தினம் கொஞ்சமாகத் தொடராகப் படித்தவர்களின் சித்தம் கலங்கிப் போயிருக்கும்.
ஒரு பெரும் நாவல், படிப்பவனுக்கு ஒரு வடிகால். சில சமயம் எழுத்தாளனின் வடிகால். யதி இருவருக்குமான வடிகால்.
சில மனிதர்களுக்குத் தன்னை ஒரு நடிகனான, வீரனாக, முதல்வனாக, அரசனாக, இன்னும் பலவாகக் கற்பனை செய்து கொண்டு அதில் சஞ்சரிப்பது ஒரு பெருஞ்சுகம். ஆனால் அவன் வாழ்வின் விரக்தியில் துறவை நினைக்கலாமே தவிர, துறக்கத் துணிவோ, துறவியாய் நினைத்துக் கொள்ளவோ முடியாது.
ஆனால் ராகவன் அப்படித் தன்னைக் கற்பனை செய்தால் (சத்தியமாய் விரக்தியில் அல்ல!) அந்த விமலாக… விமலானந்தாவாக உருவகப்படுத்தினால், அது யதி.
விமலின் வாக்கியங்களான – நான் மொழியின் குழந்தையல்லவா… வருத்திக் கொள்வதற்காக இந்த உடல் படைக்கப்படவில்லை… உணவின் ருசி பூரணம் என்பது இறுதியாக நக்கித் தின்பதில்தான் உள்ளது, இன்று வரையிலுமே நான் அப்படித்தான் – என்பதெல்லாம் அது ராகவனே என்று சுட்டிக்காட்டுகின்றன.
விமலின் ரூபத்தில் கீழ்க் காணும் தன்னிலைப் பிரகடனம் அட்டகாசம்.
‘…இதெல்லாம் அதிர்ஷ்டமல்ல. தெளிவான, திட்டமிட்ட உழைப்பு. என் இருப்பின் நியாயத்துக்கு, பிறப்பு தொடங்கி நான் இட்ட விதைகளும் உரங்களும் அநேகம். இன்னொருவரால் கற்பனையில் கூட எட்டிப்பிடிக்க முடியாத சாகசம் அது’.
இரு பேட்ஸ்மென்கள் இரு திசைகளிலிருந்தும் ஓடி வந்து ஒரு ரன் சேர்ப்பது போல, தன்னைத் துறவியாக்கி, துறவிக்குள் தன்னியல்புகளைப் புகுத்தி… ஒரு பட்டுக் காவி கார்ப்பரேட் சன்னியாசியாக, ராஜரிஷியாக, சந்திராசாமி வடிவாய் அரசியல் ப்ரோக்கராக, பெரும் சுகவாசியாக விமல்.
ஆஹா, அப்படியானால் நவீன சன்னியாசிகளின் உலகில் ராகவன் அதகளப்படுத்தியிருப்பார் என்று நீங்கள் நினைத்தால், அது தவறு.
யதியின் ஜாகை வேறு.
ஒரு பெரும் அடர்வனத்தில், மெல்லிய தெள்ளிய நீரோடையைப் போல, நாவலின் அடர்த்திக்கு நடுவே, நகைச்சுவையை முறுவலிக்கும் விதமாய் இழையோட விடுவது அவரது நடையின் பெரும் பலம். ஆனால் நம் துரதிருஷ்டம், இந்நாவலில் அதற்கு வழி இல்லை. முறுவலைத் தந்த “குலுக்கி எடுக்காத உயர்தர சொகுசுப் பேருந்து ஒன்று தருவிக்கப்பட்டது. அதன் நடுப்பகுதியில் இருந்த இருக்கைகள் அகற்றப்பட்டு, எனக்கு வசதியாக ஒரு சோபா பொருத்தப்பட்டது” போன்ற வரிகள், முதல் சில அத்தியாயங்களுக்குப் பின் மறைந்து விடுகின்றன.
அதன் பின், இதயத்தை கனக்க வைத்து, திகைக்க வைத்து, கதற வைத்தே இந்நாவல் பயணிக்கும். வாழ்வில் மரண அடி வாங்கியவர், பாசத்தின் லயம் தவறியதில் இதயம் கிழிபட்டவர், ‘எனக்கு மட்டும் ஏன் இப்படி’ என மனம் நொந்து, சிதிலமடைந்து பலவீனமாய் இருப்பவர்கள், இந்த யதியைத் தீண்டாமல் இருப்பதே உத்தமம்.
‘யதியை எழுதத் தொடங்குகிறேன்’ என தன் வலைத்தளத்தில் ஒரு அறிவிப்பு செய்திருந்தார். ஆனால் தொடங்கியபின் யோசிக்கவோ, அத்தியாயங்களை வெறுமனே வளர்த்துக் கொண்டோ செல்லவில்லை. மிகத் தீவிரமாகச் சிந்தித்துக் கட்டமைத்து, நுணுக்கமான முடிச்சுக்களை இட்டபின், கதைக்குள் கதை, அதற்குள் கிளை, அதற்குள் பின்னல் என அசுரத்தனமாய் எழுதியிருக்கிறார். வெவ்வேறு திசையிலிருந்து, வெவ்வேறு வகையில் அம்முடிச்சுக்களை நோக்கிக் கதை பயணிக்கிறது. இந்த எழுத்து வித்தையை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
அந்த முடிச்சுக்களைத் தொட்டு விடாமல் யதியைப் பற்றி எழுதுவதே எனது தருமம்.
கதையின் தொனி தன்னிலை ஒருமை. அதாவது விமலாகிய நான்… என்ற தொனியில் விமலின் பார்வையில், வார்த்தையில், விளக்கத்தில் கதையை நகர்த்துவது.
கதையின் மையம் திருவிடந்தை. எளிமையான, அழகான, சந்தோஷமான கிராமத்து வாழ்வில் ஒரு வைணவக் குடும்பம்.
அம்மா, அப்பா (இவர்களின் பெயர்கள் அவசியமில்லை), மகன்கள்: விஜய்(1), வினய்(2), வினோத்(3), விமல்(4). உடன் அம்மாவின் தம்பி கேசவன் மாமா (மனைவியை இழந்தவர்). அப்பாவிற்கு VGP-யில் டிக்கெட் கிழிக்கும் வேலை. மாமாவிற்கு நித்ய கல்யாண பெருமாள் கோயில் மடப்பள்ளியில் வேலை.
ஒருவரையும், ஒரு வேளைக்கும் பசியில் தவிக்க விடாமல், சாதம் பொங்க வைத்து, இருக்கும் வசதியை வைத்து, சக்கரமாய்ச் சுழன்று குடும்பத்தை நிர்வகிக்கும் தெய்வமாய் அம்மா.
திருப்பதியில், தரும உணவுச் சத்திரத்தில், அவள் ‘என்ன இவா, ஒருத்தர் இலையில் ஒம்பது பேருக்குப் போடறா’ என மிரள்வதும், ஊர் திரும்பியபின் அக்கம் பக்கத்தாரிடம், ‘சாதத்தை மலையா பாத்தேன் மாமி! சந்தேகமில்லாம பெருமாள் அதுலதான் இருந்தார்’ என்பதுமே குடும்ப நிலைமையை எடுத்துரைக்கும்.
இவளை மரணப் படுக்கையில் காணும்போது விமல் எண்ணுகிறான் ‘அம்மா படுத்தே அதிகம் பார்த்ததில்லை’.
ஆம், குடும்பத்தில் முதல் ஆளாய் அதிகாலையில் எழுந்து, நான்கு சுவர்களுக்குள் சுழல்வதே யோகமாய், குடும்பத்தினர் நலனுக்காக உழல்வதே தவமாய், தனக்கென எந்த ஆசையுமற்ற விதமாய், இரவு அனைவரும் படுத்தபின் எஞ்சியதை உண்டு சற்று கண்ணயர்வதே தன் குணமாய் வாழும் தெய்வங்களை இந்த புண்ணிய தேசம் படைத்தது ஏராளம். ஆனால் அவளை, அந்த பாசத்தின் ஸ்தூல வடிவத்தை, தவிர்த்துவிட்டு தவிக்கவிட்ட பிள்ளைகள் அதை விட ஏராளம்.
இந்த அன்னையின் வலியே, இந்த நாவலின் ஒலி. அவளின் துக்கங்களே, இதன் பக்கங்கள்.
பலரது கோபங்களுக்குக் காரணம் மனதிற்குள் கனன்று கொண்டிருக்கும் ரணங்கள். ஆனால் இவை எதுவுமே ஒரு தாயுள்ளத்தினடியில் புதைந்த ரணங்களுக்கு ஈடாகா. இக்கதைத் தாயினுடைய வலி முழுமையாக தெரிய வரும்போது, படிப்பவரின் சில கோப இயல்புகள், சருகாகித் தானாக உதிரும்.
சில பெண்களின் வலியை உணர்ந்த நிலையில் ஒரு ஜீவன் இருக்கும். ஆனால் அது, எதையுமே செய்ய இயலாமல், அவளுக்காக கதறிக் கொண்டே, அரற்றிக் கொண்டே இருக்கும். அப்படிப்பட்ட ஜீவனாய் கேசவன் மாமா. இவர் ஒரு ஆக்ரோஷப் பாசக்காரர்.
இவர் முதலில் தோன்றுமிடம் விமலின் மடிகேரி ஆசிரமம். ‘உங்கம்மா மூச்சு தவிர ஒண்ணும் மிச்சமில்லாதவளா ஆயிட்டா… என்னடா பெரிய சன்னியாசம்… கடவுள பாத்துட்டியோ?… பக்தி ஒரு போர்வை. பலதுலேருந்து தப்பிச்சிக்க உதவற கருவி… சராசரி மனுஷாளுக்கு ஆயிரம் கஷ்டம்.. அதையெல்லாம் மறக்க சில பேர் குடிக்கறான்… நமக்கு பெருமாள் பேர்தான் லாகிரி… பெத்தவ எக்கேடு கெட்டா என்ன(னு)… தொலைச்சிட்டு வந்தவனுக்குத்தான் தெய்வம் காட்சி குடுக்கும்னா, அத நிக்கவெச்சி செருப்பால அடிப்பேன் பாத்துக்கோ’ என்று விமலிடம் வெடிக்கிறார். இங்கே இது சற்று கத்தரிக்கப்பட்ட பத்தி. முழு பத்தியில் இருக்கும் அவரது ஆவேசம் படிப்பவரை அசைத்து விடும். இத்தொனியிலேயே, கண்ணீரைக் கொட்டியபடியே கடைசிவரை வரும் பாத்திரம் இவர். நம் மனதை கனக்க வைப்பதில் அம்மாவிற்கு அடுத்தபடி இவரது பங்கே அதிகம்.
நாவலின் புனைவில், அதன் சமகாலத்தின் சில நிஜ சம்பவங்களை எளிதாக சில வரிகளில் இணைத்திருக்கிறார் ராகவன். கர்நாடக அரசியல்வாதி ஒருவர் பிரதமராவார் என்று விமல் முன்பே ஆருடமாகச் சொல்கிறார். ஐயப்பன் யாத்திரை பிரபலமாவதும், ஒரு துறவி தலைக்காவேரிக்குச் செல்வதும், பெங்களூரில் கிருஷ்ணர் கோயில் எழுவதும் சில சம்பவ உதாரணங்கள். அது போல, ஒரு சம்பவ நாளில், சஞ்ஜய் காந்தி இறந்த நாளில், முதல் மகன் விஜய் வீட்டை விட்டு விலகுகிறான்.
இவனும், இவனது மூன்று சகோதரர்களும் வெளியேறிவிடுவர் என்று ஒரு சுவடி மூலம் முன்னறிவிக்கப்படுகிறது.
இதை விமலுக்குச் சொல்வதும் விஜய்தான். இவன், நாவலின் ஒரு பலமான பாத்திரம். ஆனால் தோன்றுவது என்னவோ மிகக் குறைவான பகுதிகளே. அதுவும் சிறுவனாக இருக்கும் போது மட்டும். அந்த வயதிலேயே யோகம் ரகசியமாய் பயிலத் தொடங்குகிறான்.
‘மந்திரத்துல ஒண்ணுமில்லே. அந்த வார்த்தைகளோட உச்சரிப்புதான் விஷயம்… தினம் ரகுவீர கத்யம் சொல்றவனுக்கு வயித்து வலியே வராது’ போன்ற விஷயங்களை மெல்ல மெல்ல விமலுக்கு மட்டும் சொல்லத் தொடங்குகிறான். இவன் பாத்திரத்தை அணு அணுவாக வடிவமைக்கிறார் ராகவன்.
வெளியேறிய பின் இவன் பெரும் யோகியாகுகிறான். நம்மால் அணுமானிக்க முடியாத உலகமது. நெருப்பின் மேல் தவம் செய்வது, வேறு வேறு வடிவங்கள் எடுப்பது, காற்றில் மிதப்பது, நீரின் மேல் நடப்பது, மலை முகடுகளில் சஞ்சரிப்பது, எங்கெங்கோ வசிக்கும் யோகிகளுடன் சூட்சுமமாய் தொடர்பு கொள்வது, ஒரு வலைப் பின்னலைப் போல அவர்கள் இயங்குவது, அதன் மூலம் சில செயல்களை நிகழ்த்துவது என விரிகிறது இந்த யோக உலகம். ஹட யோகம், சமாதி யோகம் என்பதெல்லாம் வருகிறது. இதை விஜய், பிச்சைக்கார யோகிகள் சொரிமுத்து மற்றும் சம்சுதீன் மூலமாக காட்சிப் படுத்தியிருக்கிறார் ராகவன்.
‘ஒரு அரசாங்கம், ஒரு ராணுவம் நிகழ்த்த வேண்டிய சாகசங்களை இந்த தேசத்தின் உண்மையான யோகிகள் மறைமுகமாக நிகழ்த்திக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்கு நபர்கள் முக்கியமில்லை. அவர்களது தராதரம்கூடப் பொருட்டில்லை. இது நிகழ வேண்டும் என்றால் நிகழ்ந்தாக வேண்டும்’… என்று அவர்கள் இயங்குவதாய் ஒரு கட்டத்தில் விமல் எண்ணுகிறான்.
இதெல்லாம் நமக்கு புரிகிறதோ, நம்ப முடிகிறதோ இல்லையோ, தெருவோரம் அழுக்கேறிய உடைகளுடன் கிடப்பவரைக் கண்டால், ஒரு வேளை இவன் ஒரு யோகியாக இருப்பானோ என நாம் எண்ணும் அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தி விட்டார் ராகவன். இதெல்லாம் பிரமிப்பதற்கு ஒன்றுமில்லை. வெறும் அறிவியல் என்று விமல் விளம்புகிறான். காற்றை வசப்படுத்தினால் இது எதுவும் சாத்தியம் என்கிறான். இந்த அறிவியலை சிறிதளவேனும் விளக்கியிருக்கலாம். இதன் சூட்சுமம் சிறிதும் புரிபடாததில் நமக்கு சிறிது ஏமாற்றமே.
யோகம், மாந்திரீகம், பக்தி, சன்னியாசத்திற்குள் நாத்திகம்!. இவ்விதங்களைச் சொல்லவே நான்கு சகோதரர்களைப் படைத்திருக்கிறார்.
வினய்(2). இவன் மயான கொள்ளை திருவிழாவில் உடம்பெல்லாம் சாம்பல் பூசி ஆடியது தெரிந்ததும், இவனை அடித்து உதைத்து, படிப்பை நிறுத்தி, காஞ்சியில் ஒரு மடத்தில் சேர்த்து விடுகிறார் அப்பா. சட்டென்று ஒரு ஒழுக்கம் அவனைப் பற்றுகிறது. வேத பாடங்களை சிரத்தையுடன் கற்கிறான். திருவிடந்தை பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்திற்கு வந்து, கோயில் சேவாகாலத்தில் கலந்து கொண்டு கணீரென்று பாசுரங்கள் சொல்கிறான். விஜய் விட்டுச் சென்ற அதிர்ச்சிக்குப் பின் முதல் முறையாக ஒரு முறுவல் வர, இவன் மீது பெருமிதம் கொள்கின்றனர் பெற்றோர். மீண்டும் காஞ்சிக்குக் கிளம்பியவன் மடம் சென்று சேராததே சில நாட்களுக்குப் பின்தான் தெரிய வருகிறது. மீண்டும் இடி விழுகிறது.
இவன் ஒரு கடுமையான பாத்திரம். யோக நெறியில் சரியாகத் துவங்கியவன், தன்னிடம் கொடுக்கப்பட்ட ஒரு எள்ளுருண்டையைத் தவற விடுவதில், லயம் தவறி மாந்திரீகத்திற்கு மருவுகிறான். இடாகினிப் பேய், மோகினிப் பேய்கள், குட்டி தேவதைகளைக் கட்டி ஆளும் வித்தையின் வழிச் செல்கிறான். மேலும் இவனிடத்தில் காமம் பட்டவர்த்தனமாக்கப்படுகிறது. சுவாமிஜி என்று வந்த பெண்களையும், ஏன், தான் ஆளும் மோகினிகளையும் புணர்கிறான். இதில் எந்த கிளுகிளுப்பும் இல்லை. காமரூபிணியின் தரிசனம் வேண்டியே இவன் அல்லாடுகிறான். இதில் அதிர வைக்கும் சில எல்லை மீறல்களும் உண்டு. என்ன செய்ய! ராகவன் இங்கே குரூர ரூபன். ஆனால் இக்கட்டத்தில் ஒரு சலனமற்ற நிலையை நம் மனம் எய்தி விடுவதால், இதை உணர்வற்றுக் கடந்து செல்ல முடிகிறது.
வினயிடமிருந்து காமத்தைக் கழித்து விட்டால், எள்ளுருண்டையை ஒருவன் ஒரு வித்தையால் களவாடியதன் வலி… எவ்வளவு உழைத்தும், எவ்வளவு பயின்றும் ஏமாற்றப்பட்டதன் வலி நமக்கும் பொருந்தும். பல்லாண்டு செய்த கடும் தவத்தினால் சேமித்த சக்தி ஒரு கணத்தில் விரயமாவதன் வலி நமக்கும் பொருந்தும். வாழ்வில் முட்டி மோதியும், செருப்படி பட்டும், நெருப்பில் வாட்டி வறுபட்டும், சில விசயங்கள் புரிபடாததன், வசப்படாததன் வலி நமக்கும் பொருந்தும். மறுபடியும் முதலிலிருந்து துவங்க வேண்டியதன் வலி நமக்கும் பொருந்தும். கற்றதணைத்தும் வீண் என்பதன் வலி நமக்கும் பொருந்தும். தோல்வியும் பசியும் இவனிடத்தில் அர்த்தநாரி. உண்மையில் வினய் ஒரு பெருவலியின் பெருவடிகால். மறக்க முடியாத பாத்திரம்.
மறுபடியும் குடும்பத்தைத் தெளிய வைத்து அடிக்கத் தயாராகிறார் ராகவன்.
விமல்(4). வினோத்தை(3) முந்திக் கொள்கிறான். வெகு தினங்களுக்குப் பின் ஒரு வெளியூர் பயணம். ஸ்ரீரங்கம். கொள்ளிடத்தின் கரையில் அம்மா சமைக்க அனைவரும் உண்டு மகிழ்கின்றனர். சில சுக நினைவுகளை, பழங்கதைகளை, ஸ்ரீரங்கத்தில் தன் இளமைக் கால நினைவுகளை அப்பா சொல்கிறார். ‘எங்கப்பா பெரிய இங்கிலீஸ் ஸ்காலர். பிரிட்டிஷ்காரனே பிரமிச்சுப் போற மாதிரி இங்கிலீஷ் பேசுவார்’ என விமலின் தாத்தாவைப் பற்றியெல்லாம் சந்தோஷமாய் பேச்சுக்கள் வளர்கிறது. இரு சகோதரர்களும் ஆற்றில் போட்டி போட்டு நீந்திக் குளிக்கின்றனர்.
ரங்கநாதரின் விஸ்வரூப தரிசனத்திற்குச் செல்கிறார்கள். முன்மண்டபத்தில் நுழையும் கணம் கூட்ட நெரிசலால், விமல் பின்னுக்குத் தள்ளப்படுகிறான். அப்போது நடக்கும் ஒரு சம்பவத்தில் அண்ணாவைப் (இக்கதையில் மூத்தவன் விஜய் மட்டுமே அண்ணா என அழைக்கப்படுகிறான்) பற்றி தகவல் கிடைக்க, அவனைத் தேடி குற்றாலம் சென்று விடுகிறான். தான் தேடப்படுவோம் என உணர்ந்தும் அண்ணாவைப் பிடித்துவிடும் நோக்கில் திரிகிறான். அண்ணாவின் தடம் மட்டுமே புலப்பட, ஏமாற்றத்துடன் திரும்புகிறான். தான் ஒருகாலும் இப்படி வெளியேறப் போவதில்லை என எண்ணுகையில் இவன் திரும்பும் பேருந்து ஒரு சிறு விபத்தில் சிக்குகிறது. சாலையோரம் நடக்கத் தொடங்குகிறான். சாராயக் கடைக்குச் செல்லும் வழி என்று அம்புக்குறி இட்ட போர்ட் ஒன்றிருக்க, அதன் குறுகலான பாதையில் விமல் செல்ல…
புரிந்து விட்டது. ராக்கெட் ஏவுதளம் போல, அடுத்த வெளியேறு களத்தை ராகவன் அமைக்கிறார் என்று.
அங்கொரு கொலை நிகழ, அதை ஒரு பெண் நிகழ்த்த, அவளுக்கு ஆறுதல் சொல்லித் திரும்புகிறான். அப்போதும் தெளிவாக இருப்பவன், அந்த பெண்ணின் தாய் அவளுக்குச் செய்த துரோகத்தையும், இருப்பினும் அவள் தாயிடம் கொண்ட பாசத்தையும் எண்ணிக் கொண்டே நடக்க, சட்டென்று தன் அம்மா மீது, தனக்கிருக்கும் பாசத்தைக் கண்டு அஞ்சுகிறான். ஒரு போதைப் பொருளினும் வீரியம் கொண்ட உணர்ச்சிக்கு ஒருபோதும் அடிமையாகிவிடக் கூடாது என்று எண்ணியபடியே இலக்கற்று நடக்கத் தொடங்கி விடுகிறான். சிறு வித்தியாசம். வீட்டிற்குப் போன் செய்து அம்மாவிடம் ‘இனிமே நான் உனக்கில்லை. வரேன்’ என்று சொல்லி விடுகிறான்.
‘கடங்காரா, நாங்கல்லாம் உசிரோட இருக்கறதா, சாகறதா’ அம்மா அலறியதில் நான் இணையத்தைத் துண்டித்து விட்டேன். படிப்பதை தொடர்வதா? நிறுத்தி விடுவதா?
இந்த கொலை சம்பவமும், விமலின் மனசு அலசிய எண்ணங்களும், அவன் வெளியேறப் பொருத்தமானதுதானா? மனம் தர்க்கம் செய்தது. ஆனால் இதைவிட அழுத்தம் சற்றே அதிகமாக இருந்திருந்தாலும், படிப்பதை நிறுத்தியிருப்பேன்.
வினோத்(3). ராகவ குரூரத்தின் மிச்சம். அல்லது உச்சம். மற்ற மூவரும் இளவயதிலேயே விலகி விட்டனர். இடிந்து விட்ட குடும்பத்தில், வினோத் தன் பொறுப்புணர்ந்து நடந்து கொள்கிறான். அனைத்து விதத்திலும் அம்மாவிற்கு உதவியாக இருக்கிறான். உள்ளூர் பாடசாலையில் ஆசிரியனாகிறான். வீடு இவனை நம்புகிறது. இவன் திருமணத்திற்குச் சம்மதிக்க, இரு தெரு தள்ளியிருக்கும் பத்மா மாமியின் மகள் சித்ராவுடன் நிச்சயம் செய்யப்படுகிறது. வினோத், இரு வீட்டாரிடமும் சொல்லிவிட்டே சித்ராவை வெளியே அழைத்துச் செல்கிறான். காதல் அரும்ப, முதல் முத்தமும் தருகிறான். வீடு புதுப்பிக்கப்படுகிறது. அம்மாவும் மாமியும் மாறிமாறி, ஓடி ஓடி எல்லாம் தயார் செய்கிறார்கள். ஊர் ஆச்சரியப்படுகிறது. உறவுக்காரர்கள் ஒவ்வொருவரையாக நினைவுகூர்ந்து உறவைப் புதுப்பித்து நேரில் சென்று பத்திரிகை கொடுத்துத் திருமணத்துக்கு அழைக்கிறார்கள். சித்ராவின் வீட்டு வாசலிலேயே திருமணத்திற்குப் பந்தல் அமைக்கப்படுகிறது.
இதுவே உங்கள் இதயத்துடிப்பை அதிகரிக்கச் செய்தால், ராகவனின் விஸ்தரிப்புகள் நம்மை என்னவெல்லாம் செய்திருக்கும்.
திருமணத்திற்கு முந்தைய இரவு, ஒரு ஒளி தோன்ற, வினோத் அதைப் பின்பற்றிச் சென்று விடுகிறான். மண நாளில் சித்ரா தற்கொலை செய்து கொள்கிறாள். என்ன குரூரம்? இந்த கடுமை ஏன்? 100 அத்தியாங்கள் கடந்தும் வினோத் தென்படவே இல்லை. விமலும் வினயும் சந்தித்து விடுகின்றனர். இருவரும் சென்னைக்கு ஒரே இரயிலில் வர, இவர்களின் பேச்சில், மீள்நினைவுகளில் கதை நகர்கிறது. இந்த இருவரின் கதைகளிலும் கூட சித்ராவின் வாசம் இருப்பதால், அவளது மரணம் நம்மை பெரிதும் பாதித்தபடியே தொடர்கிறது. யாவரையும் யாவருக்கும் தெரியும் சிறு கிராமத்தில் முடங்கிவிட்ட இரு குடும்பத்தின் நிலையும் நம்மை அலைகழிக்கிறது.
இவர்கள் சென்னையை அடையும் போது, ஒரு வழியாக வினோத் தென்படுகிறான். ஹரே கிருஷ்ணா இயக்கத்தில் இணைந்த கிருஷ்ண பக்தனாக வருகிறான். சதா சர்வ காலமும் பகவான் நாமாவை ஜபிக்கும் பக்தி மார்க்கம், இவன் மூலம் கோடிட்டுக் காட்டப்படுகிறது. இலங்கையில் ஒரு கிருஷ்ணர் கோவிலை நிர்மாணிக்கச் செல்லும் குழுவில் இவனும் ஒருவன். ஆனால் இலங்கைக்குச் சென்று சேர்ந்த மறுநாளே ஒரு சிங்கள சன்னியாசினி மூலம் கப்பலேற்றி இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்படுகிறான். இந்த அவசரமும், அவசியமும் விளங்கவே இல்லை. இதைத் தொடர்ந்து வரும் பகுதிகளிலும் கதையின் வேகம் சற்றே மட்டுப்படுகிறது.
தரையிரங்கும் விமானம் தளத்தைத் தொடும் நொடியில் ஜிவ்வென்று புது வேகத்துடன் மேலெழும்பினால் நமக்கு காதடைக்காதா? வயிறு பிசையாதா? சித்ராவின் மரணம் பூமராங்காகித் திரும்புகிறது. ஒரு கொலைக்குத் திட்டமிடப்படுகிறது. குறி வைக்கப்பட்ட நபரும், குறி வைக்கப்பட்ட விதமும், மண்டையை கிறுகிறுக்க வைக்க, ஒரே மூச்சில் மீதி அத்தியாயங்களைப் படித்து முடித்தேன்.
முடிச்சுக்கள் அவிழ்ந்தன. சுவடி மர்மம் விலக, திகைத்தேன். முதல் பத்தியில் சொன்ன நிலை, இங்கு அடைந்த நிலை.
எல்லாம் சரி. துறவிகளின் களம் என்று சொல்லி, நால்வர் விலகும் வகைகளையே பிரதானமாக விமர்சித்திருக்கிறேன் என நினைக்கிறீர்களா? இது கதையாக சொல்லப்பட்டதில், இப்படலங்கள் நாவலில் கணிசமான பகுதியை ஆக்கிரமித்திருக்கின்றன. மாயங்களும், சித்துக்களும், மாந்திரீகங்களும் ஒரு அமானுஷ்யமான கதையில் வருவது போலத்தான் காட்சி படுத்தப்பட்டுள்ளன. ஆனால் இவைகளிலிருந்து வேறுபடுவது விமல் என்கிற பாத்திரம்.
இந்த விமலின் பாத்திரம் அலாதியானது. பட்டுக் காவியில் வசீகரமாக வலம் வருகிறான். தனக்கென ஒத்தை ரூபாய் கிடையாது. பிச்சை எடுத்துத்தான் உண்கிறான். ஒரு குருவுடன் சேர்ந்து தன் பயணத்தைத் துவங்கியவன், இந்திய அரசியலில் ஒரு பெரும் சக்தி மையமாக உருவெடுக்கிறான். இவனுக்கு பல கஸ்டமர்கள். அரசியல்வாதிகள், நடிகர் நடிகையர், பிசினஸ் மேக்னட்ஸ். சிலருக்கு இவன் நிதி ஆலோசகன். ரஷ்ய எல்லையோரம் தாமிரச் சுரங்கம் வைத்திருப்பவன், பிரேசிலில் காபி காடு வைத்திருப்பவன், மெக்ஸிகோவில் ஆயுதத் தொழிலில் முதலீடு செய்பவன், திபெத்தில் ஒரு வெடிகுண்டு நிபுணன்… இந்த நிழலுலக நபர்களெல்லாம் விமலோடு அழகாகக் கோர்க்கப்பட்டு விட்டார்கள். இது சாமான்யன் அறியா உலகம். இதில் ப்ரோக்கராக சிலர் செயல்படுவதை, செயல்பட்டதை விமலின் பாத்திரம் விளம்புகிறது.
சந்தடி சாக்கில் கிருஷ்ணனும் ஒரு ப்ரோக்கர் என்கிறான். அவன் மன்னனே ஆனாலும் தருமம் காக்க முற்றிலும் துறந்தவன். தன்னைப் போல… என்றெல்லாம் விளக்கி அசரடிக்கிறான்.
இவனது சன்னியாசம் ஆன்மிகத்துள் நாத்திக வகை. அதாவது கடவுள் மறுப்புக் கொள்கைகளோ அல்லது அரசியல் லாப நோக்கு நாத்திகமோ அல்ல. அதே சமயம் கடவுளை முன்னிலைப்படுத்துவதும் இல்லை. கடவுளைப் பற்றிப் பேசாமலேயே, சில தியானங்கள், சில தத்துவங்கள், சில யோக, மூச்சு பயிற்சிகள், உணவு முறைகள் இவற்றை விளக்கி, வாழ்வில் எந்த அற்புதங்களையும் எதிர்பார்க்காமல், அதன் போக்கில் வாழும் கலையை போதிக்கும் வகை. விமல் சன்னியாசியாகும் போது அவனது எண்ணம்…
‘எனக்குள் நியமித்துக்கொண்ட வைராக்கியம் எதனிடமிருந்தும் விலகுவதில்லை என்பதுதான். ’
இவனது குரு சொல்கிறார் ‘நீ மாற வாய்ப்பில்லை விமலா. ஆனால் உன்னால் நிறையப் பேர் வாழ்வில் மாற்றமடைய முடியும் என்று எனக்குத் தோன்றுகிறது’. ஆம் இப்பாத்திரத்தைச் சற்று ஊன்றிப் படிப்பவரில் மனதில் சில மாற்றங்கள் நிகழலாம்.
இவனது சமகாலதில் ரஜனீஷ் ஓஷோவும் வளர்கிறார். இவனும் ஓஷோவைப் பார்க்க காவி ஆடைகளைக் களைந்து எளிய குர்த்தா மட்டும் அணிந்து புறப்படுகிறான். ஒரு எதிர்பார்ப்பைக் கிளறிய இவ்விடம் எந்த தாக்கத்தையும் தராமல் முடிந்து விட்டது. இதைப் போலவே இவனது குரு மகா கும்பமேளாவில் இயேசுவை ஒளிவடிவில் காண்பதும் வசீகரிக்கவில்லை.
ராகவனின் வேகம், எழுதுவதைக் காட்டிலும் படிப்பதிலும் உண்டு. அதை விமலாகவே சொல்கிறார். ‘சித்தர் பாடல்கள். இந்து மதம். யோகம். ஆன்மிகம். தந்திரா. சித்து. மூலிகை மருத்துவம். என்னென்னவோ…’. ‘வைத்திய வல்லாதி, கன்ம நூல், அகஸ்தியர் பரிபூரணம், முப்பு சூஸ்திரம்…’ என்றொரு பட்டியலும் வருகிறது. இவைகளைப் படித்ததன் பலன்தான் இந்த யதியோ என எண்ணவும் வைக்கிறார். அவரது தீவிர சிந்தனையின் பயனாய் நாவலில் அருமையாக சின்னஞ்சிறு வரிகள், காரிருள் வெளியில் மின்மினியாய் ஆங்காங்கே பளிச்சிடுகின்றன. அவற்றில் சில:
‘மொழியை விலக்கிச் சிந்திப்பதுஎத்தனை உன்னதமானதொரு கலை!’
‘ஆன்மிகம் என்றில்லை. எதில் நாம் முன்னேற நினைத்தாலும் முதலில் வயிற்றைப் பற்றிய நினைவுக்கு விடை கொடுத்தாக வேண்டும்.’
‘எல்லா அதிர்ச்சிகளும் ஒரு நாளில் நடந்து முடிந்து விடுகின்றன. ஆனால் அவற்றின் வீரியமும் தாக்கமும் வாழ்நாள் முழுதும் தொடரும் போலிருக்கிறது.’
‘உறவு நிலைகளின் புதிர்த்தன்மை பேரெழில் கொண்டது. அன்பென்றும் பாசமென்றும் ஒற்றைச் சொற்களில் அனைத்தையும் முடித்து வைத்துவிட நினைக்கிறது மனம்.’
‘புன்னகை ஒன்றைத்தான் என் போர்வையாக்கிக் கொண்டிருந்தேன். எதையும் மறைப்பதற்கு. அல்லது எதையாவது அடைவதற்கு.’
‘எல்லாம் நிறைய இருக்கிறவர்களுக்கு எதுவுமில்லாதவனின் சகாயம் ஏதோ ஒரு கட்டத்தில் தேவைப்பட்டு விடுகிறது.’
‘சொல் தோற்கும் இடங்களில் மௌனம்தான் வெல்லும்.’
‘சில வினாக்கள் பதில்களை எதிர்பார்ப்பதில்லை. அவற்றுக்கு வினாவாக மட்டுமே இறுதிவரை இருந்து விடுவதில்தான் விருப்பம்.’
நாவல் செல்லும் வேகத்தில் இது போன்ற வரிகளை, தவறவிடாமல் கவனித்து மனதில் நிறுத்திக் கொள்வது படிப்பவரின் பொறுப்பு.
இவ்வனைத்திற்கும் மேலாக ‘இல்லத்துள் யோகம்’ என்பதே யதி தரும் பாடம். யதியைப் படித்து முடிக்கும் நேரம் மனதினுள் பல காலமாக வளர்ந்த பல பிம்பங்கள் அடித்து நொறுக்கப்பட்டிருக்கும். சில தினங்களுக்கு எண்ணங்கள் அதிலேயே உழலும், சுழலும். பின் ஒரு நிதானத்தை நோக்கி, ஒரு அமைதியை நோக்கி உங்கள் மனம் நகரும். ராகவனுக்கு நன்றி நவில்வீர்.
– காஞ்சி ரகுராம்