யதி – வாசகர் பார்வை 12 [டாக்டர் ஆர். திருநாவுக்கரசு]

நாவலின் கரு ஒரு ஆசாரமான அய்யங்கார் குடும்பத்தில் பிறந்த நான்கு பிள்ளைகளைப் பற்றியது. ஒவ்வொருவரும் ஏதோ ஒன்றைத் தேடி, பெற்ற தாய் தந்தையைத் தவிக்கவிட்டு குடும்பத்தில் இருந்து விலகுகிறார்கள். பெரியவன் விஜய் பற்றிய நிகழ்வோடு ஆரம்பிக்கிறது நாவல். அவன் தம்பிக்கு தரும் அதிர்ச்சியான அனுபவங்கள். அடுத்தடுத்து ஒவ்வொருவருக்கும் நடக்கும் வினோதமான அனுபவங்கள்- Paranormal நிகழ்வுகள். சொரிமுத்து, சர்புதீன் என சில சித்தர்கள் குறுக்கீடு. சிவ மூலிகை அனுபவங்கள். உடற்கூறு சார்ந்த இளம் வயது கனவுகள், காதல், சந்திராசாமி போல மாறும் ஒரு பிள்ளையின் அரசியல் அனுபவங்கள். திருமணத்துக்கு முதல் நாள் ஓடிப் போகும் ஒரு பிள்ளை. இதனால் தற்கொலை செய்து கொள்ளும், பின்னாளில் ஆவியாக அலையும் பெண் சித்ரா. பிள்ளைகள் போனபின் கணவனையும் இழந்து தவிக்கும் தாய். உறுதுணையாக கேசவன் என்னும் சகோதரன்.

கதையை விவரிக்காமல் எளிமையாகச் சொன்னால் அம்மாவின் மரணத்தில் கூடும் மூன்று பிள்ளைகள். அவர்கள் மூத்தவனுக்காக காத்து இருக்கும் போது, தணலாக வந்து விஜய் அம்மாவின் கழலில் வீழ்வது. திரும்ப நாயாக வந்து கதை சொல்லிக்கு ஆசி கூறுவதாக முடிகிறது நாவல். இதில் உள்ள முக்கிய முடிச்சான ஓலையைப் பற்றியும், அம்மாவின் வாழ்வு ரகசியத்தைப் பற்றியும் நான் இப்போது சொல்ல விரும்பவில்லை. – அது நாவல் படிக்கும் சுவாரசியத்தை கெடுத்து விடும்.

அழகான வர்ணனைகள், மிகையில்லாத வார்த்தைகள். சின்னச் சின்ன திருப்பங்கள், பேசும் நாய்கள்- கட்டைவிரல் மடிப்பில் மறையும் இடாகினிப் பேய் – அரசியல்வாதிகள் மதவாதிகளிடம் அடைக்கலம் தேடும் அவலம். புத்தகம் முழுதும் பல அரிய சொற்தொடா்கள் நம்மை ஆகர்ஷிக்கின்றன.

* மரணத்தை ஏன் வெல்லவேண்டும்? வாழ்வின் அனைத்து பிசிறுகளையும் நாம் ரசிக்க வேண்டும்.

* நம் இஷ்டத்துக்கு நிகழ மறுக்கும் அற்புதமான இந்த வாழ்வு எனக்கு போதும். இதன் கசப்பு எனக்கு பிடித்தருக்கிறது. துவர்ப்பு பிடித்திருக்கிறது. வாசனையும், துர்நாற்றமும் எனக்கு பாதுகாப்பாக உள்ளன. அன்பு ஒரு மாயை. அன்பைப் பெறுவதும் செலுத்துவதும் ஒரு மாய யதார்த்தம். சுதந்தரத்தின் முதல் விதியே அடுத்தவனை நினைக்காது இருப்பதும், அவன் சொற்படி வாழாதிருப்பதும்.

* நாம் இருந்த அம்மாவின் பனிக்குடத்தில் கண்ணீரே நிறைந்திருக்கிறது. துடைப்பதற்கு நம்மில் யாரேனும் கையை நீட்டினாலும் மேலும் கண்ணீரையே பூச நேரும்.

* என் சன்னியாசம் முற்றிலும் சுயநலம் சார்ந்தது, என் சுதந்திரமே என் விழைவு, என் மகிழ்ச்சியே என் தியானப் பொருள்.

அத்தியாயங்களை இந்தப் புயல் மழையில் வேகம் குறைவான நெட் இணைப்பில் இறக்குவது சிரமமாக உள்ளது. ஆனால் அத்துயரம் படிக்கும் போது மறைந்து, மகிழ்ச்சி நிறைகிறது. பூரண புத்தகமாக வரும்போது இலகுவாகப் படித்து மீண்டும் ரசிப்பேன்.

– டாக்டர் ஆர். திருநாவுக்கரசு

 

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி