அனுபவம்

கோவிந்தசாமிகளின் குணாதிசயங்கள்

திடீர் திடீரென்று தினசரி ஒழுங்குகளை மாற்றுவது, உணவு, உடை, உறக்கம் போன்றவற்றில் புதிய முயற்சிகள் செய்து பார்ப்பது எப்போதும் எனக்குப் பிடிக்கும்.

முன்பெல்லாம் ஒரு நாளைக்குப் பன்னிரண்டு முதல் பதினான்கு மணிநேரம் உறங்குவேன். எப்போது படுத்தாலும் தூக்கம் வரும். உறங்கி விழித்து எழுந்து காப்பி சாப்பிட்டுவிட்டுத் திரும்பப் படுத்தாலும் மூன்று மணி நேரம் தூங்க முடியும் என்னால். உறக்கம் என்பது என்னைப் பொருத்தவரை உடலின் தேவையல்ல. அது ஒரு மனநிலை. வேண்டுமென்றால் வேண்டும், வேண்டாம் என்றால் வேண்டாம்.

2004ம் வருட ஜனவரி முதல் தேதி அன்று ஏதோ தோன்றியது. தூங்கியது போதும் என்று. அன்று நள்ளிரவு ஒரு மணிக்குப் படுத்து, காலை ஆறு மணிக்கு எழுந்தது நினைவிருக்கிறது. அதற்குமுன் அத்தனை சிறு உறக்கம் கொண்டதே இல்லை. அன்று முழுவதும் கடுமையாக வேலை பார்த்தேன். நிறைய எழுதினேன். நிறையப் படித்தேன். பெரிதாக என்னவோ சாதித்துவிட்டதுபோல் சந்தோஷமாக இருந்தது. இதனைத் தொடர முடியும் என்று தோன்றியது. தொடர்வதற்காகவே பல வேலைகளை இழுத்துப் போட்டுக்கொண்டேன். அந்த வருடம் ஆறு பத்திரிகைத் தொடர்கள், ஒரு தொலைக்காட்சித் தொடர், நான்கு புத்தகப் பணிகளை எனக்கென விதித்துக்கொண்டு பேய் போல உழைக்க ஆரம்பித்தேன். இரவு ஒரு மணிக்குப் படுக்கை என்பது மெல்ல நகர்ந்து இரண்டு, இரண்டரை ஆனது. ஞாயிற்றுக்கிழமைகளில்கூட விதி தளர்த்தாமல் அதே ஒழுங்கைக் கடைப்பிடிக்க ஆரம்பித்தேன்.

முதல் சில தினங்கள் லேசான சோர்வு இருந்தது. பிறகு இல்லை. உறக்கம் குறைத்தது – ஒரு விளையாட்டாகத் தொடங்கியதுதான் என்றாலும் இன்றளவும் எனக்கு அது வெகு சௌகரியமாக இருக்கிறது. எந்த வேலைக்கும் தயங்குவதே இல்லை. நம்மால் முடியுமா என்று யோசிப்பது கிடையாது. ஏனெனில் எனக்கு யாரைக் காட்டிலும் அதிக நேரம் உள்ளது. அதிக அளவு முயற்சி செய்து பார்க்க இயலும்.

இதே மாதிரிதான் உணவு. ராட்சசன் மாதிரி சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். எடை பற்றிய எண்ணமே இருந்ததில்லை. அதுவும் கொழுப்பு மிக்க உணவுப்பொருள்கள் என்றால் கொள்ளை இஷ்டம். வெண்ணெய், நெய், பால், தயிர், எண்ணெயில் பொறித்த பண்டங்கள், இனிப்புகள். இட்லி, தோசையைக் கூடச் சீண்டமாட்டேன். ஹோட்டலுக்குப் போனால் சோளாபூரி என்றுதான் ஆரம்பிப்பது வழக்கம். பட்டர் நான், ஆனியன் பஜ்ஜி, பன்னீர் பட்டர் மசாலா, கோபி மஞ்சூரியன் என்று தேடித்தேடிக் கெட்ட பொருள்களைத் தின்று தீர்ப்பதை ஒரு விரதமாகவே வைத்துக்கொண்டிருந்தவன் நான். தினசரி மதிய உணவுக்கு சைட் டிஷ்ஷாக வாழைக்காய் பஜ்ஜி கேட்கும் பிரகஸ்பதியைக் கண்டிருக்கிறீர்களா எங்கேனும்? ஏதாவது விசேஷம் என்று யாராவது இனிப்பு நீட்டினால் இரண்டுக்குக் குறைந்து எடுக்காதவனைப் பார்த்திருக்கிறீர்களா? ஒரு சமயத்தில் நான்கு ஐஸ் க்ரீம்களை மொத்தமாகச் சாப்பிட்டுவிட்டு மேலுக்கு ஒரு காப்பி குடிக்கும் காட்டுவாசியை?

அப்படித்தான் இருந்தேன். திடீரென்று டயட், நீச்சல் என்று அடியோடு மாறி ஒருவருடத்தில் பதினாறு கிலோ எடை குறைக்கவும் முடிந்தது. வேலை மிகுந்து, வீடு மாறி சென்னைக்கு இடம் பெயர்ந்தபிறகு உடற்பயிற்சிக்கு நேரமற்றுப் போனது. அதிக வேலையால் அதிகம் பசித்தது. பழைய டயட் உணவு ஒத்துவரவில்லை. தமிழன் சோற்றால் அடித்த பிண்டம். எனவே மீண்டும் சாப்பிடத் தொடங்கினேன். ஆனால் அளவோடு. பழைய கொலைவெறி இல்லை. ஆனால் எதையும் தவிர்ப்பதில்லை இப்போது.

மீண்டும் நான் டயட் மோடுக்கு மாறுகிற தினம் வெகு தொலைவில் இல்லை என்று என் மனைவி காத்திருக்கிறாள். எனது அத்தனை பரீட்சார்த்தங்களும் அவளை மட்டும்தான் முழுதாக பாதிக்கும். எப்போதும் இப்படித்தான். வெச்சா குடுமி, சிரைச்சா மொட்டை என்கிற பழமொழியை அவள் அடிக்கடி பயன்படுத்த சந்தர்ப்பம் தருபவன் என்கிற வகையில் இது பற்றிய அந்தரங்க வருத்தம் எனக்கு எப்போதுமுண்டு. வேறு வழியில்லை. என்னால் இவ்வாறு மட்டுமே இருக்க முடிகிறது.

ஒரு காலத்தில் வெள்ளைச் சட்டை போடுவதில் ஒரு மயக்கம் இருந்தது. நிறைய வெள்ளைச் சட்டைகளாக வாங்கிக் குவித்திருந்தேன். சட்டென்று ஒருநாள் அப்படியே விட்டேன். மெல்லிய கோடுகள் போட்ட சட்டை எனக்கு நன்றாக இருக்கும் என்று என் மனைவி அறிமுகப்படுத்தினாள். அதுவும் கொஞ்சநாள்தான். கச்சாமுச்சாவென்று பெரிய கட்டங்கள், கண்ணைத் தாக்கும் வண்ண டிசைன்கள், இரண்டு பா. ராகவன்கள் நுழையுமளவு பெரிதான சைஸ், சிக்கென்று சரியான அளவு, சட்டையே வேண்டாம், இனி டி ஷர்ட் தான் என்று தடாலடி மாற்றம், கொஞ்சநாள் முழுக்கை, கொஞ்சநாள் அரைக்கைச் சட்டை, பேண்ட் வாங்க வேண்டாம், பெர்முடா போதும் என்ற அழிச்சாட்டியம், வீட்டில் லுங்கிக்கு பதில் வேட்டி, வேட்டியையே லுங்கியாகத் தைத்த புது முயற்சி – எல்லாவற்றையுமே அளவோடு வைத்துக்கொள்ள முடியும்தான். எனக்கு முடிந்ததில்லை.

ஒரு முடிவெடுத்தால் குறைந்தது ஆறு மாதங்கள் பேய்த் தீவிரத்துடன் அதில் இறங்கிவிடுவது என் வழக்கம். யார் என்ன சொன்னாலும் கவலைப்பட்டதில்லை. ஒரு சமயம் மலேசிய நண்பர் ஒருவர் அந்நாட்டு தேசிய டிசைன் சட்டை ஒன்றை வாங்கி வந்து அன்பளிப்பாகத் தந்தார். பட்டன் போடுமிடத்தில் பட்டையாகப் பூப்போட்ட பளபளப்பான ஃப்ளோரஸண்ட் நீல நிற முழுக்கைச் சட்டை.

பார்த்தவுடன் பிடித்துப் போய்விட்டது. அப்போது நான் ஒரு தொலைக்காட்சித் தொடருக்கு எழுதிக்கொண்டிருந்தேன். உடனே போன் செய்து காஸ்டியூம் டிசைனரிடம் விஷயத்தைச் சொல்லி, பர்மா பஜாரில் இம்மாதிரி சட்டைகள் கிடைக்கிறதா பாருங்கள் என்றேன். பர்மா பஜாரில் மலேசியச் சட்டை கிடைக்கவில்லை. ஆனால் அதற்குச் சற்றும் சளைக்காத அதிபயங்கர கச்சாமுச்சா டிசைன்கள் ப்ரிண்ட் செய்யப்பட்ட பூதாகாரச் சட்டைகள் இருக்கிறதென்றார். இயக்குநரிடம் சொல்லி, அதை வாங்கச் சொல்லிவிட்டு, கதையில் ஒரு வில்லத்தனமான காமெடி கேரக்டரைப் புகுத்தி, அந்தச் சட்டைகளை அணிந்துகொண்டு நானே நடித்தேன்.

ஒருநாள் என் மனைவியின் உறவினர் ஒருவர் வீட்டில் ஏதோ விசேஷம். அன்றைக்கு ஷூட்டிங்கில் எனக்கான காட்சிகள் இருந்தபடியால் அந்த நாய் துரத்தும் சட்டையோடு நடித்துவிட்டு, அப்படியே புறப்பட்டு உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்குச் சென்றேன். மாப்பிள்ளை பெரிய எழுத்தாளர், கௌரவமான ஆசாமி என்று கருதிக்கொண்டிருந்தவர்கள் நினைப்பில் அன்றைக்கு மணல் லாரியே விழுந்தது. நானொரு கோயிஞ்சாமி என்று நெற்றியில் எழுதியா ஒட்டிக்கொள்ள முடியும்? காதலைப் போல் இதுவும் உணரப்பட வேண்டிய விஷயமல்லவா?

எனது ஒழுங்கீனங்கள், கந்தரகோலங்கள், திடீர் விரதங்கள் பற்றியெல்லாம் பொதுவாகக் கவலைப்பட்டு எனக்கு நல்லவார்த்தை சொல்லக்கூடியவர்கள் இரண்டு பேர்தான். ஒன்று என் மனைவி. இன்னொரு நபர் ஆர். வெங்கடேஷ். ஏண்டா இப்படி இருக்க என்று வெங்கடேஷ் அநேகமாக 1985லிருந்து கேட்டுக்கொண்டிருக்கிறான் என்று நினைக்கிறேன். ஒருபோதும் நான் அவனுக்குச் சரியான பதில் சொன்னதில்லை.

ஒரு இரண்டு மூன்று மாதங்கள் இருக்கும் என்று நினைக்கிறேன். ஒருநாள் இரவு ஒன்றரை மணிக்கு என் நண்பர் டாக்டர் ஷாலினியுடன் கூகுள் சாட்டில் பேசிக்கொண்டிருந்தபோது தற்செயலாக என்னுடைய உறக்க ஒழுங்குகள் பற்றிப் பேச்சு வந்தது. [அவரும் நள்ளிரவுப் பறவைதான். ஆனாலும் வேண்டிய உறக்கத்தில் குறை வைப்பதில்லை என்று சொல்லியிருக்கிறார்.] நீங்கள் சீக்கிரம் இதற்காக என்னை வந்து பார்க்கவேண்டியிருக்கும் என்று நினைக்கிறேன் என்று சொன்னார். என்னுடைய மூன்று மணிநேர உறக்க ஷெட்யூல் மிகவும் ஆபத்தானது என்றும் சொன்னார்.

இம்முறை ஒரு டாக்டரே சொன்னதால் கொஞ்சம் பயம் வந்தது. ஆனால் தூக்கம் மட்டும் வருவேனா என்றது. என்னடா செய்யலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தேன்.

வெயிலும் டிராஃபிக்கும் அதிகரித்து, வெளியே போய் வருவதே சிக்கலுக்குரிய விஷயமாகிக்கொண்டிருந்த சமயத்தில் சென்றமாதம் திடீரென்று முடிவெடுத்து, என்னுடைய அலுவலக நேரத்தை தடாலடியாக ஒருநாள் மாற்றினேன். காலை ஆறு மணி முதல் மதியம் ஒரு மணி வரை.

அலுவலகத்தில் இதனை அறிவித்து, யாரெல்லாம் என் நேரத்துக்கு வேலை பார்க்க வருவீர்கள் என்று ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தியதில் நான்கைந்து பேர் சம்மதித்தார்கள். போதாது?

இப்போது நான் அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து விடுகிறேன். பரபரவென்று குளித்துவிட்டுக் கிளம்பினால் சாலையில் ஈ காக்கை இருக்காது. பிரேக்கே பிடிக்காமல் சீறிப் பாய்ந்து ஐந்து நிமிடத்தில் அலுவலகம். அமைதி கொஞ்சும் காலைப் பொழுதில் வேலையும் மிகத் துரிதமாக நடக்கிறது. ஒரு மணி வரை வேலை பார்த்துவிட்டுப் புறப்பட்டுவிடுகிறேன். வீட்டுக்குப் போய் சாப்பிட்டுவிட்டு, மொபைலை அணைத்துவிட்டு படுத்துத் தூங்கியும் விடுகிறேன்.

இரண்டு மணி நேரங்கள். அடித்துப் போட்டதுபோல் தூங்கமுடிகிறது. மாலை நான்கு மணிக்கு எழுந்து குளித்துவிட்டு மீண்டும் வேலை பார்க்க உட்கார்ந்தால் நள்ளிரவு ஒரு மணி வரை சுறுசுறுப்பு குறையாமல் இயங்க முடிகிறது. நிறைய எழுதுகிறேன். நிறையப் படிக்கிறேன். படம் பார்க்கிறேன். சிந்திக்கிறேன்.

எனக்கு இதில் இரண்டு லாபங்கள் உள்ளன. ஒரே நாளில் இரண்டு நாள்கள் எனக்குக் கிடைத்துவிடுகின்றன.  இடையே இரண்டு மணிநேரம் தூங்கிவிடுவதால், சோர்வுற்று வேலை வேகம் குறையாமல் பணியாற்ற முடிகிறது. என்னுடைய effective work time இதுவரை பத்து மணி நேரமாக மட்டுமே இருந்திருக்கிறது. இப்போது அது பதினான்கு மணி நேரமாகிவிட்டது. தவிரவும் மொத்தமாகக் கூட்டினால் ஆறு மணிநேர உறக்கம்!

இந்த அபாரமான ஆறு மணி ஷிஃப்ட் உத்தி உலகெங்கும் எத்தனையோ இடங்களில் அமலில் இருப்பதுதான். ஆனால் சரியாகப் பயன்படுத்தினால் மட்டுமே இதன்மூலம் லாபம் பெற முடியும்.

நாற்பத்தைந்து வயதுக்குமேல் ஒரு சராசரி மனிதன் அதுநாள் வரை செய்த பணிகளில் சரிபாதிக்குமேல் செய்ய முடியாது என்று எப்போதோ எங்கோ படித்தேன். அடிமனத்தில் அந்த பயம் எப்போதும் எனக்குண்டு. அந்தச் சரிபாதியையே கணிசமாக உயர்த்துவதற்காகத்தான் இப்படிப்பட்ட கிறுக்குத்தனமான முயற்சிகளை மேற்கொள்கிறேனோ என்றுகூட சமயத்தில் தோன்றும்.

பொழுதுபோக்கு என்று தனியே எனக்கொன்று தேவையில்லை. என் பணிகளே எனக்குப் பொழுதுபோக்குகளைக் காட்டிலும் சுவாரசியமானவைதான். ஆயினும் இத்தனை வருத்திக்கொண்டு உழைப்பது ஏன் என்கிற கேள்வி பல தரப்பிலிருந்து அடிக்கடி எனக்கு வருகிறது.

இதற்கு என்னுடைய பதில், பணிகளற்று இருப்பதைக் காட்டிலும் இது ஒன்றும் கடினமானதில்லை என்பதுதான்.

Share

23 Comments

 • மிகவும் சுவாரசியமான தகவல்கள். அதிகாலை 4 மணிக்கு எழுவது என்னுடைய முக்கியமான குறிக்கோளாக இருக்கிறது இன்னமும். ஆனால் இப்பொழுதெல்லாம் சில நாட்கள் தூங்கப் போவதே அந்த நேரத்தில்தான். :))

 • //நாற்பத்தைந்து வயதுக்குமேல் ஒரு சராசரி மனிதன் அதுநாள் வரை செய்த பணிகளில் சரிபாதிக்குமேல் செய்ய முடியாது என்று எப்போதோ எங்கோ படித்தேன்//

  அப்படியெல்லால் இல்லை என்றே நினைக்கிறேன்.
  இது ஒவ்வொருவருக்கும் மாறுபடும்.

 • ராகவன்,

  சுவாரசியமான கட்டுரை. இந்த தூக்கம் தொடர்பாக எனக்குள்ளும் நிறைய கேள்விகள் உண்டு. How To Sleep & Have More Energy என்றொரு புத்தகம் படித்ததில் குழப்பமே அதிகரித்தது. இரவு நேரங்களில்தான் நான் ‘நானாக’ இருக்கிறேன் என்பதனால் அதிக நேரம் விழித்திருந்து பிறகு சரியாக தூங்குவதில்லையோ என்று ஏற்படும் குற்றவுணர்வு வேறு. அதை தவிர்க்கலாம் என்று பார்த்தால் “அப்போது நமக்கான நேரத்தை எப்போதுதான் பெறுவது?” என்கிற தத்துவார்த்தமான கேள்விகள் வேறு எழுகிறது. ரொம்பக்கஷ்டம்.

 • மிக அற்புதமான எழுதியுள்ளீர்கள்.

  //என்னுடைய effective work time இதுவரை பத்து மணி நேரமாக மட்டுமே இருந்திருக்கிறது. இப்போது அது பதினான்கு மணி நேரமாகிவிட்டது. தவிரவும் மொத்தமாகக் கூட்டினால் ஆறு மணிநேர உறக்கம்!//

  இதைப் படித்தாலே உற்சாகமாக அதே சமயம் அயர்ச்சியாக இருக்கிறது.தொடருங்கள் உங்கள் பணியை!

 • மிக அருமையாக எழுதியுள்ளீர்கள்.உடன் இருந்து பார்ப்பது போல் உள்ளது.
  நானும் பல முறை கவலைபட்டதுண்டு உடற்பயிற்சி, மற்றும் உணவு கட்டுப்பாட்டை தொடரமுடியவில்லையே என்று.

  • மலேசியச் சட்டை மலேசியாவில் மட்டுமே கிட்டும். சமீபத்தில் சொக்கன் மலேசியா சென்று வந்தபோதுகூட அதே போன்ற ஒரு சட்டை வாங்கி வரச் சொல்லியிருந்தேன். அவனும் கர்ம சிரத்தையாகத் தேடி பளபளவென்று மெரூன் கலரில் ஃப்ளோரசண்ட் மஞ்சள் பூ போட்ட சட்டையொன்று வாங்கி வந்தான். துரதிருஷ்டவசமாக என் சுற்றளவு இப்போது சற்று கூடிவிட்டது. பயன்படுத்த முடியாமல் வைத்திருக்கிறேன். அதற்காகவேனும் மீண்டும் இளைக்க வேண்டும்.

 • எல்லாம் சரிதான் தலைவா, நீர் எவ்வளவுதான் சாப்பிட்டாலும் என்ன பயன், எல்லாம் காய்கறிதானே? ஒருநாளைக்கு பரீட்சார்த்தமாக, சிக்கன் 65, அஞ்சப்பர் மட்டன் என்று ருசித்துப் பாரும், வாழ்வின் இன்னொரு அற்புதமான சுவை புரியும்.

  அன்புடன் ஆம்பூர் பிரியாணி ப்ரியன்
  ரூமி

 • லக்கிலுக்,

  கொஞ்சம் முன்னாடி கேட்டிருக்கக்கூடாதா, இன்னிக்குதான் நம்ம தோஸ்த் ஒருத்தர் மலேசியாவிலிருந்து திரும்பி வந்துகிட்டிருக்கார் – தெரிஞ்சிருந்தா அவர்ட்ட சொல்லி உங்களுக்கு ஒரு சட்டை ‘பார்சல்’ செஞ்சிருக்கலாம்!

 • //தேசிய டிசைன் சட்டை ஒன்றை வாங்கி வந்து அன்பளிப்பாகத் தந்தார்.// baju batik

  //மலேசியச் சட்டை மலேசியாவில் மட்டுமே கிட்டும்//
  in indonesia also…..

 • சொக்கன்/பாரா – இப்பவும் ஒண்ணும் கெட்டுப்போகல. அந்த size சரியில்லாத சட்டையை லக்கிக்கு கொடுத்துவிடுங்களேன்.

 • வாவ்… கோ-ஆப்டெக்ஸ் பாலியெஸ்டர் வேஷ்டிகளை லுங்கியாக தைத்துதான் ஊரில் இருந்தது வரை அணிவது என் வழக்கம். மேலும் தயிர்சாததுக்கு அநியாயத்துக்கு கால்கிலோ ஜிலேபி, (ஜாங்கிரி என்றால் அரைக் கிலோ) சைட் டிஷ்சாக வைத்து சாப்பிடும் சர்க்கரை பட்சினி நான். நிறைய ஒற்றுமைகள் :).

  தூக்கம் எனக்கும் பிரச்சனை. Tim Ferriss ன் Four hour work week படித்த பிறகு கொஞ்சம் அலுவல் நேரங்களை மாற்றி அமைத்திருக்கிறேன். You need to relax. முடிந்தால் நீங்களும் படித்துப்பாருங்கள். குடும்பத்திற்கென்று தனியாக நேரம் ஒதுக்கவும் இப்போது பழகி வருகிறேன்.

 • சொக்கன்/பாரா – இப்பவும் ஒண்ணும் கெட்டுப்போகல. அந்த size சரியில்லாத சட்டையை லக்கிக்கு கொடுத்துவிடுங்களேன்

  But luckylook is so lean that he will look like a scarecrow
  figure in that :).Which girl will look at him if wears such a shirt and walks in the road :).Will it suit Badri? :).Please dont spoil the image of bachelors like
  luckylook 🙂

 • நீங்கள் வில்லனாக நடித்தது எந்த சீரியல்?

  • வில்லனாக இல்லை. காமெடியனாகச் செய்தேன். அது வில்லன் போல் தோற்றமளித்தது. சீரியல் கெட்டிமேளம்.

 • ra.pa
  “Which girl will look at him if wears such a shirt and walks in the road.Please dont spoil the image of bachelors like luckylook ”
  பெரும்பாலனவர்கள் வாழ்க்கை (மூட)நம்பிக்கையில் மட்டுமே ஓடுகிறது.

 • //வில்லனாக இல்லை. காமெடியனாகச் செய்தேன்.//

  நீங்கள் வில்லனாக நடித்திருந்தாலும் காமெடியாகவே இருந்திருக்கும் 🙁

  ஒரு சட்டை கேட்டதுக்காக இத்தனை பேர் என்னை சட்டை செய்ததற்கு நன்றி. டைனோ அவர்கள் சொன்னதுபோல பாலியஸ்டர் லுங்கிகளை சட்டையாக தைத்து அணிந்துகொள்வதைப் பற்றி யோசித்து வருகிறேன். எங்கள் தெருவில் நாய்கள் அதிகம் என்பதால் மீண்டும் மீண்டும் மீள்யோசிப்பு செய்ய வேண்டியிருக்கிறது 🙂

 • லக்கி…

  >பாலியஸ்டர் லுங்கிகளை சட்டையாக<

  சட்டையாக தைக்க பர்மா லுங்கிகதாங்க சிறந்தது! கொஞ்சம் plain லுங்கிகளாக இருந்தால் பைஜாமா நைட் வேர் தைக்கலாம். செந்தாமரை பல படங்களில் அணிந்து வருவாரே அதைப்போல!

 • //வில்லனாக இல்லை. காமெடியனாகச் செய்தேன். //

  யோவ்.. இதெல்லாம் ரொம்ப ஓவர். காமெடினு வந்து கடிச்சுட்டு போனீர்..

 • மனைத் திலகங்கள் வலைப்பதிவு வாசிக்கத் தொடங்கினால் வீட்டில் விபரீதம் விளையும். இந்தப் பதிவை வாசித்துவிட்ட என் மனைவி இரண்டு திருத்தங்கள் செய்யச் சொன்னார்.

  முதலாவது, நான் தொலைக்காட்சித் தொடரில் அணிந்து நடித்த மலேசியச் சட்டையை வாங்கி வந்தது யாரோ நண்பரல்ல; என் சொந்தத் தம்பியாம். அடுத்தது, அந்தச் சட்டையுடன் நான் கலந்துகொண்ட *உறவினர் வீட்டு வைபவம்* வேறொன்றுமில்லை, என் குழந்தையின் முதல் பிறந்தநாள்.

  இந்த லட்சணத்தில் நான் இருக்கிறேன் என்கிற வருத்தம் 12 வருடங்களாக என் மனைவிக்கு இருக்கிறது.

 • ***
  முதலாவது, நான் தொலைக்காட்சித் தொடரில் அணிந்து நடித்த மலேசியச் சட்டையை வாங்கி வந்தது யாரோ நண்பரல்ல; என் சொந்தத் தம்பியாம். அடுத்தது, அந்தச் சட்டையுடன் நான் கலந்துகொண்ட *உறவினர் வீட்டு வைபவம்* வேறொன்றுமில்லை, என் குழந்தையின் முதல் பிறந்தநாள்.

  இந்த லட்சணத்தில் நான் இருக்கிறேன் என்கிற வருத்தம் 12 வருடங்களாக என் மனைவிக்கு இருக்கிறது.
  ***

  ஆனாலும் உங்க குசும்புக்கு ஒரு எல்லையே இல்லை :)-

 • பல ஆண்டுகளாக எனது அலுவலக நேரம் 9.30 to1.30 , 3.30 -7 .30.மதுரையில் கடைகள் மதிய இடைவேளை இரண்டு மணியில் இருந்து ஐந்து மணி வரை.நண்பகலில் உணவுக்கு பிறகு சிறிய தூக்கம் நள்ளிரவு வரை வேலை செய்யமுடியும் என்பதுதான் காரணம்.அரசியல்வாதிகளும் இதையே கடைபிடிக்கிறார்கள்,மிகவும் சவுகர்யமாக இருக்கிறதென்று.குடிப்பழக்கம் இருப்பவர்களுக்கு இது பொருந்தாது.

Click here to post a comment

தொகுப்பு

அஞ்சல் வழி


எழுத்துக் கல்வி