நடிகர் விக்கிரமாதித்யன்

ஏவி.எம் கார்டனில் நான் கடவுள் கலைஞர்கள் குவிந்திருந்தார்கள். பத்திரிகையாளர் சந்திப்பு ஏதோ நடந்திருக்கும் போலிருக்கிறது. மேக்கப் இல்லாத பூஜாவும் வந்திருந்தார். படத்தில் நடித்த உடல் ஊனமுற்ற சிறுவர்களையும் பெரியவர்களையும் ஆங்காங்கே சிலர் தூக்கிக்கொண்டு நடந்துகொண்டிருந்தார்கள். அத்தனைபேர் முகத்திலும் மகிழ்ச்சி, பரவசம். படத்தில் நடித்ததற்கான ஊதியம் தாண்டி குழுவினர் வேறு ஏதோ செய்திருக்கிறார்கள் என்று பேசிக்கொண்டார்கள். என்னவென்று தெரியவில்லை.

கனகவேல் காக்க டப்பிங் அங்கே நடந்துகொண்டிருந்தது. அதற்குச் சென்றிருந்தேன். தற்செயலாகக் கவிஞர் விக்கிரமாதித்யன் கண்ணில்பட, கைகுலுக்கி வாழ்த்துச் சொன்னேன்.  அடடே என்று பார்த்த சந்தோஷத்தில் விரிந்த அவரது விழிகள் பல வருட இடைவெளியை நினைவூட்டின.

நல்லாருக்கிங்களா என்றார். கால்ல என்ன என்றார். ஒன்றரை மாதமாக தினசரி பத்து முறை கேட்கப்படுகிற அதே கேள்வி. ஒண்ணுமில்ல அண்ணாச்சி, சின்னதா காயம் என்று சொல்லிவிட்டேன். ஆனாலும் தனித்துவம் மிக்க எனது நடை ஒரு இடைஞ்சல்தான். விக்கிரமாதித்யனைத் தவிரவும் பத்திருபதுபேர் கேட்டுவிட்டார்கள். ஏண்டா வெளியே வந்தோம் என்றே தோன்றிவிடுகிறது.

‘படம் பாத்திங்களா? எப்படி இருக்கு?’ என்று ஆர்வமுடன் கேட்டார். உங்க நடிப்பு நல்லாருந்தது. ஆனா படம் எனக்குப் பிடிக்கலை’ என்று சொன்னேன். அதனால என்ன? பரவால்ல என்று உடனே சொல்லிவிட்டார். அடுத்தவர் அபிப்பிராயங்களை உடனே மறுத்து மல்லுக்கட்டாத குணம் ஒரு வரம். விக்கிரமாதித்யன் விஷயத்தில் அது மட்டுமே காரணமாகத் தோன்றவில்லை. வயது. அறுவது தாண்டிருச்சில்ல என்று அவரே சொன்னார்.

அபூர்வமாக அவரது மனைவியை அழைத்து வந்திருந்தார். நான் சந்தித்ததே இல்லை. நேற்றுத்தான் முதல்முறை. ‘பா. ராகவன் நம்ம ஃப்ரெண்டு. ரைட்டரு. இவரு கூட்டத்துல ஒருமுறை நா தண்ணிய போட்டுட்டு கலாட்டா பண்ணியிருக்கேன்’ என்று அட்டகாசமாகச் சிரித்தார். அடேயப்பா, பதினைந்து வருடப் பழசு! நல்ல ஞாபக சக்திதான்.

மனைவியுடன் விக்கிரமாதித்யன்அண்ணாச்சி, நீங்க கலாட்டா பண்ணாத கூட்டம் எதும் இருக்கா என்றேன். அதற்கும் சிரித்தார். பேச்சை மாற்றி என்ன எழுதுகிறீர்கள் என்று கேட்டேன்.

‘என்னய்யா எழுதறது? போரடிக்குது. நாப்பது வருசமா எழுதறேன். ஒரு சராசரி இந்தியனோட அனுபவம் இதுக்குமேல எழுதறதுக்கு இருக்குமான்ன?’ என்றார். அம்ருதாவில் அவரது கவிதைகளின் முழுத்தொகுப்பு வந்திருப்பதில் சந்தோஷமாக இருக்கிறார். விக்குமான்னு தெரியல. பயங்கர வெல வெச்சிருக்காங்க என்றார்.

விக்கிரமாதித்யன் அடிக்கடி சென்னைக்கு வரக்கூடியவர்தான். ஆனாலும் பல வருடங்களாக ஏன் சந்திப்பே நிகழாமல் போனது என்று யோசித்துப் பார்த்தேன். வியப்பாகத்தான் இருந்தது. ஒரு காலத்தில் அநேகமாக நாங்கள் தினசரி சந்திக்கும்படி நேர்ந்திருக்கிறது.

தாய் பத்திரிகை உயிருடன் இருந்த காலம். பொறுப்பாசிரியர் ரகுநாத்தைப் பார்க்க அண்ணாச்சி வருவார். ‘யோவ் நம்பி, கவித வேணாம்யா. சிறுகதை டிரை பண்ணு. கொஞ்சம் பணமாச்சும் வரும்’ என்பார். விக்கிரமாதித்யன் தாயில் சுமார் பத்துப் பன்னிரண்டு சிறுகதைகள் எழுதினார். ‘திரிபு’ என்ற பெயரில் அது பிறகு தொகுப்பாகக் கூட வந்தது. தாயும் ரகுநாத்தும் காணாமல் போனபிறகு அவர் சிறுகதைகள் எழுதியதாகத் தெரியவில்லை.

எனக்குத் தெரிந்து விக்கிரமாதித்யனுக்குத் தன் அகங்காரம் என்பது சற்றும் கிடையாது. அவர் சிறுகதைகள் எழுதிக்கொண்டிருந்தபோது – அவற்றில் சில பிரமாதமாகவே இருந்தபோதும்கூட தன்னால் வண்ணநிலவன் மாதிரி, வண்ணதாசன் மாதிரி எழுத முடியவில்லையே என்று என்னிடம் வருத்தப்பட்டிருக்கிறார். எழுதினா அப்பிடி எழுதணும்யா என்பார்.

தாய்க்குப் பிறகும் நான் கல்கியில் இருந்த காலத்தில் அடிக்கடி உதயம் தியேட்டருக்குப் பின்னால் உள்ள டீக்கடையில் சந்தித்திருக்கிறோம். நின்றவாக்கிலேயே மணிக்கணக்கில் பேசியிருக்கிறோம். அவையெல்லாம் அவர் மப்பில் இல்லாத தருணங்கள். வயது வித்தியாசம் பாராமல் பழகக்கூடியவர். எந்த வயதுக்காரருடனும் அவரது வயதுக்கு இறங்கிவந்து பேசக்கூடியவர். ரொம்ப முக்கியம், தன் பேச்சைவிட எதிராளி பேச்சுக்குக் காது கொடுக்கும் இயல்பு. அண்ணாச்சி அதனை ஒரு விரதமாகவே வைத்துக்கொண்டிருந்தார்.

பின்னாளில் அவரது கவிதைகளை விடவும் அவரது குடிப்பழக்கம் பேசுபொருளாகிவிட்டதில் எனக்கு மிகுந்த வருத்தமே. நவீன கவிதை எழுதக்கூடியவர்களுள் தனிப்பட்ட முறையில் என் மனத்துக்கு நெருக்கமான மிகச் சிலருள் விக்கிரமாதித்யன் ஒருவர். புதுக்கவிதை தான் என்றாலும் விக்கிரமாதித்யன் கவிதைகளில் ஒரு சந்தமும் லயமும் எப்போதும் ஒளிந்திருக்கும். இறைவனைக் கூப்பிட்டு அருகே உட்காரவைத்து, வக்காலஓழி என்று திட்டக்கூடிய நெருக்கம் அவரது கவிதைகளில் மட்டுமே காணக்கிடைக்கும். அதனால்தான் படத்தில் அவர் அதே இறைவனைத் தேவடியா பையா என்று திட்டும்போது எனக்குப் புதிதாகத் தோன்றவில்லை. அதிர்ச்சி தரவும் இல்லை.

அடுத்ததாக அங்காடித் தெருவில் ஒரு சிறு பாத்திரத்தில் நடிப்பதாகச் சொன்னார். மு. களஞ்சியம் கூப்பிட்டிருப்பதாகவும் சொன்னார்.

அடுத்த இன்னிங்ஸ் இங்கயா என்றேன். சிரித்தார். ஒழுங்கா பணம் வாங்கிடுங்க அண்ணாச்சி, கலைச்சேவையெல்லாம் பண்ணாதிங்க என்றேன்.

அதற்கு அவர் சிரிக்கவில்லை. அவரது மனைவிதான் சிரித்தார்.

Share

19 comments

  • //யோவ் நம்பி, கவித வேணாம்யா. சிறுகதை டிரை பண்ணு. கொஞ்சம் பணமாச்சும் வரும்’ என்பார்//

    நல்ல அறிவுரை… அண்ணாச்சி கேக்கலையே ! 🙂

  • *தனித்துவம் மிக்க எனது நடை*

    – வழிமொழிகிறேன்..

  • அவரின் சில கவிதைகளைப் போலவே புரிந்து கொள்ள முடியாத மனிதர் விக்ரமாதித்யன். கோணங்கி அண்ணாச்சி, விக்ராமாதியன், பா.வெங்கடேசன் எழுத்தின் மூலம் இவர்களை கண்டடைய முடியாது. இயல்பும் இனிமையுமான இவர்கள் எழுத்தில் எவ்வாறு அசாதாரணத்தின் எல்லையை தொட்டு விடுகிறார்கள் என்பது ஆச்சரியம். ‘நான் கடவுளில்’ கவிஞரின் நடிப்பு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

  • நடிகர் விக்கிரமாதித்யன்:பா.ராகவன்….

    ‘படம் பாத்திங்களா? எப்படி இருக்கு?’ என்று ஆர்வமுடன் கேட்டார். உங்க நடிப்பு நல்லாருந்தது. ஆனா ப…

  • //அடுத்த இன்னிங்ஸ் இங்கயா என்றேன். சிரித்தார். ஒழுங்கா பணம் வாங்கிடுங்க அண்ணாச்சி, கலைச்சேவையெல்லாம் பண்ணாதிங்க என்றேன்.//

    இப்போது சினிமாவில் யார் தான் கலை சேவை பண்ணுறாங்க…. 🙂

  • கவிஞரா இவரு? அந்த பாத்திரத்துக்கு ஏற்ற தேர்வும் நடிப்பும்.

  • பாரா… இவங்கெல்லாம் இப்படி குடிச்சு அழிச்சாட்டியம் பண்ணும் அளவுக்கு கவிதை எழுதி சம்பாதிக்க முடியுமா?

  • அவரின் எழுத்துக்களை போலவே அவரும் எளிமையான ஆனால் மற்றவரை கவரக்கூடிய மனிதராக இருப்பார் போலிருக்கிறது.
    அவரது இயல்பான கவிதை நடை மனதுக்கு மிக நெருக்கான இதமான நண்பனின் வார்த்தைகள் போன்றது.

  • கடைசி வரி மிக அருமை. தங்கள் பதிவுகளின் முடிவு முத்தாய்ப்பாக இருப்பது மிக சிறப்பு

    • திருவானைக்காவல் பாஸ்கரா? நலமா? ஸ்ரீநிவாசன் நலமா?

By Para

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!