நண்பர்கள்

மாயவரத்தில் பேசுகிறேன்

நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 12, 2017) அன்று மாயவரத்தில் நடைபெறவுள்ள பேலியோ கருத்தரங்கில் பங்கு பெறுகிறேன். பட்டமங்கலம் தெரு கோவிந்தம்மாள் திருமண மண்டபத்தில் காலை 10 மணி முதல் இருப்பேன். கருத்தரங்கு அநேகமாக மதியம் முடிந்துவிடும். அதன்பின் பழைய நண்பர் பரிமள ரங்கநாதரைப் போய்ப் பார்த்துவிட்டு வருவது தவிர வேறு வேலையில்லை. எனவே, சமகால… Read More »மாயவரத்தில் பேசுகிறேன்

நானேதானாயிடுக

என்னைவிட அழகாக இருக்கும் இப்படத்தை வரைந்தவர், என் நண்பர் சித்ரன் (என்கிற ரகு). இதன் சரித்திர முக்கியத்துவம் கருதி இங்கே சேமித்துவைக்கிறேன்.

ஒரு தீவிரவாத செயல்திட்டம்

ஐந்தாண்டுகளுக்கு முன்னர் ஒரு சம்பவம் நடந்தது. வீட்டில் ஒரு விசேஷம். வருகிற விருந்தினர்களுக்கு வெற்றிலை பாக்குடன் என்ன வைத்துக்கொடுக்கலாம் என்று பேச்சு வந்தது. என் அப்பாவை சந்தோஷப்படுத்த முடிவு செய்து, நான் ஓர் அறிவிப்பு செய்தேன். எத்தனை பேர் வந்தாலும் சரி. வெற்றிலை பாக்குடன் என் அப்பா எழுதிய திருக்குறள் உரை புத்தகத்தை அவர்களுக்கு அன்பளிப்பாகத் தருவது. செலவும் பொறுப்பும் என்னுடையது.

அப்பாவுக்கு உண்மையிலேயே அதில் மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டது. சுமார் நூறு பேர் வந்திருப்பார்கள். அத்தனை பேரும் திருப்தியாகச் சாப்பிட்டுவிட்டு, திருக்குறள் உரையுடன் வீட்டுக்குப் போனார்கள். இது நல்ல பழக்கம், எல்லோரும் பின்பற்றலாம் என்று பலபேர் சொன்னார்கள். நிகழ்ச்சிக்கு வந்திருந்த திருப்பூர் கிருஷ்ணன், மாலன் போன்ற எழுத்தாளர்களும் இதை மிகவும் பாராட்டினார்கள்.

ஒரு சில மாதங்கள் கழிந்திருக்கும். உறவினர் ஒருவர் வீட்டுக்கு அப்பா போகவேண்டியிருந்தது. உறவினர் என்பதற்கு அப்பால் மிகவும் நல்ல மனிதர்கள், அன்பானவர்கள், பண்பானவர்கள் அவர்கள். ஆனால் அன்றைய தினம் அப்பாவுக்கு அத்தனை மகிழ்ச்சிகரமானதாக இல்லை. அன்பான உறவினர், தங்கள் வீட்டு டிவி ஸ்டாண்ட் ஆடாமலிருக்க, அப்பாவின் திருக்குறள் உரையைத்தான் அடியில் முட்டுக்கொடுத்து வைத்திருந்தார்கள்.

துடித்துப் போய்விட்டதாகச் சொன்னார் அப்பா. அதற்கு பதில் அவரைக் கீழே தள்ளி நெஞ்சில் ஏறி மிதித்திருந்தால்கூடத் தாங்கிக்கொண்டிருந்திருப்பார். புத்தகங்களின் அருமை தெரியாதவர்களுக்கு அன்பளிப்பாக அதனைக் கொடுப்பது எத்தனை பெரிய பிழை! அவர்களை நாம் குறை சொல்லக்கூடாது. அவர்களுடைய வாழ்வில் புத்தகம், வாசிப்புக்கான இடம் என்பது சொற்பமானதாகவோ, இல்லவே இல்லாததாகவோ இருக்கக்கூடும். அது அவர்களுடைய தேர்வு. தமக்கு உபயோகமற்ற ஒரு பொருளை அவர்கள் டிவி ஸ்டாண்டுக்கு முட்டுக்கொடுக்கப் பயன்படுத்துவதில் ஒரு பிழையுமில்லை. நாம் மரத்துண்டுகளையோ, பிளாஸ்டிக் குப்பிகளையோ பயன்படுத்த மாட்டோமா? அந்த மாதிரி அவர்களுக்கு அது.

தவறு என்னுடையது. புத்தகம் தொடர்பாக ஏற்கெனவே எனக்குச் சில கறாரான நெறிமுறைகள் உண்டு. பொதுவாக நான் யாருக்கும் இரவல் கொடுக்க மாட்டேன். விரும்பிக் கேட்பவருக்குக் கூட முடியாது என்று முகத்தில் அடித்த மாதிரி சொல்லிவிடுவது என் வழக்கம். தனிப்பட்ட முறையில் எனக்கு மிகுந்த நெருக்கமானவர், நம்பகமானவர் என்றால் மட்டும் தருவேன். அதுவும் கடுமையான எச்சரிக்கைகளுடன்.

அதே போல யாரிடமும் இலவசமாகப் புத்தகங்களை வாங்கிக்கொள்வதோ, என்னுடைய புத்தகங்களை இலவசமாகத் தருவதோ அறவே பிடிக்காது. வீட்டுக்கு வரும் உறவினர்களில் சிலர் கேட்பார்கள். உன் புத்தகங்களைக் கொடேன், படித்துப் பார்க்கிறேன். நீங்கள் அவற்றைப் படிக்காததால் எதையும் இழக்கமாட்டீர்கள் என்று சொன்னாலும் சொல்வேனே தவிர, கொடுக்க மாட்டேன். காசு கொடுத்து வாங்க முடியாதவர், ஆனால் நிச்சயம் வாசிப்பார் என்று நான் நம்புகிற நபர்கள் தவிர வேறு யாரும் என்னிடமிருந்து புத்தகம் வாங்கிவிட முடியாது.Read More »ஒரு தீவிரவாத செயல்திட்டம்

நடிகர் விக்கிரமாதித்யன்

ஏவி.எம் கார்டனில் நான் கடவுள் கலைஞர்கள் குவிந்திருந்தார்கள். பத்திரிகையாளர் சந்திப்பு ஏதோ நடந்திருக்கும் போலிருக்கிறது. மேக்கப் இல்லாத பூஜாவும் வந்திருந்தார். படத்தில் நடித்த உடல் ஊனமுற்ற சிறுவர்களையும் பெரியவர்களையும் ஆங்காங்கே சிலர் தூக்கிக்கொண்டு நடந்துகொண்டிருந்தார்கள். அத்தனைபேர் முகத்திலும் மகிழ்ச்சி, பரவசம். படத்தில் நடித்ததற்கான ஊதியம் தாண்டி குழுவினர் வேறு ஏதோ செய்திருக்கிறார்கள் என்று பேசிக்கொண்டார்கள். என்னவென்று தெரியவில்லை.

கனகவேல் காக்க டப்பிங் அங்கே நடந்துகொண்டிருந்தது. அதற்குச் சென்றிருந்தேன். தற்செயலாகக் கவிஞர் விக்கிரமாதித்யன் கண்ணில்பட, கைகுலுக்கி வாழ்த்துச் சொன்னேன்.  அடடே என்று பார்த்த சந்தோஷத்தில் விரிந்த அவரது விழிகள் பல வருட இடைவெளியை நினைவூட்டின.

நல்லாருக்கிங்களா என்றார். கால்ல என்ன என்றார். ஒன்றரை மாதமாக தினசரி பத்து முறை கேட்கப்படுகிற அதே கேள்வி. ஒண்ணுமில்ல அண்ணாச்சி, சின்னதா காயம் என்று சொல்லிவிட்டேன். ஆனாலும் தனித்துவம் மிக்க எனது நடை ஒரு இடைஞ்சல்தான். விக்கிரமாதித்யனைத் தவிரவும் பத்திருபதுபேர் கேட்டுவிட்டார்கள். ஏண்டா வெளியே வந்தோம் என்றே தோன்றிவிடுகிறது.Read More »நடிகர் விக்கிரமாதித்யன்

எழுதாத நாள்கள்

வாசகர்கள் மன்னிக்க வேண்டும். சுகம் பிரம்மாஸ்மி ஆரம்பித்த வேளை சரியில்லை. சிவல்புரி சிங்காரத்திடம் கேட்டுவிட்டுத் தொடங்கியிருக்கலாம். உட்கார்ந்து எழுதவே முடியவில்லை. தவிர்க்கவே முடியாத ரிப்போர்ட்டர் தொடர் தவிர வேறு எதுவுமே இந்நாள்களில் எழுதுவதில்லை.

கால், கால்வாசிதான் குணமாகியிருக்கிறது. இப்போது எழுந்து நிற்க முடிகிறது. ஒரு சில நிமிடங்கள். ஆனால் நடக்க முடியவில்லை. இந்த வயதில் நடைவண்டி வாங்கிப் பயிலவேண்டும் போலிருக்கிறது. ஆனால் வலி இல்லை இப்போது. இருபது நாள்களாக படுத்தபடியும் அமர்ந்தபடியுமே இருந்ததால் உண்டான முழு உடல் வலி மட்டும்தான். அடுத்தவாரம் கண்டிப்பாக குணமாகிவிடுமென்று டாக்டர் சொல்லியிருக்கிறார். கடவுளும் நீங்களும் காத்திருப்பது தவிர வேறு வழியில்லை.Read More »எழுதாத நாள்கள்