ஒரு தீவிரவாத செயல்திட்டம்

ஐந்தாண்டுகளுக்கு முன்னர் ஒரு சம்பவம் நடந்தது. வீட்டில் ஒரு விசேஷம். வருகிற விருந்தினர்களுக்கு வெற்றிலை பாக்குடன் என்ன வைத்துக்கொடுக்கலாம் என்று பேச்சு வந்தது. என் அப்பாவை சந்தோஷப்படுத்த முடிவு செய்து, நான் ஓர் அறிவிப்பு செய்தேன். எத்தனை பேர் வந்தாலும் சரி. வெற்றிலை பாக்குடன் என் அப்பா எழுதிய திருக்குறள் உரை புத்தகத்தை அவர்களுக்கு அன்பளிப்பாகத் தருவது. செலவும் பொறுப்பும் என்னுடையது.

அப்பாவுக்கு உண்மையிலேயே அதில் மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டது. சுமார் நூறு பேர் வந்திருப்பார்கள். அத்தனை பேரும் திருப்தியாகச் சாப்பிட்டுவிட்டு, திருக்குறள் உரையுடன் வீட்டுக்குப் போனார்கள். இது நல்ல பழக்கம், எல்லோரும் பின்பற்றலாம் என்று பலபேர் சொன்னார்கள். நிகழ்ச்சிக்கு வந்திருந்த திருப்பூர் கிருஷ்ணன், மாலன் போன்ற எழுத்தாளர்களும் இதை மிகவும் பாராட்டினார்கள்.

ஒரு சில மாதங்கள் கழிந்திருக்கும். உறவினர் ஒருவர் வீட்டுக்கு அப்பா போகவேண்டியிருந்தது. உறவினர் என்பதற்கு அப்பால் மிகவும் நல்ல மனிதர்கள், அன்பானவர்கள், பண்பானவர்கள் அவர்கள். ஆனால் அன்றைய தினம் அப்பாவுக்கு அத்தனை மகிழ்ச்சிகரமானதாக இல்லை. அன்பான உறவினர், தங்கள் வீட்டு டிவி ஸ்டாண்ட் ஆடாமலிருக்க, அப்பாவின் திருக்குறள் உரையைத்தான் அடியில் முட்டுக்கொடுத்து வைத்திருந்தார்கள்.

துடித்துப் போய்விட்டதாகச் சொன்னார் அப்பா. அதற்கு பதில் அவரைக் கீழே தள்ளி நெஞ்சில் ஏறி மிதித்திருந்தால்கூடத் தாங்கிக்கொண்டிருந்திருப்பார். புத்தகங்களின் அருமை தெரியாதவர்களுக்கு அன்பளிப்பாக அதனைக் கொடுப்பது எத்தனை பெரிய பிழை! அவர்களை நாம் குறை சொல்லக்கூடாது. அவர்களுடைய வாழ்வில் புத்தகம், வாசிப்புக்கான இடம் என்பது சொற்பமானதாகவோ, இல்லவே இல்லாததாகவோ இருக்கக்கூடும். அது அவர்களுடைய தேர்வு. தமக்கு உபயோகமற்ற ஒரு பொருளை அவர்கள் டிவி ஸ்டாண்டுக்கு முட்டுக்கொடுக்கப் பயன்படுத்துவதில் ஒரு பிழையுமில்லை. நாம் மரத்துண்டுகளையோ, பிளாஸ்டிக் குப்பிகளையோ பயன்படுத்த மாட்டோமா? அந்த மாதிரி அவர்களுக்கு அது.

தவறு என்னுடையது. புத்தகம் தொடர்பாக ஏற்கெனவே எனக்குச் சில கறாரான நெறிமுறைகள் உண்டு. பொதுவாக நான் யாருக்கும் இரவல் கொடுக்க மாட்டேன். விரும்பிக் கேட்பவருக்குக் கூட முடியாது என்று முகத்தில் அடித்த மாதிரி சொல்லிவிடுவது என் வழக்கம். தனிப்பட்ட முறையில் எனக்கு மிகுந்த நெருக்கமானவர், நம்பகமானவர் என்றால் மட்டும் தருவேன். அதுவும் கடுமையான எச்சரிக்கைகளுடன்.

அதே போல யாரிடமும் இலவசமாகப் புத்தகங்களை வாங்கிக்கொள்வதோ, என்னுடைய புத்தகங்களை இலவசமாகத் தருவதோ அறவே பிடிக்காது. வீட்டுக்கு வரும் உறவினர்களில் சிலர் கேட்பார்கள். உன் புத்தகங்களைக் கொடேன், படித்துப் பார்க்கிறேன். நீங்கள் அவற்றைப் படிக்காததால் எதையும் இழக்கமாட்டீர்கள் என்று சொன்னாலும் சொல்வேனே தவிர, கொடுக்க மாட்டேன். காசு கொடுத்து வாங்க முடியாதவர், ஆனால் நிச்சயம் வாசிப்பார் என்று நான் நம்புகிற நபர்கள் தவிர வேறு யாரும் என்னிடமிருந்து புத்தகம் வாங்கிவிட முடியாது.

என் நண்பர் ஒருவர் இருக்கிறார். மிக நெருங்கிய நண்பர். என்னுடைய புத்தகங்கள் அச்சாகி வரும்போதெல்லாம், ஒருமுறையாவது நான் அவருக்கு ‘அன்புடன்’ கையெழுத்திட்டு ஒரு பிரதி தருவேன் என்று எதிர்பார்ப்பார். பல சமயம் கேட்டும் இருக்கிறார். ஆனால் மாட்டேன். நிர்த்தாட்சண்யமாக மறுத்துவிடுவேன். என்னுடைய ‘ஆத்தர் காப்பிகள்’ பத்தும் எப்போதும் என்னிடமேதான் இருக்கும். [விதிவிலக்காக, சில சிஷ்யப்பிள்ளைகளுக்கு மட்டும் ‘உருப்படு’ என்று எழுதிக் கொடுப்பேன். அப்படி என்னிடம் புத்தகம் வாங்கியபின்பும் அவர்களில் யாராவது உருப்படாதிருந்தால் என்ன விளைவு இருக்கும் என்று நீங்கள் அவர்களைத்தான் கேட்கவேண்டும்.]

இதன்பொருட்டு என்னை யாரும் தவறாக நினைத்துக்கொள்வது பற்றி ஒருபோதும் நான் கவலைப்பட மாட்டேன். புத்தகங்களை மதிக்கத் தெரிந்தவர்கள் அநேகமாக இலவசமாகப் பெற விரும்பமாட்டார்கள். அவ்வண்ணமே, தகுதியற்றவர்களுக்குத் தரவும் மாட்டார்கள்.

மேற்படி சம்பவத்தில் நான் பெற்ற பாடம், இனி வெற்றிலை பாக்கு கவரில் டிவி ஸ்டாண்ட் குப்பிகள் வைத்துக்கொடுக்கலாம் என்பது. இதனை இப்போது நினைவுகூர்வதன் காரணம், புத்தகக் காட்சி வந்துவிட்டது என்பது.

ஒவ்வோர் ஆண்டும் கண்காட்சியில் நூற்றுக்கணக்கான நண்பர்களைச் சந்திக்கிறேன். அவர்களில் பலர் எழுதக்கூடியவர்களாகவும் இருக்கிறார்கள். கவிதைத் தொகுப்போ கதைத் தொகுப்போ அவர்களுக்கு சாத்தியமாகிவிடுகிறது. கண்காட்சியில் அத்தகையவர்களைப் பார்த்துவிட நேர்ந்தால் பெரும் பிரச்னையாகிவிடுகிறது. ஒன்று, அவர்கள் தமது தொகுப்பைத் தூக்கி தடாலென்று நீட்டிவிடுவார்கள். அன்புக்காக அதனைப் பெற்றுக்கொள்வதும் கஷ்டம், கொள்கைக்காகக் காசு கொடுத்து வாங்குவதும் கஷ்டம். நான் வாங்கவேண்டிய நூல்களை முன்கூட்டியே திட்டமிட்டு, பட்ஜெட் போட்டு வைத்துவிடுவேன். திட்டங்களைக் கண்டபடி மாற்றிக்கொண்டிருப்பது சாத்தியமில்லை. தவிரவும் நான் வாசிக்க விரும்பாதவற்றுக்குச் செலவு செய்ய ஒருபோதும் விரும்பமாட்டேன்.

இந்தப் பிரச்னையை எப்படிச் சமாளிப்பது? நீண்ட யோசனைக்குப் பிறகு ஒரு முடிவு செய்திருக்கிறேன்.

இந்தப் பொது அறிவிப்பை வாசிக்கும் நண்பர்கள் இனி எனக்குப் புத்தக அன்பளிப்பு தரமாட்டார்கள் என்கிற நம்பிக்கையுடன், வாசிக்காத பிறருக்கான யோசனை இது:

யாராவது கண்காட்சி வளாகத்தில் என்னிடம் தங்கள் புத்தகங்களை நீட்டினால் உடனே அதற்குரிய பணத்தை எடுத்துக் கொடுத்துவிடுவேன். ஆனால் ஒரு கண்டிஷன். அவர்கள் கண்டிப்பாக மாயவலை வாங்கியாக வேண்டும்! இந்த நிபந்தனைக்கு ஒப்புக்கொண்டால் யாருடைய புத்தகத்தை வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளப் போகிறேன்!

மாயவலை ஏற்கெனவே நன்றாக விற்றுக்கொண்டிருக்கிறது. அதனோடு இந்த நூதன தீவிரவாத நடவடிக்கையும் இணையுமானால் என்னுடைய வருடாந்திர ராயல்டி மேலும் அதிகரிக்கும். என்னைப் பார்த்து, பிற எழுத்தாளர்களும் இந்த உத்தியைக் கடைப்பிடிக்க முன்வருவார்கள். ஒரு முன்னோடி என்ற அளவில் சரித்திரத்தில் நிற்க அல்லது உட்கார ஒரு மூலை கிடைக்கும்.

என்ன சொல்கிறீர்கள்?

Share

19 comments

 • தீவிரவாதச் செயல்திட்டம் – இச் மிஸ்ஸிங் (தப்பர்த்தம் எடுத்துக்கொள்ளவேண்டாம் 🙂
  – என். சொக்கன்,
  பெங்களூரு.

  • சொக்கன்: நீ சொல்வது சரியே. இலக்கணப்படி ச் வரவேண்டும் என்பது உண்மையே. ஆனால் வாசிப்பளவில் எனக்கு ‘செயல்திட்டம்’ என்பதைக் காட்டிலும் ‘தீவிரவாதம்’ என்பது அழுத்தமாக மனத்தில் பதியவேண்டும் என்பதனால், வேண்டுமென்றே ச்-ஐத் தூக்கிவிட்டேன். ச் போட்டால் அடுத்த வார்த்தையில்தான் புத்தி குவிகிறது. சொல்லிப்பார்த்துத்தான் தூக்கினேன்.

 • >>என்ன சொல்கிறீர்கள்?

  எனக்கு பிரச்சினை இல்லை.  நான் என்ன எழுதி புத்தகமாக(?!) போட்டாலும் ஒரு பிரதி விலை கொடுத்து வாங்க நீங்கள் இருக்கிறீர்கள். 🙂

 • //இலக்கணப்படி ச் வரவேண்டும் என்பது உண்மையே. ஆனால் வாசிப்பளவில் எனக்கு ‘செயல்திட்டம்’ என்பதைக் காட்டிலும் ‘தீவிரவாதம்’ என்பது அழுத்தமாக மனத்தில் பதியவேண்டும் என்பதனால், வேண்டுமென்றே ச்-ஐத் தூக்கிவிட்டேன். ச் போட்டால் அடுத்த வார்த்தையில்தான் புத்தி குவிகிறது. சொல்லிப்பார்த்துத்தான் தூக்கினேன்.//
  இப்படி சொந்தமாக இலக்கணம் வகுத்துக் கொள்வது என்ன நியாயம்? 'ச்' போட்டு நானும் சொல்லிப் பார்த்தேன். There is no shift of oral emphasis. 'தீவிரவாதம்' என்ற சொல்லின் கடுமை கருதியோ என்னவோ, அந்த வார்த்தையில் தான் அழுத்தம் ஏறுகிறது.
  ஐயா, நீரே முக்கண் முதல்வரும் ஆகுக, etc. etc…

  • அன்புள்ள ஸ்ரீகாந்த், இலக்கணத்தைச் சரியாகத் தெரிந்துகொண்டபிறகு, தேவைக்கேற்ப அதை மீறுவது தவறில்லை. அப்படி மீறும்போதும் அழகு கெடாது. இதுவே இலக்கணம் தெரியாமல் தவறாக எழுதும்போது காணக் கண்றாவியாக இருக்கும். நான் பெரும்பாலும் மீறமாட்டேன். ஆனால் தேவை ஏற்பட்டால் மீறத் தயங்கமாட்டேன்.

 • அண்ணா, இதெல்லாம் ரொம்ப ஓவரா இருக்கே… எப்படி இப்படியெல்லாம் உங்கள் மூளை யோசிக்கிறது? என்னவோ போங்க… ஆனாலும் நல்ல திட்டமாத் தான் தெரியுது. ஆனா.. நம்ம உஷாரான வாசகர்கள்ல யாராவது ஒருத்தர் மாயவலையை விட அதிக விலை உள்ள புத்தகத்தை உங்கள் தலையில் கட்டிவிடப் போகிறார்கள், ஜாக்கிரதை.

 • அன்புள்ள பாரா,
  Not sure if I agree…இவ்வகைப் பிழைகள் தமிழ் திரைப்படப் பெயர்களில் அடிக்கடி நிகழும் ஒன்று (latest – 'தமிழ் படம்'). சில சமயம் தெரியாமல், சில சமயம் தெரிந்து numerology போன்ற காரணங்களுக்கு. தெரிந்து செய்தால் இப்படிச் செய்வது சரியாகி விடுமா?
  இலக்கணம் மீறுவது என்பது கவிதை சமாசாரத்திற்கு வேண்டுமானால் OK-யாக இருக்கலாம். உரைநடையிலும் தேவைக்கேற்றார் போல் மாற்றிக் கொள்ளலாம் என்று வந்தால், இலக்கண நூல்களையும் டி.விக்கு முட்டுக் கொடுக்க பயன்படுத்த வேண்டியது தான். 🙂
  ஶ்ரீகாந்த்

 • //புத்தகங்களை மதிக்கத் தெரிந்தவர்கள் அநேகமாக இலவசமாகப் பெற விரும்பமாட்டார்கள்.//
  கடுமையாக ஆட்சேபிக்கிறேன். 🙂
  //அவர்கள் கண்டிப்பாக மாயவலை வாங்கியாக வேண்டும்!//

  பயங்கரமான தந்திர வலையாக இருக்கிறது. தீவிரவாதம் பற்றி அதிகம் எழுதுவதனால் வந்த வினையிது என்று கருதுகிறேன். 🙂

 • தீவிரவாதத்துக்கு நீங்க முத்தம் கொடுத்திருக்கலாம். உள்ளே படிக்கிறப்போவே எவ்ளோ பெரிய தீவிரவாதம்ன்னு புரியுது. தீவிரவாதத்துக்கு அழுத்தமும் கிடைச்சிடுது.
   
  உங்க ஐடியாவைப் பிரசன்னாவும் பின்பற்றிட்டா நாடு என்னாகும்ங்கிறது தான் என்னோட பயம் 😉

  • ராஜா, பிரசன்னாவின் கவிதைத் தொகுப்பைப் படித்துவிட்டேன். அத்தனை மோசமில்லை. நீங்கள் தைரியமாக வாங்கலாம். அவருக்கு அருமையாக உரைநடை வருகிறது. அவ்வப்போது கவிதை மாதிரி என்னத்தையாவது சேர்த்து கெடுத்துவிடுகிறார் என்பதுதான் ஒரே பிரச்னை!

 • உங்களை பார்த்தால் எனக்கு என் ஸ்கூல் பிரின்ஸ்பால் ஞாபகத்துக்கு வருகிறது…நீங்க பயங்கர ஸ்ட்ரிக்ட் பர்ஸ்னாலிட்டி போல…
  //என்ன சொல்கிறீர்கள்?//
  என்ன சொல்வது..அதைதான் தெளிவாக முடிவு செய்து வீட்டீர்களே..இனிமேல் யாரால் மாத்த முடியும் 🙂
  நான் சைலண்டா புத்தக கண்காட்சிக்கு வந்து சைலண்டாகவே போயிறேன் 🙁
  அன்புடன்,
  சுவாசிகா
  http://ksaw.me

  • சுவாசிகா, அடிப்படையில் நான் கொண்டாட்டமான மனநிலையிலேயே பெரும்பாலும் இருக்கக்கூடியவன், பழகக்கூடியவன் தான். ஆனால் சில விஷயங்களில் கறார்த்தன்மை அவசியம். குறிப்பாகக் கொள்கைகளில். அதுதான் செயல் நேர்த்திக்கு வித்தாகிறது. குறைந்தபட்ச அடிப்படை ஒழுங்குகள் வாழ்க்கைக்கு அவசியம் என்று நினைப்பேன். என் ஒழுங்குகளை நானேதான் தீர்மானித்திருக்கிறேன். எனவே நான் அவற்றுக்கு மதிப்பளித்தாக வேண்டியிருக்கிறது. இது உங்களுக்கு ப்ரின்சிபால் தோற்றம் தருவது எனக்கு வியப்பே. நியாயமாக ஹிட்லர் தோற்றம் அளித்திருக்க வேண்டும்.

 • //ஒன்று, அவர்கள் தமது தொகுப்பைத் தூக்கி தடாலென்று நீட்டிவிடுவார்கள். அன்புக்காக அதனைப் பெற்றுக்கொள்வதும் கஷ்டம், கொள்கைக்காகக் காசு கொடுத்து வாங்குவதும் கஷ்டம்//
  புத்தகங்களைப் பற்றி நல்லது/கெட்டது சொல்லி தங்கள் எழுத்தை மெருகேற்ற முடியும் என்பது அவர்கள் கொள்கை. அங்கே உங்கள் புத்தகத்தை கொடுத்தால் என்ன நினைப்பார்களோ? 🙂
  அதிரடி செயல்திட்டம் தான் – அப்படி ஒரு சம்பவத்தை யூ ட்யூபில் பதிவு செய்ய தக்க தருணத்தில் தேவையானவர் `பிரசன்ன`மானால் நன்றாக இருக்கும்.

 • நல்லவேளை நீங்கள் மாயவலையை வெத்தலைப்பாக்கோடு சேர்த்து கொடுக்கவில்லை.
  திருக்குறளையே டேபிளுக்கு முட்டுக்கு கொடுக்கும் தமிழ்சமூகம், மாயவலையை தலையணையாக பயன்படுத்தி இருக்கும் 🙂

 • ஏதோ பழைய புத்தகக்கடையில முவ, காவா, மாவா ந்னு எழுதற திருக்குறள் 10ரூபாய்க்கு வாங்கி பாக்கறவங்களுக்கு பந்தாவா பரிசு கொடுத்துட்டிருக்கற மக்கள்ஸ் வயித்துல புளியை கரைக்கறீங்களே?

  மக்கள்ஸ் எல்லாம் பொண்டாட்டி மூக்குத்தியையும் தொங்கட்டான்களையும் அடகு வச்சு கவுஜ, சிறுகதை தொகுப்பு போட்டு ஆசையா கொடுக்க வந்தா அவங்களை $750 புக்கு வாங்க சொல்றீங்களே அடுக்குமா? :)))

 • நீங்கள் சொல்வது எல்லாமே உண்மை…ஒழுக்கத்தை கடைப்பிடிக்க கறாராக இருக்க வேண்டியதுதான்…பள்ளி முதல் வேலை வரை இப்படி ஒருவராவது தேவைப்படுகிறது…
  எனக்கு ஏனோ உங்களை ஹிட்லருடன் ஒப்பிட முடியவில்லை..ஏனேன்றால் நான் என் பிரின்சிபாலுடன் பழகியிருக்கிறேன்…ஹிட்லருடன் பழகும் வாய்ப்பு அமையவில்லை 🙂
  அன்புடன்,
  சுவாசிகா
  http://ksaw.me

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter