நிழலற்றவன் – முன்னுரை

இத்தொகுப்பில் உள்ள முப்பது கதைகளை அதிகபட்சம் நாற்பது நாள் இடைவெளியில் எழுதினேன். கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டது முதல், தினம் தினம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையையும் இறந்தவர்களின் எண்ணிக்கையையும் செய்திகளில் பார்த்துப் பார்த்துக் கிட்டத்தட்ட மனச்சோர்வு எல்லைக்குச் சென்றுவிடுவேன் என்று தோன்றியது. வலுக்கட்டாயமாக அதில் இருந்து என்னைப் பிடுங்கிக்கொள்ளவே வழக்கத்தைவிட நிறைய எழுதத் தொடங்கினேன்.

ஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் சென்னை நினைவுக் குறிப்புகளை அப்போதுதான் எழுதி முடித்திருந்தேன். இடைவெளி இன்றி இக்கதைகளை எழுதக் காரணமாக இருந்தவர் பெருந்தேவி. உயிர்மை இணையத்தளத்தில் அவர் தொடர்ச்சியாக எழுத ஆரம்பித்த குறுங்கதைகள் என்னைக் கவர்ந்தன. இத்தனைக்கும் அவர் இதற்குமுன் கதைகள் எழுதியவரல்லர். கவிதைதான் அவரது மொழி. ஒரு மாறுதலுக்கு அவர் கதை எழுதத் தொடங்க, அது நன்றாகவும் வந்ததைக் கவனித்தேன். சட்டென்று மீண்டும் புனைவின் பக்கம் திரும்ப அதுவே உந்துதலானது. தினமும் குறைந்தது இரண்டு கதைகளையாவது எழுதிப் பார்த்தேன்.

பொதுவாக எனக்குப் படைப்பில் வடிவம் சார்ந்து வகைப்படுத்துவது அவ்வளவாக ஒவ்வாது. இதற்குப் பிரத்தியேகக் காரணங்கள் இல்லை. என் மன அமைப்பு அப்படி. ஒரு படைப்பு எத்தனை சிறிதாக இருந்தாலும் சரி; பெரிதாக இருந்தாலும் சரி. அது அளிக்க வேண்டிய பாதிப்பினைச் சரியாகச் செய்கிறதா என்பதை மட்டுமே பார்ப்பேன். ஒன்றே முக்காலடி திருக்குறள் ஏற்படுத்திய பாதிப்பை அதன் பிறகு வந்த அத்தகைய நீதி நூல்களோ, வாழ்வியல் நூல்களோ செய்யவில்லை என்பதைக் கவனியுங்கள். அது போலவே ஆயிரம் பக்கங்களைக் கடந்த கரமஸாவ் சகோதரர்களும் போரும் அமைதியும் உருவாக்கிய தாக்கத்தையும் யோசியுங்கள். அளவா அதைத் தீர்மானித்தது? படைப்பின் அளவு என்பது எழுதுபவன் மனநிலை சார்ந்தது. கருப்பொருளின் தேவை சார்ந்தது. ஏழெட்டு வரிகளில் முடிந்துவிடும் ஜென் கதைகள் தரும் உளக் கிளர்ச்சியை அதே அளவில் சொல்லப்பட்ட ஈசாப் கதைகளோ அதைப் போன்ற பிறவோ தந்ததில்லை. எனவே அளவு ஒரு பொருட்டே அல்ல.

ஆனால், குறைவான சொற்களுக்குள் வாழ்வின் ஒரு தருணத்தைச் சுட்டிக்காட்டும் சவால் சுவாரசியமானது. எண்பதுகளில் ஐ. சாந்தன் என்ற ஈழத் தமிழ் எழுத்தாளர் விரற்கடை நீளத்துக்குள் முடிந்துவிடும் கதைகளில் பேருலகைப் புதைத்துக்காட்டும் சாகசம் புரிந்திருக்கிறார். எப்படி இது, எப்படி இது என்று பிரமித்திருக்கிறேன். அவரது ‘கடுகுக் கதைகளின்’ மோசமான பாதிப்பின் விளைவுதான் வார இதழ்களில் வெளிவரத் தொடங்கிய ஒரு பக்கக் கதைகள். பக்க அளவு குறைவான கதை என்றால் அது அபத்தமாகத்தான் இருக்கும் என்று நினைக்க வைத்துவிட்ட கதைகள். கிட்டத்தட்ட நாற்பதாண்டுக் காலமாகத் தமிழில் மிகச் சிறிய கதைகளுக்கு இருந்த அந்த அவப்பெயரை முதல் முதலில் துடைக்க முயன்றவர் பேயோன். பேயோனின் பல குறுங்கதைகள் மிகத் தரமானவை. பிரமிப்பூட்டும் நுணுக்கங்களும் உள்ளடுக்குகளும் கொண்டவை. எளிய நகைச்சுவைக் கதைகளைப் போலத் தோற்றம் கொண்டாலும் அதைத் தாண்டி நெடுந்தொலைவு செல்லக்கூடியவை. துரதிருஷ்டவசமாக அவர் தொடர்ந்து குறுங்கதைகள் எழுதாது விடுத்தார். மீண்டும் ஓர் இடைவெளி ஏற்பட்டது. ஒரு வழியாக, இந்த கொரோனா காலக் கட்டாய ஓய்வில் பல நல்ல எழுத்தாளர்கள் வார இதழ் ஒரு பக்கக் கதைகளால் குறுங்கதைகளுக்கு ஏற்பட்டிருந்த இழுக்கை முற்றிலுமாக அழுந்தத் துடைத்திருக்கிறார்கள். அதற்குத் தொடக்கப்புள்ளியாக இருந்த பெருந்தேவிக்கு அன்புடன் இந்நூலை சமர்ப்பணம் செய்கிறேன்.

இந்தக் கதைகளை நான் ஃபேஸ்புக்கில் எழுதினேன். ஒரு வெகுஜன தளத்தில் சற்றே மாறுபட்ட படைப்புகள் எதிர்கொள்ளக்கூடிய வினாக்களும் விமரிசனங்களும் கொடுரமானவை. அதில் மிக முக்கியமானது, ‘இந்தக் கதையில் நீ சொல்ல வருவது என்ன?’ என்கிற கேள்வி. எதையாவது சொல்லித்தான் தீரவேண்டும் என்று எழுத்தாளனுக்கு என்ன தலையெழுத்து? எதையும் சொல்லாதிருப்பதன் பேரழகை இக்கதைகளுக்கு அணிவித்து அழகு பார்க்கிறேன்.

எப்போதும் சொல்வதை இப்போதும் சொல்கிறேன். கதைகளை நான் எனக்காக மட்டுமே எழுதுகிறேன். உங்களுக்குப் பிடித்தால் சந்தோஷம். பிடிக்காவிட்டால் வருந்த மாட்டேன்.

(நிழலற்றவன் – குறுங்கதைகள் தொகுப்புக்கு எழுதிய முன்னுரை)

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி