மகளிர் மட்டும் – ஒரு மதிப்புரை: இந்துமதி சதீஷ்

“பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை” என்னும் பாரதியின் வரிகள் சத்தமில்லாமல் நனவாகிக்கொண்டே வருகின்றது என்றால் அது மிகையில்லை. சரித்திரம் படிப்பது சிறந்தது. சரித்திரம் படைப்பது சாலச்சிறந்தது என்பதற்கிணங்க சரித்திரம் படைக்கும் ஆவல் எனக்குள் நெருஞ்சி முள்ளாய் நெருட, முதற்கட்டமாய் சரித்திரம் படிக்க முடிவு செய்த நேரத்தில் பா. ராகவன் அவர்களின் ‘மகளிர் மட்டும்’ புத்தகம் வாசிக்க நேர்ந்தது.

அட்டையில் உள்ள ‘பெண்களைப் போல் சாதிப்பது எப்படி’ என்னும் வரிகள் என்னை வெகுவாகக் கவர்ந்தது. வார்த்தைகள் யாரால் சொல்லப்படுகின்றன என்பதைப் பொறுத்தே முக்கியத்துவம் பெறுகின்றன .பெண்களைப் போல சாதிப்பது எப்படி என்னும் வரி ஒரு ஆணால் சொல்லப்படும் பொழுது தனித்துவம் பெறுகிறது. அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்னும் காலம் மாறிவிட்டது என்றாலும் பெண்ணடிமைத்தனம் முற்றிலும் ஒழிக்கப்படவில்லை என்பதே நிதர்சனம். எது எப்படி இருந்தாலும் சோதனைகளையும், வேதனைகளையும் சாதனைகளாக மாற்றும் வித்தை தெரிந்த பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு தான் இருக்கிறது.

இப்புத்தகத்தில் ஏவாளில் தொடங்கி அன்னை தெரசா வரை அவரவர் வாழ்ந்த காலத்தில் படைத்த சாதனைகளையும், பட்ட சோதனைகளையும், அவமானங்களையும் படிப்பவர் சாதிக்கத் தூண்டும் வகையில் எடுத்துரைத்திருப்பது மிகச் சிறப்பு.
புத்தகத்தில் உள்ள 24 மலர்களில் எந்த மலர் சிறந்தது என்று கண்டறிய முடியவில்லை. ஒவ்வொரு மலருக்கும் ஒவ்வொருவிதமான வாசம். ஆதிமனிதன் ஆதாமுக்கு துணையாக படைக்கப்பட்ட ஏவாளைப் பற்றியும், சூடிக்கொடுத்த சுடர் மணி ஆண்டாளைப் பற்றியும், எதிரிகள் புடைசூழ ஆட்சி நடத்திய பெனசீர் பூட்டோ பற்றியும்… மதங்களை கடந்து ஒரே புத்தகத்தில் படிப்பது பேரானந்தம். அரசியலில் சாதித்த இந்திரா காந்தி, சோனியா காந்தி.. ஆன்மீகத்தில் சாதித்த ஸ்ரீ அன்னை,
அமிர்தானந்தமயி.., அழகினால் சாதித்த ஐஸ்வர்யா ராய், கிளியோபாட்ரா… எழுத்தினால் சாதித்த அருந்ததி ராய்.. விளையாட்டினால் சாதித்த மார்ட்டினா நவரத்திலோவா.. விண்வெளியில் சாதித்த கல்பனா சாவ்லா… இன்னும் அன்னா தாஸ்தயேவ்ஸ்கி முதல் ஹிலாரி கிளின்டன் வரை, மடோனா விலிருந்து மர்லின் மன்றோ வரை ஒவ்வொருவரின் சாதனைகளும் அவரவர் சந்தித்த சவால்களும் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது.

மதம் கடந்து, துறை கடந்து, எல்லை கடந்து உலக அளவில் அனைத்து துறைகளிலும் சாதித்த பெண்களைப் பற்றி எடுத்துரைத்திருப்பதே மிகப்பெரிய சாதனைதான். வாழ்க்கையில் ஏற்படும் பாதகங்களை சாதகம் ஆக்கினால் சாதனைகள் அனைவருக்கும் சாத்தியமே என்ற எண்ணத்தை வேரூன்றச் செய்கிறது. மனதில் திடம் இருந்தால் எதுவும் சாத்தியமே என்ற உணர்வை ஏற்படுத்துகிறது.

சாதனையாளர்கள் தாமதங்களாலோ ,தோல்விகளாலோ பாதிக்கப்படுவதில்லை என்ற கருத்தை உணர்த்த தவறவில்லை இப்புத்தகம். பெண்களை பெண்களே பாராட்ட யோசிக்கும் காலகட்டத்தில் பெண்களின் சாதனைகளை எழுதி சரித்திரம் படைத்த பா. ராகவன் அவர்களுக்கு ஒரு ராயல் சல்யூட். மொத்தத்தில் ‘மகளிர் மட்டும்’ சாதனைப் பூக்கள்.

இந்துமதி சதீஷ்

மகளிர் மட்டும் – கிண்டிலில் வாசிக்க

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter