அன்புள்ள ராகவன் சார்,
இது நான் உங்களுக்கு எழுதும் முதல் மெயில். சாருவுடன் பலமுறை பேசியிருக்கிறேன். அவரிலிருந்து தான் நான் வாசிக்கவே தொடங்கினேன்.
இந்திய ஞான மரபு, சித்தர்கள் குறித்து ஓரளவு வாசித்துக்கொண்டிருந்தேன். நிறைய அபுனைவுகள், எனக்கு அவற்றைப் புரிந்துகொள்ளும் பக்குவமோ பொறுமையோ இல்லை என்பதை வரிக்கு வரி நிரூபித்துக் கொண்டிருந்த வேளையில், எதேச்சையாக உங்கள் ‘யதி’ சலுகை விலையில் கிண்டிலில் கிடைப்பதாக அறிந்தேன். மூச்சு விடுவதற்கு ஒரு புனைவு கிடைத்த மகிழ்ச்சியில் உடனே வாங்கிவிட்டேன். அதற்கு முன்னர் உங்கள் புத்தகங்களைப் படித்ததில்லை. யதி குறித்த என் வாசிப்பு அனுபவத்தை உங்களுடன் சுருக்கமாகப் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன்.
வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஓர் அனுபவத்தை யதி எனக்கு வழங்கியது. இரண்டு வார காலங்கள், நான் யதியைக்குறித்தே சிந்தித்துக் கொண்டிருந்தேன். புனைவின் சலுகைகளை மிகச்சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டு, அதன் எல்லைகளை விஸ்தரிக்கிறது யதி. ஒவ்வொரு கதாபாத்திரமும் நினைவிலேயே நிற்கிறார்கள். மாய எதார்த்தப் புனைவாக இருந்தாலும், யதி வாழ்க்கையின் எதார்த்தத்தைப் படம் பிடித்துக் காட்டுகிறது. விஜய், வினய், வினோத், விமல், சொரிமுத்து, சம்சுதீன் என எல்லோரும் என்னை ஆச்சரியப்படுத்திக் கொண்டே வந்தாலும், நாவலின் இறுதியில் அம்மாவின் தியாகத்திற்கு முன்னும், கேசவன் மாமாவின் பாசத்திற்கு முன்னும் இவர்களெல்லாம் எம்மாத்திரம் என்று நினைத்து அழுதுவிட்டேன். இது தவறான reading-ஆகவும் இருக்கலாம். எனக்குத் தோன்றியதை நேர்மையாக உங்களிடம் சொல்லிவிடவேண்டும் என்று துடித்துக்கொண்டிருந்தேன், அதனால் சொல்லிவிட்டேன்.
1400 பக்கங்களுக்கு மேல் போனாலும் எந்த இடத்திலும் எனக்கு மொழி சலிப்பைத் தரவில்லை. கிண்டிலில் கிடைத்தது இன்னும் வசதியாக இருந்தது. அச்சில் இவ்வளவு பக்கங்கள் படித்திருப்பேனா என்று தெரியவில்லை.
படித்து முடித்தவுடனே Mark as unread போட்டுவைத்துக் கொண்டேன். மீண்டும் படிக்கத் தொடங்கியிருக்கிறேன். அனேகமாக, யதியை Mark as read போடவேமாட்டேன் என்று நினைக்கிறேன்.