இந்த யாஞ்யவல்கியர் ஆரியரா? திராவிடரா? ஒரு காலத்தில் இவர் சாரு நிவேதிதாவின் இலக்கிய பார்ட்னராக இருந்தவர். ஆனால் அதனாலேயே திராவிடர் என்று ரப்பர் ஸ்டாம்ப் குத்திவிட முடியாது. மூன்றாம் நூற்றாண்டு குப்தர்கள் காலத்தில் இவரது ஸ்மிருதி (இரானியல்ல.) ரொம்பப் பிரபலமாக இருந்திருக்கிறது. ஸ்மிருதி என்றால் தருமம். மனு தருமம் மாதிரி இது ஒரு தருமம். கிட்டத்தட்ட ஆயிரத்தி நூறு சுலோகங்கள். பெரும்பாலும் மனு ஸ்மிருதியை அடியொற்றித்தான் எழுதப்பட்டது என்று படித்தறிந்த பண்டிதர்கள் சொல்லுவார்கள். மனுகூட திராவிடராக இருந்திருக்க வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன்.
விஷயம் என்னவென்றால் யாஞ்யவல்கியர் ஸ்மிருதியில் பிரியாணியைப் பற்றிய ஒரு குறிப்பு இருக்கிறது. இன்று திராவிடக் கட்சிகள் தமது தொண்டர்களுக்குக் கிளுகிளுப்பூட்ட பொட்டலம் பொட்டலமாக சப்ளை செய்கிறார்களே, அதே பிரியாணி. மட்டன் மற்றும் சிக்கன் பிரியாணி. பரம ஆரியரான யாஞ்யவல்கியர் ஓர் உணவுப் பொருளைக் குறிப்பிடுகிறார் என்றால் அது கைபர் போலன் வழியே வந்த சரக்காகத்தான் இருக்க வேண்டும். இந்த வாதத்துக்கு வலுச் சேர்க்க நமக்குக் கிடைக்கும் ஆதாரமாகப்பட்டது, கி.மு. இரண்டாம் நூற்றாண்டுப் பாரசீகத்தில் பிரியாணி கண்டுபிடிக்கப்பட்டது என்னும் குறிப்பு.
பாரசீகமென்றால் இரான். அது முஸ்லிம் நாடல்லவா; இசுலாமியர்கள் நமது நோன்புக் கஞ்சி பார்ட்னர்கள் அல்லவா என்று ஆரம்பித்துவிட முடியாது. கி.மு. என்றால் இயேசுநாதருக்கு முன்பு என்று பொருள். அப்போது இஸ்லாமே கிடையாது. இரானில் ஜொராஸ்டிர மதம் இருந்திருக்கிறது. இதர சிறு தெய்வ வழிபாடுகள் நிறையவே நடைபெற்றிருக்கின்றன. எப்படிப் பார்த்தாலும் அது ஆரிய மண். பிரியாணி ஓர் ஆரிய உணவு. கோழிக்கோட்டுக்கு வியாபாரம் செய்ய வந்த மத்தியக் கிழக்கு வர்த்தகர்கள் மூலம் அது தென்னிந்தியாவுக்கு வந்து சேர்ந்தது. இன்னொரு ரூட், இந்தியாவுக்கு வந்த முகலாய மன்னர்கள் வழியாக.
அது நிற்க. எப்படி தி.மு.கவுக்கும் அ.தி.மு.கவுக்கும் பெரிய வித்தியாசமில்லையோ அதே மாதிரி பிரியாணிக்கும் புலாவுக்கும் பெரிய வித்தியாசங்கள் கிடையாது. செய்முறை உள்பட முற்காலத்தில் இரண்டும் அண்ணன் தம்பி போலத்தான் இருந்திருக்கின்றன. சங்ககாலப் பாண்டிய மன்னர்களின் படைவீரர்களுக்கு இது அண்டா அண்டாவாகச் சமைத்துப் போடப்பட்டிருக்கிறது. சங்க இலக்கியங்களில் ஊன் சோறு என்று இது குறிப்பிடப்பட்டிருக்கிறது. அரிசி. நெய். ஜீரா. கவிச்சு. பருப்பு. அப்புறம் இருக்கவே இருக்கிறது வாசனாதி வகையறாக்கள். பாண்டிய மன்னர்கள் இந்த ஊன் சோறு உண்டிருக்கிறார்களா தெரியவில்லை. ஆனால் படைவீரர்களுக்குக் கட்டாயம் உண்டு. உழைப்பாளிகளை உற்சாகப்படுத்துவதற்கு. அவர்கள் மேலும் உழைக்கத் தெம்பு தருவதற்கு.
பாண்டியன் திராவிடன் தான். அதில் சந்தேகமில்லை. ஆனால் படைவீரர்களுக்கு ஆரிய உணவே சிறந்தது என்று எண்ணியிருக்கிறான். சங்கம் வளர்த்த பாண்டியன் வழியில் வந்தோரும் அதையே பின்பற்றி இன்றுவரை பிரியாணியை ஒரு தொண்டருணவாகப் பாதுகாத்து வருகிறார்கள் என்பதை இந்தச் சந்தர்ப்பத்தில் குறிப்பிட்டு வைத்துவிடலாம். (தேநீரைத் தொண்டர் பானமாக முன்வைத்தவர்கள் காலாவதியான சோவியத் கம்யூனிஸ்டுகள்.)
இத்தனை விஸ்தாரமாக என்னத்துக்கு இந்த பிரியாணி மகாத்மியம் என்று கேட்பீர்களானால், சங்கதி இருக்கிறது. தேர்தல் வந்தால் ஆரிய அணிகளுடன் கூட்டணி என்பது இப்போதெல்லாம் அங்கீகரிக்கப்பட்ட திராவிட ஒழுக்கமாகிவிட்டது. டெல்லியில் ஒரு காலையல்ல; கால் கட்டை விரலையாவது ஊன்றிக்கொள்ளவேண்டியது அவசியம். ஆரியமாவது ஒன்றாவது? எம்பெருமானார் ஶ்ரீ ராமானுஜரின் திவ்ய சரிதத்தை பக்திச் சுவை நனி சொட்டச் சொட்ட திரைக்காவியமாக்கும் திராணி ஒரு திராவிடப் பெருந்தலைவரைத் தவிர வேறு யாருக்கு உள்ளது? என்ன இருந்தாலும் அது ஆரிய பிரியாணி போட்ட திராவிட விரல். தரப் பழுதுக்கு வாய்ப்பே இல்லை.
ஆனால் பிரியாணி சூடு. ஆரியர்கள் கெட்டவர்கள் என்பது போல. இந்தத் தேர்தலோ கொளுத்தும் வெயில் காலத்தில் வந்து தொலைக்கிறது. வேகாத வெயிலில் நாளெல்லாம் பொழுதெல்லாம் உழைக்கும் உத்தமத் தொண்டர்கள் பிரியாணியை மட்டும் சாப்பிட்டுவிட்டு வேலை பார்ப்பது உடம்பைக் கெடுக்கும். உடனே குளிர்ச்சிக்கு அம்மா திராவிட டாஸ்மாக் பீர் என்று சொல்லிவிடக் கூடாது. பீரும் ஆரியக் கண்டுபிடிப்புதான். இருந்தாலும் மோரை முயற்சி செய்யலாம். இள நீரை முயற்சி செய்யலாம். அட ஒரு பானைத் தண்ணீர் தராத குளிர்ச்சியை வேறு எது தந்துவிடும்?
மட்பாண்டங்கள் சிந்து வெளி நாகரிக காலத்தைச் சேர்ந்தவை. அதுதான் சுத்தமான திராவிட நாகரிகம்.
0
(நன்றி: தினமலர் – 09/03/16)