எனக்கு ஒரு சுயேச்சை நண்பர் இருக்கிறார். அதாவது, எந்தத் தேர்தல் வந்தாலும் பிராந்தியத்தில் முதலில் மனுத் தாக்கல் செய்பவர் அவராகத்தான் இருப்பார். நித்ய சுயேச்சை.
தேர்தலில்தான் அவர் சுயேச்சையாக நிற்பாரே தவிர அடிப்படையில் அவர் ஒரு கட்சிக்காரர். அவர் அனுதாபியாக உள்ள அந்தக் கட்சி அவருக்கு சீட்டுக் கொடுப்பதென்றால் அது அன்புமணி முதல்வராகி, சரத்குமார் பிரதமரான பிறகுதான் நடக்கும். ஆனால் நண்பரோ எனக்கு நினைவு தெரிந்த நாளாக அரசியல் வேள்வி செய்துகொண்டிருப்பவர். அவர் சார்ந்த கட்சியே அவர் மனுத்தாக்கல் செய்துவிட்டாரா என்று விசாரித்துக்கொண்டுதான் கட்சி சார்பில் வேட்பாளரை முன்னிறுத்தும். பதில் மரியாதையாக, இவர் மனுத்தாக்கல் செய்த கையோடு கட்சி நிறுத்தும் வேட்பாளருக்கு வேலை பார்க்கத் தொடங்கிவிடுவார்.
இது என்ன மாதிரி மனநிலை என்று பல சமயம் யோசித்திருக்கிறேன். இன்றுவரை புரிந்ததில்லை. பொதுத் தேர்தல்தான் என்றில்லை. உள்ளாட்சித் தேர்தல்களிலும் அவர் சுயேச்சையாக நிற்பார். போனால் போகிறது என்று கட்சி சார்பிலும் ஓரிரு முறை நிறுத்தப்பட்டிருக்கிறார். மனிதர் ஸ்திதப்ரக்ஞர். கட்சி சார்பில் நின்றால் கிளுகிளுப்படைவதோ, சுயேச்சையாக நின்றால் சோர்ந்து போவதோ இல்லை. அவருக்குத் தேர்தல்கள் ஒரு பெரிய அவுட்லெட். வாம்மா மின்னல் வேகத்தில் சுழன்று சுழன்று வேலை செய்வார். அவர் வயதுக்கு அவரது எனர்ஜி இன்னொருத்தருக்கு வராது!
முன்பெல்லாம் அவரை மிகவும் சீண்டுவேன். ‘ஏன் சார்? உங்க குடும்பத்துல, இந்த வார்டைப் பொறுத்தவரைக்கும் மொத்தம் — ஓட்டு இருக்கில்ல? ஆனா உங்களுக்கு —தானே விழுந்திருக்கு? யாரந்த ப்ரூட்டஸ்னு கண்டுபிடிச்சிங்களா?’
மனிதர் அசரவே மாட்டார். ‘அட இத கண்டுபிடிக்க வேற செய்யணுமாக்கும். எல்லாம் என் சம்சாரம்தான்’ என்று சர்வ அலட்சியமாகச் சொல்லிவிட்டுப் போய்விடுவார். ஆனால் அவர் வீட்டுக்குப் போனால் அவரது மனைவி மிகவும் மரியாதையாகத்தான் நடந்துகொள்வார். எலி மருந்து கலக்காமல் காப்பிகூடத் தருவார். நண்பர் முன்பொரு காலத்தில் ஏதோ தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வி.ஆர்.எஸ்ஸில் வந்து பொதுச்சேவையில் இறங்கியவர். கொஞ்சம் போல் சம்பாதித்திருப்பார் என்று நினைக்கிறேன். அதனால் வீட்டில் இன்னும் புரட்சி பூக்கவில்லை. மற்றபடி அவர் ஒரு ‘நேர்ந்துவிட்ட ஆடு’ என்பதில் அவரது வீட்டாருக்கு இரண்டாம் கருத்து கிடையாது.
ஒருமுறை நண்பரின் கட்சி சார்ந்த அதிகாரபூர்வ வேட்பாளரிடம், ‘இதை உங்கள் கட்சி எப்படி அனுமதிக்கிறது? கட்சி வேட்பாளராக நீங்கள் களத்தில் இருக்கும்போது உங்கள் கட்சிக்காரர் ஒருவர் சுயேச்சையாக நிற்பது தர்மமாகாது அல்லவா?’ என்று கேட்டேன். அவர் சிரித்தார். ‘ஆமால்ல? ஆனா பரால்ல விடுங்க. ரெண்டு ஓட்டு அவருக்குப் போனாலும் அவர் ஓட்டு நமக்கு வந்துரும்’ என்று சர்வ அலட்சியமாகச் சொல்லிவிட்டார்.
ஓ! மனிதர் தம் மனைவி மீது போட்ட பழி அபாண்டம்தானா? சரிதான்.
பின்னொரு சமயம், நண்பரைத் தற்செயலாக பஸ் ஸ்டாண்டில் சந்தித்தேன். ‘எதாச்சும் செஞ்சிக்கிட்டே இருக்கணும் சார். இல்லன்னா பொண்டாட்டி பாத்திரம் கழுவ சொல்லிடுறா. யு சீ, நான் வி.ஆர்.எஸ். வாங்கினது என் சம்சாரத்துக்குப் பிடிக்கல. மாமனாருக்கும் புடிக்கல. வீட்ல சும்மாவே கெடக்குறேன்னு ஒரே டார்ச்சர். எலக்சன வெச்சி மூணு மாசம் தப்பிச்சிருவன்ல?’
நான்காவது மாதத்தை அவர் பெரிதாகப் பொருட்படுத்துவதில்லை போலிருக்கிறது.
‘அப்படி இல்லிங்க.. இந்த ஒய்ஃபுங்க சைக்காலஜியே தனி. நம்மாண்ட காச்சு மூச்சுனு கத்துவாங்களே தவிர, நம்ம தல மறைஞ்சதும் நம்மள பத்தி பெருமையா பேசிக்க ஆரம்பிச்சிருவாங்க.. ஒரு நாள் இல்ல ஒரு நாள் என் ஊட்டுக்காரர் தமிழ்நாட்டு சி.எம்மாவே வந்துருவாரு பாருன்னு ஒரு தடவ பக்கத்து வீட்டு அம்மாவாண்ட சொல்லிச்சாம். அந்தம்மா அத அவங்க வீட்டுக்காரராண்ட சொல்ல, அவரு வீதி பூரா பத்த வெக்க, ஒன் வீக்ல நம்மள தெரியாத ஏரியாக்காரங்களே இல்லாம பூட்டானுக.’
அவர் விவரித்த தருணம் எனக்கு நன்றாக நினைவில் இருந்தது. அந்த வாரத்தில் ஒருநாள்தான் யாரோ சில அடையாளம் தெரியாத நபர்கள் அவரைத் தாக்கிவிட்டுத் தலைமறைவானார்கள். பேப்பரிலெல்லாம் செய்தி வந்தது. ‘பரதேசி, போட்டோ போட உட்டுட்டான் பாருங்க சார்!’ என்று வருத்தப்பட்டார். அடுத்து வந்த உள்ளாட்சித் தேர்தலில் கட்சியே அவரை ஒரு வேட்பாளராக நிறுத்தியது. அவர் கவுன்சிலரும் ஆனார்.
வாழ்த்தச் சென்றபோது மறக்காமல் சொன்னார், ‘என்ன ஜெயிச்சி என்ன… இந்தத் தடவையும் என் சம்சாரம் எனக்கு ஓட்டுப் போடல சார்.’
0
(நன்றி: தினமலர் 10/03/16)