சாங்கி விமான நிலையத்தில் இறங்கியதுமே பத்ரி தன் மொபைல் போனில் நேரத்தை மாற்றிக்கொண்டதைப் பார்த்தேன். நான் அதைச் செய்யவில்லை. செய்ய வேண்டாம் என்று ஏற்கெனவே முடிவு செய்திருந்தேன். கடிகாரத்தில் இந்திய நேரத்தையே வைத்திருப்பது. ஒவ்வொருமுறை பார்க்கும்போதும் இரண்டரை மணி நேரம் கூட்டிக்கொள்வது என்பது முடிவு.
அதன்படியே முதல் நாள் இரவு இரண்டே முக்காலுக்குப் படுத்தபோது சரியாக நாலு மணிக்கு அலாரம் வைத்தேன். சிங்கப்பூர் நேரம் ஆறு முப்பது. எழுந்து குளித்துக் கிளம்பினால் சரியாக இருக்கும் என்று நினைத்தேன்.
குளியலில் ஒரு சிறு பிரச்னை இருந்தது. பக்கெட்டோ, மொண்டு குளிக்கக் குவளையோ அங்கு இல்லை. குளியல் தொட்டியும் நீர் சொரியும் கைக்கருவியும் இருந்தன. தொட்டியை நீரால் நிரப்பி, அமிழ்ந்து குளிக்க ஆவல் கொண்டு இறங்கி உட்கார்ந்தால், என் ஸ்தூல சரீரத்துக்கு அந்தப் பரப்பளவு போதுமானதாக இல்லை.
சரி, எழுந்து நின்று குளிக்கலாம் என்று பார்த்தால், எழவும் முடியவில்லை. ஒரு கணம் பயந்துவிட்டேன். யாராவது பிளம்பர் வந்து ஆப்பு வைத்து அடித்துத் தள்ளிதான் என்னைத் தொட்டியிலிருந்து நகர்த்தவேண்டுமோ என்று தோன்றிவிட்டது. ஊர்ப்பட்ட தெய்வங்களை உதவிக்குக் கூப்பிட்டு, ஒருவழியாக ஜெய் ஹனுமான் என்று முழங்கியபடி, குருவியில் சாக்கடை மூடியைத் திறந்துகொண்டு விஜய் எழும்பி வருவாரே, அந்த மாதிரி முழுச் சக்தியைத் திரட்டி, அந்தத் தொட்டியிலிருந்து என்னைப் பிய்த்துக்கொண்டு எழுந்துவிட்டேன்.
அதன்பின் ஒய்யாரமாகப் படுத்தவாக்கில் குளிக்கும் பேரவா எழவேயில்லை. நின்றவண்ணம் ஜலக்ரீடை முடித்து, சீவி சிங்காரித்து ஏழரைக்கெல்லாம் நான் தயார்.
ஆனால் பத்ரியின் அறையிலிருந்து சத்தமே இல்லை. காத்திருந்தேன். செய்தித்தாள் வாசித்தேன். கொஞ்சம் டிவி பார்த்தேன். பசியில் பொறுமை இழந்து நான் வீறுகொண்டபோது மணி எட்டாகிவிட்டிருந்தது. பத்ரி, போர்க்களத்திலிருந்து வருபவர் மாதிரி பரபரவென்று லேப்டாப்பைத் தூக்கிக்கொண்டு தலைக்குள் டிஷர்ட்டைச் சொருகியபடி வேகமாக வெளியே வந்தார்.
‘டயத்தை சரியா கவனிக்கலை. அலாரம் அடிக்கலை அல்லது அடிச்சது கேக்கலை, தூங்கிட்டேன். லேட் ஆயிடுச்சி, நாம போயிடலாம்’ என்று லிஃப்டை நோக்கிப் பாய்ந்துவிட்டார்.
அடக்கடவுளே, பயிற்றுப் பலகல்வியெல்லாம் வயிற்றுச் சோற்றுக்குப் பிறகல்லவா வரும்? இவர் என்ன சொல்கிறார்? போகிற வழியில் சாப்பிட்டுக்கொள்ளலாம் என்றா? போனபின் உண்ணலாம் என்றா? உண்ணா நோன்பிருந்து பயிலரங்கம் நடத்துவோமென்று வேண்டிக்கொண்டிருக்கிறாரா?
பெனின்சுலா ஹோட்டலில் காலை விருந்தோம்பல் அபாரமானதாக இருக்கிறது. பல நாட்டு சுற்றுப்பயணிகள் வருகிற இடமென்பதால் பன்னாட்டு உணவு வகைகளை ஒரு பெரிய அரங்கம் முழுதும் வரிசையாக அடுக்கியிருந்தார்கள். அமெரிக்க உணவு வகைகள், ஐரோப்பிய உணவுகள், சீன உணவு, ஜப்பானிய உணவு, மலேசிய உணவு என்று பாத்தி பாத்தியாக உண்டு தீர்க்க ஏராளமுண்டு. பல விதப் பழச்சாறுகள், காப்பி, தேநீர் வகைகள் தனி. அவரவர் வேண்டியதை, வேண்டிய அளவு எடுத்துப் போட்டுக்கொண்டு திருப்தியாகச் சாப்பிடலாம்.
நான் பத்ரியை எதிர்பார்த்தது, இவற்றில் எவையெல்லாம் எனக்கு உகந்தது என்பதைச் சுட்டிக்காட்டுவதற்கே. ஏனெனில் பல பாத்திரங்களின் அருகே செல்லும்போதே ஆடு, மாடு, கோழி, பன்றிகளின் அந்தராத்மா அலறல் என் செவிகளில் விழுந்தது. நம் ஊரில் கோழி முட்டைகள் பொதுவில் வெள்ளையாகத் தான் இருக்கும். பெனின்சுலாவில் காப்பிக்கொட்டை நிறத்தில் நூற்றுக்கணக்கான முட்டைகளை அடுக்கி வைத்திருப்பதைப் பார்த்தேன். வேகவைத்த முட்டைகள். [ஆமை முட்டையோ என்று சந்தேகம்.] ஆண்களும் பெண்களும் அதைத் தேன் மிட்டாய் மாதிரி காதலுடன் எடுத்துக் கடிப்பது கண்கொள்ளாக் காட்சி. புலர் பொழுதில் இறால், நண்டு போன்றவற்றைக்கூட ரவுண்டு கட்டி அடிக்கிறார்கள்.
எனக்குத் தேவை நாலு இட்லி. அல்லது இரண்டு தோசை. அதெல்லாம் சாத்தியமில்லையென்றால் வேறு என்னவாவது மிருக சம்பந்தமில்லாத உணவு. அதைத் தேடிக் கண்டுபிடித்துத் தரும் பொறுப்பை ஏற்றிருந்த பத்ரி, தன் பொறுப்பை மறந்து பரபரவென்று என்னை இழுத்துக்கொண்டு லிஃப்டில் இறங்கி, சாலையில் பாய்ந்து காரில் ஏறிக் கதவைச் சாத்திவிட்டார்.
ரொம்பக் கோபம் எனக்கு. ஆனாலும் வேறு வழியில்லை. என் பொருட்டு அவர் சகித்துக்கொள்ளும் எத்தனையோ பெரும் இம்சைகளுடன் ஒப்பிட இது ஒரு பெரிய விஷயமில்லைதான். ஆனாலும் பசித்தது. ஃப்ரெஷ்ஷாகக் குளித்து, சாப்பிட்டுவிட்டு, எங்களை அழைத்துச் செல்ல வந்திருந்த அருண் வேறு, பெனின்சுலாவில் காலை உணவு எப்படி இருந்தது? என்னென்ன விதமான உணவுகள் கிடைத்தன என்று அக்கறையுடன் விசாரித்துக்கொண்டிருந்தார். விதி. பார்த்ததை மட்டும் சொல்லிவிட்டுப் பயிலரங்கு நடைபெறவிருந்த தமிழாசிரியர் கழக மண்டபத்துக்குச் சென்று சேர்ந்தோம்.
[தொடரும்]
இன்று சென்னையில் அடை மழை… முழுதும் நினைந்த நிலையில் உங்கள் குளியல் கதையைப் படிக்க, சிரித்த சிரிப்பில் என் உடலில் ஈரம் உலர்ந்து விட்டது; மனதில் ஈரம் ஒட்டிக் கொண்டது. நன்றி.
//குளியலில் ஒரு சிறு பிரச்னை இருந்தது//
எங்காவது ஹிட்டன் கேமிரா இருந்ததா? 🙂
//எனக்குத் தேவை நாலு இட்லி. அல்லது இரண்டு தோசை. அதெல்லாம் சாத்தியமில்லையென்றால் வேறு என்னவாவது மிருக சம்பந்தமில்லாத உணவு.
//
இதே எளவுப் பிரச்சனைதான் எனக்கும்..எங்க போனாலும் 🙂
//ஊர்ப்பட்ட தெய்வங்களை உதவிக்குக் கூப்பிட்டு, ஒருவழியாக ஜெய் ஹனுமான் என்று முழங்கியபடி, குருவியில் சாக்கடை மூடியைத் திறந்துகொண்டு விஜய் எழும்பி வருவாரே, அந்த மாதிரி முழுச் சக்தியைத் திரட்டி, அந்தத் தொட்டியிலிருந்து என்னைப் பிய்த்துக்கொண்டு எழுந்துவிட்டேன்//
ஹா ஹா ஹா சார் உங்கள் குளியல் அனுபவம் கலக்கல் 😀 செம காமெடி. ரொம்ப நாள் கழித்து இவ்வளோ காமெடியா படிக்கிறேன் ஒருவேளை உங்களை கற்பனை செய்து பார்த்ததால் இருக்குமோ ஹா ஹா 🙂