சிங்கப்பூர் பயணம் 2

சிங்கப்பூர் சாலைகள் அழகானவை. சீரானவை. குண்டு குழிகளற்றவை. இன்றைக்கெல்லாம் பார்த்துக்கொண்டும் பயணம் செய்துகொண்டுமே இருக்கலாம். பிரதான சாலைகள் மட்டுமல்ல. சந்து பொந்துகளுக்கும் அங்கே சமநீதி கிடைத்திருக்கிறது.

என்று தொடங்கி ஒரு வியாசம் எழுதுவது என் நோக்கமல்ல. எனக்கென்னவோ சாலைகள் அந்த தேசத்தின் ஒரு குறியீடாகத் தென்படுகின்றன. ஒழுங்கினால் உருப்பெற்ற தேசம் அது. அது இன்றளவும் நீடித்திருப்பதன் வெளிப்படையான அடையாளமாகக் கண்ணில் படுவது சாலைகள்.

ஆனால் எதிர்க்கட்சிகள் இல்லாத, கம்யூனிஸ்டுகள் இல்லாத, பரிபூரணமான வலதுசாரி சர்வாதிகார அரசாங்கம் என்பதையும் நினைவுகூர வேண்டியிருக்கிறது. கம்யூனிச விரோத சீனர்கள் ஆளும் தேசம் என்கிற முறுவல் வரவழைக்கும் முரணை நினைவுகூர்ந்தேன். தேசத்தின் வளர்ச்சியின்மீது தீவிரமான அக்கறை கொண்ட ஒரு தனி மனிதரின் தலைமை. அதற்காக எத்தகு ஒழுங்கு நடவடிக்கையையும் சட்டபூர்வமாக மேற்கொள்ளக்கூடிய லெஃப்டினண்ட்கள். எல்லா இடங்களிலும் எல்லா நேரத்திலும் ஏதோ சில கண்கள் நம்மைக் கண்காணிக்கின்றன என்கிற எண்ணம் மறவாத மக்கள். இந்த ஒழுங்கின் வேர்கள் இம்மூன்று தரப்பினர்தாம்.

ஆனாலும் அச்சம் கட்டுவித்த ஒழுங்கு அல்லவா? அருண் மகிழ்நனுக்கு அதில் சந்தேகமில்லை. அச்சம்தான். ஆனாலும் ஏதோ ஒரு கட்டத்தில் அச்சம் விடுபட்டு, ஒழுங்கு ஒரு குணமாகிவிட்டிருக்கிறது. அனிச்சை செயல்பாடாகிவிட்டிருக்கிறது. யாரும் சாலையில் குப்பை போடுவதில்லை. துப்புவதில்லை. நேரத்தை வீணாக்குவதில்லை. எதற்கும் அடுத்தவரை எதிர்பார்த்து நிற்பதில்லை. வீண் அரட்டைகளில் நேரம் செலவிடுவதில்லை. உழைக்கும் தினங்கள் உழைப்பதற்கு. ஓய்வு தினங்கள் உல்லாசத்துக்கு.

அருண் எங்களை முதல் முதலில் லிட்டில் இந்தியாவில் உள்ள மெட்ராஸ் உட்லண்ட்ஸ் என்ற உணவகத்துக்கு அழைத்துச் சென்றார். நல்ல மசாலா தோசையும் தயிர் சாதமும் சாப்பிட்டுவிட்டுச் சற்றுநேரம் பேசிக்கொண்டிருந்தோம். லிட்டில் இந்தியா என்கிற பெயரில் எனக்குக் குறும்பு கலந்த விமரிசனம் ஒன்று இருப்பதாகப் பட்டது. இந்தியர்கள், குறிப்பாகத் தமிழர்கள் வாழும் பகுதி அது என்பதால் மட்டும் அப்பெயர் ஏற்பட்டதாகத் தோன்றவில்லை. ஒட்டுமொத்த சிங்கப்பூரின் வெளி ஒழுக்கங்களிலிருந்து ஒவ்வோர் அம்சத்திலும் ஓரங்குலம் விலகி நிற்கும் பகுதியாக அது இருந்தது. ஏராளமான தமிழ் உணவகங்கள். காய்கறிக் கடைகள், கொள்முதல் மண்டிகள். ஷாப்பிங் மால்கள். சரக்கு வேன்கள். டூரிஸ்டுகளைக் கவர்வதற்கென்றே சைக்கிள் ரிக்‌ஷாக்கள். தவிரவும் நிறைய மனிதர்கள். ஒழுங்கைச் சற்றே கலைத்துப் போடுவதில் ஆர்வம் கொண்டவர்கள். தமிழகம் ஒயின்ஸ் என்று போர்டு மாட்டி சீரியல் பல்பு கட்டி சிரிப்பு மூட்டுகிறவர்கள். காற்றை நிறைத்த தமிழ்க் குரல்களில் கருணாநிதியும் சோவும் குஷ்புவும் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள்.

சீனர்களோ மலாய்க்காரர்களோ தமிழர்கள் அளவுக்கு உரக்கப் பேசுவதில்லை என்று தோன்றியது. சிங்கப்பூருக்குள் ஒரு குட்டி தேசமாக அது தென்பட்டாலும் புதிதாக அத்தேசத்துக்குச் சென்ற எனக்கு அந்தச் சூழலே ஆற்றுப்படுத்துவதாக இருந்தது. என்ன இருந்தாலும் நான் தமிழன். என்ன இருந்தாலும் நான் இந்தியன். வாயில் போட்ட மாவாவைத் துப்பித்தான் ஆகவேண்டியிருக்கிறது.

சாப்பிட்டுவிட்டு, பேசி முடித்து நாங்கள் ஹோட்டலுக்குச் சென்று சேரக் கிட்டத்தட்ட நள்ளிரவு ஆகிவிட்டது. அந்நேரத்திலும் கன்னத்தில் ரோஸ் பவுடரெல்லாம் போட்டுக்கொண்டிருந்த ரிசப்ஷன் சீன பொம்மைகள், வரிசையில் நிற்கச் சொல்லிவிட்டு கம்ப்யூட்டரில் நிறையத் தடவின. அனுபவம் போதாதவர்களாயிருக்கும் அல்லது தூக்கக் கலக்கமாயிருக்கும். அந்நேரத்திலும் அந்த ஹோட்டலில் ஏராளமான மக்கள் புத்துணர்ச்சியுடன் குறுக்கும் நெடுக்கும் போய்க்கொண்டிருந்தார்கள். பொதுவாக சிங்கப்பூர் சீனப் பெண்கள் இடுப்புக்குக் கீழே ஒன்றே முக்கால் அங்குலத்துக்கு அதிகமாக உடை உடுத்துவதில்லை போலிருக்கிறது. எல்லாருடைய கால்களும் மொழுமொழுவென்று, நிமிர்த்திவைத்த சாஃப்ட் பால் மட்டைகள் போலிருந்தன. முதல் ஒரு சில நிமிடங்களுக்கு அந்தக் காட்சி அதிர்ச்சியளித்தாலும் விரைவில் பழகிவிட்டது.

ஒரு வழியாக எனக்கும் பத்ரிக்கும் ஒதுக்கப்பட்ட அறைகளுக்கான சாவி அட்டைகள் வழங்கப்பட்டன. பதினேழாவது மாடியில் எங்கள் அறைகளைக் கண்டடைந்து உள்ளே சென்று உட்கார்ந்தவுடன் எம்பெருமான் எனக்காக அனுப்பிவைத்த சிங்கப்பூர் நண்பர் தீபன் பான் பராக், மானிக்சந்த் என்று அங்கே கிட்டக்கூடிய எனக்கான பிரசாத வகைகளுடன் வந்து சேர்ந்தார். வேண்டியதை எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொன்னார். இக்கண்கொள்ளாக் காட்சியைப் பார்த்துவிட்டு பத்ரி தலையில் அடித்துக்கொண்டு தன் அறைக்குச் சென்று கதவைச் சாத்திக்கொண்டார்.

நான் தீபனுடன் சற்று நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு, அவர் புறப்பட்டதும் அறையின் திரைச் சீலைகளை விலக்கி அங்கிருந்து சாலையைப் பார்த்தேன். நாடி டைம் தொலைக்காட்சித் தொடரில் நான் எப்போதும் பார்த்து ரசிக்கிற அதே சாலைகள். சித்திரத்தில் வரையும் நேர்த்தியைச் செயலில் காட்டியிருக்கும் சிங்கப்பூர். திரும்பத் திரும்ப அதுதான் தோன்றியது. அவை வெறும் சாலைகளல்ல. ஒரு குறியீடு.

மறுநாள் காலை எட்டே காலுக்கு வண்டி வந்துவிடும், தயாராயிருங்கள் என்று அருண் சொல்லியிருந்தார். எடிட்டிங் பயிலரங்குக்காக என்னவாவது கொஞ்சம் தயார் செய்துகொள்ளலாமென்று முகம் கழுவி உட்கார்ந்து யோசிக்க ஆரம்பித்தேன். தொலைக்காட்சியில் தாய்லந்துக் கலவரங்கள் ஓடிக்கொண்டிருந்தன. களைப்பு இருந்தாலும் வெகுநேரம் உறக்கம் வரவில்லை. புதிய இடம், புதிய சூழல் என்பதெல்லாம் எனக்கு எப்போதும் ஒரு பொருட்டாக இருந்ததில்லை. ஆனாலும் உறங்கவில்லை. அதிகாலை விழிக்க வேண்டிய நேரம் சற்றே கண்ணயர்ந்திருப்பேன் என்று நினைக்கிறேன். அலாரம் அடித்துவிட்டது.

பரபரவென்று கிளம்பித் தயாராகி பத்ரிக்காகக் காத்திருந்தேன். இரவு முழுக்க உறங்காதிருந்ததால் நன்றாகப் பசித்தது. சாப்பிட என்ன கிடைக்கும், கிடைப்பவற்றுள் எதெல்லாம் சைவ உணவாக இருக்கும் என்று எனக்கு சுட்டிக்காட்டி விளக்கவேண்டிய மாபெரும் பொறுப்பு அவருக்கு இருந்தது. தவிரவும் இந்தியா, இலங்கை, மலேயா, சிங்கப்பூர் என்று கோபால் பல்பொடி போன வழியெல்லாம் முன்னதாகச் சுற்றியவர். கொஞ்சம் உலகம் தெரிந்தவர் என்பதால் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தேன்.

ஆனால் நடந்தது திட்டமிடப்படாத ஒரு மாபெரும் சதி.

[தொடரும்]
Share

8 comments

  • நாட்டைச் சுத்திப் பாருமையா என்றால், சும்மா ரோட்டையே பராக்கு பார்த்துக்கிட்டு …!

    நானும் இந்த மாவா மேட்டர் கேள்விப்பட்டதில்லையே. இது என்ன ஜர்தா 120 க்கு மாமாவா ?!

    பாவம், பத்ரி!

    • பல்லாண்டு காலமாக நான் மாவாவைப் பற்றி அவ்வப்போது எழுதி வந்திருப்பினும், இன்னமும் பலர் அதன் அருமை பெருமைகளை அறியாமல் விசாரித்துக்கொண்டிருப்பது வருந்தத்தக்கது. இதற்காக விக்கிபீடியாவில் ஒரு பக்கமா உருவாக்க முடியும்? முடிந்தால் மாவா குறித்து ஒரு தனிக்கட்டுரை இங்கேயே எழுதி வெளியிட முடியுமா பார்க்கிறேன்.

  • இதை அப்படியே எடுத்து சிங்கப்பூர் போன சித்தாளு என்று தொடராக வெளியிடலாம் போலிருக்கே! செம சுவாரஸ்யம். அதென்ன நாடி டைம் டிவி தொடர்?

  • Iye ஜாலி …para -வோட Energy ரகசியம் பத்தி தெரிஞ்சுக்க போறேன் !
    மாவா ….சீக்கிரம் வாவா 🙂

  • அப்படி வெளியிட்டால் நிறைய அன்பர்கள் பயனடைவார்கள் 🙂 மாவோ மாதிரி மாவா..

  • ஹிஹி…நீங்க மாவா பற்றி எழுதுங்க பாரா. நான் 120, 160, 360 ஜர்தா வகைகள், மதுரை, பெங்களூர்ல எங்க பீடா/மாவா நல்ல முறையில், கலப்பில்லாது கிடைக்கும் என்று பின்னூட்டமிடறேன். :-).

  • //காற்றை நிறைத்த தமிழ்க் குரல்களில் கருணாநிதியும் சோவும் குஷ்புவும் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள்//

    லிட்டில் இந்தியாவில் இருந்தால் தமிழகத்தில் இருப்பதை போலவே இருக்கும் (உடன் கொஞ்சம் ஹைடெக்காக)

    //அந்நேரத்திலும் கன்னத்தில் ரோஸ் பவுடரெல்லாம் போட்டுக்கொண்டிருந்த ரிசப்ஷன் சீன பொம்மைகள்//

    🙂 அவர்கள் ஏற்க்கனவே ரொம்ப கலராக இருப்பார்கள் இதில் இந்த மேக்கப்பை வேறு போட்டு கொடுமை செய்வார்கள்.

    //பொதுவாக சிங்கப்பூர் சீனப் பெண்கள் இடுப்புக்குக் கீழே ஒன்றே முக்கால் அங்குலத்துக்கு அதிகமாக உடை உடுத்துவதில்லை போலிருக்கிறது//

    😉 உண்மை தான்

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி