சிங்கப்பூர் பயணம் 1

சிங்கப்பூர் தேசிய புத்தக வளர்ச்சி கவுன்சில் சார்பில் எங்களை அழைத்திருந்தார்கள். சிங்கப்பூர் எழுத்தாளர்களுக்கான இருநாள் எடிட்டிங் பயிலரங்கம். முடித்துவிட்டு, மூன்றாம் நாள் சிங்கப்பூர் கல்வித்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பாடநூல் உருவாக்கக் குழுவினருக்கான எடிட்டிங் பயிலரங்கம். நியூ ஹொரைசன் மீடியா சார்பில் நானும் பத்ரியும் இந்தப் பயிலரங்குகளை நடத்துவதற்காகக் கடந்த 14ம் தேதி சிங்கப்பூர் சென்றோம்.

நல்ல, கொளுத்து வெயில் வேளையில் விமானம். ஏர் இந்தியாவின் புராதனமான சேவை மாமிகள் எல்லோரையும் கணக்கு டீச்சர் மாதிரி மிரட்டி உட்காரவைத்து பெல்ட்டு போட்டுக்கொள்ளச் சொன்னார்கள். என்னமோ சரி விகித உணவு என்று சொல்லி குட்டி காகிதப் பாத்திரத்தில் ஏழெட்டுப் பொருள்களை வைத்து, உம்! சாப்பிடு என்று மிரட்டாத குறையாகத் திணித்துவிட்டுப் போனார்கள். 

பழமைக்கு மதிப்புக் கொடுக்கும் ஏர் இந்தியாவின் நல்லியல்பைப் பாராட்டத்தான் வேண்டும். 1960களில் பணியில் சேர்ந்த விமானப் பணியாளர்களை மட்டுமல்ல. அதே 1960களில் வெளியான திரைப்படப் பாடல்களைக் கூட அவர்கள் மாற்றுவதில்லை. இருக்கைக்கு முன்னாலிருந்த பொழுதுபோக்குச் சதுரத்தில் மொத்தம் ஆறு சானல்கள் இருந்தன. அசினும் சல்மான்கானும் நடித்த அந்தப் பாடாவதி ஹிந்திப் படம் ஒன்றில் ஓடத் தொடங்கியது. தன் விதிப்படி பத்ரி அதைப் பார்க்கத் தொடங்கி, சில நிமிடங்களில் காது மெஷினைக் கழற்றி வைத்துவிட்டார். இன்னொரு சானலில் புராதன ஹிந்திப் பாடல்கள். மேலும் ஒன்றில் புராதன ஹிந்தி பஜனைகள். இன்னுமொன்று கடைசி வரை கொரகொரத்துக்கொண்டே இருந்துவிட்டது. மேலுமொன்று வரவேயில்லை. ஏதோ ஒரு நியூஸ் சானலில் குண்டு உடம்பைக் கரைப்பது பற்றி எனக்காகவே பிரத்தியேகமாக யாரோ ஒரு தாய்லந்து மாமி பாடமெடுத்துக்கொண்டிருந்தார். எனக்கு ஏர் இந்தியா மாமிகளே அச்சமூட்டப் போதுமானதாக இருந்தபடியால் நான் சானல்களைப் புறக்கணித்துவிட்டு விமானம் பறக்கும் உயரம், வேகம், வெப்பநிலை இன்னபிற தகவல்களைக் காட்டிக்கொண்டிருந்த மேப்பை விரித்து வைத்துக்கொண்டேன்.

சானல்களும் மாமிகளும் பழிவாங்கிவிட்ட துக்கத்தில் இருந்த பத்ரி, சமூக சேவையில் தன் கவனத்தைத் திருப்பத் தொடங்கினார். விமானத்தில் அளிக்கப்பட்ட இமிக்ரேஷன் ஃபாரங்களைப் பூர்த்தி செய்யப் பலபேர் தடுமாறிக்கொண்டிருந்தார்கள். [நான் இதற்கெல்லாம் தடுமாறுவதே இல்லை. ஃபாரம் கொடுக்கப்படும்போதெல்லாம் உடனுக்குடன் அருகே இருப்பவரிடம் அளித்துவிடுவது என் வழக்கம். இண்ட்டு போட்டுக்கொடுத்தால் ஒழுங்காகக் கையெழுத்து மட்டும் போட்டுவிடத் தெரியும்.]

பத்ரிக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த ஒரு பெண்மணி, மிக நீண்ட யோசனைக்குப் பிறகு முதல் முதலாக அவரிடம் தனது படிவத்தை நிரப்பித் தரச்சொல்லிக் கொடுத்தார். உடனே பத்ரிக்குள் இருந்த ஒரு விசாரணை அதிகாரி வெளிப்பட்டார். உங்கள் சொந்த தேசம் இந்தியாதானா? எதற்காக சிங்கப்பூர் போகிறீர்கள்? எத்தனை காலம் தங்குவீர்கள்? இதற்குமுன் உங்களுக்கு விசா மறுக்கப்பட்டிருக்கிறதா? ஆமெனில் என்ன காரணம்?

பாவம் அந்தப் பெண்மணி. முன்னதாக மாமிகள் கொடுத்த மகத்தான சமச்சீர் உணவெல்லாம் ஜீரணமாகிவிட்டிருக்கும். ஒரு கொலைக்குற்றவாளியின் தயக்கத்துடன் பத்ரி கேட்ட வினாக்களுக்கெல்லாம் பதிலளித்துக்கொண்டிருந்தார். இதனைப் பார்த்துக்கொண்டிருந்த பிற பயணிகளுக்கு பத்ரி, ஏர் இந்தியாவின் முதலாளியாகவோ, சிங்கப்பூர் தூதரகத் தலைமை அலுவலராகவோ தெரிந்திருக்க வேண்டும். விமானம் இறங்கியதும் பல படிவங்கள் அவரைச் சூழும் அபாயம் உண்டானது.  பத்ரி அவர்களை க்யூவில் நிற்கவைத்து சாங்கி விமான நிலையத்தில் ஒரு தனி கவுண்ட்டர் திறக்காதது பெருங்குறை.

பயிலரங்குக்கு ஏற்பாடு செய்திருந்த அருண் மகிழ்நன் எங்களை அழைத்துச் செல்வதற்கு வந்திருந்தார். எளிய, சுலபமான விமான நிலையச் சடங்குகள். நிமிடங்களில் வெளியேறி, காரில் அமர்ந்தோம்.

நான் கொஞ்சம் பயந்திருந்தேன். சிங்கப்பூர் விமானப் போக்குவரத்து தொடர்பான இணையத்தளத்தில், சில குறிப்பிட்ட விஷயங்கள் பற்றி சிவப்புக் கட்டம் கட்டி அலாரம் அடித்திருந்தார்கள். அந்தச் சிலவற்றில் மாவாவும் அடக்கம். புகையிலை சார்ந்த பொருள்கள் எதையும் நாட்டுக்குள் எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது. மாட்டினால் தீட்டிவிடுவோம்.

இது ஏதடா ரோதனை என்று ரொம்பக் கவலையாகிவிட்டது. சிங்கப்பூருக்குள் எப்படியாவது சமாளித்துக்கொள்ளலாம் என்று தெரிந்தது. லிட்டில் இந்தியாவில் கடா மார்க் வரைக்கும் தமிழகப் பொருள்கள் சகலமும் கிட்டும் என்று நண்பர்கள் சொல்லியிருந்தார்கள். ஆனால் விமானத்தில்? விமான நிலையத்தில்? ஒரு மசாலாப் படத்தின் தீவிரமான கடத்தல் காட்சி போல சரக்கைப் பதுக்கி எடுத்துச் செல்லலாமா என்றெல்லாம் யோசித்து வழி முறைகளுக்கான ஒன்லைன் கூடப் போட்டு வைத்திருந்தேன். கட்டக்கடைசி நேரத்தில் எனக்குள்ளிருந்த கோயிந்தசாமி குரல்கொடுத்தான். விபரீதம் வேண்டாம். நீ பாட்டுக்கு எடுத்துச் செல். ஒளிக்காதே. அனுமதி மறுத்தால் அவர்களுக்கே கொடுத்துவிடு. கூடவே ஒரு பிடி சாபமும். போதும்.

சென்னை விமான நிலையத்தில் வெற்றிச்செல்வன் என்று எனக்கொரு ரசிகர் உண்டு. நல்ல நண்பர். ஒவ்வொரு பயணத்தின்போதும் எனக்கு உதவி செய்து, அன்போடு வழியனுப்பி வைப்பவர். அவரேகூட இம்முறை மாவா வேண்டாம் என்பது போலத்தான் சொன்னார். மற்ற நாடுகள் என்றால் பரவாயில்லை; சிங்கப்பூர் கஷ்டம் என்றார்.

ஆனால் எம்பெருமான் என்னுடன் இருந்தான். மறைக்காமல், ஒளிக்காமல் மேல் பாக்கெட்டிலும் பாண்ட் பாக்கெட்டிலுமாக ஒரு நாலு பாக்கெட் மாவாவை எடுத்துச் சென்றேன். தொட்டுத் தடவிப் பரிசோதித்தவரிடம் நானே எடுத்தும் காட்டினேன். ம்ஹும். அவர் உத்தமோத்தமர். அது என்னமோ கோயில் பிரசாதம் என்று கருதிவிட்டார் போலிருக்கிறது. விட்டுவிட்டார்கள்.

சிங்கப்பூர் விமான நிலையத்திலும் அவ்வண்ணமே ஆனது. இதிலிருந்து நான் தெரிந்துகொண்ட [அல்லது எடுத்துக்கொண்ட] நீதி யாதெனில், மாவா ஒரு கெட்ட பொருளல்ல. 

மாவா பிரச்னை தீர்ந்ததே எனக்குப் பெரிய விடுதலையாக இருந்தது. விமான நிலையத்திலிருந்து கோல்மன் வீதியில் இருந்த பெனின்சுலா ஹோட்டலை நோக்கிச் சென்ற கார்ப்பயணத்தைப் பரம சுகமாக அனுபவித்தேன். வெளியே எல்லையற்று விரிந்த நேர்க்கோட்டுச் சாலையும், அசோகரின் வம்சாவளியான லீ க்வான் யூ நட்ட அழகு மரங்களும் விண்ணைத் தொட்ட கட்டடங்களும் கண்ணைக் கட்டிய நவீனங்களும் என்னை முன்னால் அனுப்பிப் பின்புறமாக விரைந்துகொண்டிருந்தன.

விமான நிலையத்தை விட்டு வெளியே வந்து கால் வைத்த கணத்தில் என்னை அடித்துப் போட்ட பிரம்மாண்டம், அந்த தேசத்தின் சாலைகள். மூன்று நாள் போன காரியம் முடித்து, மிகக் கொஞ்சம் ஊரையும் சுற்றிவிட்டுத் திரும்பிய பிறகும், அதைவிடப் பெரிய வியப்பாக வேறேதும் எனக்குப் படவேயில்லை.

(தொடரும்)

Share

12 comments

 • ’சிங்கங்களின் நகரம்’ன்னோ ‘சிங்க தேசம்’ன்னோ டைட்டில் வெக்காம என்னய்யா இது போன நூற்றாண்டுத் தலைப்பு? 😉

 • என்னதிது? 2 நாள் பயணத்திற்கு 4 மாவா போதுமா?…

 • மாவா என்றால் பீடாவா? அல்லது புகையிலையா?

 • //மாவா means what ya? //
  Shame! Shame Puppy Shame!
  பா.ரா. நீங்க மாவா பார்ட்டியா? சொல்லவே இல்லே!
  யாரங்கே! இவர்கள் செம்மொழி மாநாடு நடத்தும் தன்மான தலீவரு குடும்பத்தோடு ஆச்சி செஞ்சிகனு இருக்கிற மெட்ராஸாண்டா வந்தா தாடை கீஞ்சிடும்
  தோடா!
  மா – ஆசிரியர் பா.ரா. விரைவில்….

  மாவா – is a product prepared at the Pan shop [ஐத்தாப்பா பீடா கடை]. I don’t know the raw materials. they will put in polythene cover and they will add Ca [Calcium /சுண்ணாம்பு] and will rub so that all get mixed well and formed as fine power. then they will transfer to dry tiny, compact polythene cover. so when ever u want take few pinch and keep it under ur lips பற்களுக்கும் வாயின் உள்ப்புற சுவர்குக்கும் இடையே வைத்தால்…
  சொர்க்கம் மாவாவிலே!
  மிக்ஸ்பண்ணும் மாஸ்டர் கையிலே!!

  • Manion, புல்லரிக்க வைக்கிறீர். மாவா குறித்து ஏற்கெனவே விரிவாக எழுதியிருக்கிறேன். தேடியெடுக்க சோம்பலாக உள்ளது. நெய்யில் வறுத்த சீவலைப் பொடித்து, அதில் 120 சேர்த்து, கொஞ்சம் சுண்ணாம்பு வைத்து நீங்கள் குறிப்பிடும் பாலிதீனுக்குள் இட்டு உள்ளங்கையில் அரை மணி தேய்க்க வேண்டும். பிறகு திறந்து நாலு சொட்டு தண்ணீர் விட்டு மீண்டும் தேய்க்க வேண்டும். நல்ல காப்பி அளவுக்கு சூடாகும்படி தேய்த்துவிட்டு போடவேண்டியதுதான். இது பான்பராக் வகையறாக்களின் கொள்ளுப் பாட்டனார்.

 • சிங்கப்பூரின் உங்களது பிரமிப்பை மாவா பற்றிய எங்கள் ஆர்வம் வென்றுவிட்டது,அன்பே சிவம் படத்தில் மாதவன் சாப்பிடுவாரே, அது தானே மாவா?

By Para

எழுத்துக் கல்வி

வலை எழுத்து

தொகுப்பு

Links

அஞ்சல் வழி


RSS Feeds

Follow Me