வருட பலன்

கிட்டத்தட்ட நான்காண்டுகளுக்கு மேலாக எழுதிக்கொண்டிருந்த காஷ்மீர் புத்தகத்தை இந்தாண்டு ஒருவழியாக முடித்தது, தனிப்பட்ட முறையில் பெரிய ஆசுவாசமாக இருந்தது. அவ்வப்போது எழுதிவைத்த குறிப்புகளும் துண்டு துக்கடா அத்தியாயங்களுமே சுமார் எண்ணூறு பக்கங்களுக்குமேல் வந்துவிட்டன. இது மிகுந்த கலவர உணர்ச்சியை அளித்துக்கொண்டிருந்தது. நிச்சயமாக இந்தப் புத்தகம் நாநூறு பக்கங்களைத் தாண்டக்கூடாது என்பதுதான் என் எண்ணம். கடந்த செப்டெம்பரில் இதை முடித்துவிடும் உத்வேகம் ஏற்பட்டு, ஒரு முழு மாதம் இதற்காக வீட்டில் உட்கார்ந்தேன். தினமும் ஆறு மணிநேரம் படிப்பு, பத்து மணிநேரம் எழுத்து, மிச்ச நேரத்தில் உணவு, உறக்கம், மப்பாகத் திரிதல் என்பதை நியதி ஆக்கிக்கொண்டேன்.

இம்மாதிரி பேய்த்தனமாக வேலை பார்க்க அமரும்போது நிறைய பசிக்கும். கண்டபடி உடம்பு வலிக்கும். கண் எரியும். சிறுசிறு சத்தங்களும் பூச்சாண்டியாக பயமுறுத்தும். என் போதாத காலம் இம்முறை லேப்டாப் மானிட்டர் படுத்து, வீட்டில் குழந்தை விளையாடக் கொடுத்திருக்கும் டெஸ்க் டாப்பில் பெரும்பகுதி எழுதவேண்டியதானது. டெஸ்க் டாப் கீ போர்ட் எனக்குப் பழக்கமே இல்லை. அந்த வலியும் சேர்ந்துகொண்டு நரக அவஸ்தையாக இருந்தது. இருந்தாலும் எப்படியோ நினைத்தபடி எழுதி முடித்துவிட்டேன் என்பது மிகுந்த மகிழ்ச்சியளித்தது. இதுவரை நான் எழுதிய அரசியல் நூல்களிலேயே எனக்கு அதிகம் திருப்தி கொடுத்தது இதுதான். ஒரு பத்திரிகைத் தொடராக இதனை எழுதியிருந்தால் இதன் வடிவம் வேறுமாதிரியாக இருந்திருக்கும். புத்தகமாகவே சிந்தித்து எழுதியதால் கட்டுக்கோப்பு ஜோராக வந்துவிட்டது. காஷ்மீருக்குள் முதல் முதலில் இஸ்லாம் நுழையத் தொடங்கிய நாளிலிருந்து ஆரம்பித்து செப்டெம்பர் 2010 வரையிலான காலக்கட்டத்து சரித்திர நிகழ்வுகள் எதையும் விடவில்லை.

வேறு சிந்தனையே இல்லாமல் இந்தப் புத்தகத்தை முடித்த சந்தோஷத்தைக் கொண்டாடுவதற்காகவே இன்னொரு சிறு நூலை எழுதினேன். ஆர்.எஸ்.எஸ். அக்டோபர் பாதிக்குப் பிறகு சாமியாட்டம் நின்று, சகஜவாழ்க்கை திரும்பியது.
0

ஆண்டு முழுதும் படங்கள் பார்த்துக்கொண்டே இருந்தேன். எண்ணிக்கை நினைவில்லாத அளவுக்கு இந்த ஆண்டு படம் பார்த்திருக்கிறேன். கடைசியாக ஈசன், விருதகிரி, மன்மதன் அம்பு. படம் பார்ப்பது என்பது அநேகமாக தினசரிப் பணிகளில் ஒன்றாகிவிட்டது. தியேட்டருக்குச் சென்று பார்த்தவை குறைவு. பெரும்பாலும் டிவிடி. ஒரு விண்டோவில் ஓடவிட்டுவிட்டு, இன்னொன்றில் வேலையும் ட்விட்டரும் பார்ப்பது பழகிவிட்டது. உபிச டைனோ கொடுத்த சரக்குகளே இந்தாண்டு மிகுதி. பார்த்தவற்றுள் நெஞ்சை விட்டு நகராதது, ‘ரோட் டு கவுண்டனாமோ.’ ஆப்கன் போர்க்கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டு கவுண்டனாமோ சிறைச்சாலையில் வைத்து உனக்கு ஒசாமா பின்லேடனைத் தெரியுமா, முல்லா முஹம்மத் ஓமர் உன் மச்சானா என்று வாட்டியெடுக்கிற அதிகாரிகளைப் பற்றிய படம். பேர்பாதி டாகுமெண்டரி என்றாலும் அப்படித் தெரியவேயில்லை என்பது இயக்குநரின் சாமர்த்தியம். நல்ல கதைச்சத்து மிக்க படங்களைக்கூட முக்காலே மூணுவீசம் டாகுமெண்டரியாகவே தெரியும்படி எடுப்பது நம்மாள்களின் சாமர்த்தியம். இந்த வருடம் பார்த்த தமிழ்ப்படங்களில் ஒன்று கூட உருப்படி இல்லை என்பதைத் தவறாமல் குறிப்பிட்டுவிட வேண்டும்.

0

இந்த வருடம் கிருஷ்ணரைப் பற்றி நிறையப் படித்தேன். ஸ்ரீமத் பாகவதம் முழுவதற்குமே கதைக்கு அப்பால் வேறு பொருள் இருப்பது புரிந்தது. கிருஷ்ணா என்கிற கருத்தாக்கத்தை, கதை சாக்லெட்டில் புதைத்து எதைத் தெரிவிக்க விரும்பியிருப்பார்கள் என்று யோசித்துப் பார்த்தேன். கதைதான் பிரதானமாக நிற்கிறது, புழங்குகிறது. ஒரு லட்சியவாதப் படைப்பாகத் திரண்டு எழும் கிருஷ்ணர், உண்மையில் ஒரு சிறந்த யதார்த்தவாதி. காலம் தோறும் மாறும் மதிப்பீடுகளைப் புறம்தள்ளி, காலத்தையும் புறம்தள்ளி, அனைத்திலும் விஞ்சி நிற்பதுபோன்ற கட்டுமானம் ஒரு பிரம்மாண்டம் அளித்துவிடுகின்றது. இதில் மயக்கம் கொண்டுவிடாமல் நிதானமாக ஆராய்ந்தால், அடிப்படையில் இது மண்ணில் காலூன்றி நிற்கும் மனிதனின் கதைதான். எந்தத் தனிமனிதனும் தன்னுடைய ஒரு பக்கத்தைக் கிருஷ்ணனிடம் பார்க்கலாம் என்னும்படியாக வடிவமைக்கப்பட்ட கதைகள். மற்றப் பக்கங்களை அவனைப் பார்த்தே திருத்தி வடிவமைத்துக்கொள்ளலாம். கிருஷ்ணரை முன்வைத்து ஒரு சிறந்த ஆளுமை மேம்பாட்டு பிரசண்டேஷன் செய்ய முடியும் என்று தோன்றியது. மேனேஜ்மெண்ட் குருநாதர்கள் யாராவது செய்திருக்கிறார்களா தெரியவில்லை. சித்பவானந்தரின் எழுத்திலும் ரஜனீஷின் எழுத்திலும் வாசித்த கிருஷ்ணர்களுக்குள்தான் எத்தனை வித்தியாசங்கள்!

0

டெல்லி, கொடைக்கானல், கன்யாகுமரி, மதுரை, கோவை, சிங்கப்பூர், மலேசியா என்று குறும்பயணங்கள் சில இந்தாண்டு இருந்தன. சிங்கப்பூரில் எடிட்டிங் பயிலரங்கு நடத்திய அனுபவம் மறக்கமுடியாதது. எழுத்தாளர்களுக்கும் எடிட்டர்களுக்குமான உறவு தொடங்கும்புள்ளி: ‘என் புத்தகத்தை நீ ஏன் எடிட் செய்யவேண்டும்? நான் எழுதிவிட்டதனாலேயே அது அமரகாவியமாகிவிடுகிறதல்லவா?’ சிங்கப்பூர் எழுத்தாளர்களும் இதற்கு விலக்கல்ல என்பது சந்தோஷமளித்தது.

கோவை செம்மொழி மாநாட்டுக்குச் சென்று வந்தது இன்னொரு முக்கியமான அனுபவம். கன்யாகுமரியில் திருவள்ளுவர் சிலைக்குச் சற்றுத்தள்ளி இன்னொரு பாறை இருப்பதைச் சென்றமுறை போயிருந்தபோது பார்த்தேன். இப்போதே ரிசர்வ் செய்துவிடலாம் அல்லது வேலையைத் தொடங்கிவிடலாம். எங்கெங்கு காணினும் ஏ.ஆர். ரகுமானின் தீம் ம்யூசிக்குடன் ஆண்டுத் தொடக்கம் முதல் மாநாடு முடியும்வரை ஆட்டிப்படைத்த இந்த செம்மொழி வைரல் ஃபீவர் என்ன சாதித்தது என்று இப்போது யோசித்துப் பார்த்தால் கோவைக்குச் சில நல்ல சாலைகள், சென்னைக்கு ஒரு பூங்கா என்பதைத் தவிர வேறெதுவும் சட்டென்று நினைவுக்கு வர மறுக்கிறது.

0

இணையத்தில் அதிகம் எழுதவில்லை. தமிழ் பேப்பர் ஆரம்பித்தேனே தவிர, அதில் நான் எழுதுவது இல்லை. புதிய எழுத்தாளர்களுக்கான களமாக அது இருக்கவேண்டும் என்பதுதான் ஒரே நோக்கம். சும்மா தடாலடியாகச் செய்துபார்த்த தீபாவளி மலர், அச்சு மலர்களைக் காட்டிலும் சிறப்பாக இருந்ததாகப் பலபேர் போன் செய்து பாராட்டினார்கள். எம்பெருமான் சித்தம். அடுத்த வருடமும் இணையத்தில் அதிகம் எழுதப்போவதில்லைதான். அவசரத் தேவைகளுக்கு ட்விட்டர் சந்து போதுமானதாக இருக்கிறது.

இந்த வருடம் இணையத்தில் எனக்குக் கிடைத்த இன்ப அதிர்ச்சி, விமலாதித்த மாமல்லனின் வரவு. ஒரு காலத்தில் நான் விரும்பிப் படித்த எழுத்தாளர்களுள் அவர் ஒருவர். திடீரென்று ஏனோ காணாமல் போய்விட்டார். காலம் கிட்டத்தட்ட மறக்கடித்திருந்தவரைச் சற்றும் எதிர்பாராமல் மின்வெளியில் மீண்டும் சந்தித்தது, அதுவும் உக்ரநரசிம்ம மூர்த்தி கோலத்தில் – மாறுபட்ட அனுபவம். மாமல்லன் எக்கச்சக்கமான படைப்பூக்கம் பெற்று, நிறைய சிறுகதைகளும் நாவல்களும் [மட்டும்] எழுதவேண்டும் என்பது என் ஆசை. இன்று நிகழவிருக்கும் அவருடைய தொகுப்பு நூல் வெளியீட்டு விழாவுக்கு, என் ஏழு வருட விரதத்தை விடுத்துச் செல்லலாம் என்றிருக்கிறேன். இந்த வருடம் நான் காசு கொடுத்து வாங்கப்போகிற இரண்டே இரண்டு புனைவு நூல்களுள் அவருடையது ஒன்று. [இன்னொன்று ரைட்டர்பேயோனுடைய திசைகாட்டிப் பறவை, ஆழி வெளியீடு.]

0

லிங்குசாமியின் உதவி இயக்குநராக இருந்த ஒரு நண்பருக்காகவும் ஒரு விளம்பரப் பட இயக்குநருக்காகவும் இரண்டு திரைக்கதைகளை இவ்வாண்டு எழுதியிருக்கிறேன். இவை 2011ல் படமாக்கப்படும். சென்ற வருடம் எழுதி முடித்த தம்பி வெட்டோத்தி சுந்தரம் இந்தாண்டு எடுக்கப்பட்டு, எடிட் செய்யப்பட்டு, இசை சேர்க்கப்பட்டு, இன்னபிற அலங்காரங்கள் முடித்துத் தயாராகிவிட்டது. தனிப்பட்ட முறையில் எனக்குத் திருப்தியாகவும் ரசமாகவும் வந்திருக்கிறது. புறப்பிரச்னைகள் இல்லாதிருந்தால் நிச்சயமாக ஓடக்கூடிய படமே. எப்போது வெளிவரும் என்று எனக்குத் தெரியவில்லை. அது மும்மூர்த்திகளின் தயாரிப்பல்ல என்பதால் வெளிவரும் தினத்தை என்னப்பன் என்றாவது தீர்மானிப்பான். தமிழ் சினிமா அதன் ஆக மோசமான காலக்கட்டத்தைக் கடந்துகொண்டிருக்கிறது. குருப்பெயர்ச்சிக்குப் பிறகு சில நல்ல மாற்றங்கள் இருக்கலாம் என்று பிரபல சினிமா ஜோசியர்கள் சொல்லியிருக்கிறார்கள். நல்லது நடந்தால் சரி.

தொடர்புடையவை: சென்ற வருடம் என்ன செய்தேன்? | அதற்கு முந்தைய வருடம் என்ன செய்தேன்?

Share

4 comments

  • //செம்மொழி வைரல் ஃபீவர் என்ன சாதித்தது என்று இப்போது யோசித்துப் பார்த்தால்…//

    கோவை வாழ் சகோதரர்களைக் கேட்டால் சென்னையில் பூங்காக்களைக் கணக்கு காட்டிவிட்டு கோவையில் நிறைய மரங்களை வெட்டிவிட்டார்கள். இங்கே வெயிலின் கொடுமை இதனால் அதிகம் தெரிகிறது என்கிறார்கள்.

    //மாமல்லன் எக்கச்சக்கமான படைப்பூக்கம் பெற்று, நிறைய சிறுகதைகளும் நாவல்களும் [மட்டும்] எழுதவேண்டும் என்பது என் ஆசை.//

    என்னைப் போன்ற அடிப்படை வாசகனின் ஆசை, விருப்பம், ரிக்வெஸ்ட் எல்லாமுமே கூட அதுதான். அது மட்டும்தான்.

    //குருப்பெயர்ச்சிக்குப் பிறகு//

    என்னவோ எல்லாரும் ஆரூடம் சொல்றீங்க சார்!. விதியின் கணக்கு என்னவாகப் போகுதோ?

  • நன்று! கண்டிப்பாகச் சொல்கிறேன் இந்த வருடத்தில் என்ன வெல்லாமோ செய்திட வேண்டும் என்று தான் நினைத்தேன், ஆனால் பல விஷயங்கள் செய்ய முடியவில்லை. அவ்வப்போது அதற்கான திடமான காரணம் இருக்கிறது என்று நினைத்தேன், ஆனால் இப்போது யோசித்தால் ஒரு மண்ணும் இல்லை.

  • //சிங்கப்பூரில் எடிட்டிங் பயிலரங்கு நடத்திய அனுபவம் மறக்கமுடியாதது// ஹி ஹி அதை விட எங்களுக்கு நீங்க நல்ல சாப்பாடு கிடைக்காம பூனைக்குட்டி மாதிரி தயிர் சாப்பிட்டு வாழ்ந்த நாட்களை நாங்களும் மறக்க முடியாது! வருடத்தில் இனி ஒருமாசம் அங்கு ட்ரைனிங் நடக்கவேண்டும் என்று வேண்டிக்கிறேன்.

  • குறிப்புக்கு நன்றி! சந்தோஷத்தை கொண்டாட ஆர்.எஸ்.எஸ். பற்றி புத்தகம் எழுதுவது வித்யாசமான அணுகுமுறை.

By Para

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!