பிழியப் பிழிய ஒரு சோகக்கதை

முன்பெல்லாம் நான் திருமணங்களுக்குச் சென்றால் அங்கே சாப்பிட மாட்டேன். உறவினர் வீட்டு விசேஷங்களுக்குச் சென்றாலும் உணவு நிச்சயமாக ஹோட்டலில்தான். வீட்டில் இது பற்றிய விமரிசனங்கலும் திட்டுகளும் எப்போதும் இருக்கும். ஆனால் உண்மைக் காரணத்தை நான் ஒருபோதும் சொன்னதில்லை. இப்போது சொல்கிறேன். என்னால் கீழே உட்கார்ந்து சாப்பிட முடியாது. தொப்பை இடிக்கும், மூச்சு வாங்கும்.

திருமண மண்டபங்களில் டேபிள் சேர் போடத் தொடங்கியபிறகு இந்தக் கஷ்டம் மறைந்தது. ஆனாலும் உறவினர் வீட்டு விசேஷங்களில் இன்றுவரை தொடரும் இம்சை இது. சாப்பிட்டால் எனக்குக் கஷ்டம், சாப்பிடாது போனால் அவர்கள் தவறாக எடுத்துக்கொள்வார்கள். இதற்காகவே சொல்லிக்கொள்ளாமல் நைசாக நழுவினாலும் கெட்ட பெயர். கூடுமானவரை வீட்டு விசேஷங்களை என்னவாவது நொண்டிச்சாக்கு சொல்லித் தவிர்க்கவே எப்போதும் பார்ப்பேன். ஆனால் மனைவி வழி உறவினர்கள் விஷயத்தில் அது முடியாது. நான் வந்திருக்கிறேனா என்று பார்க்க நாலு பேர் இருப்பார்கள். சாப்பிடக் கூப்பிட இரண்டு பேர் வருவார்கள். பந்தியில் உட்காருகிற வரை போலீஸ்காரர் மாதிரி யாராவது பக்கத்திலேயே நின்று பார்த்துக்கொண்டிருப்பார். பாதி சாப்பிடும்போது இரண்டொருவர் வந்து மாப்ளைய கவனி, என்ன வேணும்னு கேளு என்று அன்பை அண்டாவில் கொண்டுவந்து கொட்டுவார்கள். உள்ளே அழுது, வெளியே சிரித்து நான் படும் பாடுகள் அப்போது கொஞ்சநஞ்சமல்ல.

இன்று அப்படியொரு மனைவி வழி உறவினர் வீட்டு விசேஷம். நல்ல கூட்டம். நம்மை யாரும் கவனிக்கும்முன் நகர்ந்துவிடலாம் என்று கவனமாக வாசல் படி அருகிலேயே நின்றுகொண்டிருந்தேன். என் விதியைப் பாருங்கள். சம்பளம் கொடுக்கிற ஆபீசுக்கு நான் பங்கரையாக அரை டிராயர் போட்டுக்கொண்டு போவேன். கேட்க ஒரு நாதி கிடையாது. ஆனால் மனைவி வழி உறவினர் வீட்டு விசேஷம் என்றால் கண்டிப்பாக முழு டிரெஸ்ஸில்தான் போயாகவேண்டும். இல்லாவிட்டால் வீட்டில் விபரீதம் வெடிக்கும்.

வேறு வழியில்லாமல் பேண்ட் சட்டையெல்லாம் போட்டு ஆபீசர் மாதிரி அசடு வழியப் போய் நிற்பேன். இன்றும் அப்படித்தான். பேண்ட், டி ஷர்ட்டில் போயிருந்தேன். நான் வெளியே நகர நினைத்த தருணம், ‘இலை போட்டாச்சு’ என்று யாரோ நல்லவர் கையைப் பிடித்து இழுத்துச் சென்று உட்காரவைத்துவிட்டார். உட்கார்ந்த கணத்தில்தான், என் பேண்ட் ரொம்ப டைட்டென்று உணர்ந்தேன். சரியாகச் சம்மணம் இட்டு அமர முடியவில்லை. என்ன செய்யலாம் என்று அங்குமிங்கும் பார்த்தேன். தப்பிக்க வழியே இல்லை போல் இருந்தது. சுற்றிலும் ஆட்கள் அமர்ந்துவிட, பந்தி பரிமாறுகிறவர்கள் வரத் தொடங்கிவிட்டார்கள். இதில் என் அச்சத்தை அதிகப்படுத்தும்விதமாக என்னைச் சுற்றி அமர்ந்திருந்தவர்கள் எல்லோரும் பஞ்சகச்ச பார்ட்டிகள். அறுபதைக் கடந்தவர்கள். பொதுவாக இளைய தலைமுறையினர்மீது கெட்ட அபிப்பிராயம் கொண்டவர்கள். விதியே என்றுதான் ஆரம்பித்தேன்.

எதிரே இருந்த இலை மிகவும் பெரிதாக இருந்தது. அதாவது அதன் நீளத்துக்குச் சமமான அகலம். கையை நீட்டிப் பார்த்தேன். இலையின் பாதிவரைதான் நீண்டது. நிச்சயமாக இன்றைக்கு ஒரு பெரிய நகைச்சுவைக் காட்சி இருக்கிறது என்று தீர்மானமாகத் தெரிந்துவிட்டது.

பொதுவாக ஐயங்கார் வீட்டு விசேஷங்களில் சாப்பாடு பரிமாறுவதில் சில இலக்கணங்கள் கடைப்பிடிப்பார்கள். எந்தக் கழிச்சல்ல போற சம்பிரதாயர் கண்டுபிடித்த முறையோ தெரியாது. எதெல்லாம் நமக்கு ரொம்பப் பிடிக்குமோ அதையெல்லாம் இலையின் இரண்டு கோடிகளிலும் கைக்கெட்டாத தூரத்தில் வைப்பார்கள். எதை நாம் ரெகுலர் சாப்பாட்டைவிட அதிகம் சாப்பிட விரும்புவோமோ அதை சாம்பார், ரசம் சாதமெல்லாம் சாப்பிட்டு முடித்த பிறகு கொண்டு வருவார்கள். [உதாரணம், புளியோதரை, தொட்டுக்கொள்ள காராசேவு, சிப்ஸ்]. இதிலும் ஹாட்கோர் சம்பிரதாய ஃபங்ஷன் என்றால் அதியற்புதமான அக்கார அடிசில் மெனுவில் இருக்கும். அதை ஒரு குழம்பு சாதம், ஒரு மோர்க்குழம்பு சாதம், ஒரு ரசம் சாதம், புளியோதரை, இரண்டு கறிகாய்கள், இரண்டு கூட்டு, ஒரு தயிர்வடை, அப்பளம் வகையறாக்களெல்லாம் முடிந்தபிறகுதான் கண்ணிலேயே காட்டுவார்கள். ஏனய்யா, நல்ல ஐட்டத்தை முதலில் போடமாட்டீர்களா என்றால் மாட்டார்கள். ஆர்டர் முக்கியம்.

இன்று எனக்கு நல்ல பசிவேறு. எதிரே இலையில் விதவிதமான சுவையான ஐட்டங்கள் வந்து விழுந்துகொண்டே இருந்தன. என் டைட் பேண்ட் என்னை அங்கே இங்கே அசையவிடாமல் தடுக்க, ரோபோ மாதிரி கையைப் பக்குவமாக நீட்டி, கூடியவரை குனியாமல் என்ன முடிந்ததோ அதை மட்டும் எடுத்துச் சாப்பிட ஆரம்பித்தேன். முதல் சொட்டு சாம்பார் டி ஷர்ட்டில் விழுந்தது. என் மனைவி பார்க்கிறாளா என்று அச்சத்துடன் அங்குமிங்கும் திரும்பிப் பார்த்தேன். நல்ல வேளை, ஆள் இல்லை. சட்டென்று அதை இடதுகையால் துடைத்தெடுக்க முயற்சி செய்ய, பட்டது ஒரு புள்ளி, பரவியது ஓரங்குல அகலம் என்று நாராசமாகிவிட்டது. இதிலேயே பாதி உயிர் போய்விட, கண்ணை மூடிக்கொண்டு வேகமாக இரண்டொரு கவளம் எடுத்து வாயில்போடத் தொடங்கினேன். பேண்ட்டின் கணுக்கால் பகுதியில் சாம்பாரும் பருப்பும் ரசமும் பொறியல்களும் பூத்தூவலாக விழ ஆரம்பித்தது. இடதுகையால் உடனுக்குடன் விலக்கியபடி வலக்கையால் சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். சுற்றியிருந்த மாமாக்கள் என்னை முறைக்கத் தொடங்கினார்கள். எழுந்துவிடலாமா என்றால் அதுவும் கூடாது. இருப்பதிலேயே பெரிய கிழடுகட்டை யாரோ, அவர் சாப்பிட்டு முடித்து எழுந்த பிறகுதான் மற்றவர்கள் எழுந்துகொள்ளவேண்டும் என்பது விதி.

எனவே என்ன ஆனாலும் இன்று ஒரு கை பார்த்துவிடுவது என்று புஸ்புஸென்று மூச்சு வாங்க வாங்க இலையின் ஒரு கோடிக்கும் இன்னொரு கோடிக்கும் என் பேண்ட்டின் மந்திரஸ்தானம் கிழிந்துவிடாதபடிக்குப் பார்த்துக்கொண்டு தீர்த்த யாத்திரையே நடத்தவேண்டியதாகிவிட்டது.

ஒரு 20 டிகிரி குனிய முடிந்திருந்தால் இந்தப் பிரச்னையே இராது. எம்பெருமான் வள்ளலாக வாரிக் கொடுத்துவிட்டானே, என்ன செய்ய? ‘என்ன சார் காயெல்லாம் அப்படியே இருக்கே? உங்களுக்கு உருளைக்கிழங்கு பிடிக்குமே?’ என்று பக்கத்தில் இருந்தவர் [இவர் எப்போதும் பேண்ட் போடுகிறவர்தான். என்னை வெறுப்பேற்றுவதற்கென்று இன்று வேட்டியில் வந்திருந்தார்.] அன்போடு கேட்டார். பிடிக்கும்தான். ஆனால் என் வலக்கை இருக்குமிடத்திலிருந்து ஒன்றரை அடி தூரத்தில் அல்லவா அது இருந்தது? ஒரு எக்கு எக்கி, அதை அருகே நகர்த்தலாம் என்று ஒரு முயற்சி செய்தேன். அதற்கு நான் மண்டியிட்டு வணங்குகிற கோலத்தை வெளிப்படுத்தியிருக்கவேண்டும். என் முட்டி இலையில் பதிய, காலெல்லாம் சோறு. எதிரே இருந்த யாரோ ஆசாரசீலர் என்னை ஒரு ஜந்துவைப் போல் பார்த்து முறைத்தார். ஒரு மாதிரி ஆகிவிட்டது. ஏற்கெனவே சாப்பிடத் தொடங்குமுன் அந்த அறையில் பரிசேஷணம் செய்யாமல் ரைட் ராயலாக உண்ணத்தொடங்கிய மகாபாவி நான் ஒருத்தன் தான் என்பதை அவர் கவனித்திருந்தார். அதை கவனித்த என் பக்கத்து இருக்கையாளர், நான் மறந்துவிட்டேனா என்று ஜாடையில் கேட்க, ‘வழக்கமில்லை’ என்று சொல்லியிருந்தது ஒருவேளை அவர் காதில் விழுந்திருக்கலாம். அந்தக் கணம் உருளைக்கிழங்கு மீதிருந்த காதலை முறித்துக்கொண்டு கைக்கு எட்டிய வெறும் சாதத்தை மட்டும் சாப்பிடுவது என்று முடிவு செய்தேன்.

அதுவும் அத்தனை எளிதில் முடியவில்லை. சாம்பார் சாதம் முடியவே இருபது நிமிடங்களாகிவிட்டன. எனவே ரசத்தை வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். புளியோதரை வந்தபோது அது வாயில் விழுந்ததைக் காட்டிலும் என் ஷர்ட் பாக்கெட்டில் விழுந்ததே அதிகம். நாற்பது வயதில் ஒருத்தன் இதைவிடக் கேவலமாக அவமானப்படவே முடியாது. பொதுவாக நான் சாப்பிடுவது ஓவியம் வரைவதுபோல் அத்தனை நளினமாக இருக்கும். விரல்களின் முதல் வரிசை ரேகைக்கோடு தாண்டி ஒரு பருக்கைகூட உள்ளே வராது. ஆனால் அதெல்லாம் டேபிள் சேரில் உட்கார்ந்து சாப்பிடும்போதுதான். வீட்டில் கீழே அமர்ந்து சாப்பிடக்கூடிய தருணங்களில்கூட பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே என்று தட்டைக் கையில் ஏந்திக்கொண்டு வாயருகே எடுத்துச் சென்றுதான் சாப்பிடுவேன். இது இலை. தவிரவும் பொது இடம். தவிரவும் சுற்றிலும் ஆசாரகுண்டர்கள். விதியல்லாமல் வேறில்லை.

இன்று இந்தப் பிரச்னையால் என் மனத்துக்குகந்த அக்கார அடிசிலைச் சாப்பிடவில்லை. கமகமவென்று சுண்டியிழுத்த தயிர்சாதத்தைத் தொடவில்லை. பாதி புளியோதரை வேஸ்ட் ஆனது. முதல் விள்ளலிலேயே தயிர்வடை ஜூஸ் டி ஷர்ட்டில் சொட்டிவிட்டபடியால் அதையும் எடுக்கவில்லை. முன்னெச்சரிக்கையாக ரசம் சாதத்தையும் தவிர்த்திருந்தேன். ஒரு மூன்று வயதுக்குழந்தை இலையில் உட்கார்ந்தால் என்னென்ன அழிச்சாட்டியங்கள் செய்து அதகளப்படுத்துமோ அத்தனையையும் செய்து, சுற்றியிருந்தவர்களை ஒரு வழியாக்கிவிட்டு எழுந்து போகவேண்டியதானது.

‘மாப்ள, சாப்பாடு எப்படி இருந்தது?’ – வெளியே வரும்போது யாரோ கேட்டார்கள். காலையில் குடித்த ஓட்ஸ் கஞ்சியை நினைவுகூர்ந்து, அற்புதம் என்று சொல்லிவிட்டுத் திரும்பிப் பாராமல் ஓடிவிட்டேன். மனைவி வீட்டுக்கு வருவதற்குள் சென்று டி ஷர்ட், பேண்ட்டை அலசிக் காயவைத்தாலொழிய இன்னொரு அணுகுண்டு வீச்சிலிருந்து தப்ப முடியாது என்பது காரணம்.

இந்தப் புத்தாண்டிலும் என்னால் உடம்பு இளைக்க நேரம் ஒதுக்க முடியும் என்று தோன்றவில்லை. எனவே குடும்ப விழாக்கள் நடக்கிற தினங்கள் தோறும் உண்ணாவிரதம் இருக்கலாம் என்று தீர்மானம் செய்திருக்கிறேன்.

Share

46 comments

  • //கையை நீட்டிப் பார்த்தேன். இலையின் பாதிவரைதான் நீண்டது//

    ஸோ ஸேட்! 🙁

    //என் டைட் பேண்ட் என்னை அங்கே இங்கே அசையவிடாமல் தடுக்க, ///

    இப்படித்தான் சார் நாம எப்பவுமே நம்மளை – அதாவது நம்ம தொப்பையை குத்தமே சொல்லப்பிடாது – பேண்ட் தான் பிரச்னையே!

  • நாப்பது வயசிலேயே இப்படியா? ஆச்சரியமாயிருக்கு.வாக்கிங் போனா தொப்பை குறையும்.நல்ல ஆசனங்களும் இருக்கே!சாதம் நெய் பருப்பு மோர்குழம்பு காய்கறிகள்,சாத்துமது,திருகண்ண(ன)முது இந்த ஆர்டரில் சாப்பிடுவதற்கு முக்கியமான காரங்கள் உண்டு.

  • வருத்தமான விசயத்தை கூட இப்படி விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டே படிக்கவைத்துவிடுகிறீர்கள். இந்த திறமைதான் திரும்ப திரும்ப உங்களிடம் வரவழைத்துவிடுகிறது பாரா சார். இனையத்தில் நிறைய எழுதப்போவதில்லை என்கிற விரதத்தை தயவுசெய்து மாற்றிக்கொள்ளுங்கள். உங்கள் மற்ற பணிகளுக்கு நடுவே இணையத்தில் எழுதுவதையும் ஒன்றாக, கட்டாயம் வைத்துக்கொள்ளவும்.

  • […] This post was mentioned on Twitter by ☣ dYNo ☣, ஆயில்யன். ஆயில்யன் said: RT: @writerpara: பிழியப் பிழிய ஒரு சோகக்கதை: http://goo.gl/j8ox5 #சோகத்தில்பங்கேற்கும்அளவுமீதஹாவிங்பூசினாப்புலதொந்தி 🙂 […]

  • அருமை! இதென்ன பெரிய சுயதண்டனையாக இருக்கிறதே? ஏன் சார், கையில் ஒரு கவளம் வந்து சேர்ந்ததும் வாயை திறந்த நிலையில் தோள்பட்டையில் வைத்து கவளக் கையை உயர்த்தினால் ஆகாரம் கைமேல் நேரே சறுக்கிக்கொண்டு வாய்க்குள் வந்து விழப்போகிறது. இதற்கா இவ்வளவு?

  • //ஆனால் என் வலக்கை இருக்குமிடத்திலிருந்து ஒன்றரை அடி தூரத்தில் அல்லவா அது இருந்தது? ஒரு எக்கு எக்கி, அதை அருகே நகர்த்தலாம் என்று ஒரு முயற்சி செய்தேன். அதற்கு நான் மண்டியிட்டு வணங்குகிற கோலத்தை வெளிப்படுத்தியிருக்கவேண்டும்//

    அதகளம்.வாய்விட்டு சத்தமாகப் படித்து கண்ணில் நீர் வரச் சிரித்துக்கொண்டிருந்தேன் 🙂

    நன்றி.

  • //என்னால குனிஞ்சு பெருவிரலத் தொடமுடியும் #ஹைய்ய்ய்ய்ய்யா!//
    யாரோட பெருவிரல?

  • சாப்பிட அமர்ந்து எழுந்ததை இவ்வளவு ஹாஸ்யமாக எழுத முடியுமா?! நீங்கள் பட்ட பாட்டை விட நகைச்சுவையால் எங்களை நீங்கள் படுத்திய பாடு அதிகம். அமர்க்களமான கட்டுரை.

  • எல்லாத்துக்கும் காரணம் இந்த பேண்ட்தான் பங்காளி. மொதல்ல இந்த பேண்ட் கண்டுபிடிச்சவனை கொல்லனும். நாம பாரம்பரியப்படி இனிமே பஞ்சகச்சம் கட்டுவோம். நம்ம முன்னோர் என்ன முட்டாளா? அம்பி, தொப்பை வருமப்பா, பஞ்ச கச்சம்தான் சரிப்படும்னு கண்டுபிடிச்சவனை நாமதான் மறந்துட்டோம் பங்காளி சார்.

  • சிரிச்சு சிரிச்சு என்னால சாப்பிடவே முடியல சார்..!!இந்த பேண்ட் தைக்கறவங்களே இப்படித்தான் பண்ணி நம்மள நோகடிப்பாங்க..!!(நாம குண்டாயிட்டத இப்டிதான் டீஸண்ட்டா சொல்லணும்):-))

  • //ஏற்கெனவே சாப்பிடத் தொடங்குமுன் அந்த அறையில் பரிசேஷணம் செய்யாமல் ரைட் ராயலாக உண்ணத்தொடங்கிய மகாபாவி நான் ஒருத்தன் தான் என்பதை அவர் கவனித்திருந்தார்.//
    இந்த மாதிரி தப்பு நான் அடிக்கடி செஞ்சிருக்கேன்.. எப்படி பரிசேஷணம் செய்யணும்னு ஒரு தடவை எனக்கு ஃப்ரெஷ்ஷா ட்ரெயினிங் எடுத்துக் கொள்ள வேண்டும்…

    நான் உங்கள் ரெகுலர் வாசகன்.. இன்னிக்குத்தான் முதல் பின்னூட்டம்..

  • //சுற்றிலும் ஆசாரகுண்டர்கள்//

    நல்ல கண்டுபிடிப்பு. சிரித்து விட்டேன் இந்த வார்த்தைக்கு. அபாரம் சார்.

  • பாரா, எத்தனை சர்வலகுவான வார்த்தைப்பிரயோகங்கள்? //பேண்ட்டின் மந்திரஸ்தானம் கிழிந்துவிடாதபடிக்கு// //சுற்றிலும் ஆசாரகுண்டர்கள்// அய்யங்காராத்து போஜனத்தைப்போல ரசித்துப்படித்தேன்!

  • பா.ரா, மயிலை கற்பகாம்பாள் நகரில் மாமீஸ் மெஸ்ஸில்இருந்து வரும் அழகிய பேக் சாதத்தை நாம் அனைவரும் சிந்தாமல் சிதறாமல் சாபிடுவோமே…. 🙂 இதை படித்தவுடன் என் நினைவிற்கு 2005 -06 ல் நடந்ததுதான் நினைவிற்கு வருகிறது.

  • ////கொடுக்கிற ஆபீசுக்கு நான் பங்கரையாக அரை டிராயர் போட்டுக்கொண்டு போவேன். கேட்க ஒரு நாதி கிடையாது////

    அது!!! ஹா ஹா ஹா!!

    சஹ்ரிதயன்

  • வயிறு குலுங்க சிரிக்கவைத்துவிட்டீர்கள், எனக்கும் இந்த பிரச்சினை உண்டென்பதால் ஒரு ஆறுதல், மிகவும் ரசித்தேன் நன்றி

  • டவுசர் ( பேன்ட் ) கிழியும் சிரிப்பு ! என் பேன்ட் கூட டைட் ஆன எபக்ட்! நான் ரொம்பவே enjoy பண்ணி படிச்சேன் !

  • பரிசேஷனம்னா என்னன்னு நியாபகத்துக்கு வந்திடுச்சு.

    அதாச்சும் பரவாயில்லை, வாயே திறக்காம தண்ணியை எடுத்து நாலு (மூணு?!) சுத்து சுத்திட்டு விட்டுடலாம்.

    இந்த அபிவாதயே இருக்குதே.. அடடடடடடே.. அபிவாதயேன்னு சொல்லி மத்ததை முழுங்க நினைச்சாலும், ‘என்ன சர்மா?’ ‘கொஞ்சம் காதிலே விழுற மாதிரி சொல்லுப்பா’ என்று ஆட்டம் போடும் பெரிசுகளை அடுத்த முறை ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டினுள் வைத்து அனுப்பி வைக்க வேண்டும்.

  • //பொதுவாக இளைய தலைமுறையினர்மீது கெட்ட அபிப்பிராயம் கொண்டவர்கள். விதியே என்றுதான் ஆரம்பித்தேன்.//

    ஹி ஹி இங்க யாரு பாஸ் இளைய தலைமுறை?:)))

  • //வீட்டில் கீழே அமர்ந்து சாப்பிடக்கூடிய தருணங்களில்கூட பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே என்று தட்டைக் கையில் ஏந்திக்கொண்டு வாயருகே எடுத்துச் சென்றுதான் சாப்பிடுவேன். //

    அடுத்த முறை ஸ்டேண்டில்(தொப்பையில்) வெச்சி சாப்பிட்டு பாருங்க. ரொம்ப வசதியாக இருக்கும்.

  • நீங்களே இப்படின்னா உங்க அம்பி தம்பி ஹரன்பிரசன்னா எப்படி கஷ்டப்படுவாரோ..?

  • 20 ஆண்டுகள் முன்பு வரை பெரும்பாலும் அனைவர் வீடுகளிலும், விசேட வைபவங்களிலும் தரையில் அமர்ந்து உண்ணும் முறையே இருந்தது, தற்போது எல்லோர் வீட்டிலும் டேபிள்/சேர் புகுந்தபிறகு தரையில் அமர்ந்து உண்ணும் பழக்கம் அறவே இல்லை, உடல் வேலை குறைந்ததால் தொப்பை மட்டுமல்ல, மூட்டு வலி, இடுப்பு வலி என பல்வேறு பிரச்னைகளால் 35+ மனிதர்களே தரையில் அமர்ந்து உண்ண முடியா நிலை.

    இந்த மாதிரி பதிவுகளுக்காகவாவது நீங்கள் அடிக்கடி எழுதவேண்டும். பல இடங்களில் ROTFL 🙂

  • பாரா
    முடியல. trainல பக்கத்துல இருந்தவங்க எல்லாம் ஒரு மாதிரி பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க !

    Hilarious to the core. Had to put a comment. Thanks for making my day

  • இந்தக்கதையை சோக லிஸ்ட்டில் சேர்ப்பதா, சிரிப்பு லிஸ்ட்டில் சேர்ப்பதா என்று தெரியவில்லை. ரெண்டுக்குமே பொருந்தும் போலிருக்கிறதே? 🙂

    இருந்தாலும் இவ்வளவு கஷ்டமான விஷயத்தை சிரிப்பாக எழுதியது வியப்பாக இருக்கிறது. எனக்கு இந்நிலை ஏற்பட்டால் (கூடிய விரைவில், கீழே இருக்கும் கம்ப்யூட்டர் கனக்ஷ்டன் மெய்ன் ஸ்விட்சை அணைப்பது முன்புபோல் சுலபமாக இல்லை) அழுதுகொண்டேதான் வலைப்பதிவேன்.

  • மாயவரத்தா, வாயே திறக்காம நாலு சுத்து சுத்தி பரிசேஷனமா? இதென்ன புச்சாக்கீது? 🙂

    பரிசேஷனம் ப்ராணாக்னிஹோத்ரத்தில் ஒரு பகுதி. அதுவும் தொடர்ந்தெல்லாம் சுற்றக்கூடாது (என்பது உங்களுக்குத் தெரிந்தாலும் நான் சும்மா சொல்லி வைக்கிறேன்). சுத்திட்டு ஒடம்புக்குள்ள இருக்கற எல்லா உம்மாச்சிக்கும் வேற மம்மு போடணுமே. அப்பாலிக்கா சோறுபோட்ட ஃபாதருக்கு “டாங்க்ஸ்பா”ல்லாம் வேற சொல்லணும்.

    அபிவாதயேக்கு ஒரு short version க்கீதே, அத சொல்லிட்டா போச்சு. ஹிஸ்ட்ரி, ப்ராஞ்ச் எல்லாம் கலக்காம வெறும் பேர் மட்டும்கூட சொல்லிடலாம் 😉

  • மாயாவரத்தானில், “ன்” விட்டுப்போய்விட்டது. actually உங்க வயசுக்கு மரியாதை குடுத்து நான் மனசுல நெனச்சுருக்கறது படி பார்த்தா, மாயாவரத்தார்ன்னு டைப் பண்ணிருக்கணும். 🙁 சாரி சாரி.

  • இதனால் அறியும் நீதி:

    தொப்பை தொப்பையை கெடுக்கும்.

    (அதாகப்பட்டது,அதிகம் சாப்பிட்டால் தொப்பை வரும்;அப்புறம் அதிகம் சாப்பிட முடியாது; எனவே தொப்பை போய்விடும்)

    என்னோட vital statistics 57-35-43..(முறையே வயது,IQ,waist size in inches)

    எனக்கு நேர்ந்த அனுபவம் இன்னும் கொடுமை.இதே போல் ஒரு தரை பந்தியில் நான் தாராளமாக எல்லா பட்டன் களையும் அவிழ்த்து விட்டு, நிம்மதியாக சாப்பிட்டு முடித்து, முதல் வாக்கியத்தில் செய்தது உண்ட சுகத்தில் மறந்து போய், அப்படியே எழுந்து கொள்ள…

    அப்புறம் என்ன!

    crazy mohan வசனம் போல,

    நான் எழுந்துவிட்டேன்

    ஆனால்

    என் pant உட்கார்ந்து இருந்தது!!

  • @கண்பட் :உங்கள் கால்களை சுற்றி….
    @மாயவரத்தான்:பரிசேஷனம்:பிரணவம்:மூன்று லோகங்கள் பூ-பூமி,புவர்–புவர் லோகம்,சுவ:சுவர் லோகம்.மூன்று லோகங்களில் இருப்பவர்களை வணங்குவது.நினைப்பது.சத்யம் தத்வேன பரிஷஞ்சாமி.இதற்கு உங்களுக்கு விளக்கம் தேவையில்லை.(அமிர்தோபச்தரனமசி.இ.உ.வி.தே.)அடுத்து வரும் பிராணன்,அபானன்,உதானன்,வியானன்,சமானன்,பிரம்மன், இவர்கள் உடலில் இருந்து இய்க்கும் உயிர்,காற்று,வெளிக்காற்று,நெருப்பு, நீர் ஆகிய பஞ்ச பூதங்களுக்காக உண்ணும் உணவு.ஆத்மாவிற்கு உணவு தேவையில்லை.சரீரத்திற்குத்தான் உணவு தேவை.அபிவாதயே பற்றி:தன்னைப்பற்றி அறிமுகம்:விஸ்வாமித்ரா-ரிஷி-யின் வம்சம்,ஆண்கிரேயா-நிஷியின் வம்சம் என்று தன வம்ச பாரம்பரை பற்றி கூறிவிட்டு தன்னுடைய பெயரை-மாயவரத்தான்-ரமேஷ்-என்ற பெயரை அல்ல.-உபனயனத்தின்போது-வைக்கும் பெயரை(இப்போல்லாம் bpo வில் கிருத்துவ பெயரை வைக்கிறார்களே அது போல)கூறுவதுதான் அது.அதை வைத்து எந்த ஊர் என்று கூட கண்டுகொள்ளலாம்.

  • சார் கலக்குறீங்க! படித்து ரொம்ப சிரித்தேன் 🙂

    உங்களோட சிங்கப்பூர் பயணத்தில் உங்கள் குளியலை விஜயை உதாரணமாக கூறி காமெடி செய்து இருப்பீங்களே..அதையே நான் இன்னும் மறக்கலா ஹா ஹா ஹா அடுத்ததா நொறுக்கிட்டீங்க…

    உங்களுக்கு காமெடி சரளமா வருது சார். ரொம்ப ரசித்தேன்.

  • பரிசேஷணம், அபிவாதயேவுக்கெல்லாம் காமிக்ஸ் வடிவிலே புத்தகம் பிரசுரம் பண்ணினா தான் கொளறுபடியெல்லாம் அவாய்ட் பண்ணலாம் போல!

    //actually உங்க வயசுக்கு மரியாதை குடுத்து நான் மனசுல நெனச்சுருக்கறது படி பார்த்தா, மாயாவரத்தார்ன்னு டைப் பண்ணிருக்கணும். //

    நம்ம கிருபா ஷங்கர், ஈ.வெ.ரா. மாதிரி! என்னைய மாதிரி வயசிலே சின்னவங்களுக்கும் மரியாதை தருவாரு!

  • மாயாவரத்தார்,

    நீங்க என்னைப் பாராட்டறீங்களா, திட்டறீங்களான்னு புரியலை. இருந்தாலும் பெரியவர்கள் எது சொன்னாலும் அது இளைஞர்களின் நன்மைக்கே என்ற நம்பிக்கையில்…

    காமிக்ஸ் வடிவத்தில் இல்லையென்றாலும், சென்னை வந்தால், கடலங்குடி பப்ளிகேஷன்சை நாடவும்.

  • பாரா,
    இது மாதிரிப் பதிவுகள் மேலும் வருமென்றால்,உங்கள் தொப்பை மேலும் வளர எம்பெருமானைப் பிரார்த்திக்கிறேன்.. :))

    ஜோக்ஸ் அபார்ட்…உடல் நலத்தில் கவனம் செலுத்துங்கள்..அதிக உடல் எடை மற்றும் பூரணத் தொந்தி மற்ற எல்லா நோய்களுக்கும் முகமன் கூறும் தலைவாசல்..கவனம் !

  • Simply superb! PaaRaa sir neengal comedyilum kalakkaringa. Definitely you are an allrounder (not mentioning about thoppai).

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி