சாமியார்களின் ஏஜெண்டுகளைச் சமாளிப்பது எப்படி?

நீங்கள் சில புத்தகங்களை வாங்கவேண்டும் என்று குறித்துவைத்துக்கொண்டு புத்தகக் கண்காட்சிக்குச் செல்கிறீர்கள். எந்தப் புத்தகம், எந்த ஸ்டாலில் கிடைக்கும் என்பதெல்லாம் உங்களுக்குத் தெரியும். ஒரு பிரச்னையும் இல்லை. போனோமா, வாங்கினோமா, வந்தோமா என்று வேலையை முடிப்பது எளிது; இரண்டு மணிநேரத்தில் திரும்பிவிடுவேன் என்று வீட்டில் சொல்லிவிட்டுப் புறப்பட்டிருக்கிறீர்கள். ஆனாலும் அரை நாள், ஒருநாள் ஆகிவிடுகிறது. அப்படியும் தேடிய புத்தகங்கள் பல கிடைக்கவில்லை.

நேர்ந்திருக்கிறதா இல்லையா? எனக்கு நேர்ந்திருக்கிறது. இப்போதல்ல. பல வருடங்களுக்கு முன்னர்; ஒவ்வொரு வருடமும்.

இந்தப் புத்தகக் கண்காட்சியின் கல்யாண குணங்கள் பரிச்சயமான பிறகு நமக்கு வேண்டியதை சிரமமில்லாமல் பெறுவதற்கான எளிய வழிகள் என்று சிலவற்றை எனக்கு நானே உருவாக்கிக்கொண்டேன். புத்தக ஆர்வம் கொண்ட மற்றவர்களுக்கும் இது பயன்படலாம் என்பதால் என் வழிகளை இங்கே தருகிறேன்.

1. நீங்கள் வாங்க விரும்புகிற புத்தகம், இந்த வருடம் வெளியானதில்லை என்னும் பட்சத்தில், ஸ்டாலின் நான்கு புறங்களிலும் முதலில் உள்ள அடுக்கில் தேடாதீர்கள். நிச்சயமாக இருக்காது. அங்கே புதிய புத்தகங்கள் மட்டும்தான் இருக்கும்.

2. நீங்கள் வாங்க விரும்பும் புத்தகம் குறைந்தது மூன்று வருடங்களுக்கு முன்னர் வெளியானது என்னும் பட்சத்தில் எந்த அடுக்கிலும் மேலிருந்து முதல் இரண்டு வரிசைகளைப் பார்க்காதீர்கள். அங்கே இருக்காது.

3. வெளியான காலத்தில்கூட அது பிரபலமான புத்தகமில்லை, ஆனால் ஏதோ ஒரு வகையில் உங்களுக்கு முக்கியமானது என்னும் பட்சத்தில் கண்டிப்பாக உட்கார்ந்து தேடுங்கள். கீழ் அடுக்கில் மட்டுமே இருக்கும்.

4. புராதனமான புத்தகத்தைத் தேடுகிறீர்கள் என்றால், அதன் ஆசிரியர் மிகப் பிரபலமானவராகவோ (உதா: சாண்டில்யன் – கடல்புறா), புத்தகம் அதிகம் பேசப்பட்டது என்றாலோ (உதா: புளிய மரத்தின் கதை) கண்டிப்பாக மறுபதிப்பு இருக்கும். ஆனால் இந்த இரு வகைக்கும் பொருந்தாத நூலென்றால், கல்லாப்பெட்டியில் அமர்ந்திருப்போரிடம் ஒரு வார்த்தை கேட்டுவிட்டுத் தேடச் செல்வதே உசிதம். அவரே அறியாமல் ஒருவேளை தப்பித்தவறி அந்தப் புத்தகத்தின் ஒன்று அல்லது ஒரு சில பிரதிகள் கடைக்குள் எப்படியோ வந்திருக்கலாம். அப்படியாயினும் தவறியும் கண்ணில் படாத இருட்டு மூலைகளில் மட்டுமே தேடுங்கள். அங்கேதான் இருக்கும்.

5. ஒரு நிறுவனத்தில் அதிகம் விற்பனையாகும் நூல்கள் எவையென்று எப்படி அறியலாம்? உள்ளே ஒரு ரவுண்டு போனீர்கள் என்றால், ஒன்றுக்கு மேற்பட்ட இடத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் புத்தகங்களே அவை என்று கண்டறியலாம். பேனர்கள், போஸ்டர்களால் அமர்க்களப்படுத்தப்படும் புத்தகங்கள் பிரபல புத்தகங்கள் அல்ல. பிரபலமாக்கப்படுவதற்காக வைக்கப்பட்டிருக்கும் புத்தகங்களே.

6. ஒரு குறிப்பிட்ட பதிப்பு நிறுவனத்தின் ஸ்டாலுக்கு நீங்கள் இதற்குமுன் சென்றதில்லை. செல்லலாமா, கும்பலாக இருக்கிறதே என்று யோசிக்கிறீர்கள். உண்மையில் உள்ளே போனால் உங்களுக்கு உபயோகமா என்று போகாமலே தெரிந்துகொள்ள ஓர் எளியவழி – வெளியே இருக்கும் அவர்களுடைய பில் கவுண்ட்டர் அருகே இரண்டு நிமிடங்கள் நிற்பதுதான். பத்து பில்களில் என்னென்ன புத்தகங்கள் வருகின்றன என்று பாருங்கள். உங்கள் ரசனை அதனோடு பொருந்துமானால் உள்ளே போகலாம். நீங்கள் ராமாமிருதத்தை ரசிப்பவராகவும், விழுகிற பில்லெல்லாம் ரகசிய நோய்கள் தொடர்பானதாகவும் இருந்தால் நின்ற இடத்திலிருந்தே ஒரு கும்பிடு போட்டுவிட்டு நகர்ந்துவிடவும்.

7. சில பக்தி நிறுவனங்களின் ஸ்டால்களுக்குச் சென்றால் உங்களை ஒரு கமர்க்கட்டையாவது காசு கொடுத்து வாங்கிச் செல்லாமல் விடமாட்டார்கள். தவிர நிம்மதியாக நீங்கள் உள்ளே சுற்றிப்பார்க்கவும் விடாமல் கூடவே வந்து பிரசங்கம் செய்வார்கள். இதைத் தவிர்க்க நல்ல வழி, உள்ளே நுழையும்போதே சம்பந்தப்பட்ட சாமியாருக்கு ஆல்ரெடி பக்தர் என்பதுபோல் ஒரு பாவனை காட்டிவிட்டுச் செல்வதுதான். அப்படியும் பிரசங்கி பக்கத்தில் வந்துவிட்டால் அவரைவிட விஷயம் தெரிந்தவர் என்பதுபோல் ஒரு பார்வை பார்த்துவிட்டு, அந்தப் பார்வைக்குச் சமமான புன்னகையையும் சேர்த்து வழங்கிவிட்டுச் சட்டென்று நகருங்கள். அந்த நிராகரிப்பு உபயோகமானதாக இருக்கும்.

8. எப்போதும் கூட்டம் மொய்க்கும் பிரபல நிறுவனங்களின் அரங்குகளை முழுமையாக, நிதானமாகப் பார்க்க விரும்பினீர்கள் என்றால் வேலை நாள்களில் மதியப் பொழுதைத் தேர்ந்தெடுங்கள். சரியாக 2.30-3.00 மணிக்கு அரங்கினுள் நுழைந்தால் யாரும் இருக்க மாட்டார்கள். கடைக்காரர்களும் உண்ட மயக்கத்தில் இருப்பார்கள். தொந்தரவின்றிப் புத்தகங்களைப் பார்த்து, வாங்கலாம்.

9. சனி, ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை நாள்கள்தான் உங்களுக்கு வசதி என்னும் பட்சத்தில் காலையே போய்விடுவதே நல்லது. மாலை வேளைகளில் போனால் ஓர் அரங்கைக்கூட உருப்படியாகப் பார்க்க முடியாது.

10. பொதுவாக இடப்புறம் நடப்பது நம் நாட்டினர் வழக்கம். எனவே நீங்கள் கண்காட்சிக்குள் நுழைந்ததும் ஒவ்வொரு வரிசையிலும் உள்ள வலப்புற ஸ்டால்களை முதலில் பார்த்துச் சென்றால் சற்றுக் குறைவான கூட்டத்தை அனுபவிக்கலாம். கடைகளுக்குள்ளும் வலப்புறமாக நுழைந்து இடப்புறம் வெளியே வருவது பலனளிக்கும். இடையே சில சமயம் சிலருடன் முட்டிக்கொள்ள நேரிடலாம். அப்போது சாரி சொல்லிவிடுங்கள்.

Share

Discover more from Pa Raghavan

Subscribe to get the latest posts sent to your email.

17 comments

  • இதைதான் உண்மையான உயர்ரக இலக்கியமாக கருதுகிறேன்… பதிவின் தலைப்பு அபாரம்

  • //கடைகளுக்குள்ளும் வலப்புறமாக நுழைந்து இடப்புறம் வெளியே வருவது பலனளிக்கும். இடையே சில சமயம் சிலருடன் முட்டிக்கொள்ள நேரிடலாம். அப்போது சாரி சொல்லிவிடுங்கள்.//

    நபநப :))))

    யாரேனும் புத்தக கண்காட்சியில் “பழ.கோமதிநாயகத்தின் தமிழர்/தமிழக பாசன வரலாறு” அப்படின்னு ஒரு புத்தகத்தினை கண்டால் அடியேனுக்கு ஒரு பிரதி வாங்கி வைத்திருக்கவும் வந்து -அதற்குரிய தொகையினை – தந்து பெற்றுச்செல்வேன்!

    ஏற்கனவே டிவிட்டரில் கத்திவிட்டேன் நோ ரெஸ்பான்சு ஸோ இங்கேயும் ஒரு முறை!

  • good one ;). I used most of your points during Blore book fair few weeks back.but i cant come to chennai this time.planing to order most of the books online.

  • […] This post was mentioned on Twitter by nchokkan, venkatramanan and ஆயில்யன். ஆயில்யன் said: RT: @writerpara: யாருடனாவது முட்டிக்கொள்ள நேரிடலாம்.அப்போது சாரி சொல்லிவிடுங்கள். http://writerpara.com/paper/?p=1798 […]

  • சாமியார் ஏஜெண்டுகள் என்ற தலைப்பை பார்த்துவிட்டு உள்ளே வந்தால்…..பரவாயில்ல நல்ல விஷயங்கள்தான்.பகிர்வுக்கு நன்றி.

  • அன்புள்ள பா.ரா.

    கூட்டம் என்றால் வெற்றி எனப்பொருள் கொள்ளும் நம்மவருக்கு இது ஒரு பிரச்சினையே அல்ல.
    ஒரு இடம் பாசி படிந்து வழுக்குகிறது என்றால் அதை bleaching powder போட்டு சுத்தப்படுத்தாமல் அங்கு எப்படி ஜாக்கிரதையாக நடக்கவேண்டும்,அப்படியும் கீழே விழுந்து அடிபட்டால் என்ன முதலுதவி தர வேண்டும் என்றெல்லாம் சிந்திப்பது நம் அறிவு ஜீவீத்தனம்

    இன்னும் கண்காட்சியினுள் மிளகாய் பஜ்ஜி, அடை அவியல்,பேல்பூரி முதலிய உணவை அதிகப்படுத்தி அனுமதி கட்டணத்தை இரண்டு ரூபா குறைத்து தி.நகர உஸ்மான் சாலையில் நடத்தினால் கூட்டம் குறைந்து விடும்.

    நான் சில தினங்களுக்கு முன் ஒரு யோசனை தெரிவித்து இருந்தேன்.அதை பத்ரி தளத்திலும் பதிவு செய்தேன்.ஆனால் இதுவரை உங்களிடமிருந்தோ,அவரிடமிருந்தோ அல்லது மற்ற
    வாசகர்களிடமிருந்தோ அதை பற்றிய எந்த கருத்தும் கிடைக்கவில்லை.

    பல யோசனைகளை செயல்படுத்தி வசதிகளை பெருக்குவதை விடுத்து ,போன வருடம் மொத்தம் 5 லட்சம் பேர் வந்தனர்.இந்தவருடம் 7 லட்சம் பேர் வந்தனர் என்ற ஒரே சாதனையை மனதில் கொண்டு இயங்கும் BAPASI தன்னை சற்று மாற்றி கொண்டால் நல்லது.

    நன்றி

    • கண்பத்: உங்கள் யோசனை குறித்து நான் கருத்து சொல்ல ஒன்றுமில்லை. பத்ரியும்கூட. நிர்வாகிகளிடம் நாம் கோரிக்கை வைக்கலாம். நீங்கள் இம்முறை வருவீர்களல்லவா?

  • மீண்டும் நன்றி, திரு.ராகவன்.

    நிச்சயம் வருவேன்.கோரிக்கையும் வைப்பேன்.என்னுடைய இன்னொரு பெயர் விக்ரமாதித்தன் (of அம்புலிமாமா)

    அன்புடன்,

  • //பொதுவாக இடப்புறம் நடப்பது நம் நாட்டினர் வழக்கம். எனவே நீங்கள் கண்காட்சிக்குள் நுழைந்ததும் ஒவ்வொரு வரிசையிலும் உள்ள வலப்புற ஸ்டால்களை முதலில் பார்த்துச் சென்றால் சற்றுக் குறைவான கூட்டத்தை அனுபவிக்கலாம். கடைகளுக்குள்ளும் வலப்புறமாக நுழைந்து இடப்புறம் வெளியே வருவது பலனளிக்கும்.//

    அபாரம்!இந்த கோணத்தில் இதுவரை யாராவது யோசித்திருப்பார்களா என்ன?
    நாம் வாகனம் ஓட்டும் முறைக்கும் இதற்கும் தொடர்பேதுமுண்டா?

  • //ஸ்டாலின் நான்கு புறங்களிலும் முதலில் உள்ள அடுக்கில் தேடாதீர்கள்//

    அழகிரியின் நான்கு புறங்களிலும் தேடலாமா?! #டவுட்டு

  • //நீங்கள் ராமாமிருதத்தை ரசிப்பவராகவும், விழுகிற பில்லெல்லாம் ரகசிய நோய்கள் தொடர்பானதாகவும் இருந்தால் நின்ற இடத்திலிருந்தே ஒரு கும்பிடு போட்டுவிட்டு நகர்ந்துவிடவும்.//

    நல்ல ஆலோசனை அய்யா..!! 🙂

  • //இடையே சில சமயம் சிலருடன் முட்டிக்கொள்ள நேரிடலாம். அப்போது சாரி சொல்லிவிடுங்கள்.//

    இந்த யோசனை எல்லாருக்கும் இல்லை. முட்டுவதற்காகவே கூட்டத்திற்குள் லூக் விடும் லக்கிகளுக்கு மட்டுமே என்று நினைக்கிறேன்.

  • அருமை!

    //அவர்களுடைய பில் கவுண்ட்டர் அருகே இரண்டு நிமிடங்கள் நிற்பதுதான். //

    நீங்கதான் போன ஜென்மத்தில் பொ.போ.பொ.வா?

By Para

தொகுப்பு

Random Posts

Recent Posts

Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

error: Content is protected !!

Discover more from Pa Raghavan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading