சிங்கப்பூர் பயணம் 4

சிங்கப்பூரில், எழுத்தாளர்கள் ஓரிருவரும் எழுதுவோர் ஒரு சிலரும் எழுதும் விருப்பமுள்ளவர்கள் சற்றே அதிகமாகவும் இருக்கிறார்கள். எடிட்டிங் குறித்த பயிலரங்கமென்றாலும் எழுத்தாளர்கள்தாம் பெருமளவில் கலந்துகொள்ளப் பதிவு செய்திருந்தார்கள். எடிட்டிங் என்றால் என்னவென்று அறிந்த இரண்டு பேர் இருந்தார்கள். அதிலொருவர் கல்வித்துறையைச் சார்ந்தவர்.

பொதுவாக எடிட்டிங் என்பது என்ன என்று விளக்குவது மிகவும் பேஜாரான காரியம். எழுத்தாளர்கள் உயிரை விட்டு எழுதுவதைக் கசாப்புக்காரன்போல் வெட்டிப் போடுவது என்ற ஒரு உலகப் பொதுவான புரிதல் இருக்கிறது. இது எத்தனை முயன்றாலும் மாற்ற இயலாதது என்பது எனக்குத் தெரியும். ஆயினும், வெட்டியெடுப்பது போக, மிச்சமிருப்பதை எவ்வாறு ஒழுங்கு செய்வது என்பது பற்றிப் பேசலாம் என்றுதான் நினைத்திருந்தேன்.

ஆனால் காலை முதல் அமர்வில் பத்ரி அறிமுக உரை ஆற்றியபோதே நிலவரம் கலவரமடைந்துவிடும் போலிருந்தது. எங்களுடைய மூன்று நாள் சுற்றுப்பயணம், மூன்று மணிநேரப் பயணமாக எடிட் செய்யப்படலாம் என்று உள்ளுணர்வு அச்சம் தெரிவித்தது. இத்தனைக்கும் அவர் தகாத வார்த்தைகள் எதையும் பிரயோகித்துவிடவில்லை. எத்தனை பெரிய எழுத்தாளர் எழுதியதாக இருந்தாலும், ஒரு எடிட்டர் கைபடாமல் அச்சுக்குப் போனால் அது நிச்சயமாக திராபைதான் என்கிற மிக எளிய உண்மையை மட்டுமே சொல்லியிருந்தார்.

அசோகமித்திரன், சுஜாதா தொடங்கி இன்றைய அதிபிரபல எழுத்தாளர்கள் எழுதுவது வரை, எங்களிடம் அச்சுக்கு வருகிற பிரதிகளில் நாங்கள் என்னவெல்லாம் செய்யவேண்டியிருக்கிறது என்கிற உதாரணங்களுடன்தான் பத்ரி பேசினார். ஆனாலும் ஆரம்ப எதிர்ப்பு அதிகமாகவே இருந்தது. அருண் மகிழ்நனுக்கும் இது கவலையாகிவிட்டது. அடுத்த அமர்வை நான் வழி நடத்தவிருந்ததால் என்னிடம், ‘ரொம்பக் கொந்தளிக்கிறார்களே, என்ன செய்வது?’ என்று கேட்டார்.

எனவே எனது தருணத்தில், அவர்களை ஆற்றுப்படுத்துவதே முதல் வேலையாக இருந்தது. நிறைய உதாரணங்களையும் விளக்கக் கதைகளையும் சொந்த சோகக் கதைகளையும் சொல்லி, அம்மையப்பனைச் சுற்றாமல் உலகைச் சுற்றிய பிறகுதான் ஞானப்பழத்தைப் பெற முடிந்தது. ஆனால் ஒன்று சொல்லவேண்டும். எடிட்டிங் ஏன் தேவை என்பது புரிந்துவிட்ட பிறகு பயிலரங்குக்கு வந்திருந்தவர்கள் அளித்த ஒத்துழைப்பும் ஆதரவும் அபாரமானது. எழுத்தாளர்கள் தம்மளவில் தாமே எடிட்டர்களாகவும் ஓரெல்லை வரை செயல்பட முடியும். அது எப்படி என்பது பற்றி நிறையப் பேசினேன் என்று நினைக்கிறேன்.

பொதுவில், கதையல்லாத படைப்புகளுக்கான எடிட்டிங் உத்திகள் என்பதுதான் என்னுடைய அந்த அமர்வின் கருப்பொருள். இதில் எழுத்தாளரின் எல்லை எது, எடிட்டர் என்ன செய்யலாம், வீட்டோ அதிகாரம் யாருக்கு என்றெல்லாம் நுணுக்கமாக நிறைய விஷயம் பேசவேண்டி வந்தது. இதெல்லாம் எடிட்டிங்குக்கு அப்பாற்பட்ட விஷயங்கள் என்பதுதான் இதில் விசித்திரம்! எழுத்து என்பதை நம் மக்கள் மிகவும் உணர்வு பூர்வமாகப் பார்ப்பதே பிரச்னையின் ஆதாரமாகப் பெரும்பாலும் இருக்கிறது. என்னை – எங்களைப் பொருத்த அளவில், எழுத்தைவிட அதன் உள்ளடக்கம்தான் அபுனைவில் முக்கியம். சொல்ல வருகிற விஷயம் சரியான அளவில், சரியான வேகத்தில், சரியான தொனியில் போய்ச்சேர்கிறதா? தீர்ந்தது விஷயம். அதில் சிக்கல் வரும் இடங்களில்தான் கைவைக்க வேண்டியிருக்கும்.

இதனை விளக்கிப் பேசி முடித்தபோது பசியின் உச்சத்தைத் தொட்டிருந்தேன். யாராவது போதும் நிறுத்து என்று சொல்ல மாட்டார்களா என்று காத்திருந்தேன். ம்ஹும். வேறு வழியில்லாமல், எனக்குப் பசிக்கிறது என்று நானே சொல்லிவிட்டு அமர்வை நிறைவு செய்து சாப்பிடப் போய்விட்டேன்.

சின்சியர் சிகாமணியான பத்ரி அந்த நேரத்திலும் ஒலி எஃப்.எம்முக்கோ வசந்தம் டிவிக்கோ பேட்டி கொடுக்க மாடிக்குச் சென்றதைத் தவறாமல் குறிப்பிட வேண்டும். காலக்ரமத்தில் அவருக்கு அல்சர் வராதிருக்க எம்பெருமான் அருள் புரியவேண்டும்.

மதிய அமர்வில் அடிப்படைத் தமிழிலக்கணம் பற்றிக் கொஞ்சம் விவாதித்தோம். இலக்கணத்தைக்கூட இப்படி சுவாரசியமாகச் சொல்லித்தர முடியுமா என்று நிச்சயமாக வியப்பூட்டக்கூடிய விதத்தில் அமைந்திருந்தது பத்ரியின் பேச்சு. எனக்கு இலக்கணம் நன்றாகத் தெரியும். ஆனால் அதைச் சொல்லித்தருமளவுக்குத் தேர்ச்சி கிடையாது என்பதாலும், பொதுவாகவே மதிய உணவுக்குப் பிந்தைய எந்த வகுப்பும் கேட்போருக்குத் தாலாட்டாகவே இருக்குமென்பதாலும் சமூக நலன் கருதி அந்தப் பொறுப்பை பத்ரியே எடுத்துக்கொள்ள விட்டுவிட்டேன். அவரும் விடாப்பிடியாக வேற்றுமை உருபுகள், உருபும் பயனும் உடந்தொக்கத் தொகை, உயிரளபெடை, தயிர்வடை என்று அடித்து ஆடி அசரவைத்தார்.

எனக்குத் தெரிந்து 2004ம் வருஷத்துக்கு முன்னால் பத்ரியின் தமிழறிவு அம்மா இங்கே வாவா அளவில்தான் இருந்தது. அவரது ஆரம்பக்கால வலைப்பதிவுக் கட்டுரைகளெல்லாம் ரொம்ப காமெடியாகவே இருக்கும். ஆனால் அவர் ஒரு அம்புலிமாமா விக்கிரமாதித்தன். தன் முயற்சியில் சற்றும் மனம் தளராமல் என்னென்னத்தையோ படித்து, முட்டி மோதி இன்று சற்றும் பிழையின்றி எழுதப் பழகியிருக்கிறார்.

அதைத்தான் நான் பல்வேறு சொற்களில் அவர்களுக்குப் புரியவைக்க முயன்றேன். எழுத்து என்பதும் எடிட்டிங் என்பதும் பயிற்சி. மிகக் கடுமையான உழைப்பைக் கோரும் பயிற்சி. இடைவிடாத முயற்சிகளின் மூலம் மட்டுமே இதில் தேர்ச்சி பெற இயலும். மொழியின் மீதான ஆளுமை என்பதும் இதன் மூலமாகவே சாத்தியமாகக் கூடியது.

இலக்கண அமர்வுக்குப் பிறகு கொஞ்சநேரம் கலந்துரையாடிவிட்டு அன்று மாலை ஓர் அவசர ரவுண்டாக முஸ்தபாவுக்குச் சென்றேன். பிரம்மாண்டமான ஷாப்பிங் உலகம். கப்பல், விமானம், ரயில் தவிர மற்ற அனைத்தும் இங்கே கிடைக்கும் என்று அருண் மகிழ்நன் சொன்னார். செருப்புலகம், கைப்பை மற்றும் சூட்கேஸுலகம், பொம்மையுலகம் எனச் சில உலகங்களில் மட்டும் சுற்றிவிட்டு மிச்சத்தைப் பார்க்க நேரமின்றி, கோகுல் என்ற உணவகத்துக்குச் சென்றோம்.

அது ஹரே கிருஷ்ணா இயக்கத்தவர்கள் நடத்துகிற ஒரு ரெஸ்டரண்ட். சீன பக்தர்களும் தமிழ் பக்தர்களும் இணைந்து பணியாற்றுகிற இடம். உணவின் தோற்றமும் ருசியும் எந்நாட்டவருக்கும் பொருந்தக்கூடியதாகவும், அடிப்படையில் மரக்கறிகளில் தயாரிக்கப்பட்டதாக மட்டுமே இருப்பதாகவும் உள்ளது கோகுலின் சிறப்பம்சம்.

மட்டன், சிக்கன் என்றெல்லாம் மெனு கார்டில் இருந்ததைக் கண்டு சற்று பயந்தேன். ஹரே கிருஷ்ணா, என்ன இது என்று மனத்துக்குள் அலறினேன். நல்லவேளை, அதெல்லாம் வெறும் மார்க்கெடிங் உத்தி மட்டுமே. வெறும் தொஃபு துண்டங்களைப் போட்டுக்கிளறி பலான எஃபெக்ட் கொடுத்துவிடுகிறார்கள். பழங்கள், பாலாடைக்கட்டி, சோயா என கைக்குக் கிடைத்ததை அள்ளிப் போட்டுக் கிளறி தக்காளி சூப் மாதிரி எதிலோ நனைத்து மேலுக்கு சீரகம், எள்ளுப்பொடி, வெல்லம் எல்லாம் போட்டு ஒரு ஐட்டம் சாப்பிட்டுப் பார்த்தேன். ரொஜாக் என்று பெயராம். நன்றாகவே இருந்தது. இப்போது யோசித்தால், நன்றாக இருப்பதாக அப்போது தோன்றியதாகத் தெரிகிறது.

பத்ரி ஏதோ ஒரு மலாய் உணவை ஆர்டர் செய்தார். மெனு கார்டில், அதன் சேர்மானங்களையெல்லாம் ஆழப்படித்து, அக்கம்பக்கத்தில் விசாரித்துவிட்டே ஆர்டர் செய்தார். உணவு மேசைக்கு வந்து, அவர் சாப்பிடத் தொடங்கியதும் அவர் கண்கள் கலங்கியதைக் கண்டேன். உடனே எனக்கு மெய் சிலிர்த்துவிட்டது. பள்ளிப் பருவம் தொடங்கி கோர நாத்திகனாகவே வளர்ந்து, வாழ்ந்து வந்த ஒரு மனிதனை இப்படி மூவாயிரம் கிலோ மீட்டர் தள்ளிக்கொண்டு வந்து ஹரே கிருஷ்ண இயக்கத்தின் பால் ஈர்ப்புறச் செய்து, பக்தி மேலீட்டில் கண்ணீர் சிந்துமளவு சித்தம் இளகச் செய்த எம்பெருமானின் திருவிளையாடலை என்னவென்று சொல்வேன்?

பேயோன் தன் மகனுக்கு காம்ப்ளானில் விபூதி கலந்து அளிப்பதுபோல, சிங்கப்பூர் ஹரே கிருஷ்ணாவினர் மீ கொரெய்ங்கில் பக்தி ரசத்தைக் கலந்து ஊட்டிவிடுவது பற்றி ஒரு நெடுங்கட்டுரை எழுத நினைத்திருந்தேன். இல்லையாம். அது குலைநடுங்க வைக்கும் காரமாம். ஹரே கிருஷ்ணா!

சாப்பிட்டுவிட்டு இரவு பத்து மணி அளவில் ஒரு குன்றின்மீதிருந்த மீடியா கார்ப் வானொலி நிலையத்துக்குச் சென்றோம். சிங்கப்பூரின் ஒரே ஊடக நிலையம் அது. நிறைய வானொலி சானல்கள், நிறைய தொலைக்காட்சி சானல்கள். ஆனால் எல்லாம் அரசாங்கத்தினுடையவை. பிரம்மாண்டமான கோட்டை போலிருக்கிறது. ஏகப்பட்ட செக்யூரிடி கெடுபிடிகள், ஏழு கடல், ஏழு மலைகள். பாஸ்போர்ட்டை வாங்கி வைத்துக்கொண்டுதான் துண்டுச்சீட்டு கொடுத்து உள்ளே அனுப்புகிறார்கள்.

இந்த மீடியா கார்ப்புக்கும் எனக்கும் பூர்வஜென்மத் தொடர்பு என்னவாவது இருக்கவேண்டும். அநேகமாக வாரம் ஒருமுறையாவது அங்கிருந்து யாராவது என்னைத் தொலைபேசியில் அழைப்பார்கள். அமெரிக்காவிலும் மத்தியக் கிழக்கிலும் ஏதாவது ஏடாகூடம் நடைபெறும்போதெல்லாம் கருத்துக் கேட்பார்கள். அங்கே வேலை பார்க்கும் பொன் மகாலிங்கம், சபா நடராஜன், சதக்கத்துல்லாஹ் எல்லாரும் முகம் பாராமலேயே எனக்குப் பல கால நண்பர்கள்.

நான் சிங்கப்பூர் போன வேளை பொன் மகாலிங்கம் சென்னைக்கே குடிபெயர்ந்துவிட, மற்ற நண்பர்கள் அனைவரையும் முதல் முறையாக அங்கு நேரில் சந்தித்தேன். உற்சாகமாகப் பேசிக்கொண்டிருந்தோம். திருச்செல்வி என்னும் பெண் எங்களை பேட்டியெடுத்தார். அழகான, சுத்தமான, லகுவான தமிழில் வெகு அநாயாசமாகப் பேசுகிறார். பேச்சுப் பாணி என்பது சென்னை எஃப்.எம் பெண்களின் பாணிதான் என்றாலும் ஆங்கிலக் கலப்பில்லாத நல்ல தமிழ் அவருடையது. ஐந்து நிமிடம் கேள்வி கேட்டு, பதில் சொல்லி, அப்புறம் ஒரு சினிமாப் பாட்டு போட்டு, ஒரு டிராஃபிக் ரிப்போர்ட் அளித்து, திரும்பவும் ஒரு கேள்வி கேட்டு பதில் சொல்லி, பாட்டுப் போட்டு – சுமார் ஒரு மணி நேரம்.

எடிட்டிங் உத்திகளைக் கற்பிப்பது குறித்து தேசிய புத்தக கவுன்சில் அக்கறை கொள்வது பெரிய விஷயமல்ல. ஒரு பண்பலை வானொலி ஆர்வம் செலுத்துவதை வியக்கத்தான் வேண்டும்.

[தொடரும்]
Share

5 comments

  • >>> ஒரு பண்பலை வானொலி ஆர்வம் செலுத்துவதை வியக்கத்தான் வேண்டும்

    ரெண்டு பக்ராங்க த.நாட்ல இருந்து வந்திருக்குக, பிடிச்சி எதனாவது பேசி அனுப்பிடலாம்னு கூப்பிட்டதை எல்லாம் இப்படி சீரியசா நினைச்சு எழுதறீங்களே :))

  • நிகழ்ச்சி பற்றிய கருத்துகளை பத்ரியின் பதிவில் போட்டு விட்டேன். சிங்கப்பூர் தொலைக்காட்சியில் உங்கள் இருவரது கருத்துக்களையும் கேட்பது இன்னொரு சுவாரஸ்யமாக இருக்கக்கூடும்.குறிப்பாக, ஸதகத்துல்லாவின் “எதிரொலி” & கலைச்செல்வனின் “ஜன்னல்” நிகழ்ச்சிகள்.

    பொன்.மகாலிங்கத்தின் இடமாற்றம் சிங்கப்பூருக்கு இழப்பு..சென்னைக்கு நல்வரவு.

    என்றைக்காவது தொலைக்காட்சித் தொடருக்கு உருப்படியாக எழுதி வைத்தால், உங்களது “ஆறு” ரகசியங்களைச் சொல்லி, “அவர்தான்யா நம்ம குருஜி” என்று சொல்லும் உத்தேசம் உண்டு!

    பல நல்ல விஷயங்களைச் சொல்லி, உங்களது புதின எடிட்டிங் பகுதியை மிஸ் செய்தது பெருங்குற்றமோ என யோசிக்க வைத்து விட்டார்கள் எங்களூர் ஆசாமிகள்! ரொம்ப நல்லா இருந்ததென்று மனப்பூர்வமாகச் சொன்னார்கள் பலரும் – ‘குறுங்காவியம்’ அன்பழகன் ஐயா உட்பட!! ( வாக்கியங்களின் நீளத்தை தயவு செய்து மன்னித்து விட வேண்டுமென்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்…)

  • பத்ரியின் அப்பா என்ன பாடத்திற்கு வாத்தியார் என்பதை கேட்டு தெரிந்து கொள்ளவும்!

    எட்டடி பதினாறு அடி கதை தான்!

  • ரொம்ப சந்தோசம்.உங்களை எழுத வைப்பதற்காகவே அடிக்கடி இந்த மாதிரி ட்ரிப் அடிக்க வைக்க வேண்டும் போல!

  • // யாராவது போதும் நிறுத்து என்று சொல்ல மாட்டார்களா என்று காத்திருந்தேன். ம்ஹும். வேறு வழியில்லாமல், எனக்குப் பசிக்கிறது என்று நானே சொல்லிவிட்டு அமர்வை நிறைவு செய்து சாப்பிடப் போய்விட்டேன்.//

    🙂

    சார் திராபை என்றால் என்ன?

By Para

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!