சிங்கப்பூர் பயணம் 5

முதல் நாள் செய்த துரோகத்துக்கு மறுநாள் பிராயச்சித்தம் தேடிக்கொள்ளும்பொருட்டு, பத்ரி அன்று காலை எனக்கு முன்னரே எழுந்து ஆயத்தமாகியிருந்தார்.

உணவு அரங்கு உலக உணவுகளால் நிரம்பியிருந்தது. கூடை நிறைய பிரெட். எடுத்து டோஸ்ட் செய்து தர ஒரு சீனப்பெண். அருகே பாத்திரத்தில் வெண்ணெய்க் கட்டி, ஜாம் வகைகள். சாலட்டுகள். சற்றுத் தள்ளி மெகா சீரியல் எழுத்தாளர்களுக்கான சீரியல் ஃபுட். ஒரு கிண்ணத்தில் ஓட்ஸ் மற்றும் பொறித்த சோளத்தை அள்ளிப் போட்டு குழாயில் பாலைப் பிடித்து பத்ரி என்னிடம் நீட்டினார். டீக்கடைகளில் கிட்டும் பொறை மாதிரி ஒரு பண்டம். ஆனால் சற்றே மிருதுவாக, ஜாம் சேர்க்கப்பட்டிருந்த ஒன்றை நானாக எடுத்துக்கொண்டேன். அநியாயத்துக்கு வீணாகிவிடப் போகிறதே என்று ஓரிரு ஸ்பூன்கள் வெண்ணெயையும் எடுத்துப் போட்டுக்கொண்டேன். பத்ரி ஒரு பெரிய கோப்பையில் ஆரஞ்சு ஜூஸ் பிடித்துக்கொண்டு வந்தார். ருசியல்ல; பசிக்காக மட்டும் என்று மனத்துக்குள் மூன்று முறை சொல்லிவிட்டுச் சாப்பிடத் தொடங்கினேன். ஆனால் ஜூஸ் ருசியாகவே இருந்தது.

அன்றைக்கு ஞாயிற்றுக்கிழமை. காலை ஒன்பது மணிக்குப் பயிலரங்கம் தொடங்கும் என்று அருண் அறிவித்திருந்தார். முதல்நாள் அரங்குக்கு வந்திருந்தவர்களில் பலபேர் பெண்மணிகள். ஒரு நல்ல ஞாயிறை எடிட்டிங் அறியப் பயன்படுத்த விரும்புவார்களா என்று எனக்கு லேசான சந்தேகம் இருந்தது.

பெரும்பிழை. அத்தனை பேரும் சரியான நேரத்துக்கு வந்துவிட்டிருந்தார்கள். புனைவு எடிட்டிங், சிறுகதை எழுதுதல் தொடர்பான அன்றைய காலை நேர வகுப்பை நான் நடத்தினேன். சில திட்டங்கள் வைத்திருந்தேன் எனினும், அதைப் பின்பற்ற இயலவில்லை. சிறுகதை குறித்துப் பேசத் தொடங்கியதும் முதல் வரியிலேயே அது விவாத அரங்காக மாறிவிட்டது. பிரச்னையொன்றுமில்லை. அதுவும் சுவாரசியமாகவே போனது. எழுத்தாளனுக்குள் ஓர் எடிட்டர் இருந்தே தீரவேண்டிய கட்டாயம், சிறுகதை எழுதும்போது நேர்ந்துவிடுகிறது. அது ஏன் எப்படி என்று விளக்க நேர்கையில் விவாதம் தவிர்க்க இயலாததானது.

நியாயமாக நாவல் எடிட்டிங் குறித்தும் பேசியிருக்க வேண்டும். ஆனால் நேரமில்லாமல் போய்விட்டது. மதிய அமர்வில் மொழிமாற்ற எடிட்டிங் குறித்து பத்ரி நிகழ்த்திய உரைக்குப் பிறகு சில ப்ராக்டிகல் முயற்சிகளில் ஈடுபட்டோம். ஒரு பக்கம் எழுதவைத்து, லைவ்வாக எடிட் செய்து காட்டினோம். பிறகு மீண்டும் கேள்வி நேரம். சரியாக மாலை ஆறு மணிக்கு அருண் மகிழ்நன் நன்றி கூறி முடித்துவிட்டார்.

இரண்டு நாள்களிலும் நிகழ்ச்சியை அவர் ஆரம்பித்து, வழி நடத்தி, முடித்து வைத்த விதத்தில் ஒரு விஷயம் புரிந்தது. பூர்வ ஜென்மத்தில் அவர் ராணுவ ஜெனரலாக உத்தியோகம் பார்த்திருக்கிறார். குறைந்தபட்சம் கணக்கு வாத்தியாராகவாவது.

பயிலரங்கம் முடிந்தபிறகு வெளியே வந்து பார்த்தால் மழை பெய்துகொண்டிருந்தது. ஆனாலும் வேறு வழியில்லை. ஒரு சிறு சுற்றாவது ஊரைச் சுற்றியே தீர்வது என்று முடிவு செய்து நண்பர் சபாவை அழைத்தேன். அந்த அவசரத்திலும் ஒன்றிரண்டு பேட்டிகள் அளிக்கவேண்டியிருந்தது. ஓடியவாக்கில் பேசிவிட்டு காரில் ஏறிப் பறந்தோம். சபா, சதக்கத்துல்லாஹ், வரதராஜன் ஆகியோர் உடன் வர, இலக்கில்லாமல் சிங்கப்பூர் சாலைகளில் சுற்றினோம். தேக்கா மார்க்கெட், அரசாங்கம் கட்டிக்கொடுத்த விண்ணளவு சூதாட்ட விடுதி, ராட்சச ஜெயண்ட் வீல், ஃப்ரண்ட் எலிவேஷனில் மிரட்டிய கட்டடங்கள், சிட்டி ஹால் அது இதுவென்று காதுக்கு கமெண்ட்ரியும் கண்ணுக்குக் கட்டடங்களுமாக விரைந்து, கிழக்குக் கடற்கரையில் சற்று நிறுத்தி, இறங்கி, இன்பமாக நடந்தோம்.

சிங்கப்பூர் கடல், ராமேஸ்வரத்துக் கடல் மாதிரி இருக்கிறது. அலை உறங்கும் கடல். சற்றே பெரிய நீச்சல் குளம் போல. கடலுக்கு அப்பால் சில கிலோமீட்டர்கள் தள்ளி எங்கோ எரிந்துகொண்டிருந்த விளக்குகளைக் காட்டி, அதுதான் மலேசியா என்று பத்ரி சொன்னார். அடுத்த வாரம் வரேன் என்று சொல்லிவிட்டு விவாசிட்டிக்குச் சென்றோம்.

இன்னொரு பிரம்மாண்டமான ஷாப்பிங் உலகம். நான் ஷாப்பிங் ஏதும் செய்யவில்லை. மார்ஷே என்ற ஸ்விட்சர்லாந்து தேசத்து உணவகத்தைச் சுற்றிப் பார்க்கவே நேரம் சரியாக இருந்தது. இயற்கையான சூழலில், புராதனமான வெளித்தோற்றத்தை செட் போட்டு, பண்டைய மேசை நாற்காலிகளில் உட்கார வைக்கிறார்கள். சுற்றிலும் எண்ணிலடங்காக் கடைகள். எல்லாக் கடைகளிலும் என்னென்னமோ உணவு வகைகள். ஒரு கார்டு கொடுத்துவிடுகிறார்கள். எந்தக் கடையிலும் எதையும் எடுத்துக்கொள்ளலாம். கார்டைக் கொடுத்தால் தொகை ஏற்றிவிடுவார்கள். சாப்பிட்டு முடித்துவிட்டு மொத்தமாகப் பணம் கட்டிவிட்டுப் போய்விடலாம்.

விதவிதமான சீன சைவ உணவுகளை அன்று ருசி பார்த்தேன். மறக்க முடியாத அனுபவம். சீனர்களிடையே சைவம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று இதுநாள் வரை எதிரிகள் எனக்குச் சொல்லி வந்திருக்கிறார்கள். நேரடி அனுபவத்தில், நமது சைவ உணவுகளக் காட்டிலும் ருசி மிக்க சீன உணவுகள் உண்டு என்று அறிந்தேன். எனக்கு அங்கே இருந்த ஒரே பிரச்னை, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் நீள நீளமாக பீப்பீ மாதிரி என்னத்தையோ எடுத்து உறிஞ்சிக்கொண்டிருந்ததும், அது பாம்பா, பல்லியா, பூரானா என்று உள்மனம் யோசித்துக்கொண்டே இருந்ததும்தான்.

இந்த இடத்தில் ஓர் அபூர்வமான காட்சி எனக்கு சித்தித்தது. நாங்கள் விவா சிடிக்குள் நுழையும்போது ஓரிடத்தில் காதல் ஜோடி ஒன்று உலகை மறந்து ஒருவரோடொருவர் ஒட்டிக்கொண்டு காதல் புரிந்துகொண்டிருந்தார்கள். காதலனின் மடியில் ஏறி உட்கார்ந்து கால் மேல் கால் போட்டுக்கொண்டு,  அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டிருந்தாள் அந்தப் பெண். அந்தக் கிடுக்கிப் பிடிக்கு நிச்சயமாக அவன் கழுத்து எலும்புகள் நொறுங்கப்போகின்றன என்று எனக்குத் தோன்றியது. வளாகத்தில் வேறு பல காதல் ஜோடிகள் அவ்வண்ணமே இருப்பினும், இந்தக் குறிப்பிட்ட ஜோடியின் உடும்புப் பிடிபோல் மற்ற எதுவும் என் கண்ணுக்குப் படவில்லை.

கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் நாங்கள் அந்த உணவக வளாகத்தில் சுற்றி, சாப்பிட்டுவிட்டு, அரட்டை அடித்து முடித்துத் திரும்பியபோது, அதே நடைபாதை இருக்கையில் அதே ஜோடி, அதே கோலத்தில் இருக்கக் கண்டேன். உட்கார்ந்திருந்த நிலையில் சிறு மாற்றமும் இல்லை. காலைக் கூட மாற்றிப் போட்டு அமர்ந்ததாகத் தெரியவில்லை.

கல்யாணத்துக்குமுன் அவன் நிச்சயமாக யாராவது எலும்பு மற்றும் நரம்பு மருத்துவரைச் சந்திக்க வேண்டியிருக்கும்.

[தொடரும்]

பிகு: இத்தொடரின் எஞ்சிய பகுதிகளைக் கொஞ்சம் இடைவெளிவிட்டுத்தான் எழுதவேண்டியுள்ளது. நாளை மலேசியா புறப்படுகிறேன். சிங்கப்பூரில் நிகழ்த்திய அதே எடிட்டிங் பயிலரங்கம் மலேசியாவில் நடக்கிறது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில். முடித்துவிட்டுத் திங்கள் அன்று சென்னை திரும்பிவிடுவேன். நாளை இங்கே கனகவேல் காக்க வெளியாகிறது. நான் வசனமெழுதியிருக்கும் முதல் படம். ரிலீஸ் கொண்டாட்டங்களுக்கு உடனிருக்க முடியாத வருத்தம் கொஞ்சம் இருக்கிறது. இதைப் படிக்கும் வாசகர்கள், படத்தைப் பார்த்துவிட்டு நாலு வரி மின்னஞ்சல் அனுப்பினால் சந்தோஷப்படுவேன். முடிந்தால் தியேட்டர் ரெஸ்பான்ஸ் எப்படி இருக்கிறது என்று கவனித்து எழுதுங்கள். யாராவது என்னவாவது வசனத்துக்குக் கெட்டவார்த்தை எதிர்வினையாற்றினால் அதையும் குறிப்பிடுங்கள். கைதட்டி, விசிலடித்தால் அதை போல்ட்+இடாலிக்ஸில் தனியே சுட்டிக்காட்டுங்கள் 😉

Share

6 comments

  • ப்ரீ வ்யூ ஷோக்கள் குறித்து எனக்கு ஐடியா இல்லை. ரிலீசுக்கே நான் இங்கே இல்லை என்பதால் முழு விவரம் தெரியவில்லை. நாளை ஏதோ ஒரு நேரம் பத்திரிகையாளர் காட்சி மட்டும் இருக்கிறது என்று நினைக்கிறேன். செவ்வாய்க்கிழமை நான் ஊர் திரும்பியபிறகு கோயிந்தசாமிகள் அனைவரும் ஏதாவது தியேட்டரில் ரிசர்வ் செய்து மொத்தமாகப் பார்ப்போம்.

 • மலேசிய பயணம் இனிதே நிறைவுற வாழ்த்துகள். பான் வோயேஜ்!

  கனகவேல் காக்க பிரிவியூ ஷோ டிக்கட்டுகள் எங்கே கிடைக்கிறது?

 • //தேக்கா மார்க்கெட், அரசாங்கம் கட்டிக்கொடுத்த விண்ணளவு சூதாட்ட விடுதி, ராட்சச ஜெயண்ட் வீல், ஃப்ரண்ட் எலிவேஷனில் மிரட்டிய கட்டடங்கள், சிட்டி ஹால் அது இதுவென்று காதுக்கு கமெண்ட்ரியும் கண்ணுக்குக் கட்டடங்களுமாக விரைந்து, கிழக்குக் கடற்கரையில் சற்று நிறுத்தி, இறங்கி, இன்பமாக நடந்தோம்//

  பரவாயில்லை முக்கியமான இடங்களை பார்த்து விட்டீர்கள் 🙂

  //அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் நீள நீளமாக பீப்பீ மாதிரி என்னத்தையோ எடுத்து உறிஞ்சிக்கொண்டிருந்ததும், அது பாம்பா, பல்லியா, பூரானா என்று உள்மனம் யோசித்துக்கொண்டே இருந்ததும்தான்//

  இங்கு பாம்பு பள்ளி பூரான் எதுவுமில்லை பயப்படவேண்டாம் 🙂 (இங்கு அதைப்போல இருக்க வாய்ப்புகள் மிக மிக குறைவு)

  //கல்யாணத்துக்குமுன் அவன் நிச்சயமாக யாராவது எலும்பு மற்றும் நரம்பு மருத்துவரைச் சந்திக்க வேண்டியிருக்கும்//

  ஹா ஹா ஹா இன்னும் கொஞ்சம் தாமதா வந்து பார்த்து இருந்தால் ஏடாகூடமா பார்த்து இருப்பீர்கள் 😉

  //நாளை இங்கே கனகவேல் காக்க வெளியாகிறது. நான் வசனமெழுதியிருக்கும் முதல் படம். //

  ஓ! அப்படியா வாழ்த்துக்கள் சார்

  //யாராவது என்னவாவது வசனத்துக்குக் கெட்டவார்த்தை எதிர்வினையாற்றினால் அதையும் குறிப்பிடுங்கள். கைதட்டி, விசிலடித்தால் அதை போல்ட்+இடாலிக்ஸில் தனியே சுட்டிக்காட்டுங்கள் //

  🙂 இந்தப்படம் நன்றாக வந்துள்ளதாக சென்சார் அதிகாரிகள் கூறியதாக (இவங்க பல படத்திற்கு இப்படி கூறி இருக்காங்க) எங்கோ படித்தேன்.. படம் பார்த்து விட்டு எப்படி இருக்கிறது என்று சொல்கிறேன், குறிப்பா உங்க வசனம்.

  உங்க எழுத்துக்கள் ரொம்ப எளிமையா இருக்கு படிக்க அதனால் வசனனமும் நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன் 🙂

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter